Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-23

என்னுடைய அறிவு மனசை வென்றிருந்த வேளை. அதன் காரணமாக காதல் என்னும் உணர்வு தற்காலிகமாக விடைபெற்றிருந்தது. அவ்வாறு விடைபெற்ற காரணத்தால் மனசு எதையோ இழந்துவிட்ட உணர்வில் இருந்தது. அதனால் நாட்கள் பெரிதாகச் சுவையேதுமின்றி ஏனோதானோவென்று நகர்ந்து கொண்டிருந்தன. இவ்வாறு சில மாதங்களோ அல்லது ஒன்றரை வருடமோ சென்றன. செய்யும் செயல்களிலும் மனம் ஒன்றி ஏதோ கடமைக்கு செய்து கொண்டிருந்தேன்.

இதை என்னுடைய வீட்டிலுள்ளவர்களும் கவனித்துக் கொண்டுதானே இருந்திருப்பார்கள்? அப்பாவும் அம்மாவும் அவர்களுக்குள் ஏதோ ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது வெளியே எங்கோ சேர்ந்து போய் வந்துகொண்டிருந்தார்கள். எனக்கு அவர்களுடைய நடவடிக்கைகளில் பெரிதாக ஆர்வம் தோன்றாததால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் என்னைக் கூப்பிட்டுப் பேசினார்கள்.

 நானும் உன்னை ரொம்ப நாளா கவனிச்சிண்டு இருக்கேன், ஏன் எதுலயுமே ஆர்வமில்லாம, சுரத்தே இல்லாம இருக்க?” – இது அம்மா.

 அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு, அதான்” – இது என்னுடைய பொய்!

 எங்களுக்கு அப்படி தெரியலையே, யாரையாவது லவ்வு கிவ்வு பண்றயா என்ன?” – இது அம்மா!

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! எப்படி என்னோட மனச எழுத்து மாறாம படிக்கறா!

 சேச்சே! அந்த மாதிரியெல்லாம் எதுவுமில்லம்மா!” – அவசர அவசரமாக மறுத்தேன்! மறுபடியும் ஒரு பொய்!

 இல்லேன்னா சரி! அது போகட்டும், உனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கலாம்னு இருக்கோம்!” – அம்மா

 இப்ப என்னம்மா அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!”

 இத பாரு! எதை எப்ப பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். இப்ப உன்னோட ஜாதகத்துல குரு பலன் வந்துடுத்து! இப்பவே புடிச்சு பாத்தாதான் ஏதாவது நல்ல இடமா அமையும். வேண்டாம் கீண்டாம்னு ஆரம்பத்துலயே எதுவும் சொல்லாத!”

இதற்கு மேலும் மறுத்துப் பயனில்லை என்பதை உணர்ந்தேன். காலம் என்னுடைய வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு என்னை இட்டுச் செல்லவிருப்பதையும் உணர்ந்தேன். ஒருவேளை, சீதாதேவி அறிவுரைப்படி, எனக்கானவளை நான் சந்திக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறதா?

ஏற்கெனவே என்னுடைய மனசுக்குள்ளிருக்கும் மூன்று கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை; இந்த லட்சணத்தில் புதிதாக என்னென்ன கேள்விகளெல்லாம் முளைக்கப் போகிறதோ தெரியவில்லை. இந்த மாதிரியான நிலையானது, பரீக்ஷையில் வினாத்தாளை வாங்கிப் பார்த்த பிறகு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடையெழுதி விட்டு, கடைசியில் தெரியாத கேள்விகளுக்கு ஆற அமர யோசிப்பது போன்ற ஒரு நிகழ்வை எனக்கு நினைவூட்டியது!

எது எப்படியோ, நான் வாழ்க்கையின் அடுத்த கட்டத் தேர்வை எதிர்கொள்ள வேண்டுமானால், அதற்கேற்ப மனதளவில் தயாராக வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறேன். அதனால மனசுக்குள்ளிருக்கும் அந்த மூன்று கேள்விகளை இப்போதைக்கு ஓரங்கட்டலாம்னு நினைக்கிறேன், ஆனா மனசும் புத்தியும் என்ன பண்ணப் போகுதுன்னு பார்க்கலாம்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment