Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-20

அது ஒரு சனிக்கிழமை. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. திங்கள் காலையில் அவளுடன் பேசி விடுவதென்ற உறுதியான தீர்மானத்துடன் படுக்கையில் விழுந்தேன். கூடவே எனது மனசும் அவள்பால் விழுந்தது. மனக்கண்ணில் அவளுடைய அந்த பேசும் விழிகள் என்னுடைய மனதின் ஒவ்வொரு செல்லையும் விரிவாக ஏதேனும் ஒரு செல்லிலாவது அவள் இல்லாமலிருக்கிறாளா என்று ஒரு உயிரியல் ஆராய்ச்சியே செய்து கொண்டிருந்தது.

பக்கத்தில் ரேடியோவில் இலங்கை வானொலி இரவு நேரப் பாடல்களைப் பொழிந்து கொண்டிருந்தது. அதில் ஒலித்த பாடல்களுமே ஏதோ ஒரு தற்செயல் நிகழ்வு போல, எனது மனவோட்டத்தைப் படித்தது போல பாடல்களை தந்து கொண்டிருந்தது.

 எண்ணிரண்டு பதினாறு வயது, அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்! அதில் உள்ளதெல்லாம் எழுத்துமல்ல!”
எங்கே அவள், என்றே மனம்; தேடுதே ஆவலால் ஓடிவா!”
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்!”
கண்ணெதிரே தோன்றினாள், கனிமுகத்தைக் காட்டினாள்!”
காலங்களில் அவள் வசந்தம்; கலைகளிலே அவள் ஓவியம்!”
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!”
படைத்தானே ப்ரம்ம தேவன், பதினாறு வயதுக் கோலம்!”
விழியிலே மலர்ந்தது மொழியிலே கலந்தது; பெண்ணென்னும் பொன்னழகே!”
மழைதருமோ என் மேகம், மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்!”

இப்படி வரிசைகட்டி வந்த பாடல்கள் மனதிற்குள் புதுப்புது பாடல் வரிகளின் ஒவ்வொரு சொல்லிலும், அந்தச் சொற்களின் ஒவ்வொரு எழுத்திலும், உடனிணைந்தொலித்த இசையின் ஒவ்வொரு மீட்டலிலும் அவளது விழிகள் நீக்கமற நிறைந்திருந்தன. இந்தளவுக்கு நான் பாதிக்கப் படுவது இதுவே முதல்முறை. இதுநாள் வரை விழிமொழிகள் மட்டுமே மனதுக்கு இன்பமளித்து வந்தன.

அவளுடன் பேசிவிடுவது என்ற தீர்மானம் வைராக்யமாக வலுப்பெற்ற பிறகு ஒலித்த இப்பாடல்கள் எனக்குள் பற்பல கற்பனைகளை, கனவுகளை விதைத்து விட்டன. விதைத்தவை அனைத்தும் நொடியிலேயே செழித்து வளர்ந்து, அறுவடைக்குத் தயார் என்று கட்டியம் கூறின.

நினைவுகளும் கற்பனைகளும் என்னுடைய இமைகளை இழுத்து மூடின. மூடிய இமைகளுக்குள்ளும் அவளுடைய விழிகள் சிறிதும் மூடாமல் என்னுடைய இதயத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. எனக்கு மட்டும் உறக்கம் வருகிறதே! உன்னுடைய விழிகள் உறங்காதா? அவற்றுக்கும் ஓய்வு வேண்டாமா? ஏன் என்னை இப்படி இமைக்காது நோக்கி என்னுடைய உறக்கத்தைக் கெடுக்கிறீர்கள்? என்று மனசு அந்த விழிகளைக் கேட்க, அதற்கும் அவ்விழிகள் காதலுடன் புன்னகைத்தன. ஆனால் உறக்கம் என்னைத் தள்ளிக் கொண்டு போய் எங்கோ தொலைவில் ஒரு கனவு தேசத்தில் தன்னந்தனியனாக விட்டு விட்டுப் போய்விட்டது.

கனவிலும் அவள் வந்தாள். நாங்கள் நிறைய பேசினோம். அவளது குரல் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாததால் கனவிலும் கூட விழிகளாலேயே பேசிக் கொண்டிருந்தோம்! கனவுக்குள் இரவு வந்தது, என் விழிகளுக்குள் விடியல் வந்தது. ஆம்! மறுநாள் காலை எனக்கு முன்பாக சூரியன் எழுந்து வந்து என்னை எழுப்பினான்!

தூக்கமும், கனவும், மனதுக்குள் அவள் நினைவும் கலையாத நிலையில் அன்றைய எனது நாள் துவங்கியது. காலையில் வழக்கமாக செய்கின்ற வேலைகள் முடிந்து டிபனும் காபியும் முடிந்த பிறகு, சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கலாம் என்று அதை ஓடவிட்டேன்.

அப்போது எனக்குத் தெரியவில்லை, அதில் நான் காணப் போகும் நிகழ்ச்சியால் என்னுள் இருந்த காதல் என்னை விட்டு ஓடும் என்று! அப்படி என்ன அந்த நிகழ்ச்சி? என்னை முற்றிலுமாகப் புரட்டிப் போட்ட நிகழ்ச்சி?

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment