Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-12

என்ன, என்னை உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கா? நான்தான் உங்க ஆத்மாராம்! ரொம்ப நாளாயிடுச்சு உங்க எல்லார் கூடவும் பேசி! இதுக்கு முன்னாலயும் இப்படித்தான் ரொம்ப நாள் கழிச்சு பேசினேன். ஆனா இந்த தடவை இன்னும் அதிகமா நாளாயிடுச்சு! இதனால இதுக்கு நடுவுல என்ன ஆச்சு தெரியுமோ? நான் ரெண்டு பொறந்தநாள் கொண்டாடிட்டேன்! இப்ப எனக்கு மூணு வயசாயிடுச்சாம்! அந்த ரெண்டு பொறந்த நாள்லயும் வீட்டுல அம்மா சேமியா பாயசம் வடை எல்லாம் செஞ்சு குடுத்தா.

அப்பா, அம்மா ரெண்டு பேரும் வெளில போயிடறதால, எனக்கு விளையாட பாட்டி தாத்தா ரெண்டு பேர்தான். பாட்டி எனக்கு நிறைய கதை சொல்லுவா. காக்கா வடை தூக்கிண்டு போன கதை, குருவி பாயசம் குடிச்ச கதை, பிள்ளையார் மாம்பழம் வாங்கின கதை, வீட்டுல இருக்கற மருமக விரதம் இருந்த கதைன்னு நிறைய சொல்லுவா! கேட்டா சிரிப்பு சிரிப்பா வரும்!

அப்புறம், தாத்தா எனக்கு நிறைய சாமி கதை, ஸ்லோகம் எல்லாம் சொல்லுவா. எனக்கு அதுல ராமர் கல்லு மேல காலை வெச்சதும், அது ஒரு பொண்ணா எழுந்து நிக்குமே, அது, அப்புறம் வில்லு ஒடிச்சது, தாடகைன்னு ஒரு ராட்சசி இருந்தாளாமே, அவளை கொன்னது இதெல்லாம் பிடிக்கும். அப்புறம், பிள்ளையார் மேல ஒரு ஸ்லோகம் சொல்லித் தந்தா. அதை நான் தூங்கி எழுந்து, பல் தேச்சதும் நெத்திக்கு விபூதி இட்டுண்டு, சாமி முன்னால சொல்லணுமாம். அப்புறம் சாயந்திரம் விளக்கு ஏத்தினதும் சொல்லணுமாம். ம்ம்ம்? என்னது? அது என்ன ஸ்லோகமா?

கஜாநநம் பூதகணாதி ஸேவிதம், கபித்தஜம்பூ பலசார பக்ஷிதம் உமாஸுதம் ஸோகவிநாசன காரணம் நமாமி விக்னேஸ்வர பாதபங்கஜம்ம்ம்ம்! அப்படின்னு வருமே, அதான். இதை சொன்னா, நான் நல்லா படிப்பேனாம், உடம்புக்கு எதுவும் வராதாம். தாத்தா சொன்னா!

தாத்தா தினமும் குளிச்சுட்டு, அப்பா அம்மா வெளில போனதுக்கப்புறம் சாமி முன்னால உக்காந்து பூஜை பண்ணுவா. நான் தாத்தாவுக்கு பூ, ஊதுபத்தி, சந்தனம், குங்குமம், கல்பூரம் இதெல்லாம் கேக்க கேக்க எடுத்து குடுப்பேன். அங்க மணி ஒண்ணு இருக்கும். அதை இப்படி அப்படி ஆட்டினா, டிங் டிங்னு சத்தம் வரும். அதனால நான் அதை என் கைல வெச்சுக்குவேன். தாத்தாகிட்ட தர மாட்டேன். தாத்தாவும் சரி, நீயே கைல வெச்சுக்கோ, நான் சொல்லும்போது அதை அடிக்கணும் அப்படின்னு சொல்லுவா. அதுக்காக நான் அவரையே பார்த்துகிட்டு இருப்பேன், எப்ப சொல்லுவா, எப்ப சொல்லுவான்னு.

பூஜை முடிஞ்சு கல்பூரம் ஏத்தி, அதை சாமிகிட்ட காட்டினப்புறம் அதை தொட்டு கண்ல ஒத்திக்கோ சொல்லுவா. அதுக்கப்புறம் கல்கண்டு, திராட்சை இதெல்லாம் எனக்கு குடுத்துடுவா. இதுக்காகவே நான் தாத்தா பூஜை பண்ணும்போதெல்லாம் ஓடிவந்து அவர்ட்ட உக்காந்துக்குவேன்.

அப்புறம், தாத்தாவுக்கு பாட்டி சாதம் போடுவா. தாத்தா சாப்டுட்டு திண்ணைல போய் சாஞ்சு உக்காந்துக்குவா. அதுக்கப்புறமா நானும் பாட்டியும் சாப்பிடுவோம். சாயந்திரம் அப்பா அம்மா வந்தபின்னாடி, அம்மா எனக்கு ஆனா ஆவன்னா சொல்லித் தருவா. அதை எப்படி எழுதணும்னு என்னோட கையப் புடிச்சு எழுதிக் காட்டுவா. அப்புறமா, பொம்மை படம் போட்ட புஸ்தகம் எடுத்துண்டு வந்து அதும் பேரெல்லாம் சொல்லி, நீயும் சொல்லும்பா. ஆனா சொன்னா, அணில் படத்தை இங்க இருக்குன்னு சொல்லுவேன். ஆவன்னா சொன்னா, ஆடு படம் இப்படி எனக்கு நிறைய தெரியுமே! உங்களுக்கு தெரியுமோ?

நான் தினமும் கார்த்தால நிறைய அண்ணா, அக்கா எல்லாம் ஒண்ணா சேர்ந்து போறதை பார்ப்பேன். அவங்கல்லாம் ஸ்கூலுக்கு போறாங்களாம். அம்மா எனக்கு இங்க சொல்லித் தரதை ஸ்கூல்லயும் அவங்க படிப்பாங்களாம். எனக்கும் அவங்க மாதிரி போகணும்னு அப்பாட்ட கேட்டேன். அப்பா அதுக்கு, உனக்கு இன்னும் வயசாகலைடான்னார். எப்ப வயசாகும்னு கேட்டேன். உன்னோட கைய தலைக்கு மேல இப்படி கொண்டு வந்து காதைத் தொடு! அப்படின்னார். ஆனா என்னால காதை தொட முடியலை! கையால காதை தொட்டாதான் ஸ்கூல்ன்னுட்டார்.

சரி, இப்ப நான் என்னோட காதை தொட்டுப் பாக்கணும், உங்க கூட அப்புறமா பேசறேன்.


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment