Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-10

இப்போதெல்லாம் என்னால நிறைய புரிஞ்சுக்க முடியுது. என்னைப் பார்க்கறவங்க, எடுத்து வெச்சுக்கிறவங்க, பேசறவங்க, விளையாடறவங்க எல்லாருக்குமே ரெண்டு பேர் இருக்கு. அம்மா, அப்பா, அத்தை, மாமா இவங்களோட இன்னும் ரெண்டு பேர் வீட்ல இருக்காங்க. அவங்கள்ள பார்க்க அம்மா மாதிரி இருக்கறவங்க பாட்டி, அப்பா மாதிரி இருக்கறவங்க தாத்தா.

அதே மாதிரி, அப்பப்ப என்னை சிலபேர் பார்க்க வருவாங்க. அவங்கள்ள சில பேர் சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா அப்படின்னும் புரிஞ்சுது. இவங்கல்லாம் இங்க வர்ற மாதிரி, நாங்களும் அவங்க வீட்டுக்குப் போவோம். அங்கேயும் நான் இங்கே பார்க்கிற மாதிரியே நிறைய பேர் இருக்காங்க. ஆனா அவங்க பெயர் என்னன்னு எனக்குத் தெரியலை. அதனால, அவங்களையெல்லாம் அத்தை, மாமா அப்படித்தான் சொல்றேன்.

நான் இங்க இருக்கும்போது, எனக்கு விளையாட வெச்சிருக்கிற பொம்மை எல்லாம் அங்கே நடக்குது, ஓடுது, ஒண்ணு ரெண்டு படபடன்னு அடிச்சுக்கிட்டு அப்படியே மேல போகுது. அதெல்லாம் என்ன அப்படின்னு பாட்டி தாத்தாகிட்ட கைய காட்டிஊம் ஊம்அப்படின்னேன். அவங்க அதோட பெயரெல்லாம் சொன்னாங்க. அப்படி நான் என்னெல்லாம் தெரிஞ்சிகிட்டேன்? அது தனிக்கதை. அதை அப்புறமா சொல்றேன்.

இப்ப பால் தவிர நிறைய புதுசு புதுசா சாப்பிடத் தராங்க. ஏன்னா, எனக்கு பல் முளைச்சிடுத்துல்ல? அதனால, பாட்டி எனக்கு விதவிதமா சாப்பிடத் தராங்க. இப்பல்லாம் அம்மாகிட்டருந்து பால் கிடைக்கிறதில்லை. ஏன்னு தெரியலை. கொஞ்ச கொஞ்சமா அம்மாகிட்ட பால் குடிக்கறது நின்னு போச்சு. அது வேணும்னு கூட இப்ப எனக்குத் தோணலை. அதுக்கு பதிலா, பாட்டி இப்ப நிறைய விதவிதமா தரதால, அம்மா பால் எனக்கு மறந்து போயிடுச்சு.

இருட்டுல இருந்தபோது எதுவும் எனக்குத் தெரியலை. வெளியே வந்தபின்னாடி, கண்ல பார்க்கறதெல்லாம் விதவிதமா இருக்கறதுக்கு காரணம் நிறம் அப்படின்னு புரிஞ்சது. எனக்கு இப்ப சில நிறங்கள், அதோட பெயர் எல்லாம் தெரியுமே! என்னென்ன பெயர்னு சொல்லட்டுமா?

வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கறுப்பு, நீலம் இப்படியெல்லாம் ஒவ்வொண்ணுக்கும் ஒரு பெயர் இருக்கு! உங்களுக்குத் தெரியுமோ? அந்தப் பெயரையெல்லாம் இப்ப என்னால சொல்ல முடியலை, ஆனால் எது என்ன நிறம்னு பார்த்த புரியுது!

பாட்டி எனக்கு சாப்பிடக் கொடுப்பதில் ஒண்ணு வெள்ளையா இருக்கு. அது பேர் சாதம்! சரியா? அப்புறம், மஞ்சளா ஒண்ணு இருக்கு! அது பேர் பருப்பு! சரியா? இந்த ரெண்டையும் கலந்து, கூடவே தண்ணி மாதிரி ஒண்ணு இருக்கும். அது பேர் ரசம் அப்படின்னு பாட்டி பேசிக்கிட்டாங்க. இந்த எல்லாத்தையும் கலந்து பாட்டி எனக்கு வாய்ல குடுப்பாங்க. அது எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருந்தது. அதை பாட்டி பப்புமம்மு அப்படின்னு சொல்வாங்க. அதே மாதிரி, சாதத்தில் வெள்ளையா, தண்ணி மாதிரி இருக்கும், அதை ஊத்தி, கலந்து அதையும் கொடுப்பாங்க. அதுக்கு தச்சி மம்மு அப்படின்னு பாட்டி சொல்வாங்க. அதை ஊட்டி விடும்போது, சமயத்துல எனக்கு ஏதாவது நினைப்பு வந்துடும். அதனால, பாட்டி ஊட்டும்போது வாயைத் திறக்க மாட்டேன். தலையை இப்படியும் அப்படியுமா ஆட்டி வேணாம் அப்படின்னு சொல்வேன். அந்த சமயத்துல என்னை எடுத்து வெச்சுகிட்டு, வீட்டுக்கு வெளில கூட்டிட்டுப் போய் எதை எதையோ காட்டுவாங்க. நானும் அதையெல்லாம் பார்த்துக்கிட்டே ஆஆன்னு வாயை திறப்பேன். சட்டுனு ஊட்டிடுவாங்க. நானும் கண்ல பார்த்ததை நினைச்சுக்கிட்டே சாப்பிடுவேன்.

சிலசமயம், இருட்டு நேரத்துல வாசலில் வந்து மேலே கையைக் காட்டி என்னைப் பார்க்கச் சொல்வாங்க. அது பார்க்க வெள்ளையா இருக்கும். பெரிசா இருக்கும். அது பேர் நிலா அப்படின்னு பாட்டி சொன்னாங்க. அதைப் பார்க்கும்போது, வீட்டில் அம்மா சாப்பிட ஒண்ணு செய்வாங்க. அது மாதிரியே இருக்கும். அம்மா செஞ்ச அது பேர் என்ன? அது ரெண்டு விதமா இருக்கும். அதை செய்யும்போது அதும்பேரைச் சொல்லி நான் கேட்டிருக்கேன். ஒண்ணு பேரு தோசை, இன்னொண்ணு பேரு ஆப்பம்!

இந்த சாதம், தோசை, ஆப்பம்னு சொன்னதால, இப்ப எனக்கு சாப்பிடணும்னு தோணுது! அப்படியே, அப்பப்ப மனசுக்குள்ள அந்தக் கேள்விகள் வருமே! அதுவும் வருது!

நான் யார்? எங்கிருந்தேன்? எப்படி அந்த இருட்டான இடத்துக்கு வந்தேன்? ஏன் இப்போது இங்கே இருக்கேன்? புதுசு புதுசா நிறைய தெரியுதே? அது எப்படி? அதெல்லாம் எதுக்காக எனக்குத் தெரியுது?

ம்ஹும்! ஏன்னு தெரியலை! அதனால அயர்ச்சியா இருக்கு! இப்ப நான் சாப்பிடணும்! நீங்களும் வரீங்களா? பாட்டிகிட்ட சொல்லி உங்களுக்கும் தச்சி மம்மு தரேன்!


No comments:

Post a Comment