Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-24

என்னுடைய வீடு அவ்வப்போது பரபரப்பில் ஆழ்வதும், அடங்குவதுமாக இருந்தது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. ஏதாவது ஜாதகம் பொருந்தியிருக்கும், பரபரப்பு வரும்; விசாரித்துப் பார்க்கும்போது பெண் வீட்டுக் குடும்பம் ஏதாவது ஒருவகையில் பொருந்தாமலிருக்கும். குடும்பம் அருமையாக இருக்கும்; பரபரப்பு வரும்; கிட்டே போனால் ஒரே கோத்திரமாக இருக்கும்!

இப்படியே பல ஜாதகங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. அம்மாவுக்குத் தெரிஞ்சவங்க, அப்பாவுக்கு வேண்டியவங்க, ரெண்டு மாமா வழிகளில் என நிறைய வந்து போய்க் கொண்டிருந்தன.

 “என்ன இது! இவனுக்கு இடம் அமையறதுக்குள்ள குருபலனே தீர்ந்துடும் போல இருக்கே!” அம்மாவின் கவலை இது!

இவ்வாறு ஏறக்குறைய சில மாதங்கள் உருண்டோடின. இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த பரிவர்த்தனையில் பையனுக்கும் பொண்ணுக்கும் ஜாதகத்தில் எந்த இடத்தில் எந்த க்ரஹங்கள் இருக்கணும் என்பது ஏறக்குறைய வீட்டிலுள்ள எல்லோருக்குமே அத்துபடியாகிவிட்டது!

ஏதோ ஒரு சோம்பேறித்தனமான ஞாயிற்றுக் கிழமையன்று வீட்டுக்கு ஒரு பெண்மணி வந்தார். அம்மா அவரைப் பார்த்தவுடன், “நீலா! வாவா! ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து! எப்படி இருக்கே? இப்பதான் என் நினைப்பு உனக்கு வந்துதா?” என்று சரமாரி கேள்விகளால் வரவேற்க, அவரும்அப்படித்தான் வெச்சுக்கோயேன்! நீ உன் பையனுக்கு ஜாதகம் பாக்கறதா கேள்விப் பட்டேன். எங்கிட்ட ஒரு ஜாதகம் வந்திருக்கு! அது என் பையனுக்கு சரிப்பட்டு வரலை! ஒரே கோத்திரமா போயிடுத்து! அதான், உனக்காவது பயன்படட்டுமேன்னு எடுத்துண்டு வந்தேன்!”

 “அப்படியா! எங்கே, குடு பாக்கலாம்!” அம்மாவிடம் பரபரப்பு!

 “ஏண்டி, வந்தவளுக்கு ஒரு வா தூத்தம் குடுப்போம், காபி குடுப்போம்னு இல்லாம இப்படியா பறந்து கட்டுவ?”

 “அடடா! உன்னை ரொம்ப நாள் கழிச்சு பாத்தது, நீ சொன்ன விஷயத்தைக் கேட்டது, இதுல இந்த விஷயத்தை மறந்துட்டேனே!”

 “ரொம்பவும் விசாரப் படாதே, போய் காபி போட்டு எடுத்துண்டு வா, நிதானமா தரேன்”!

தோழிகள் இருவரும் சிரித்துக் கொண்டே சமையற்கட்டுக்குள் நுழைந்தனர். அதற்குப் பிறகு பழங்கதைகள் பேசித் தீர்த்தனர். கிளம்புவதற்கு முன்னால் அவர் தன்னுடைய பையிலிருந்து ஜாதகத்தை எடுத்து அம்மாவிடம் தர, அம்மாவும் வாங்கி அதை பூஜையறையில் வைத்துவிட்டு அந்தப் பெண்மணியை வழியனுப்பி விட்டு வந்து உட்காரவும், வெளியே போயிருந்த அப்பா, தாத்தா பாட்டி எல்லாரும் உள்ளே வர சரியாக இருந்தது.

அப்பா வந்து சென்றவரைப் பற்றி விசாரிக்க, அம்மா நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டு, “ஒரு எட்டு நம்ம வாத்யாரைப் பார்த்துட்டு வந்துடலாமா?” என்று கேட்டாள். மணியைப் பார்த்த அப்பா, இப்ப ராகுகாலமா இருக்கு, நாளைக்குப் போய் பார்த்துட்டு வரலாம்! என்று ஸஸ்பென்ஸ் வைத்து விட்டார்.

அதன்படி மறுநாள் ஜாதக அலசல் முடிந்தது. பெண் வீட்டுக் குடும்பமும் ஜாதகமும் த்ருப்தியாக இருப்பதாக உணர்ந்தவுடன் அப்பா என்னோட ரெண்டு மாமா வீட்டுக்குச் சொல்லியனுப்பி, பெண் பார்க்க நாள் குறிப்பதற்காக பேச ஆரம்பித்தார்.

எனக்கென்னவோ, பெண் வீட்டுக்குப் போய் பார்ப்பதென்பது சற்று சங்கோஜமாக இருந்தது. அதைப் பற்றி ராமன் மாமாகிட்ட சொன்னேன். அவர், “விவரம் புரியாம பேசாதடா! கோவில்ல நிறைய பொண்ணுங்க வர போக இருப்பாங்க! நீ எவளையாவது பார்த்துட்டு, சரி எனக்குப் புடிச்சிருக்குன்னு சொல்லுவ! காசியாத்திரை போயிட்டு திரும்பி வரும்போது வேற எவளாவது வந்து நிப்பா! மாலைய கழுத்துல மாட்டிண்டு ஊர் பாக்க சபைல வந்து நின்னவாட்டி முடியாதுன்னு சொல்ல முடியுமா?” என்றார்!

வீட்டில் குபீரென்று ஒரு சிரிப்பு! நான், “என்ன மாமா, இப்படி சொல்றேள்! சொந்த அனுபவமோ?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “ஆமாண்டா! எனக்கு அப்படித்தான் ஆச்சு! கோவில்ல வெச்சுஇதோ! பொண்ணப் பாத்துக்கஅப்படின்னாங்க! நான் திரும்பிப் பாக்கற நேரம் பயபக்தியா ஒருத்தி முழிச்சு முழிச்சு ஸ்வாமியையே பார்த்துண்டு இருந்தா! அவதான் பொண்ணுன்னு நெனச்சு நானும் சரின்னுட்டேன்! காசி யாத்திரை முடிஞ்சு மண்டபத்து வாசல்ல காத்துண்டிருந்தப்போ இதோ, இவ கழுத்து நிறைய மாலையோட வந்து நின்னா! நேக்கு பக்குனு ஆயிடுத்து! நிச்சயத்தன்னிக்கு கூட இவ ஓரமா ஒளிஞ்சு நின்னுண்டு என்னையே பார்த்துண்டு இருந்தா, அதுக்குக் காரணம் அப்ப புரியல! அப்பறந்தான் தப்பு எம்பக்கம்னு புரிஞ்சுது! இந்த அழகுல பஜ்ஜி சொஜ்ஜி வேற மிஸ்ஸிங்!” என்று சொல்லவும், வெடிச்சிரிப்பு அலையலையாக அறைக்குள்! ஆனா குமுதா அத்தை மட்டும் உர்ர்ருன்னு மாமாவைப் பார்த்துக் கொண்டே இருக்க, “பாவி மனுஷா! இத்தனை நாளும் போனா போறதுன்னுதான் குடும்பம் நடத்துறியா?” என்ற மனவரிகளைப் பார்த்துவிட்ட மாமாவும் திருதிருவென்று விழிக்க ஆரம்பித்து விட்டார்!

அதைப் பார்த்துவிட்ட அம்மாவும், சமாதானமாக, “அண்ணா! இப்ப என்ன, உங்களுக்கு பஜ்ஜி சொஜ்ஜி வேணும், அவ்வளவுதானே, இதோ அரைமணி நேரத்துல ரெடி பண்ணிட்டா போச்சு!” என்று சொல்ல, மாமாஅது…. அதுவந்துநான் சும்மா, தமாஷுக்கு சொன்னேன்என்று அத்தையைப் பார்த்தவாறே சமாளிக்க, அம்மா அத்தையைப் பார்த்துமன்னி! நீங்க உள்ள வந்து இந்த கத்திரிக்கா, வாழக்காய சீவிக் குடுங்கோ, நான் கேசரி கிளறிடறேன்என்று தற்காலிகமாக மாமாவைக் காப்பாற்ற முயற்சி செய்தாள்! அத்தையும் விருட்டென்று எழுந்து சமையற்கட்டுக்குப் போகிற போக்கில் மாமாவைக் கடந்து செல்லும்போதுஆத்துக்கு வாங்கோ, இருக்கு கச்சேரிஎன்னும் செய்தியை விழியால் பேசிவிட்டுப் போக, மற்றவர்கள் பொது விஷயங்களைப் பேசுவதில் இறங்கினர்.

இத்தனை அமளியில் ஒரு விஷயம் மட்டும் எனக்குத் தெரியவே இல்லை! அது, பொண்ணோட பெயர் என்ன என்று யாருமே சொல்லவில்லை, பேச்சுவாக்கில் கூட அது வெளிவரவில்லை! அப்பா மாமாக்களிடம் கேட்க எனக்குக் கூச்சமாக இருந்தது.

என்ன இருந்தாலும் அம்மாவுக்குப் பிறகு கொஞ்சம் சௌஜன்யமா பேசலாம்னா அது அத்தைகள் கிட்டதான் முடியும். ரெண்டு அத்தைகள்ள யாராவது ஒருத்தர் பொண்ணு பேரு என்னானு சொல்லுங்களேன்!

சமையலறையிலிருந்து வந்த நெய் வாசனையைவைத்து அம்மா கேசரி கிளறுவது புரிந்தது, எனக்கு? பொண்ணு பேரு என்னங்கிற கேள்வி மனசைக் கிளறுது!

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment