ஒரு ஆத்மாவின்
பயணம்
பாகம்-18
கடைசியா உங்களைப்
பார்த்தபோது எனக்கு ஒரு சோதனை வந்ததுன்னு சொன்னேன் இல்லையா? அது என்ன சோதனைன்னு சொல்றதுக்கு முன்னால, அது ஏன் எனக்கு
சோதனையா இருந்ததுங்கறதுக்கான காரணத்தை நான் சொல்லியாகணும்.
எனக்கு உபநயனம்
முடிஞ்சு நித்ய சந்த்யாவந்தனம் செய்யும்போது அதில் ப்ராசன மந்த்ரம் அப்படின்னு ஒண்ணு
வரும்.
அதில் காலையில்: (ஸூர்யச்ச) அனைத்தையும் இயக்குவிக்கும் ஸூர்யனும் (மன்யுச்ச)
அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் (மன்யு-பதயச்ச) கோபத்தையாளும் தெய்வ சக்திகளும் (மன்யு-க்ருதேப்ய:) கோபத்தாற் செய்யப்பட்ட
(பாபேப்ய:) பாவங்களினின்று (மா) என்னை (ரக்ஷந்தாம்)
காப்பாற்றட்டும். (ராத்ர்யா) இரவில் (மனஸா) மனத்தாலும்
(வாசா) வாக்காலும் (ஹஸ்தாப்யாம்)
கைகளாலும் (பத்ப்யாம்) கால்களாலும்
(உதரேண) வயிற்றாலும் (சிச்நா)
ஆண்குறியாலும் (யத்) எந்த
(பாபம்) பாவத்தை (அகார்ஷம்)
செய்தேனோ, (கிஞ்ச) இன்னும்
(மயி) என்னிடத்தில் (யத்)
எந்த (துரிதம்) பாவம் உண்டோ,
(தத்) அதையும்; (ராத்ரி:)
இராத்ரியின் அதிதேவதை (அவலும்பது) நீக்கியருள வேண்டும். (இதம் மாம்) இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை (அஹம்) நான் (அம்ருதயோநௌ) மோக்ஷத்திற்குக்
காரணமாகிய (ஸூர்யே ஜ்யோதிஷி) ஸூர்ய வடிவான
பரஞ்ஜோதியில் (ஜுஹோமி) ஹோமம் செய்கின்றேன்.
(ஸ்வாஹா) இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக
வேண்டும்.
மத்யாஹ்னே (நடுப்பகலில்): (ஆப:) ஜலதேவதை (ப்ருதிவீம்) தனக்குறைவிடமாகிய பூமியை (புனந்து) புனிதமாக்கட்டும்; (பூதா) அங்ஙனம் புனிதமாக்கப்பட்ட (ப்ருதிவீ) பூமி, (மாம்) என்னைப் (புனாது) புனிதமாக்கட்டும். (ப்ரஹ்மணஸ்பதி:) அது வேதத்திற்குறைவிடமாகிய ஆசாரியனையும் (புனந்து) புனிதமாக்கட்டும்; (பூதா) என்றும் புனிதமாயுள்ள (ப்ரஹ்ம) வேதம் (மாம்) என்னைப் (புனாது) புனிதமாக்கட்டும். (உச்சிஷ்டம்) பிறர் உண்ட மிச்சமும் (அபோஜ்யம்) புசிக்கத் தகாததுமான (யத்) எது (மயா) என்னால் (புக்தம்) புசிக்கப்பட்டதோ, (வா) அல்லது (மம) என்னுடைய (யத்) எந்த (துச்சரிதம்) துர்நடத்தை உண்டோ, (கிஞ்ச) மேலும்; (அஸதாம்) கெட்டவர்களிடமிருந்து (ப்ரதிக்ரஹம்) ஏற்றுக் கொண்டது எது உண்டோ, (ஸர்வம்) அவை எல்லாவற்றினின்றும் (மாம்) என்னை (புனந்து) ஜலதேவதை புனிதமாக்கட்டும் – என்று ப்ரார்த்தித்து (ஸ்வாஹா) புனிதமான என்னைப் பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கின்றேன்.
ஸாயங்காலே (மாலை வேளையில்): (அக்நிச்ச) அக்னியும் (மன்யுச்ச) அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும், (மன்யு-க்ருதேப்ய: பாபேப்ய:) கோபத்தாற் செய்யப்பட்ட பாவங்களினின்று (மா) என்னை (ரக்ஷந்தாம்) காப்பாற்றட்டும். (அஹ்நா) பகலில் (மனஸா)
மனத்தாலும் (வாசா) வாக்காலும்
(ஹஸ்தாப்யாம்) கைகளாலும் (பத்ப்யாம்) கால்களாலும் (உதரேண)
வயிற்றாலும் (சிச்நா) ஆண்குறியாலும்
(யத்) எந்த (பாபம்)
பாவத்தை (அகார்ஷம்) செய்தேனோ,
(கிஞ்ச) இன்னும் (மயி)
என்னிடத்தில் (யத்) எந்த
(துரிதம்) பாவம் உண்டோ, (தத்) அதையும் (அஹ:) பகலின் அதிதேவதை (அவலும்பது) நீக்கியருள
வேண்டும். (இதம் மாம்) இங்ஙனம் பாவம் நீங்கிய
என்னை (அஹம்) நான் (அம்ருதயோநௌ) மோக்ஷத்திற்குக் காரணமாகிய (ஸத்யே ஜ்யோதிஷி) முக்காலத்திலும் ஸத்யமாய் விளங்கும்
பரஞ்சோதியில் (ஜுஹோமி) ஹோமம் செய்கின்றேன்.
(ஸ்வாஹா) இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக
வேண்டும்.
இப்படி மூன்று
வேளையும் செய்ததால் அதன் பொருள் மனதில் பதிந்திருந்தது. அடுத்ததாக, “உபநயனம்” என்றால் குருவிற்கு
அருகில் அழைத்துச் செல்லுதல் என்று பொருள். இதுல இன்னொரு அர்த்தமும்
இருக்கு. ஸம்ஸ்க்ருதத்தில் உபநயனம் என்றால், கண் கண்ணாடி என்று பொருள். கண்பார்வை குறைபாடு என்றால்
அதை நிவர்த்திக்க நாம் கண்ணாடி அணிகிறோம் இல்லையா? அது போல,
நமது அறிவுக்கண் குறைபாட்டை நிவர்த்தி செய்வது இந்த வேதங்கள்,
மந்த்ரங்கள், ஸாஸ்த்ரங்கள். அவற்றைப் படித்தலே உபநயனம் அப்படின்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, இவைதானே நம்முடைய அறிவுக்கண்ணை ப்ரகாசமா வெச்சிருக்கு?
இதையெல்லாம்
இப்பதான் நான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ஆரம்பிக்கும்போதே இவற்றின்
அருமை பெருமை பற்றி ஓரளவு புரியுது. அதனால, நான் எந்தளவுக்கு ஒழுக்கமா இருக்கணும் அப்படின்னும் புரியுது. வெளில மத்த மத்த ஆட்கள் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினா, கேட்கும்போது காதும் மனசும் கூசுது! ஒரு சில முறைகேடான
நடத்தை, செயல்கள் இதைப் பார்த்தாலும் இவற்றிலிருந்து நீ ஒதுங்கி
இரு! அப்படின்னு மனசு சொல்லுது. என்ன ஒண்ணு,
இதெல்லாம் பார்த்தா கட்டுக்கடங்காம கோபந்தான் வருது! இருந்தாலும் கோபம் என்ற குணமும் தப்புன்னு அறிவு சொல்லுது! மனசு கேட்க மாட்டேன்னு பல சமயத்துல அடம் புடிக்குது!
இப்படியிருக்கற
எனக்குள்ள வயசு காரணமா புதுசா ஒரு உணர்வு தலைகாட்ட ஆரம்பிச்சுது! இதுதான் நான் சந்திச்ச, மனசை அலைபாய வெச்ச சோதனை!
தினமும் நான் வேலைக்குப் போகும்போது வழியில் எதிர்ப்படும் பெண் ஒருத்தியின்பால்
ஒருநாள் சட்டென்று ஒரு ஈர்ப்பு வந்தது. இந்த…., “கண்டதும் காதல்” அப்படின்னு சொல்றாங்களே! அதுதான் போல! அவளுடைய புற அழகு அவ்வளவு அபாரமாக இருந்தது.
வாலிபத்தின் வசந்தம் அவளிடத்தில் மிகவும் செழிப்பாக இருந்தது.
இருப்பினும், என்னை மிகவும் கவர்ந்தது அவளுடைய
பேசும் விழிகள்! அதில்தான் எவ்வளவு மின்சாரம்! அவளும் நானும் ஒருவரையொருவர் கடந்து செல்லும்போது விழிகள் நான்கும் உரசிச்
செல்லும். அவளும் என்னைக் குறிப்பாகப் பார்ப்பதை உணர்ந்து கொண்டபின்
அந்தப் பார்வையின் தீண்டலுக்காகவே இருவரும் குறிப்பிட்ட நேரத்தில் தவறாது வருவது வாடிக்கையானது.
தினமும் விழிமொழிகள் மட்டுமே! வாய்மொழியேதுமில்லை!
இப்படிப்பட்ட
அலைபாய்தல் தவறு என்று அறிவு அவளைக் காணாத மற்ற சமயங்களில் இடித்துரைக்கும். அந்த நேரங்களில் மனசு சரியென்று கேட்டுக் கொள்ளும். ஆனால்,
மறுநாள் காலை மனசு அறிவை வெல்லும்! அவளுடைய தரிசனத்துக்காக
மனசு பறந்து கட்டும்! சில நொடி விழிமொழிகளுக்குப் பின் அறிவு
தலைதூக்கும். இந்தப் போராட்டம் பல நாட்கள் நீடித்தது.
இத்தனைக்கும், என்னுடைய பெயர் அவளுக்கும்,
அவளுடைய பெயர் எனக்கும் தெரியாது! ஆனால் விழிகளின்
உரையாடல் மட்டும் அந்த சில நொடிகள் தினமும் தொடர்ந்தது!
எவ்வளவு நாள்
இப்படியே செல்லும்?
வாலிபத்தின் ஆட்சியில் பிடிபட்ட மனசு, “அவளை நெருங்கிப்
பேசு!” என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்காட்பட்டு
சரி, மறுநாள் அவளிடம் பேசிவிடுவதென்று மனம் தீர்மானித்து விட்டது.
அறிவோ, செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு விழித்தது!
மனம் வென்றதா? இல்லை அறிவு வென்றதா?
No comments:
Post a Comment