ஒரு ஆத்மாவின்
பயணம்
பாகம்-8
எனக்கு ஆண்டு
நிறைவுன்னு இங்க நிறையபேர் வந்திருக்காங்க! கூடவே எனக்கு பெயரும்
வைக்கறாங்க! வந்தவங்கள்ள கொஞ்சம் பேர் கேட்டாங்க, ஏன் இப்பதான் பெயர் வெக்கறீங்க? குழந்தை பொறந்த கொஞ்ச
நாள்லயே வெச்சிருக்கணுமேன்னு. அதுக்கு அப்பாவும் அம்மாவும்,
“அப்ப வீட்டுல சரியா ஒத்துப்பட்டு வரலை. ஏதேதோ
காரணங்களால தள்ளிப் போயிடுத்து. அதனால அதை ஒரு நிகழ்ச்சியா பண்ண
முடியலை. ஆனாலும் ஏற்கெனவே ஒரு பேரை அந்த சமயத்துல தீர்மானம்
பண்ணிட்டோம். அதை இப்ப சொல்லப் போறோம் அப்படின்னாங்க.
அதுக்கப்புறமும் ஒண்ணு சொன்னாங்க. நம்ம குடும்ப
உறவு அத்தனை பேரும் வரணும். அந்த சமயத்துல யாருக்கும் நேரம் சரிப்படலை.
அதனால இப்ப பேர் வைக்கிறோம் அப்படின்னாங்க. எனக்கு
ஒரே ஆர்வம்! என்ன பேர் வைக்கப் போறாங்கன்னு. வந்தவங்களும் அதே ஆர்வத்தோட கேட்டாங்க. அதுக்கப்புறம்,
வீட்டில என்னென்னவோ செஞ்சாங்க. அவங்க பேசினதுல
இருந்து அது ஏதோ ஹோமம் அப்படின்னு தெரிஞ்சது. ஆனா அதுக்கு என்ன
பேர்னு சரியா தெரியல. உங்கள்ல யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க!
நான் அந்த சமயத்துல என்னோட விளையாட்டுல மும்முரமா இருந்தேன்.
அதனால தெரியலை.
அந்த ஹோமம்
முடிஞ்சதும் அப்பா என்னை மடில வெச்சுக்கிட்டு
என்னோட காதுல என்னோட பெயரை சொன்னார். எனக்கு என்ன பெயர் தெரியுமோ?
“ஆத்மாராம்”! எனக்கு இந்தப் பெயர் புடிச்சிருக்கு!
இந்த பெயரைத்தான் அன்னிக்கு வந்த அந்த அத்தை சொன்னாங்களாம்! என்னது? அந்த அத்தை பெயரா? என்னவோ,
மஞ்சு, மஞ்சுன்னு அவங்களை கூப்பிடறாங்க.
அத்தை! உங்க பேர் என்னன்னு கொஞ்சம் நீங்களே சொல்லுங்க!
அதுக்கப்புறம்
என்னை ஒருத்தர் மடில உக்கார வெச்சாங்க. அவர் என்னோட மாமா அப்படின்னு
தெரிஞ்சது. அந்த மாமா மடில நான் இருக்கும்போது, ஒருத்தர் வந்தார். அவர் கைல ஏதோ வெச்சிருந்தார்.
அதை எடுத்து, என்னோட காதுல ஒரு அழுத்து அழுத்தினார்.
நான் வலி தாங்க முடியாம ஆஆஆஆன்னு அழ ஆரம்பிச்சிட்டேன். ரொம்ப வலிக்குது! அதுக்கப்புறமும் அவர் என்னை விடலை.
இன்னொரு காதுலயும் அதே மாதிரி பண்ண, மறுபடியும்
அழுதேன். எல்லாரும் ஒண்ணும் இல்ல, ஒண்ணும்
இல்லன்னு என்னைப் பார்த்து சொன்னாங்க, ஆனா என்னோட வலி எனக்குதானே
தெரியும்?
அப்போ என்னோட
கழுத்துல வாசனையா ஒண்ணு போட்டிருந்தாங்க. அதுக்கு பூமாலைன்னு
பெயராம். அதைக் காட்டி என்னை அந்த மாலையையே பார்க்க வெச்சிட்டாங்க.
நான் அதை கைல புடிச்சிக்கிட்டு ஆட்டி ஆட்டி பார்க்க, எனக்கு வலி மறந்து போயிடுச்சு.
ஒரு வழியா எனக்கு
ஆத்மாராம் அப்படிங்கறதுதான் பெயர்னு தெரிஞ்சு போச்சு. அப்படின்னா என்னை குழந்தை, குழந்தைன்னு சொன்னாங்களே!
அது இனிமே இல்லையா, அப்படின்னு நெனைச்சா,
அதுவும் இருக்காம்! அதுக்கப்புறம் யாராவது என்னைப்
பார்த்து குழந்தைன்னாலோ, ராமான்னாலோ, நான்
அவங்களை திரும்பிப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். இப்பல்லாம் மத்தவங்க
பேசறது எல்லாம் நல்லா புரிய ஆரம்பிச்சிடுச்சு.
அதுக்கப்புறம்
ஒரு நாள் நான் குடிச்சதெல்லாம் உடனே உடனே வெளியே போக ஆரம்பிச்சது. ரொம்ப சீக்கிரமா அயர்ச்சி வந்தது. என்ன காரணம்னு எனக்குப்
புரியலை. அதே சமயம், என்னோட வாய்க்குள்ள
ஏதோ ஒண்ணு புதுசா தெரிஞ்சது. அதுநாள் வரை வாய்க்குள்ள வழுக்கு
வழுக்குன்னு இருந்தது, இப்ப ஏதோ குறுகுறுன்னு குத்துது.
இது என்ன புதுசா இருக்கு!
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment