Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-5

ம்ம்ம்! இப்போது இருட்டு முடிஞ்சு வெளிச்சம்! வழக்கமான அந்த நேரத்து ஒலிகள், வாசனை! என்னுடைய வழக்கமான பால் குடித்தபிறகு, நான் என்னைச் சுற்றியுள்ளதைப் பார்க்கிறேன். அதற்குப்பின் மெல்ல திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

அட! எப்போது, எப்படி நடந்ததென்று தெரியலை. நான் எனது உடலைத் திருப்ப முடிகிறது. மெல்ல ஒரு பக்கமாகத் திரும்பி, அதே நிலையில் கொஞ்ச நேரம் இருந்தேன். இப்படி சில நேரம் போன பிறகு முழுமையாக திரும்பி விட்டேன்! அப்படித் திரும்பியதும் என்னைச் சுற்றியிருந்தவர்கள் அவர்கள் கையைத் தட்டினார்கள். அவர்கள் பெரிதாக சப்தமிட்டார்கள். அது எனக்கும் பிடித்திருந்தது. எனது இந்தச் செயலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. பார்த்துக்கிட்டு இருக்கீங்களே, உங்களுக்கே தெரியுமே! என்ன அர்த்தம்? கொஞ்சம் சொல்லுங்க!

 (அந்நேரம் இந்த ஆத்மாவுடன் பயணிப்பவர்களுள் சிலர் குமுதா, மஞ்சுளா போன்றவர்கள்குழந்தை குப்புற கவிழ்ந்துடுத்து!” என்றார்கள் கோரஸாக! இதை அந்த ஆத்மாவும் கேட்டுவிட்டு, “! அப்படியா?” என்றது யோசனையாக!)

இப்படி குப்புற கவிழ்ந்த என்னால் ரொம்ப நேரம் அப்படியே இருக்க முடியவில்லை. மெல்ல தலையைத் தூக்கிப் பார்த்தேன். தலையை அதிகமாக தூக்கியதாலோ என்னவோ, பழையபடி திரும்பி விட்டேன்! இது ஒரு விளையாட்டு மாதிரி எனக்குத் தோன்றியது. அந்த விளையாட்டு எனக்குப் பிடித்திருந்தது. நான் குப்புற கவிழ்ந்தபோது எனக்கு முன்னால் என்னென்னவோ போட்டிருந்தார்கள். அவைகளை நான் என் கைகளை நீட்டி எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தேன். அவைகளைப் பிடித்துவிட்டபோது, என்னையறியாமல் விதவிதமாக ஒலியெழுப்பினேன்!

அதுவுமன்றி, நான் அடிக்கடி பார்க்கின்றவர்கள் முகத்தைப் பார்த்து அவர்கள் மாதிரியே என் முகத்தையும் வைக்கப் பார்த்தேன். அதைப் பார்த்த அவர்கள், “ஏய்! குழந்தை முகம் பார்த்து சிரிக்கிறது!” என்றார்கள். அவர்கள் சொல்வதை வைத்து, இந்த உணர்வு சிரிப்பு என்று ஒரு உணர்வு உள்ளதைப் புரிந்து கொண்டேன். அதனால், அதை அடிக்கடி செய்து பார்ப்பது எனது பொழுதுபோக்கில் ஒன்றாகி விட்டது. ஆனால், சில சமயம் அவர்கள் முகம் வேறுவிதமாக இருக்கின்றது. அப்போது அவர்கள் சப்தமாக ஒருவருக்கொருவர் பேசுகிறார்கள். கையை நீட்டி நீட்டி வேறு பேசுகிறார்கள். அது எனக்கு ஏனோ ஒருவிதமான அச்ச உணர்வைத் தருகிறது. அச்ச உணர்வு வரும்போதெல்லாம் என்னையறியாமல் வழக்கமாக எழுப்பும் ஒலியை நான் அப்போதும் எழுப்புகிறேன். அப்போது புதிதாக வந்த ஒருவர், “ஏன் இப்படி கோபமாகப் பேசறீங்க? குழந்தை இங்க இருக்குல்ல? அதுக்குத் தொந்தரவாக இருக்காது?” என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு இப்படி அச்ச உணர்வைத் தரும் அவர்கள் பேச்சுகோபம்என்ற உணர்வு என்று புரிந்தது. இந்த கோபம் என்ற உணர்வு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.

அதனால், அந்த சமயங்களில் திரும்புவது, குப்புற விழுவது, மறுபடியும் திரும்புவது, கைகால்களை நான் இருக்கும் இடத்தில் அழுத்துவது, உதைப்பது என்று செய்து கொண்டிருந்தேன். அப்படி அழுத்தி உதைக்கும்போது நான் இருந்த இடத்திலிருந்து என்னால் நகர முடிவதை நான் முதன்முறையாக உணர்ந்தேன்! அட! இது நான் இருட்டில் இருந்தபோது சுற்றி வந்தேனே! அதுமாதிரி, ஆனா கொஞ்சமா இருக்கே! என்று எனக்குத் தோன்றியது! அவ்வளவுதான்! சட்டென்று மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி! நான் ரொம்ப நாள் செய்யாம இருந்ததை இப்ப, இங்கே செய்ய முடியுமென்று மனசுக்குத் தோன்றியதால், அதை நான் அதிகமாக செய்யத் தொடங்கி விட்டேன்!

ஆமா, என்னோட இந்த புது செயலுக்கு என்ன பெயர்? என் கூடவே வரும் நீங்க யாராவது சொல்லுங்க!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment