Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-19

மனசு தீர்மானித்தபடி அன்று பேசுவது என்று முடிவு செய்து, வழக்கத்தைவிட சற்று கூடுதலாக அலங்கரித்துக் கொண்டு நான் எனது வழக்கமான சாலையில் பயணித்தேன். குறிப்பிட்ட இடம் வந்தது.

ஆனால் ஏனோ, அன்று அவள் வரவில்லை. எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அது போலவே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எனது மனம் மிகவும் பரபரப்பானது! என்னென்னவோ கற்பனை செய்தது. ஏன் வரவில்லையென்ற கேள்வி திரும்பத் திரும்ப மண்டையைக் குடைந்தது. மனசு ஏமாந்த நிலையிலிருப்பதைக் காண்ட அறிவு சற்றே கைகொட்டிச் சிரித்தது. “நான்தான் அப்பவே சொன்னேனே, கேட்டியா? இதெல்லாம் உனக்குத் தேவையா?” என்று அறிவு கேட்டது. அந்த சமயத்தில் மேலும் ஒரு விஷயத்தை அறிவு, மனதிடம் சொன்னது:

 நீ உன்னுடைய வருமானம் என்னவென்று நினைத்துப் பார்! உன்னோட அப்பா அம்மா வாயக்கட்டி, வயத்தைக் கட்டி, இருக்க வீடு கட்டி, அதுக்கு கடனும் கட்டி, உன்னைப் படிக்க வைக்க அவங்களுக்குப் புடிச்சதைக் கூட செஞ்சுக்காம உன்னைப் பத்தி மட்டுமே யோசிச்சுகிட்டு ஓயாம ஓடாத் தேயறாங்களே! அதை நினைச்சுப் பாத்தியா?” என்று கேள்வி மேல் கேள்வியா கேட்டு இடித்தது. மனசும் வழக்கம்போல சரிசரின்னு தலையாட்டியது. ஆனால், மறுநாள் காலையிலோ, வழக்கம் போல வேதாளம் முருங்கை மரம் ஏறியது!

 ஏய், அறிவு! நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, அவளுந்தானே என்னைப் பாக்கறா? அவளுக்கும் என்னைப் புடிச்சிருக்குன்னுதானே அர்த்தம்? அவகிட்ட பேசினா என்ன தப்பு? அவ பாக்க அழகா மட்டுமா இருக்கா? அவ கண்ணைப் பாரு! அதுல எவ்வளவு அறிவு இருக்கு? அவ எங்கூட இருந்தா எனக்கு எவ்வளவு நல்லா இருக்கும்? அதனால இன்னிக்கு அவளைப் பாத்தா நான் பேசத்தான் போறேன்!” இப்படி மனசு அறிவு கிட்ட படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டு, என்னைத் தன்வசப் படுத்திக் கொண்டு வழக்கம்போல சாலையில் பயணிக்க வைத்தது. கண்கள் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அவளைத் தேடியது.

அப்பாடா! இன்னிக்கு அதோ, தூரத்துல அவ வரா! இவ்வளவு நாள் பார்க்காம இன்னிக்குப் பார்க்கும்போது ரொம்பவும் புதுசா இருக்கா, இன்னும் அழகாவும் இருக்கா! இப்படியெல்லாம் அவள் தொலைவில் வரும்போது எண்ணிய மனம், அவள் என்னைப் பார்த்துக் கொண்டே கடக்கும் அந்த நொடிகளில் என்னுடைய கை என்னையறியாமல் என்னுடைய சட்டைப் பையைத் தொட்டுக் கொண்டது. என்னுடைய வருமானம் சட்டென்று நினைவுக்கு வந்ததே அதற்குக் காரணம்! கூடவே என்னுடைய குடும்பச் சூழல் என்ன என்று அறிவு சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது.

நான் அவ்வாறு சட்டைப் பையைத் தொட்டுக் கொண்டே அவளைக் கடந்ததை அவளும் பார்த்தாள். கண்களில் சில கேள்விகள்; பிறகு சற்றே குழப்பம் என அவளும் கடந்து சென்று விட்டாள். இருவரும் ஒருவரையொருவர் கடந்தபின் நான் மெல்ல திரும்பி அவளைப் பார்க்கும் அதே வேளையில் அவளும் என்னைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு சிறிய புன்னகையோடு மேற்கொண்டு நடந்தாள்.

அதற்குப் பின்னும் சில நாட்கள் விழிமொழிகளுடன் மட்டுமே கடந்தது. நான் அருகில் வந்து பேசுவேன் என்ற அவளுடைய எதிர்பார்ப்பு நான் நெருங்க நெருங்க அவளது நடையின் வேகம் குறைவதிலிருந்து தெரிந்தது. இருப்பினும் என்னால் அவளிடம் ஏனோ பேசத் துணியவில்லை. துணிவில்லை என்பதைவிட, பேசுவதற்கு யத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் எங்கோ ஒளிந்திருக்கும் இந்தப் பாழாய்ப்போன அறிவு சட்டென்று எங்கள் இருவருக்கிடையில் வந்து நின்றுகொண்டு என்னைப் பார்த்து முறைக்கும்!

இப்படி ஒவ்வொரு நாளும் பேசும் முயற்சி தோல்வியில் முடிவதைக் கண்டு கடுப்பான மனசு, “நாளை என்ன நடந்தாலும் சரி, பேசிவிடுவது!” என்று கடுமையாக ப்ரதிக்ஞை எடுத்துக் கொண்டது.

இதுநாள் வரை என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த அறிவுக்கு முழுமையாக வெல்லும் தருணம் அன்றிரவு வாய்த்தது. என்ன அந்தத் தருணம்? வெல்லுமளவுக்கு அப்படி என்ன நடந்தது?





ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment