Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-15

எனக்கு ஜுரம் வந்து ஊசி போட்டுதுல்லியா? அதனால எனக்கு உடம்பு சரியாயிடுச்சு! என்னோட வழக்கமான வேலை ஆரம்பிச்சாச்சு! அம்மா அப்பாகிட்ட உக்காந்து படிக்கிறது, விளையாடறது, பாட்டிகிட்ட கதை கேக்கறது, காது தொட்டுப் பாக்கறது எல்லாம்!

இந்த காது தொட்டுப் பாக்கறது எவ்வளவு நாள் போச்சுன்னு தெரியலை. இதுக்கு நடுவுல எனக்கு மூணுதடவை பொறந்தநாள் வந்து போயிடுச்சு. திடீர்னு ஒருநாள் நான் காதை தொட்டுப் பார்க்க, என்னால் தொட முடிஞ்சுது! என்னோட கை காதுக்கு கீழ வரை வந்துது! அப்பாகிட்ட காட்டினேன், இது பாருப்பா, என்னால தொட முடியுதுன்னு தொட்டு காட்டினேன். அப்பாவும் பார்த்துட்டு, “சரிதான், இன்னும் ஒரு மாசத்துல பள்ளிக்கூடம் திறப்பாங்க, அப்ப நீ போலாம்!” அப்படின்னா! எனக்கு ஒரே குஷி! நானும் மத்த மத்த அண்ணா, அக்கா மாதிரி பள்ளிக்கூடம் போகப் போறேன்!

அதே மாதிரி ஒருநாள் அப்பாவும் அம்மாவும் என்னை வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டாங்க. மறுநாள்லேர்ந்து நானும் புதுசா ட்ராயர் சட்டை போட்டுகிட்டு, புது சிலேட்டு, புஸ்தகம் ரெண்டையும் புது பைல போட்டுகிட்டு, பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சேன். அங்க எனக்கு படிக்கறது அப்படி ஒண்ணும் புதுசா தெரியலை. அங்கேயும் ஒரு அக்கா (அவங்களை டீச்சர்னு சொல்லணுமாம்) எனக்கு அதே அனா, ஆவன்னாதான் சொல்லிக் கொடுத்து, எழுதவும் சொன்னாங்க. நான் இதெல்லாம் வீட்லயே படிச்சதால, எல்லாருக்கும் முன்னால டீச்சர் சொன்னதையெல்லாம் கிடுகிடுன்னு சிலேட்டுல எழுதி டீச்சர்கிட்ட காட்டி ரைட்டு வாங்கிடுவேன்!

அங்கே எனக்கு என்ன புதுசுன்னா, அங்கே என்னை மாதிரியே நிறைய பேர் இருந்தாங்க. எனக்கு அவங்க எல்லாரையும் புடிச்சிருந்தது. அவங்களுக்கும் என்னை புடிச்சிருந்தது. நாங்க எல்லாரும் சேர்ந்து ஒண்ணா விளையாடுவோம். இதுநாள் வரைக்கும் நான் வீட்ல தனியாதான் விளையாடிட்டிருந்தேன். இப்ப எங்கூட நிறைய பேர் விளையாடறாங்க. அவங்க கூட விளையாடறதுக்காகவே நான் தினமும் பள்ளிக்கூடம் போறேன். அங்க தினமும் காலைல போனதும் எல்லாரும் வரிசையா நிக்கணும். அங்க எனக்கு புதுசா ரெண்டு பாட்டு தெரிஞ்சுது. ஒண்ணுநீராரும்னு ஆரம்பிக்கும். இன்னொண்ணுஜனகணமனன்னு ஆரம்பிக்கும். இது ரெண்டுமே எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. இந்த ரெண்டையும் நான் வீட்டு வாசல்ல இருக்கற திண்ணை மேல நின்னுகிட்டு பாடுவேன்.

அதுக்கப்புறமா, எங்களுக்கு புதுசா ஒரு டீச்சர் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சாங்க. இப்பல்லாம், அ சொன்னா, அணில் அப்படின்னும், ஆ சொன்னா ஆடு, இ சொன்னா இலை இப்படியெல்லாம் சொல்லச் சொன்னாங்க, எழுதவும் சொன்னாங்க. இதெல்லாம் நான் அங்கேயும் படிச்சுட்டு, வீட்டுலயும் படிச்சுட்டு எழுதணும். பள்ளிக்கூடத்துல டீச்சர், வீட்டுல அம்மா இல்லைன்னா அப்பா சொல்லித் தராங்க.

ஒருநாள் இப்படித்தான், வீட்டுல அம்மா சொல்லித் தரும்போது, நான் சொன்னேன், அடுத்த நாள் இதை டீச்சர் சொல்லுவாங்கம்மா அப்படின்னு. அதுக்கு அம்மா, “பரவாயில்லடா, நீ கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சுகிட்டு போ. அப்பதான் டீச்சர் சொல்லும்போது உனக்கு இன்னும் நல்லா புரியும்அப்படின்னாங்க. நானும் சரின்னு படிச்சிட்டு, எழுதிப் பாத்துட்டு போவேன்.

மறுநாள் காலைல பள்ளிக்கூடத்துல டீச்சர் புஸ்தகத்தைப் பார்த்து சொல்லிக் கொடுத்துட்டு, அதை அப்படியே அங்க கறுப்பா இருக்கற சுவத்துல எழுதினாங்க. அவங்க எழுதிப் போட்டதுல ஒண்ணு மட்டும் நான் படிச்ச மாதிரி இல்லாம வேற மாதிரி இருந்தது. என்னன்னு அதை உத்துப் பாத்துட்டு, என்னோட புஸ்தகத்தையும் பாத்தா, டீச்சர் ஒரு வார்த்தையை மாத்தி எழுதிட்டாங்க!

அவங்கசெவ்வானம்அப்படின்னு எழுதறதுக்கு பதிலா, “சொவ்வானம்அப்படின்னு எழுதிட்டாங்க! நான் உடனே எழுந்து டீச்சர்கிட்ட சொன்னேன், “டீச்சர், நீங்க செவ்வானம் அப்படின்னு எழுதறதுக்கு பதிலா சொவ்வானம் அப்படின்னு எழுதிட்டீங்க! “க்கு பக்கத்துல இருக்கற காலை ஒடிங்க!”


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment