ஒரு ஆத்மாவின் பயணம்
பாகம்-4
என்னோடு அடிக்கடி
பேசுவது இரண்டு உருவங்கள்.
அதில் அந்த மென்மையான குரல் உடைய உருவம் அடிக்கடி தன்னைக் காட்டி,
“அம்மா பாரு, அம்மா பாரு” என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அதனால் அந்த உருவம்
எனக்கு அம்மா என்று புரிந்து கொண்டேன். ஆனால் என்னால் அதே மாதிரி
சொல்ல முடியவில்லை. அது போலவே, அந்த கனத்த
குரல் உருவத்தைக் காட்டி, “அப்பா பாரு! அப்பா பாரு!” என்று அடிக்கடி சொன்னதால், அந்த உருவம் அப்பா என்று புரிந்து கொண்டேன். இந்த இருவரைப்
பார்க்கும் போது “ம்ம்ம்” என்றோ,
“ப்ப்ப்” என்றோ மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது.
இவை இரண்டும் எனக்குப் புதியதாக இருந்தன. இவை தவிர
வேறு சில எனக்குப் புதியதாக இருந்தன. இருட்டிலிருந்தபோது சுற்றி
வர முடிந்தது போல இங்கே முடியவில்லை என்று ஏற்கெனவே சொன்னேன் இல்லையா? இப்போதெல்லாம் என்னுடைய தலை கட்டுப்பாடில்லாமல் ஆடுவது நின்றுவிட்டது!
என்னால் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று திரும்பிப்
பார்க்க முடிகிறது! சுற்றி சுற்றி வந்தது எனக்கு நினைவு இருந்ததால்,
இப்போதும் அதுமாதிரி சுற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறேன்.
அதன் முதற்கட்டமாக, தலையை திருப்புவது மாதிரி மெல்ல
மெல்ல எனது உடம்பைத் திருப்ப முயற்சி செய்து வருகிறேன்.
என்ன, அப்படிப் பாக்கறீங்க! ஓ! இதுக்கு
முன்னாடி நான் பேசிய விதத்திற்கும் இப்ப உங்களோட பேசறதுக்கும் வேற மாதிரி இருக்கேன்னா?
அதான் முதல்லயே சொன்னேனே! இப்போதெல்லாம் நிறைய
கவனிக்கிறேன். நான் கேட்கும் ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு பெயர் இருக்கு!
அதுபடி, என்னைச் சுற்றியிருக்கறவங்க கிட்டேயிருந்து
வந்த ஒலி என்பது பேசுவது என்று புரிந்து கொண்டேன். அம்மா,
அப்பா புரிஞ்சுகிட்டேன். ஆனால் அவர்கள் மாதிரி
பேசவோ, அசையவோ, சுற்றி வரவோ இப்ப முடியலை.
ஆனா, முயற்சி பண்றேன்.
அம்மா கிட்டேர்ந்து
கிடைக்கறது பால்னு புரிஞ்சுகிட்டேன். அது என்னோட வாய் வழியா
வயிற்றுக்குப் போவதை “குடிக்கறது” அப்படின்னு
புரிஞ்சுகிட்டேன். சில சமயம், குடிக்கும்
போதே தூங்கிடுவேன். அப்ப என்னைச் சுத்தி இருட்டா இருக்கும்.
சில சமயம் குடிச்சப்புறமும் முழிச்சிட்டிருப்பேன். அப்போதெல்லாம் கை, கால் தலையை அசைச்சு பார்த்துக்கிட்டே
இருப்பேன் (மத்தவங்க மாதிரி நானும் அசையணும், சுத்தி வரணுமே!). அதை மத்தவங்க பார்த்துவிட்டு,
குழந்தை விளையாடுதுன்னு பேசறாங்க.
இருட்டா இருக்கும்போது
யாரும் என் கண்ணுக்குத் தெரியலை. அதனால நான் தூங்கிடறேன்.
திடீர்னு கண் கூசும். அப்படி கூசுவது வெளிச்சம்னு
புரிஞ்சுகிட்டேன். இருட்டு, வெளிச்சம் மாத்தி
மாத்தி வருவதும் புரிந்தது. வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக வரும்போது
எனக்கு மனசுக்குப் பிடித்த இரண்டு ஒலிகள் – மற்றவர்கள் பேசுவதை
வைத்து அதற்குப் பெயர் ஸ்லோகம் என்றும் புரிந்து கொண்டேன். அந்த
ஸ்லோகம் வரும்போது மூக்கில் வரும் உணர்வு “வாசனை” என்று மற்றவர்கள் பேசுவதை வைத்து புரிந்து கொண்டேன்.
இருட்டிலிருந்தபோது
சுலபமா செய்ய முடிஞ்சதையெல்லாம் இங்கே வெளியே அப்படி செய்ய முடியவில்லை; காரணம் இடம் இரண்டும் வேற வேறன்னும் புரிஞ்சுகிட்டேன். இருட்டிலிருந்தபோது எப்போதும் பாதுகாப்பாக இருந்த உணர்வு இப்போது வெளியே வந்தபின்
இல்லை. அம்மா அல்லது அப்பா என்னை எடுத்துக் கொள்ளும்போது மட்டும்
பாதுகாப்பா இருக்கற மாதிரி இருக்கு! அது ஏன் அப்படி இருக்குன்னு
தெரியலை.
அங்கே இருந்தபோது
எனக்குள் இருந்த அந்தக் கேள்விகள் இப்போதும் நினைவுக்கு வந்தன. நான் யார்? எப்படி இங்கே வந்தேன்? இதற்குமுன் இருட்டில் இருந்தேனே, அதற்குமுன் எங்கே இருந்தேன்?
இப்போது ஏன் இங்கே வந்தேன்?
வழக்கம்போல விடை தெரியவில்லை! அதனாலோ என்னவோ, இப்ப எனக்கு அயர்ச்சியா இருக்கு! பால் குடிக்கணும்! அதுக்கப்புறம் தூங்கணும்! ஏன்னா, இப்ப இங்கே இருட்டா இருக்கு!
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment