Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-22

மறுநாள் காலையில் வழக்கமாகக் கண் விழித்து, செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டிருக்கையில் மனம் முதல் நாள் டிவியில் பார்த்த சுந்தரகாண்டத்தை அசை போட்டுக் கொண்டிருக்க, ஒருவிதமான எந்திரத்தனத்துடன் ரெடியாகி அலுவலகம் கிளம்பினேன். அன்று வழக்கத்தைவிட சிறிது சீக்கிரமாகவே கிளம்பி விட்டேன்.

எனது வண்டி சாலையில் வழக்கத்தைவிட சற்று மெதுவாகப் பயணித்துக் கொண்டிருக்கும்போது மனசுக்குள் இன்னமும் சீதை என்னை மிரட்டிக் கொண்டிருந்தாள். சீதையின் குரல் அவள் பட்ட பாடுகளை மிதிலையில் மாடத்திலிருந்து முதல்முறையாக இராமனைப் பார்த்தது தொடங்கி ஆஞ்சநேயரிடம் இன்னொரு மாதரை நினையாதே என்று எச்சரிப்பது வரை திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

அதனால் அவள் அன்று எதிரில் வந்துகொண்டிருந்ததை மனம் கவனிக்கவேயில்லை. எப்போது அருகிலே எதிர்ப்பட்டு, என்னைக் கடந்து சென்றாள் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அந்த சந்திப்பு முனை கடந்தபின்புதான் உணர்வு வந்தது. ஏதோ ஒரு உள்ளுணர்வில் சட்டென்று திரும்பிப் பார்க்க, அதே உள்ளுணர்வில் அவளும்! ஆனால் இம்முறை அவ்வாறு பார்க்கும்போது வழக்கமாகத் தோன்றும் அந்த வித்தியாசமான, ஆனால் மனதுக்குப் பிடிக்கின்ற அந்த உணர்வு தோன்றவில்லை.

எப்போது முதல் அவ்வாறு தோன்றவில்லையோ, அதற்குப் பிறகு மனசுக்குள் எந்த ஒரு குறுகுறுப்பும் இல்லை. இந்த உணர்வும் புதிதாக இருந்தது. அதற்குப் பிறகு காலை வேளைகளில் மனசுக்குள் இதுநாள் வரை தோன்றி வந்த அந்த பரபரப்பு அறவே நின்று போனது. மனசுக்குள் பரபரப்பு அடங்கிய பிறகு, தற்செயல் நிகழ்வு போல அவளையும் காலை வேளைகளில் இப்போதெல்லாம் காண முடிவதில்லை.

இது எப்படி இவ்வாறு நிகழ்ந்தது? என்னுடைய மனசுக்குள் மாற்றம் வந்தபிறகு அவளை ஏன் காண முடியவில்லை? இதுநாள் வரை என் கண்ணுக்குப் புலப்பட்டது உண்மையிலேயே ஒரு பெண்ணா? அல்லது சீதை மூலமாக எனக்குக் காதல் பற்றிய உண்மையான புரிதல் வரவேண்டுமென்பதற்காக என் முன் தினமும் தோன்றிய ஒரு மாயத் தோற்றமா, சீதை கண்ணுக்கு மாயமான் தோன்றிய மாதிரி? எனக்குப் புரியவில்லை!

அதற்குப் பின் அன்றாடம் கேட்கும் பாடல்களில் புலப்பட்ட காதலென்பது மனசுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், காதலென்ற பெயரில் மனசுக்குள் முதன்முதலில் விழுந்த விதை ஒரு விதை மட்டுமே! அதுவே காதல் அல்ல! அது வெறும் இனக்கவர்ச்சி என்பது அறிவு வழியே மனசுக்குப் புரிந்தது. மனசு புரிந்து கொண்டபின்பு எதிர்ப்பட்ட, கடந்த, சந்தித்த, அளவளாவிய பெண்கள் எவருமே என்னுடைய மனதை ஈர்க்கவில்லை. அவர்களில் சிலருடைய கண்களில் காதலென்னும் நட்சத்திரம் மின்னுவதை நான் உணர்ந்தாலும் அவற்றை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. காரணம் சீதையின் எச்சரிக்கை!

அந்த எச்சரிக்கையை மனம் கேட்டபின்பு, உண்மையிலேயே அழகான அல்லது குடும்பப் பாங்கான அல்லது மனதால் அழகான பெண்களைக் கண்டால் மனசுக்குள் ஒரு அலாரம், "உனக்கான ஒருத்தி எங்கோ காத்திருக்கிறாள், அந்த ஒருத்தி இவளல்ல!" என்று ஒவ்வொரு முறையும் அடிக்கும். அதனால் அவர்களைக் காண நேரும்போது அவர்களுக்காகக் காத்திருக்கும் அந்த வேறு பல முகம் தெரியாத ஆண்கள் என்னுடைய நினைவுக்கு வந்தனர்.

இப்படித் தோன்றுவதும் எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு! ஊரில் பிற ஆண்கள் பெண்களை விரட்டி விரட்டி  இந்தக் காதலெனும் உணர்வில் விரும்பி லயித்திருக்க, எனக்கு மட்டும் ஏன் அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை?

ஒருவேளை, இவையெல்லாம் சிற்றின்பம்; பேரின்பம் வேண்டுமெனில் நீ உனக்குள்ளிருக்கும் அந்த மூன்று கேள்விகளுக்கு விடை தேட முயற்சி செய்! என்று அறிவு மனசுக்கு அவ்வப்போது கட்டளையிடுவதாலா?

ம்ம்ம்? என்ன கேட்டீங்க? அந்த மூன்று கேள்விகள் என்னன்னா?

1) நான் யார்?
2) எப்படி இங்கே வந்தேன்?
3) இதற்கு முன் எங்கு இருந்தேன்?

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment