ஒரு ஆத்மாவின் பயணம்
பாகம்-7
நான் எனக்கு
முன்னால் போட்டிருந்ததை எல்லாம் நகர்ந்து போய் எடுக்கறேன். அதுல ஏதாச்சும் எனக்குப் பிடிச்சிருந்தா, அதை வாய்ல வெச்சுக்கறேன்.
எனக்குப் புடிச்சதுல ஏதாவது உடனே கிடைக்கலைன்னா, அது எங்க இருக்குன்னு என்னால பார்த்து எடுக்க முடியுது! நான் அப்படி எடுக்கறதைப் பார்த்துட்டு மத்தவங்க, “அப்பா!
எங்க ஒளிச்சு வெச்சாலும் எப்படியாவது போய் எடுத்துடறான்!” அப்படின்னு பேசிக்கிட்டாங்க. இதெல்லாம் எனக்கு புதுசா
இருக்கு!
அதுவுமில்லாம, இந்த அப்பா வெளிச்சம் வந்த கொஞ்ச நேரத்துல எங்கிட்ட இல்லாம எங்கேயோ போயிடறா!
அது மாதிரியே அம்மாவும் சில சமயம் போயிடறா. அப்பல்லாம்
என்னைச் சுத்தி மத்தவங்க இருந்தாலும் நான் தனியா இருக்கற மாதிரி இருக்கும்.
அதனால எனக்கு அந்த அச்ச உணர்வு வரும். உடனே நான்
“ஓ”ன்னு சப்தம் போட ஆரம்பிச்சிடுவேன். இப்படி சத்தம் போடறதை அழறதுன்னு மத்தவங்க பேசறதிலிருந்து புரிஞ்சுகிட்டேன்.
இப்படி அவங்க
ரெண்டு பேரும் போயிடறதால நான் அவங்களை கூப்பிட நினைப்பேன். அதற்கு முயற்சியும் செய்வேன். ஆனா, என்னாலதான் மத்தவங்க மாதிரி பேச முடியலையே! இருந்தாலும்
நான் என்னுடைய முயற்சியை தொடர்ந்து செஞ்சுகிட்டே இருந்தேன். அப்படி
முயற்சி செய்யறதுக்கு முன்னால, அவங்க வாயையே பார்த்துக்கிட்டிருப்பேன்.
அவங்க எப்படி பேசறாங்க அப்படின்னு பார்த்துக்கிட்டே இருப்பதால,
என்னாலும் அவங்க மாதிரி பேச முயற்சி செய்ய முடிஞ்சது.
அப்பதான் ஒரு
தடவை வெளிச்சம் வந்தபோது அப்பாவும் அம்மாவும் எங்கிட்ட “அப்பா பாரு, அம்மா பாரு” என்று
வழக்கமாக சொல்வதை சொல்லிக்
கொண்டிருந்தார்கள். எனக்கு இந்த அப்பா, அம்மா இந்த ரெண்டும் நல்லா நினைவு இருந்ததால, அவங்க சொல்ற
மாதிரி சொல்ல முயற்சி செய்யும்போது, திடீர்னு எனக்கு
“ம்ம், ம்ம்ம், ம்ம்ம்மாஆ
என்று சொல்ல முடிந்தது! அது மாதிரியே “ப்ப்,
ப்ப்ப், ப்ப்ப்பாஆஆ” என்றும்
சொல்ல முடிந்தது! அதை அப்படியே புடிச்சுக்கிட்டேன். அதை நிறைய தடவை அப்படி சொல்ல முடிஞ்சது! உடனே ரெண்டு
பேருக்கும் ஒரே மகிழ்ச்சி! அம்மா, “அம்மா!
குழந்தை அம்மா சொல்றான்! அப்பா சொல்றான்!”
என்று எல்லாரையும் கூப்பிட்டு காட்ட, அவர்களும்
ஆசையாக வந்து பார்க்க, அவர்கள் இருக்கும்போது என்னிடம் மறுபடியும்
“அம்மா சொல்லு, அப்பா சொல்லு” அப்படின்னு கேட்க, நானும் எனக்குத் தெரிந்த மாதிரி சொல்ல,
சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் அடடே, அடடே!
அப்படின்னாங்க! அவங்கள்ள ஒரு உருவம் பார்க்க அம்மா
மாதிரி இருந்தது. அட! இவங்களை நான் பார்த்திருக்கேன்.
அவங்களை அம்மா அடிக்கடி “குமுதா, குமுதா” அப்படிம்பாங்க. அவங்களும்
கிட்டே வந்து “அத்தை சொல்லு, அத்தை சொல்லு”
அப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நானும்
அவங்க வாயையே பார்த்துக்கிட்டே இருந்தேன். அவங்க எப்படி சொல்றாங்கன்னு
பார்த்துக்கிட்டே இருந்தேனா, அது மாதிரியே நானும் சொல்ல முயற்சி
செஞ்சேன். அட! எனக்கு அதுவும் சொல்ல முடியுது!
“த்த், த்த்த், த்த்த்த,
த்த்த்த்த” அப்படின்னு சொல்ல, அவங்களுக்கும் மகிழ்ச்சி!
அவங்க பேசிக்கிட்டதிலிருந்து
நானும் பேச ஆரம்பிச்சிட்டேன்னு புரிஞ்சுகிட்டேன். இது எனக்கு ரொம்ப
புடிச்சிருந்தது. என்னோட வழக்கமான விளையாட்டோட இதுவும் சேர்ந்துகிச்சு!
அதனால, அவங்களைப் பார்த்தா, ம்ம்மா, ப்ப்ப்பா, த்த்த்த ன்னு
சொல்வேன். அதைத் தவிர, இப்பல்லாம் என்னால்
என்னோட கால்களால நிற்க முடியுது, நகர முடியுது. அப்படி நகரும்போது, பக்கத்தில் இருக்கறதை கையால புடிச்சுக்கிட்டே
நகர்வேன்.
இப்படி சில
நாள் போனது.
ஒரு நாள் என்னைச் சுத்தி இருந்தவங்கல்லாம் மகிழ்ச்சியா இருந்தாங்க.
அவங்க ஏன் அப்படி இருக்காங்க? அவங்க பேசறதை கவனிச்சப்பதான்
தெரிஞ்சது, எனக்கு ஆண்டு நிறைவு வருதாம்! எனக்கு பெயர் வைக்கணும்னு பேசிக்கிட்டிருந்தாங்க. அட!
மத்த எல்லாருக்கும் எல்லாத்துக்கும் பெயர் இருக்கற மாதிரி எனக்கும் பெயர்!
இத்தனை நாளா என்னைக் காட்டி பேசும்போது குழந்தை, குழந்தைன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. நானும் எனக்குப்
பெயர் குழந்தைன்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா,
எனக்குள்ள புதுசா ஒரு கேள்வி இருந்தது. இந்த அம்மாவை
அம்மான்னு மத்தவங்க சொல்லாம வேற ஏதோ சொல்றாங்க, அம்மாவும் அந்தப்
பெயரைச் சொன்னவுடன் சட்டுன்னு திரும்பிப் பார்க்கறாங்க, இல்லைன்னா
எழுந்து போறாங்க. அதே மாதிரிதான் அப்பாவும். அப்படின்னா, அவங்க பெயர் அம்மா, அப்பா இல்லையா? அதே மாதிரி எனக்கும் இந்த குழந்தைங்கற
பெயர் இல்லையா? அப்படின்னா எனக்கு என்ன பெயர் வைப்பாங்க?
என்ன பெயர் சொன்னா நானும் அம்மா அப்பா மாதிரி திரும்பிப் பார்க்கணும்?
எனக்கு ஒண்ணுமே புரியலை!
அவங்க அப்படி
பேசிக்கிட்டிருந்தபோது,
என்னைப் பார்க்க இன்னொரு அத்தையும் அங்கே வந்தாங்க. மத்தவங்க பேசறது என்னன்னு அவங்களும் கேட்டபின்னாடி, அவங்க
ஒரு பெயர் சொன்னாங்க. அம்மா, அப்பா,
மத்த எல்லாரும் “ஆஹா! நல்லாயிருக்கு!
இந்தப் பெயரையே வைக்கலாம்”னு சொன்னாங்க!
அந்த அத்தை
சொன்ன பெயர் என்ன?
அது சரி, எனக்கு பெயர் வெச்ச அந்த அத்தையோட பெயர்
என்ன?
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment