Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-11

ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் பார்த்து!

நான் என்னோட பெய்ப்பா வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த இடம் நான் இருக்கற இடம் மாதிரி இல்லை. இங்க எல்லாம் நிறைய வீடுவீடா இருக்கு. ஆனா, அந்த இடத்துல அங்கங்க ஒரு வீடு இருக்கு. நான் போன பெய்ப்பா வீடு இருக்கற தெரு கடைசில பெரிசா ஒரு கோயில் இருக்கு. அந்த இடத்தை அக்ரஹாரம்னு சொல்றாங்க. வீடு சுத்தி நிறைய மரம் செடியா இருக்கு. அதுக்கு நடுவுல தண்ணி ஓடுது.

நான் கைல வெச்சிருக்கற பொம்மையெல்லாம் அங்க நடக்குது, ஓடுது, பறக்குதுன்னு சொன்னேன்ல, அந்த பொம்மைல ஒண்ணு யானைன்னு பேராம். அந்த யானை பொம்மை எங்கிட்ட குட்டியா இருக்கு. ஆனா அது கோயில்ல ரொம்ப பெரிசா இருக்கு. என்னோட பொம்மை அப்டியே சும்மா இருக்கு. ஆனா அந்த பெரிய யானை சும்மாவே இருக்கறதில்லை. ஆடிக்கிட்டே இருக்கு! என்னோட தாத்தா வாசல்ல உக்காந்துகிட்டு மூஞ்சி பக்கத்துல கையால இப்டி இப்டி ஆட்டுவாரே! என்னது அது? ஆங்! விசிறி! அது தாத்தா கைல குட்டியா இருக்கு. ஆனா இந்த யானை மூஞ்சில ரெண்டு பக்கமும் பெரிசா ரெண்டு விசிறி வெச்சுக்கிட்டு நிறுத்தாம ஆட்டிட்டே இருக்கு! அது மூஞ்சில நீளமா ஒண்ணு இருக்கு. அதை எல்லா பக்கமும் நீட்டறது. என்னைப் பார்த்ததும் என்னைப் புடிக்க நீட்டித்து. எனக்கு ஒரே பயமா போச்சு! அப்பாவை இறுக்கி புடிச்சுக்கிட்டேன். என்னோட பொம்மை எதுவுமே பேசாது, திங்காது. ஆனா இது என்னன்னா, அப்பப்ப உவாங், உவாங்குனு கத்துது. அதோட, அப்பப்ப புர்ர்ர்ர், புர்ர்ர்ர்ர்னு கத்துது. அது உவாங், உவாங்குனு கத்தறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. வீட்ல அந்த பொம்மைய வெச்சுக்கிட்டு, அதே மாதிரி நானும் கத்தறேன். ஏன்னா என்னோட பொம்மை கத்தாதே!

யானை மூஞ்சில நீளமா இருக்கே, அதுக்கு பேரு தும்பிக்கை! தெரியுமா உங்களுக்கு? அதை என்னோட தலைல தொப்புனு வெச்சுது! அப்பா அதுக்கு வாழைப்பழம், தேங்கா எல்லாம் குடுத்தா. அதை தும்பிக்கைல வாங்கி, அப்படியே லபக்குனு வாய்ல போட்டு முழுங்கிடுத்து!

அப்புறம், எங்கிட்ட வேற சில பொம்மையும் இருக்கு. அதுல ஒண்ணு மாடு பொம்மை, ஆடு பொம்மை, கோய் பொம்மை. இந்த மாடு பொம்மை மாதிரி பெரிசா ஒண்ணும், குட்டியா ஒண்ணும் வீட்ல இருக்கு. இந்த ரெண்டும் ம்ம்மா, ம்ம்ம்மான்னு சொல்றது. அதுக்கு அம்மா மட்டும்தான் சொல்லத் தெரியும். எனக்கு? அம்மா, அப்பா, அத்தை, தித்தி, தித்தப்பா, பெய்மா, பெய்ப்பா, பாத்தி, தாத்தா எல்லாம் தெரியுமே!

அப்றம், இந்த கோய் பொம்மை மாதிரி இருக்கே, அது எப்பப் பாரு கொக்கோ, கொக்கோனு சொல்லுது. நாங்க எல்லாரும் தூங்கிட்டிருப்போம். ஒரே இருட்டா இருக்கும். அப்பகூட கத்தறது. அப்படி கத்தின கொஞ்ச நேரத்துல வெளிச்சம் வருது. அம்மாகிட்ட கோய் காட்டி, கொக்கோ, கொக்கோனு கேட்டேன். அம்மா சொன்னா, அது அப்படி கத்தினா வெளிச்சம் வருமாம்.

நாங்க அப்படி வெளிச்சம் வந்ததும் தண்ணி ஓடற இடத்துக்குப் போவோம். அங்க போறதுனா எனக்கு ஒரே குஷி! அதுல இறங்கி ஜிங்கு ஜிங்குனு குதிப்பேன். கையால தண்ணிய அடிப்பேன். அந்த நேரத்துல அம்மா என்னை குளிக்க வெப்பாங்க! தானும் குளிப்பாங்க.

ஆஆவ்வ்! இருங்க! என்னோட காலை தண்ணிக்குள்ள இருக்கற என்னமோ கடிக்கறது. என்னன்னு மெதுவா தண்ணிக்குள்ள பார்த்தேனா, என்னமோ நிறைய தண்ணிக்குள்ள அங்கயும் இங்கயுமா ஓடறது! அது தன்னோட வாயை ப்ப்பப்ப் ப்ப்பப்ப்னு ஆட்டிண்டே இருக்கு! நிறுத்தவே மாட்டேங்கறது! ஆமா அது என்ன சொல்றது? அப்பா அப்பான்னா? எனக்குத் தெரியலை! நான் அதைப் பாத்துகிட்டே இருக்கறதை பாட்டியும் அம்மாவும் பாத்துட்டு, “ஆத்மா, அதெல்லாம் மீனுடா!” அப்படின்னாங்க. எங்கிட்ட இந்த மீன் பொம்மை இல்லையா, அதனால எனக்குத் தெரியலை.

தண்ணில ரொம்ப நேரம் ஆடிட்டேனா, அதனால தொப்பா பசிக்குது! பாட்டி கையால பப்புஞ்சாதம் சாப்பிடணும்! உங்ககிட்ட அப்றமா பேசறேன்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment