Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-17

 (ஆத்மாராமின் தாத்தாவும் அப்பாவும் தீர்மானித்தபடி நல்லதொரு நாளின் நல்லதொரு முஹூர்த்தத்தில் அவனுக்கு உபநயன ப்ரும்மோபதேச நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிந்தது. அதற்குப்பின் அவன் தனது தாத்தாவின் வழிகாட்டுதலின்படி நித்ய சந்த்யாவந்தனத்தை செய்து வந்தான். இனி, இந்த நித்யகர்மா மூலம் என்னவெல்லாம் அறிந்து கொண்டான் என்பதை அறிந்து கொள்ள நமக்கெல்லாம் ஆவலாக இருக்குமல்லவா? வாங்க, அவனை சந்தித்துவிட்டு வரலாம்.

அவனை சந்தித்த வேளை, அப்போதுதான் அவன் தனது பாடங்களைப் படித்து, எழுதி முடித்திருந்தான். அது ஒரு விடுமுறை நாள் என்பதால் அவனுக்கும் நம்முடன் உரையாட நிறைய நேரம் இருந்தது. இனி, அவன் சொல்வதைக் கேட்போம்.)

 வாங்க! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? என்ன, இப்ப நான் என்ன படிக்கறேன்னு கேக்கறீங்களா? நான் பள்ளிக்கூட படிப்பெல்லாம் முடிஞ்சு, இப்ப ஒரு காலேஜ்ல படிச்சிக்கிட்டிருக்கேன். ஸ்கூல்ல படிச்ச நாள்ல எனக்கு இந்த அறிவியல் பாடந்தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. காரணம், எனக்கென்னவோ அதுல அவ்வளவா ஆர்வமில்லை. அதனால, அறிவியல் என்னோட அறிவுக்கு எட்டலை. அதுவுமில்லாம, அப்பா எப்பவும் தன்னோட ஆஃபீஸ் வேலைல முழுசா மூழ்கி இருக்கறதால வீட்டு பொறுப்பெல்லாம் அம்மா தலைல முழுசா விழுந்துடுத்து.

அம்மா மாசம் ஒரு தடவை தனக்கும் அப்பாவுக்கும் சம்பளம் வந்தவுடனே மாசக் கணக்கு எழுதுவா. அப்போ நானும் அம்மா பக்கத்துல உட்கார்ந்துகிட்டு, அம்மா சொல்லச் சொல்ல ஒவ்வொரு செலவா ஒரு டைரில எழுதுவேன். கடைசில என்ன மிஞ்சறதுன்னு பார்த்தா, வரவுக்கு மேல செலவு இருக்கும். ஏதோ ஒரு விஷயத்துல மாசாமாசம் துண்டு விழும். அதை அப்பாவும் அம்மாவும் எப்படி சமாளிக்கறாங்கன்னு தெரியலை. ஆனா, எல்லா செலவும் தீர்மானிச்சபடி செஞ்சுடறாங்க. எப்படிம்மா சமாளிக்கறேன்னு கேட்டா, “உனக்கு இப்ப எதுக்கு அதெல்லாம்? நீ பேசாம படிக்கற வழியைப் பாருஅப்படின்னு சொல்லிடுவா. நானும், எனக்கு முழுசா புரியாததால சரின்னுட்டு போயிடுவேன்.

இதுக்கு நடுவுல, அம்மா சொன்னமாதிரி நான் படிச்சு தெரிஞ்சுண்ட சிலதை உங்ககிட்ட சொல்றேன். ஒரு நாள் தாத்தாகிட்ட சாமி கும்பிடறது பத்தி கேட்டப்போ, தாத்தா ஒரு விளக்கம் சொன்னார். அதே மாதிரி ஒண்ணை ஏதோ ஒரு புத்தகத்துல படிச்சேன். அது, தெய்வம் மனுஷ்யரூபேண அப்படின்னு ஆரம்பிக்கும். நீங்களும் படிச்சு பாருங்க! கோவிலுக்குப் போய் கும்பிடறதுக்கு காரணம், ஒவ்வொரு கோவிலும் ஒரு ஆகம விதிப்படி கட்டி, வழிபாட்டு முறையும் இப்படி இப்படித்தான் இருக்கணுங்கற விதிப்படி அமைஞ்சிருக்கு, அந்தக் கோவிலில் உள்ள மூலவர் தெய்வத்தின் மூர்த்தத்தில் இந்தப் ப்ரபஞ்சத்தின் சக்தி யாகத்தின் வழியா ஆவாஹனம் ஆகியிருக்கு, அந்தந்த தெய்வங்களை அந்தக் கோவில்ல நேரா போய் தரிசனம் பண்றதால அந்த தெய்வங்கள் கிட்டேர்ந்து நமக்கு நல்ல அதிர்வலைகள் வந்து சேருதுன்னு தெரிஞ்சுகிட்டேன்.

இந்த சந்த்யாவந்தனம் பண்றதால என்ன பயன் அப்படிங்கறதை ஒரு புத்தகத்துல படிச்சேன். ஸந்த்யாவந்தன மந்த்ரங்கள் அர்த்தத்துடன் அப்படின்னு அந்த புத்தகம் ஆரம்பிக்கும். அந்த மந்த்ரங்களை முறையா சொல்றதால நம்மோட உடம்பும் மனசும் எப்பவும் சுத்தமா, ஆரோக்யமா இருக்கும் அப்படின்னு தெரிஞ்சுது. அதுல சொன்ன மாதிரி இந்த நாட்டுல இருக்கற ஒவ்வொருத்தரும் இருந்தா, நம்முடைய நாடு எந்தளவுக்கு சுபிட்சமா இருக்கும்னும் புரிஞ்சுது. ஆனா, யதார்த்தம் அப்படியில்லைன்னும் தெரியுது. என்ன பண்றது, தனிமனித ஒழுக்கங்கறது அவங்கவங்க தனிப்பட்ட விஷயமா இருக்கு!

இது விஷயமா நான் இன்னொண்ணும் சொல்லணும். நான் பள்ளிக்கூடத்துல படிக்கறப்போ, டீச்சர் எனக்கு ஒரு திருக்குறள் சொல்லிக் குடுத்தாங்க. அது என்ன குறள்னா, “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதைப் படிச்சப்புறம், எதைப் படிச்சாலும் திருத்தமா, சந்தேகமில்லாம படிக்கணும்னும், அதுபடி நடக்கணும்னும் புரிஞ்சுது.

இருந்தாலும், எனக்கு நான் கருவிலிருந்தபோது எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு என்ன விடைன்னு இப்பவும் தெரியலை. இன்னும் அதிகமா படிக்கணும்னு மட்டும் தெரியுது; அப்படிப் படிச்சாதான் விடை கிடைக்கும்னும் தெரியுது. அந்தக் கேள்விகள் என்னன்னு உங்களுக்கு மறந்துடுத்தா? சொல்றேன். “நான் யார்? நான் எப்படி இங்கே வந்தேன்? இதற்கு முன் எங்கே இருந்தேன்?

 (இதற்குப் பின் சில வருடங்கள் ஓடின. அதன்பின் ஒருநாள் மீண்டும் ஒருமுறை ஆத்மாராமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனை கடைசியாக சந்தித்தபோது, பேச்சின் இறுதியில் சில கேள்விகளை வைத்திருந்தான். அதை அவனுக்கு நினைவுபடுத்தி, மேற்கொண்டு என்ன நடந்ததுன்னு கேட்டபோது, அவன் சொன்னவை கீழே!)

ஆத்மாராம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், “இந்த விடை தேடும் வேலைக்கு நடுவுல என்னோட காலேஜ் படிப்பு முடிஞ்சு இப்ப ஒரு இடத்துல வேலைக்குப் போயிட்டிருக்கேன். என்ன வேலைன்னு கேக்கறீங்களா? வாழ்க்கைக் கணக்கைப் போட்டுட்டிருக்கற நான் என்ன வேலைக்கு போவேன்? கணக்கெழுதற வேலைதான்!”

ஏதோ, படிச்சு தெரிஞ்சுகிட்ட வழில நான்பாட்டுக்கு போயிட்டிருந்தேன். இந்த நேரத்துலதான் எனக்கு ஒரு சோதனை வந்தது. அது என்னோட மனசை ரொம்பவே அலைபாய வைத்த சோதனை! அப்படி என்ன சோதனை? சொல்றேன்!”

 (இப்படிச் சொல்லிவிட்டு, அவன் அந்த சோதனை பற்றிய பழைய நினைவில் மூழ்கினான். தனக்கு நடந்ததை அவன் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. அவன் சொல்வதைக் கேட்பதற்காக நாமும் பொறுமையாகக் காத்திருப்போம்!)


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment