Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-3

நான் தூங்கப் போகுமுன் எனக்குப் புதிதாகப் பல அனுபவங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளதாகச் சொன்னேன் இல்லையா? இப்போது அவற்றைச் சொல்கிறேன் (எனக்கும் பொழுது போகணும் இல்லையா!).

நான் இருட்டில் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் சில வேறுபாடுகள் இருப்பதை நான் சட்டென்று உணர்ந்தேன். அங்கே இருந்தபோது என்னால் மிதக்க முடிந்தது. இப்படியும் அப்படியுமாக சுலபமாகச் சுற்றி வர முடிந்தது. ஆனால் இங்கோ, இப்போது என்னால் அசையக் கூட முடியவில்லை. இனி என்னால் மிதக்க முடியாது என்று உணர்ந்து கொண்டேன். அதுதான் பரவாயில்லை, ஏன் என்னால் சுற்றி வர முடியவில்லை? ஏன் என்னால் அசையக் கூட முடியவில்லை? என்றெல்லாம் எனக்குள் பல கேள்விகள். என்னால் கைகால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. என்னுடைய தலையோ, என்னுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லாத மாதிரி இருக்கிறது. அதுபாட்டுக்கு தனியாக அசைகிறது. என்னை எடுத்துக் கொள்கிறவர்கள் ஒரு கையில் என் தலையையும், இன்னொரு கையில் என் உடம்பையும் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி அவர்கள் எடுக்கும்போது ஒரு மாதிரி படபடப்பாக இருக்கு! அதனால், நான் அவர்களுடைய கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். சில சமயம் அவர்களுடைய கையை என்னுடைய வாயில் வைத்துக் கொள்கிறேன். இந்த மாதிரி சமயங்களில் எனக்குள் அந்தக் கேள்விகள் மறுபடியும் வந்தன. நான் யார்? எப்போது அந்த இருட்டான இடத்திற்கு வந்தேன்? அதற்கு முன் நான் எங்கே இருந்தேன்? இதற்கெல்லாம் விடை தெரியவில்லை. அது எனக்கு ஒருவிதமான புரியாத உணர்வைத் தந்தது. அதனால், என்னுடைய வயிற்றில் ஏதோ சுழன்றது. அதன்பின் எனக்குள்ளிருந்து வேறு ஏதோ இரண்டு துவாரங்கள் வழியாக சுறுசுறுவென்று வெளியேறியது. அப்போதுதான் எனக்கு மேலும் இரண்டு துவாரங்கள் இருப்பதை அறிந்து கொண்டேன்.

ஆங்! சொல்ல மறந்து விட்டேன். டப்டப் சத்தம் வரும்போது எனது முகத்தின் இரண்டு துவாரங்கள் வழியாக ஒரு உணர்வு உள்ளேயும் வெளியேயும் போவதாகச் சொன்னேன் இல்லையா? அந்த இடம்தான் மூக்கு! அப்படிப் போகும்போது கூடவே ஒரு உணர்வு. இது மாதிரி பல உணர்வுகள் அதனோடு வந்தன. நான் இருட்டிலிருக்கும்போது விழித்தவுடன் மனசுக்கு புடிச்ச ஒலி கேட்கும்னு சொன்னேன் இல்லையா? அதில் இரண்டை இப்போது வெளியே வந்தபின்னாலும் அடிக்கடி கேட்கிறேன். அதில் ஒண்ணு கௌசல்யா அப்படின்னு வரும். இன்னொண்ணு சுக்லாம் அப்படின்னு வரும். இந்த ரெண்டும் வரும்போது, மூக்கில் ஒரு உணர்வு வரும். அதுவும் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது.

ஆனால், ஒரு சில உணர்வுகள் எனக்குப் பிடிக்கவேயில்லை. இப்போதும் அந்த உணர்வுகளில் ஒன்று, எனக்குள்ளிருந்து ஏதோ வெளியேறியதுன்னு சொன்னேன்ல, அப்ப வந்தது. அப்போது நான் என்னையறியாமல் தொடர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்தேன். கூடவே எனது கால்கள் இரண்டும் மேலே எழும்பி, தலைப்பக்கம் வந்து விட்டன. என்னுடைய ஒலி கேட்டு, அந்த மென்மைக்குரல் உருவம் உடனே வந்து என்னைப் பார்த்துவிட்டு, சட்டென்று என்னை எடுத்துக் கொண்டு, அந்த புதிய இரண்டு துவாரங்களை நன்றாகத் துடைத்து விட்டது. கூடவே என்னுடைய உடம்பு முழுவதும் துடைத்து விட்டபின்பு, வேறு துணி போட்டு விட்டது. இது அடிக்கடி நிகழ்ந்தது.

என்னை நானே நன்றாக கவனித்துப் பார்த்ததில் ஒன்று புரிந்தது. எனக்கு அயர்ச்சி வரும்போது அந்த உருவத்திடமிருந்து அந்தச் சுவையான திரவம் என் வாய் வழியாக வயிற்றுக்குப் போகிறது. கொஞ்ச நேரம் கழித்து, என்னுடைய வேறு இரண்டு துவாரம் வழியாக வயிற்றிலிருந்து வெளியே போய்விடுகிறது. இந்த இரண்டும் நான் வெளியே வந்தபிறகுதான் அடிக்கடி நிகழ்கிறது. அதுவும், நான் விழித்துக் கொண்டிருக்கும்போது. இந்த வெளியேற்றம் சில சமயம் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போதும் நிகழ்கிறது. ஆனால் இவையிரண்டையும் நான் அந்த இருட்டான இடத்தில் இருந்தபோது உணர்ந்ததில்லை.

என்னால் இன்னொன்றும் உணர முடிந்தது. அது……, ம்ஹும்! அப்புறமா சொல்றேன்!

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment