Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-16

அன்னிக்கு நான் பள்ளிக்கூடத்துல டீச்சர்கிட்ட சொன்னது எப்படியோ என்னோட அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சுடுச்சு. டீச்சர் அவங்ககிட்ட என்ன சொன்னாங்கன்னு தெரியலை. அம்மா எங்கிட்ட, “டீச்சர்கிட்ட அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா!” அப்படின்னாங்க. எனக்குப் புரியலை! நான் ஏதாவது தப்பா சொன்னாலோ, எழுதினாலோ அம்மா, அப்பா, டீச்சர் எல்லாருமேஇல்லை, இதை இப்படி சொல்லாதே, எழுதாதேன்னு சொல்லிட்டு, எப்படி பண்ணனும்னு சொல்றாங்களே! நான் மட்டும் அதே மாதிரி ஏதாவது தப்புன்னா சொல்லக் கூடாதா? நீங்களே சொல்லுங்க!

இதை சொல்றச்சே எனக்கு வேற ரெண்டு ஞாபகத்துக்கு வருது! அந்த ரெண்டு என்ன தெரியுமா?

ஒருதடவை ஊர்ல திடீர்னு வானம் இருட்டா ஆச்சு. பெரிசா மழை பெஞ்சுது. அதைவிட பெரிசா காத்து அடிச்சுது. இது எனக்கு ரொம்ப புதுசா இருந்துது. மத்தவங்க பேசறத கேட்டப்போ, அது என்னவோ, முயல் காத்து அப்படின்னு தெரிஞ்சுது. இது பத்தி அப்பாகிட்ட கேட்டேன், “அப்பா, இந்த முயல் காத்துன்னா என்னப்பா? வெளில பாத்தா காத்து மட்டும்தான் இருக்கு. முயல் ஒண்ணு கூட ஓடலையே?” அப்படின்னு. அதுக்கு அப்பா சிரிச்சுகிட்டே, “அது முயல் காத்து இல்லடா, புயல் காத்துஅப்படின்னார். அது எப்படி வரும்னும் சொன்னார். உங்களுக்குந்தான் அது எப்படி வரும்னு தெரியுமே? அதுதானே?

அப்புறமா, நாங்க ஊருக்கு போகும்போது அப்பாவும் தாத்தாவும் பேசிக்குவா. எதாவது புது ஊருன்னா, அந்த ஊரு இங்கருந்து எவ்வளவு தூரம்னு பேசிக்கும்போது ஒரு தடவை அப்பா, இங்கேருந்து 200 மயில் இருக்குன்னு சொன்னார். நானும் அதை கேட்டேன். நாங்க அந்த ஊருக்கு போகும்போது, வழில அப்படியே வெளில எட்டி பார்த்துகிட்டே போனேன். ஆனா, ஒரு மயில் கூட கண்ல படலை. நான் இப்படி பார்த்துகிட்டு வர்றதை அம்மா, அப்பா எல்லாருமே பார்த்துட்டு, அப்படி என்னடா வெளில பார்த்துகிட்டு வர்றேன்னு கேட்டாங்க. நானும் கேட்டேன், “அம்மா! தாத்தாகிட்ட அப்பா சொன்னாளே, இந்த ஊருக்கு 200 மயில் இருக்குன்னு! ஆனா இதுவரைக்கும் ஒரு மயில் கூட காணுமே!” அப்படின்னு. அதுக்கு அப்பா சொன்னா, “ஏண்டா, நீ முயல் காத்துன்னு சொன்ன மாதிரி இதையும் மயில்னு நெனச்சுகிட்டிருக்கியா? அது மயில் இல்லடா, மைல்! அது இங்க்லீஷ் வார்த்தை!”

 இங்க்லீஷ்னா என்ன?” இது நான்.

 அது தமிழ் மாதிரிடா! தமிழ்ல அனா, ஆவன்னா மாதிரி அதுலயும் இருக்கு. அடுத்த வருஷம் நீ அதையும் பள்ளிக்கூடத்துல படிப்பே!”

இதுவும் எனக்கு புதுசு!

இதுக்கப்புறம், ஒரு தடவை என்னோட சித்தப்பா ஊருக்கு போயிருந்தப்ப, அங்க இருக்கற கோவிலுக்குப் போனோம். அங்கேயும் ஸ்லோகம் எல்லாம் சொன்னோம். எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. வீட்லயும் சாமி இருக்கு, இங்க கோவில்லயும் சாமி இருக்கு. எனக்கு என்ன சந்தேகம்னா, வீட்டுலயே சாமி இருக்கும்போது ஏன் நாம் இவ்வளவு தூரம் வந்து இங்கேயும் அதே சாமிய பாக்கணும்? தாத்தாதானே வீட்ல பூஜை பண்றார்? அதனால அவர்கிட்டே கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார்,

 நம்ம வீட்டுக்கு யாராவது வந்தா அவங்களை வாங்கோ வாங்கோன்னு வீட்டுக்குள்ள கூப்பிட்டு, ஸ்ரமபரிகாரத்துக்கு தண்ணி குடிக்க குடுத்து, அவங்களுக்கு உபசாரமெல்லாம் பண்ணி, அவங்களுக்கு புடிச்சதை சாப்பிடக் குடுத்து, அதுக்கப்புறமா நமக்கு ஏதாவது அவங்களால ஆகணும்னா அவங்ககிட்ட இந்த காரியத்தை இப்படி செஞ்சு குடுங்கோன்னு கேக்கறோமில்லையா, அது மாதிரிதான் நாம் நம்ம வீட்டுல சாமிக்கு பூஜை பண்ணி, நமக்கு வேண்டியதை சாமிகிட்ட கேக்கறோம்.”

 அப்படின்னா, நாம் எதுக்கு கோவிலுக்கு போறோம்?”

 நாமெல்லாம் அவங்க வீட்டுக்கு போற மாதிரிடா! நானோ உங்க அப்பாவோ எங்களுக்கு ஏதாவது வேலையாகணும்னா யாரால ஆகணுமோ அவங்க இருக்கற இடத்துக்குப் போய் பார்த்துட்டு வர்றோமில்லையா? அது மாதிரி!”

இது எனக்கு ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு! ம்ம்ம்!!!???

 (இதைச் சொல்லிவிட்டு, ஆத்மாராம் அங்கிருந்து மெல்ல யோசித்தபடியே நகர்ந்தான். நாம் அவனை இப்போதைக்கு இப்படியே விட்டுவிடுவோம். அவன் யோசித்துக் கொண்டிருக்கட்டும். இதுக்கு நடுவுல அவனுடைய தாத்தாவும் அப்பாவும் பேசிக் கொள்வதை கேட்போமா?)

தாத்தா, “ஏண்டா, உம்புள்ளை விஷ்வா பேசறதை கேட்டியோ?”

அப்பா, “ம்ம்ம்! கேட்டேன். வரவர ரொம்பவே பெரியமனுஷத் தனமா பேசறான். என்ன பண்ணலாம்? இப்படியெல்லாம் பேசாதேன்னு கண்டிச்சு வெக்கலாமா?”

 அந்த மாதிரி தப்பையெல்லாம் பண்ணிடாதே! அவன் இப்படியெல்லாம் பேசறான்னா, அவனுக்குள்ள ஒரு தேடல் ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம்.”

 சரி, இப்ப என்ன பண்ணலாங்கறேள்?”

 பேசாம உபநயனம் பண்ணி வெச்சுடலாம். அதுக்கப்புறமா அவனுக்கு படிக்க, அப்யாஸம் பண்ணன்னு நிறைய கிடைக்கும். அதுலேர்ந்து அவன் நிறைய நல்ல விஷயங்களை தானே கத்துக்குவான்.”

 அப்படின்னா, நீங்களே ஒரு நல்ல நாளா பாருங்களேன், செஞ்சிடலாம்!”

 ம்ம்ம்! வர்ற தைக்கு அவனுக்கு எட்டு முடிஞ்சு ஒன்பது ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறமா வர்ற ஒரு முகூர்த்தத்துல பண்ணிடலாம்!”

இவ்வாறாக அவ்விருவருக்குள் சம்பாஷணை ஓடியது.

ஆக, விஷ்வஜித் என்கிற ஆத்மாராமிற்கு கூடிய விரைவில் உபநயனம் நடக்கவுள்ளது! நடக்கட்டும்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment