Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


ஒரு ஆத்மாவின் பயணம்

சட்டென்று ஒரு விழிப்பு தட்டியது. விழித்துக் கொண்டது மூளைதானேயொழிய, கண்களில்லை. அவற்றால் விழிக்கவும் இயலாது. இவ்வாறு அடிக்கடி விழிப்பு வருகிறது. அவ்வாறு வரும்போதெல்லாம் எனக்குள் எழும் கேள்வி, “நான் யார், எங்கே இருக்கிறேன், எப்படி இங்கே வந்தேன்?” இவைதான். விழிப்பு வந்ததும், கசகசவென சப்தம்! அந்த நேரத்தில் நான் மெல்ல மெல்ல மிதப்பதை உணர்ந்தேன். சுற்றிலும் கும்மிருட்டு! இருந்தாலும், மனதில் எந்த ஒரு அச்ச உணர்வும் வந்ததில்லை. நான் விழித்திருக்கும் சமயத்தில் கேட்கும் ஒலிகளுள் சில கேட்பதற்கு மனசுக்குள் நன்றாக இருக்கும். திரும்பத் திரும்ப அவ்வொலிகளைக் கேட்க மனசு விரும்பும். அவையும், ஏதோ சில குறிப்பிட்ட இடைவெளியில் கேட்கும். ஆனால், அவற்றைக் கேட்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்போதும் அவற்றில் ஒன்று கேட்டு முடிந்தது. உடனே எனக்குள் மிகவும் அயர்ச்சி தோன்றியது. என்னையறியாமல் நான் என்னுடைய இரு கால்களை உதைத்துக் கொண்டேன். நான் அவ்வாறு உதைத்துக் கொள்ளும் சமயத்தில் வழக்கமாக ஒரு ஒலி கேட்கும், “அம்மா!” என்று! அதற்குப்பின், எனக்குள் சுறுசுறுவென்று ஏதோ வந்து சேரும். அந்த சுறுசுறு உணர்வு வந்தவுடன் சட்டென்று அயர்ச்சி காணாமல் போய்விடும்!

அதற்குப்பின், நான் இருக்குமிடத்தில் அப்படியும் இப்படியுமாக மிதந்தவாறு சுற்றுவேன். அந்த சமயத்தில் பல்வேறு ஒலிகள் அவ்வப்போது கேட்கும். அவற்றுள் ஒன்று மென்மையாகவும், மற்றொன்று சற்று கம்பீரமாகவும் என இரு குரல்கள் அடிக்கடி கேட்கும். இந்த இரு குரல்களும் எனக்கு மிகவும் பழகிவிட்டது. “குழந்தை ரொம்ப சுத்தறதுஎன்று மென்மையான குரல் ஒலித்ததும், நான் இருக்கும் இடத்தின் மீது மெலிதாக ஒரு எடை கூடும். அந்த சமயத்தில் நான் அந்த எடையை விலக்க இருகால்களால் உதைப்பேன். அப்போது அந்த மென்மையான குரல், “அம்மா! ரொம்ப உதைக்கறது! உங்க குரலைக் காட்டாதீங்க!” என்று சொல்லும்.

இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. என்னால் என்னுடைய இருப்பிடத்தில் முன்பு போல சுற்றி மிதக்க முடியவில்லை. நான் சுற்றியலைந்த இடம் திடீரென சுருங்கிவிட்டது போல உணர்ந்தேன். அதற்கு மேலும் என்னால் இங்கே இருக்க முடியாது என்று தோன்றியது. “எப்படியாவது இங்கிருந்து வெளியே போய்விடு, இல்லையென்றால், உனக்கு மூச்சு முட்டும்என்று எனது மூளை எனக்குக் கட்டளையிட்டது. எனக்கும் அதுதான் சரியென்று பட்டது. ஏற்கெனவே எனக்கு நான் யாரென்பதற்கும், இங்கே எப்படி வந்தேன் என்பதற்கும் விடை தெரியவில்லை. சரி, இங்கிருந்து வெளியே போனால்தான் தெரியும் போல இருந்தது. அதனால், அங்கிருந்து வெளியேற முயற்சிகளை மேற்கொண்டேன். எப்போதும் மென்மையாக ஒலிக்கும் குரல் அப்போது மட்டும் ஏன் பயங்கரமாக ஒலித்தது? அந்தக் கதறல் ஒலியை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த ஒலி நிற்க வேண்டுமென்றால், நான் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்! என்னால் முன்புபோல இங்கே மிதக்க முடியவில்லை. அது ஒருவித அச்ச உணர்வை முதன்முதலாக எனக்குத் தந்தது. பாதுகாப்பு உணர்வு குறைந்து கொண்டே வந்தது. அந்த உணர்வு குறையக் குறைய, நான் கால்களால் உதைத்துக் கொள்வதும், என் தலையால் என் இருப்பிடத்தின் ஒரு பகுதியை முட்டுவதும் தன்னிச்சையாக நடந்தது. அச்சமயத்தில் அந்தக் கதறல் ஒலியும் என் செயல்களுக்கேற்ப உச்சமடைந்து வந்தது. என்ன நடந்தது, எந்த நேரம் நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. சட்டென்று நான் என் இருப்பிடம் விட்டு வெளியேறினேன். அவ்வாறு வெளியேறிய நொடியில் அந்தக் கதறல் ஒலியும் சட்டென்று நின்றது.

வெளியே வந்தவுடன் சில புதிய அனுபவங்கள்! அவை என்ன? அவற்றைப் பற்றி பிறகு சொல்கிறேன். எனக்கு இப்போது மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது. அதனால் தூக்கமும் வருகிறது. சரி, நான் தூங்கறேன்!

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment