ஒரு ஆத்மாவின் பயணம்
பாகம்-6
என்னோட புது
செயலுக்கு என்ன பெயர்னு கேட்டதுக்கு என்னைப் பார்க்க வந்த ரெண்டு மூணு பேர் “நீஞ்சறது”ன்னு சொன்னீங்க! இந்த
நீஞ்சறதுங்கிறது எனக்கு இப்ப ரொம்பப் பிடிச்சிருக்கு! இருட்டுல
இருந்தபோது சுத்தி வந்த மாதிரி ஒரு உணர்வு இப்ப இந்த நீஞ்சறதுலயும் இருக்கு!
நான் இப்படி நீஞ்சறதைப் பார்த்துவிட்டு, என்னைச்
சுற்றி இருப்பவர்களில் யாராவது ஒருவர் என் கூடவே இருக்காங்க. ஏன்னா, நான் நீஞ்சும்போது எனக்கு முன்னால எது இருக்கோ,
அதை என்னோட கையால பிடிச்சு இழுத்து, வாயில் வைத்துக்
கொள்வது என்பது என்னுடைய செயலாக இருந்தது.
என் கையில்
கிடைப்பது சில பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும் ஏதோ வேற வேற மாதிரி இருந்தன. கொஞ்ச நாள் கழிச்சு அந்த வேறுபாடு என்பது வண்ணம் என்று புரிந்தது. அதுக்கெல்லாம் ஒவ்வொரு பெயர் சொல்றாங்க. அதே மாதிரி,
வாயில் வைத்துக் கொள்ளும் பொருளும் வேற வேறயா இருக்கு. அதுக்கெல்லாம் இன்னும் பெயர் தெரியலை. மத்தவங்க அதையெல்லாம்
பொம்மை அப்படின்னு சொல்றாங்க.
இப்போது நீஞ்சறது
தவிர புதுசா ஒண்ணு என்னால முடியும் மாதிரி தெரியுது. அதை முயற்சி
செஞ்சப்போ, அம்மா அதைப் பார்த்துவிட்டு “குழந்தை உட்காருது” என்று பேசியது எனக்குக் கேட்டது.
இந்த புது செயலும் எனக்குப் பிடித்திருந்தது. அதனால்
இதையும் நான் அடிக்கடி செய்கிறேன். நான் முழிச்சிக்கிட்டிருந்தபோது
என்னவெல்லாம் செய்யறேன்? படுத்துக்கிட்டிருப்பேன், அப்புறம் மெல்ல திரும்புவேன், அப்படி திரும்புவதற்காக
கை, காலை தரைல அழுத்துவேன், திரும்பினபிறகு
நீஞ்சறது, அப்போ எதெல்லாம் கையில் கிடைக்குமோ, அதை வாயில் வெச்சுப் பாக்கறது, அப்புறம் கையை அழுத்தி
மெல்ல உட்காருவது, யாராவது என்னைப் பார்த்தா, அவங்களை நான் அடிக்கடி பார்த்திருந்தா சிரிக்கறது இதெல்லாம் என்னால முடியுது.
மத்தவங்க பேசறது புரியுது. ஆனால் அவங்க மாதிரி
என்னால் இப்ப பேச முடியலை.
ஒரு தடவை நான்
உட்கார்ந்திருந்தபோது பக்கத்துல ஒண்ணு உயரமா இருந்தது. அதுக்கும் என்னோட கால் மாதிரி ஆனா பெரிசா இருந்தது. அதை
கொஞ்சம் கொஞ்சமா கீழேயிருந்து புடிச்சிக்கிட்டே மேலே வரை போனேன். அப்ப என்னோட கால் மட்டும் தரைல இருந்தது. அதைப் பார்த்துவிட்டு,
“அட! குழந்தை புடிச்சிக்கிட்டு நிக்கறான்!”
அப்படின்னு பேசினார்கள். அப்போதுதான் என்னோட புது
செயலுக்கு நிற்கறது அப்படின்னு புரிஞ்சுது. ஆனால் நிறைய நேரம்
நிற்கறது முடியலை. கால் தடதடன்னு ஆடியது. அதுக்கப்புறம் அப்படியே தொப்புன்னு உட்கார்ந்துட்டேன்! அதுக்கப்புறம் கால்ல ஒரு மாதிரி அயர்ச்சியா இருந்தது. இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே மாதிரி செஞ்சு பார்த்தேன்.
நடுவுல அப்பப்ப
எனக்கு எதையாவது அம்மா வாயில குடுத்தாங்க. புதுசு புதுசா கொடுத்தது
எனக்கும் பிடித்திருந்தது. அது எல்லாம் என் வயிற்றுக்குப் போனதும்
அயர்ச்சி போயிடும். நானும் எனக்குப் பழக்கமானதை எல்லாம் செய்வேன்.
மெதுவா இருட்டு
வரும்.
கூடவே ஸ்லோகம், வாசனை இதெல்லாமும் வரும்.
அதுக்கப்புறம் நான் அம்மாகிட்ட பால் குடிப்பேன். வெளிச்சமா இருந்தப்ப எல்லாம் நான் செய்தவை காரணமா, எனக்கு
தூக்கம் வந்துடும். அப்படியே, பால் குடிச்சு
முடிக்கறதுக்குள்ள தூங்கிடுவேன். இப்படியே கொஞ்ச நாள் போச்சு!
அதற்குப்பின்
ஒரு வெளிச்சத்தின்போது,
என்னால் என்னையறியாமல் ஒரு புது செயலை செய்ய முடிந்தது. அது எனக்கே ரொம்ப புதுசா இருந்தது. நான் அந்த செயலை பல
தடவை முயற்சி செய்திருக்கேன். அப்போதெல்லாம் முடியலை,
ஆனா திடீர்னு முடிஞ்சது! அது என்ன? அதுபற்றி அப்புறமா சொல்றேன்.
ஏன்னா, எனக்கு இப்ப நான் வழக்கமா செய்யறதை எல்லாம் செஞ்சு பார்க்கணும் போல இருக்கு.
அதோ! எனக்கு முன்னால நிறைய பொம்மை போட்டிருக்கு!
அதை எல்லாம் நான் என் கையால எடுக்கணும்!
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment