Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-2

நான் இருட்டிலிருந்து வெளியே வந்தவுடன், திடீரென எனக்குக் கண்கள் கூசின. இப்போதும் என்னால் கண்களை திறக்க முடியவில்லை. மிகுந்த முயற்சிக்குப் பின் தன்னிச்சையாகக் கண்கள் திறந்தன. மெல்ல அப்படியே சுற்றிப் பார்த்தேன். இருட்டில் மூளைக்கு உணர்வாக இருந்தவையனைத்தும் ஒவ்வொன்றாக, காட்சியாக விரிந்தன. முதன்முதலாக நான் எனது கைகள், கால்கள் என ஒவ்வொன்றாகப் பார்த்தேன். கூடவே, என் கண்களுக்கும் மூளைக்கும் புதிய காட்சிகள், அனுபவங்கள். இருட்டிலிருந்தபோது கேட்கும் ஒலிகள், என்னுடைய தலையின் இருபக்கங்களிலுமுள்ள இரு துவாரங்கள் வழியே கேட்டது. அந்த இடங்களை நான் இரு கைகளாலும் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இருட்டிலிருந்தபோது எனக்குள்டப் டப் டப்என்று ஒரு ஒலி எனக்குக் கேட்கும். இப்போதும் கேட்கிறது. கூடவே, அந்த ஒலிக்கேற்ப என் தலையின் முன்பக்கம் இருந்த இரண்டு துவாரங்கள் வழியாகபுஸ் புஸ்என்று ஒரு உணர்வு எனக்குள் வருவதும், வெளியே போவதுமாக இருந்தது. அதையும் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். அதற்குக் கீழே ஒரு பெரிய துவாரம் இருந்தது. அதன் வழியே எப்போதாவதுஹாவ்!” என்று ஒரு உணர்வு கொஞ்சம் பெரிதாக, நீளமாக வெளியே செல்லும். அந்தப் பெரிய துவாரத்துக்குள் என்னுடைய கைகளைப் அதிக நேரம் வைத்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமாக இருந்தது.  அப்படியே நிமிர்ந்து மேலே பார்த்தபோது மிகவும் பெரியதாக ஒரு உருவம் தெரிந்தது. அதற்கும் என்னைப் போலவே கைகால் என அனைத்தும் இருந்தன. ஆனால் என்னைவிட மிகவும் பெரிதாக இருந்தன. அப்போது அந்த உருவத்திடமிருந்து வந்த குரல், “அம்மா! குழந்தை முழிச்சுண்டுடுத்து! என்னைப் பாக்கறது!” அட! இது எனக்கு மிகவும் பழக்கப்பட்ட அந்த மென்மைக் குரலாயிற்றே! என்னவோ தெரியவில்லை, அந்த உருவத்தைப் பார்த்தவுடனேயே எனக்கு சட்டென்று பிடித்து விட்டது! ஏனோ தெரியவில்லை, இருட்டிலிருந்தபோது அவ்வப்போது எனக்கு வரும் அந்த அயர்ச்சி இப்போதும் வந்தது. சரி, கொஞ்ச நேரத்தில் எனக்குள் வழக்கமாக வரும் அந்தசுறுசுறுஉணர்வு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் வரவில்லை. அந்த இடத்தை எனது கை தன்னிச்சையாகத் தொட்டுப் பார்த்தபோது, அது அடைத்திருந்தது. என்ன இது! இதுவழியாகத்தானே அந்தசுறுசுறுவரும்? இப்போது ஏன் வரவில்லை? எனக்கு அயர்ச்சி அதிகமானது, கூடவே அச்சமும்! அந்த நேரத்தில் என்னையறியாமல் என்னிடமிருந்து ஒரு ஒலி வெளிப்பட்டது, நான் என்னுடைய விரல்களை நுழைத்து வைத்துக் கொண்டிருந்த அந்தப் பெரிய துவாரம் வழியாக! அட! என்னுடைய ஒலியை நான் முதன்முதலாகக் கேட்கிறேன்! என்னாலும் மற்றவர்களைப் போல ஒலியெழுப்ப முடிகிறதே! அது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும் அந்த நேரத்தில் என்னால் அதை ரசிக்க முடியவில்லை. காரணம் என்னுள் இருந்த, அதிகமாகிக் கொண்டிருந்த அந்த அயர்ச்சிதான். அந்த அயர்ச்சி காரணமாக நான் தொடர்ந்து நீளமாக ஒலியெழுப்பிக் கொண்டே இருந்தேன்.

என்னுடைய ஒலியைக் கேட்டதும், அந்த மென்மைக்குரல் உருவம் சட்டென்று என்னைத் தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டது. அப்படி எடுத்துக் கொண்டதும் எனக்குள் ஒரு பாதுகாப்பான உணர்வு வரத் தொடங்கியது. மேற்கொண்டு அந்த உருவம் தன்மேல் என்னுடைய தலையை வைத்துக் கொண்டது. என்னுடைய தலை பதிந்த அந்த இடம் என்னைச் சுற்றி வைத்திருந்த துணியைவிட மிகவும் மென்மையாக இருந்தது. அப்போதுதான் நான் முழுமையான பாதுகாப்பை உணர்ந்தேன். அந்த மென்மையான இடத்தில் என் கைகள் இருந்த பெரிய துவாரம் பதிந்தவுடன் அதன் வழியே சுறுசுறுவென ஏதோ ஒன்று எனக்குள் இறங்கத் தொடங்கியது. அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது மெல்ல மெல்ல என்னுடைய துவாரம் அடைபட்டிருந்த இடத்தை அடைந்தவுடன் என்னுள்ளிருந்த அயர்ச்சி மெல்ல மெல்ல அகன்றது! அச்சமயம் அந்த மென்மைக்குரல் ஒலித்தது, “குழந்தை நல்லா குடிக்கறான்!” என்று. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. இனிமேல் எனக்கு அயர்ச்சியாக இருந்தால், எனக்குத் தேவையான அந்தசுறுசுறுதிரவம் இந்த உருவத்திடமிருந்துதான் கிடைக்கும் என்று. என்னுடைய வயிறு நிறைந்தது போல உணர்ந்தவுடன் எனக்கு மீண்டும் தூக்கம் வரத் தொடங்கியது. அந்த மென்மையான இடத்திலிருந்து என் தலையை எடுக்காமலேயே, அப்படியே தூங்கி விட்டேன். நாளாக ஆக, என்னைச் சுற்றியிருந்தவர்கள் ஒலியை வைத்து, என் தலையிலுள்ள அந்த பெரிய துவாரம் வாய் என்றும், அவர்களுடைய ஒலிகள் கேட்கும் துவாரங்கள் காது என்றும் புரிந்து கொண்டேன். இப்போதெல்லாம் என்னைச் சுற்றியுள்ளவர்களின் ஒலி என்பதை, பேச்சு, பேசுவது என்றும், அவர்கள் பேசுவதை வைத்து ஒவ்வொன்றாக, புதிது புதிதாகக் தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன். இப்படி தெரிந்து கொள்வது என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தூங்கும் நேரம் போக மற்ற நேரம் இப்படி தெரிந்து கொள்வது என்பது என்னுடைய அன்றாடச் செயலாக உள்ளது. நான் புதிதாக என்னவெல்லாம் தெரிந்து கொண்டேன் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

No comments:

Post a Comment