Sunday, June 13, 2021

 பாகம்-5

 இப்பகுதியில் நாம் பார்க்க இருப்பது, ஜலதேவதைகளிடம் வைக்கின்ற கோரிக்கையான, “மார்ஜனம்என்னும் மந்த்ர ப்ரயோகம்.

மார்ஜனம் ||5||

ஓம் ஸ்ரீகேசவாய நம: ||

1. ஆபோ ஹிஷ்டா மயோ புவ:

2. தா ந ஊர்ஜே ததாதன

3. மஹே ரணாய சக்ஷஸே

4. யோ வ: சிவதமோ ரஸ:

5. தஸ்ய பாஜயதேஹ ந:

6. உசதீரிவ மாதர:

7. தஸ்மா அரம் கமாம வ:

8. யஸ்ய க்ஷயாய ஜின்வத

9. ஆபோ ஜநயதா ச ந:

10. ஓம் பூர்ப்-புவஸ்-ஸுவ: (ஆத்ம பரிஷேசனம்)

 அர்த்தம்:

மார்ஜநம் (ப்ரோக்ஷணத்தால் மந்த்ர-ஸ்நாநம்):

ஓம் ஸ்ரீகேசவாய நம: || ஓம் ஸ்ரீகேசவனுக்கு நமஸ்காரம். (ஆப:) ஜல தேவதைகளாகிய நீங்கள் (மயோ புவ:) உயர்ந்த சுகத்துக்குக் காரணமாக  (ஷ்ட்டா ஹி = ஸ்த்தாஹி) இருக்கிறீர்கள் என்பது ப்ரசித்தம். (தா:) அப்படிப்பட்ட நீங்கள் (:) எங்களுக்கு (மஹே) மஹிமை பொருந்தியதும், (ரணாய) ரமணீயமானதுமான (சக்ஷஸே) ஞானக் கண்ணின் பொருட்டு (ஊர்ஜே) போஷணையை (ததாதன) அளியுங்கள்! (:) உங்களிடம் (:) எந்த (சிவதம:) பரம மங்களமான (ரஸ:) பேரின்ப ரஸம் உள்ளதோ, (தஸ்ய) அதற்கு (இஹ) இங்கேயே (:) எங்களை (உசதீ:) அன்பு சுரக்கும் (மாதர: இவ) தாய்மார்களைப் போல் (பாஜயத) உரியவர்களாக்குங்கள்!  (யஸ்ய க்ஷயாய) எந்த ரஸத்தை நிலையாக வழங்கும் பொருட்டு (ஜின்வத) நீங்கள் இன்ப வடிவாக விளங்குகிறீர்களோ, (தஸ்மை) அந்த ரஸத்திற்காக (:) உங்களை (அரம்) மிகவும் ஆர்வத்துடன் (கமாம) நாடுகின்றோம். (ஆப:) ஜலதேவதைகளாகிய நீங்கள், (:) எங்களை (ஜநயதா) ஞானத்தால் புனிதமான புநர்ஜன்மமடைந்து விளங்கும்படியும் அருள்வீர்களாக!

மார்ஜநம் செய்முறை:

ஓம்என்று பவித்ர விரலால் தீர்த்தத்தில் எழுதி, “ஸ்ரீகேசவாய நம:” என்று உச்சரித்து, புருவ மத்தியில் தொடவும்.

முதல் ஏழு மந்த்ரங்களால் ஸிரஸில் பவித்ர விரலால் ப்ரோக்ஷித்துக் கொண்டு, எட்டாவதால் பாதங்களைத் தொட்டு, ஒன்பதாவதால் மறுபடியும் ஸிரஸில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும். பின், “ஓம் பூர்ப்-புவஸ்-ஸுவ:” என்று தலையைச் சுற்றி பரிஷேசனம் செய்ய வேண்டும்.

நதியில் நின்றுகொண்டு செய்தால், இடதுகையால் ஜலத்தைத் தொட்டுக் கொண்டு வலதால் ப்ரோக்ஷணம் செய்ய வேண்டும்.

ஓம்கார வடிவான ஸ்ரீ கேசவனுக்கு நமஸ்காரம். ஜல தேவதைகளாகிய நீங்கள், உயர்ந்த சுகத்துக்குக் காரணமாக இருக்கிறீர்கள் என்பது ப்ரசித்தம். அப்படிப்பட்ட நீங்கள், எங்களுக்கு மஹிமை பொருந்தியதும், ரமணீயமானதுமான ஞானக் கண்ணின் பொருட்டு போஷணையை அளியுங்கள்! உங்களிடம் எந்த பரம மங்களமான பேரின்ப ரஸம் உள்ளதோ, அதற்கு இங்கேயே எங்களை அன்பு சுரக்கும் தாய்மார்களைப் போல் உரியவர்களாக்குங்கள்! எந்த ரஸத்தை நிலையாக வழங்கும் பொருட்டு நீங்கள் இன்ப வடிவாக விளங்குகிறீர்களோ, அந்த ரஸத்திற்காக உங்களை மிகவும் ஆர்வத்துடன் நாடுகின்றோம். ஜலதேவதைகளாகிய நீங்கள், எங்களை ஞானத்தால் புனிதமான புநர்ஜன்மமடைந்து விளங்கும்படியும் அருள்வீர்களாக!

ஒருவருடைய மனதில் அன்பு ஊற்று சுரந்தால், அதனால் அவருக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பேரின்பம் கிட்டும். ஸந்த்யாவந்தனம் செய்யும் ஒருவர் மனதில் அவ்வாறு அன்பு சுரக்க வேண்டுமென்பதற்காக, ஜலதேவதைகளை வேண்டுவதாக ஒரு ஏற்பாட்டை நம் முன்னோர்கள் செய்து வைத்துள்ளனர். இந்த மந்த்ரத்தை த்ரிகாலமும் அக்காலத்தில் ஜபித்து வந்த காரணத்தால்தான் ப்ராஹ்மணர்கள் இன்னா செய்தலுக்குப் பெரிதும் அஞ்சினர். மேலும் வள்ளுவர் சொன்னஇன்னா செய்தாரை ஒறுத்தல், அவர்நாண நன்னயம் செய்து விடல்என்னும் குறளின் பொருள் இம்மந்த்ரத்தில் பொதிந்துள்ளதும் நமக்கு விளங்கும்! இதன் காரணமாகவே ப்ராஹ்மணர்கள் இக்காலத்திலும் தமக்கு இன்னா செய்யும் பிறர்க்கு, அவர்கள் செய்ததைத் திருப்பிச் செய்வதில்லை! அவர்களைத் தீயவழியில் செல்லாது தடுக்கும் வல்லமை இம்மந்த்ரத்திற்கு உண்டென்றால் அதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை! இம்மந்த்ரத்தைப் படிக்கும்போது எனக்கு நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் கேட்ட பாடலின் முதல் வரிகள் நினைவுக்கு வருகிறது. “மரமலர் பூத்தால் வண்டு வரும்; நம் மனமலர் பூத்தால் அன்பு வரும்”! வள்ளுவரின் மற்றுமிரு குறள்களும் நினைவுக்கு வருகின்றன. “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்”. “அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு”.

அடுத்த பகுதியில், “ப்ராசனம்என்னும் மந்த்ரத்தால் ஜபிக்கப்பட்ட தீர்த்தத்தை உட்கொள்ளுதல் பற்றிப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment