Sunday, June 13, 2021

பாகம்-17 (3)

இப்பகுதியில் த்ரிகால ஸூர்ய உபஸ்தான மந்த்ரங்களில் மூன்றாம் பகுதியாக, ஸாயங்கால வேளையில் சொல்லும் உபஸ்தான மந்த்ரம் பற்றி பார்க்கலாம்.

ஸூர்ய உபஸ்தானம் ||17.3||

ஸாயங்காலே (மாலை வேளையில்)

இமம் மே வருண ச்ருதீ ஹவமத்யா ச ம்ருடய | த்வாமவஸ்யுராசகே ||

தத்த்வா யாமி ப்ரஹ்மணா வந்தமானஸ்ததாசாஸ்தே யஜமானோ ஹவிர்ப்பி: |

அஹேடமானோ வருணேஹ போத்யுருசம் ஸ மா ந ஆயு: ப்ரமோஷீ: ||

யச்சித்திதே விசோ யதா ப்ரதேவ வருண வ்ரதம் | மினீமஸி த்யவி த்யவி ||

யத்கிஞ்சேதம்  வருணதைவ்யே ஜநேபித்ரோஹம் மனுஷ்யாச்சராமஸி |

அசித்தீயத்தவ தர்மா யுயோபிம மா நஸ்தஸ்மாதேனஸோ தேவ ரீரிஷ: ||

கிதவாஸோ யத்-ரிரிபுர்-நதீவி யத்வாகா ஸத்ய-முத-யந் ந வித்ம |

ஸர்வா தா விஷ்ய சிதிரேவ தேவாதா தே ஸ்யாம வருண ப்ரியாஸ: ||

அர்த்தம்:

ஸாயங்காலே (மாலை வேளையில்):

(வருண) வருண தேவரே! (மே) என்னுடைய (இமம்) இந்த (ஹவம்) வேண்டுதலை (ச்ருதி) கேட்டருள்வீர்! (அத்யா ச) இப்பொழுதே (ம்ருடய) இன்புறச் செய்வீர்! (அவஸ்யு:) ரக்ஷையை விரும்பி (த்வாம்) உம்மை (ஆசகே) ப்ரார்த்திக்கின்றேன்.

(ப்ரஹ்மணா) வேத மந்த்ரத்தால் (வந்தமான:) ஸ்தோத்திரம் செய்து கொண்டு (தத்) அதற்காகவே (த்வாம்) உம்மைச் (யாமி) சரணடைகின்றேன். (யஜமான:) யாகம் செய்பவன் (ஹவிர்ப்பி:) ஹவிஸ் திரவியங்களைக் கொண்டு (தத்) அதையே (ஆசாஸ்தே) கோருகிறான். (உருசம்ஸ வருண) புகழ்மிக்க வருண தேவரே! (அஹேடமான:) அநாதரவு செய்யாமல் {அதாவது, என்னை கைவிட்டுவிடாமல்} (இஹ) இப்பொழுது (போதி) என் ப்ரார்த்தனையை அங்கீகரிக்க வேண்டும். (:) எமது (ஆயு:) ஆயுளை (மா ப்ரமோஷீ:) குறைத்து விடாதீர்!

(தேவ வருண) வருண தேவரே! (விச: யதா) விவேகமற்ற மனிதர்களைப் போல் (தே வ்ரதம்) உம்முடைய ஆராதனையை (த்யவி த்யவி) தினந்தோறும் (யத்-சித்-ஹி-ப்ரமினீமஸி) அனுஷ்டிக்காமல் அஜாக்ரதையால் எதை விடுத்தோமோ, (தேவ வருண) வருண தேவனே! (தைவ்யே ஜனே) தேவதைகளின் சமூகத்திற்கு (மனுஷ்யா:) மனிதர்களாகிய நாங்கள் (இதம் அபித்ரோஹம்) இவ்விதமான வஞ்சனை, (அசித்தீ) அறியாமையால் (யத் கிஞ்ச) எதெது செய்துள்ளோமோ, (தவ) உம்முடைய (தர்மா) தர்மத்தை (யத் யுயோபிம) எதைக் கெடுத்தோமோ, (தேவ) வருண தேவனே! (தஸ்மாத் ஏனஸ:) அந்த பாவத்தினால் (:) எங்களை (மா ரீரிஷ:) இம்சை செய்யாது காத்தருளல் வேண்டும்.

(கிதவாஸ:) சூதாடிகளைப் போன்றவர்கள் (ந தீவி) நல்லோர் நாடாத இடத்தில் (யத்) எந்தப் பழியை அநியாயமாக (ரிரிபு:) என்மீது சுமத்தினார்களோ, (யத் வா அகா) அல்லது எந்த பாவம் (ஸத்யம்) உண்மையில் அறிந்து செய்யப் பட்டதோ, (உத) மேலும், (யத்) எதை (ந வித்ம) செய்தும் அறியவில்லையோ, (தா: ஸர்வா:) அவை அனைத்தையும் (சிதிரேவ) வலியின்றி சிதறிப்போவன போல் (விஷ்ய) நாசம் செய்வீர்! (தேவ வருண) வருண தேவனே! (அத) பின்னர், (தே) உமக்கு (ப்ரியாஸ:) ப்ரியமானவர்களாக (ஸ்யாம) எப்போதும் இருக்க வேண்டும்.

செய்முறை:

ஜபம் செய்தபிறகு மேற்கு திசை நோக்கி கைகூப்பி நின்றுகொண்டு, உதிக்கும் ஸூர்யமண்டல மத்தியில் விளங்கும் பரமாத்மாவை இந்த மந்த்ரத்தால் துதித்து வணங்க வேண்டும்.

இம்மந்த்ரத்தின் ரிஷி-சந்தஸ்-தேவதை:

இமம் மே இத்யாதி மந்த்ரங்களில் கனச்சேபர், வசிஷ்டர் மற்றும் அத்ரயர் மூவரும் ரிஷிகள்; காயத்ரீ த்ருஷ்டுப் சந்தஸ்; வருணன் தேவதை. ஸாயங்கால உபஸ்தான மந்த்ரத்தைச் சொல்லுமுன், கீழ்க்காணும் மந்த்ரத்தை உச்சரித்தல் வேண்டும்:

இமம் மே வருண இத்யாதி மந்த்ராணாம் கனச்சேப-வஸிஷ்ட-அத்ரய: ருஷய:

காயத்ரீ-த்ருஷ்டுபாதீனி ச்சந்தாம்ஸி, வருணோ தேவதா உபஸ்தானே விநியோக: ||

மேற்கண்ட மாலை வேளை உபஸ்தான மந்த்ரம் வாயிலாக நாம் உணர வேண்டியது என்னவென்றால், மாலை வேளையில் வருணதேவனை வழிபாட்டு தேவதையாக உருவகித்து, அவரை நாம் நம்முடைய வேண்டுதலைக் கேட்டு, உடனேயே நம்மை இன்புறச் செய்ய வேண்டுமென்றும், நம்மைக் காக்க வேண்டுமென்றும் ப்ரார்த்தனையை ஆரம்பிக்கிறோம். ப்ரார்த்தனையின் போது வேதமந்த்ரங்களால் அவரை ஸ்தோத்திரம் செய்து, அவ்வாறு துதிப்பதற்காக நம்மை அவர் கைவிடாமல் ஆதரித்து, நம்முடைய ஆயுளை நீட்டிக்கச் செய்யுமாறும், நம்முடைய ப்ரார்த்தனையை அங்கீகரிக்க வேண்டுமாறும் கோருகிறோம்.

மேலும், நமக்குத் தீங்கு செய்பவர்களை, நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை நாசமாக்கி, நம்மை எப்போதும் அவருக்கு மிகவும் ப்ரியமானவர்களாக வைத்திருக்குமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

மேற்கண்ட மந்த்ரத்தை தினமும் சொல்வதனால் நமக்குத் தீங்கு செய்பவர்களிடமிருந்தும், நாம் அறிந்தோ அறியாமலோ எவ்விதமான பாவச் செயல்களிலும் நாம் ஈடுபடாமல் தடுக்க நம்மை நாம் விழிப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

அடுத்த பகுதியில் ஸமஷ்டியபிவாதநம் என்னும் நமஸ்கார மந்த்ரங்கள், செய்முறை மற்றும் அர்த்தம் பற்றி பார்க்கலாம்! 

No comments:

Post a Comment