பாகம்-10 & 11
இப்பகுதியில் “ஐக்யாநுஸந்தானம்” மற்றும் “தேவ தர்ப்பணம்” ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம்.
ஐக்யாநுஸந்தானம் ||10||
அஸாவாதித்யோ ப்ரஹ்ம | ப்ரஹ்மைவாஹமஸ்மி ||
(த்யானம், ஆசமநம்)
ஐக்யாநுஸந்தானம் (ஜீவாத்ம-பரமாத்ம ஒற்றுமை குறித்து சிந்தித்தல்) :
(அஸௌ) இந்த (ஆதித்ய:) ஸூர்யன்
(ப்ரஹ்ம) ப்ரம்மம். (அஹம்)
நானும் (ப்ரஹ்ம ஏவ) ப்ரம்மமாகவே
(அஸ்மி) இருக்கிறேன். இங்ஙனம் த்யானித்து, ஆசமநம் செய்ய வேண்டும்.
ஐக்யாநுஸந்தானம் செய்முறை:
இரு கைகளாலும் மார்பைத் தொட்டுக் கொண்டு, கண்களை மூடிக்கொண்டு ஜீவாத்ம-பரமாத்ம ஐக்யத்தை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
ஆசமநம்
அச்யுதாய நம: (அச்சுதனுக்கு நமஸ்காரம்)
அநந்தாய நம: (அநந்தனுக்கு நமஸ்காரம்)
கோவிந்தாய நம: (கோவிந்தனுக்கு நமஸ்காரம்)
உள்ளங்கையில் உளுந்து மூழ்குமளவு நீரை விட்டுக் கொண்டு மேற்கண்ட மூன்று மந்த்ரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி முடித்தபின் உட்கொள்ள வேண்டும்.
இனி, விஷ்ணுவின் பன்னிரு திருநாமங்களால் நம் உடலின் இந்த்ரியங்களனைத்துக்கும் ரக்ஷை இடுதல்:
கேசவ, நாராயண – கட்டைவிரல், வாய் இவ்விரண்டும் அக்நியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, கட்டை விரலால் வலது இடது கன்னங்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.
மாதவ, கோவிந்த – பவித்ர விரல் (மோதிர விரல்), கண்கள் இவ்விரண்டும் ஸூர்யனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, பவித்ர விரலால் நமது இரு கண்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.
விஷ்ணோ, மதுஸூதந – ஆள்காட்டி விரல், நாசி இவ்விரண்டும் வாயுவின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, ஆள்காட்டி விரலால் நாசியின் இருபுறங்களிலும் (பெண்கள் மூக்குத்தி போட்டுக் கொள்ளுமிடங்கள்) ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.
த்ரிவிக்ரம, வாமந – சுண்டுவிரல், காதுகள் இவ்விரண்டும் இந்த்ரனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, சுண்டுவிரலால் வலது இடது காதுகளை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீதர – ஹ்ருஷீகேச – நடுவிரல், தோள்கள் இவ்விரண்டும் ப்ரஜாபதியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, நடுவிரலால் வலது இடது தோள்களை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.
பத்மநாப, தாமோதர – உள்ளங்கை, ஹ்ருதயம் மற்றும் உச்சந்தலை இவை இறைவன் உறையுமிடங்கள். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, உள்ளங்கையால் ஹ்ருதயத்தையும் உச்சந்தலையையும் ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.
இனி, தேவ தர்ப்பணம்.
தேவ தர்ப்பணம் ||11||
மந்த்ரம்:
ஆதித்யம் தர்ப்பயாமி | ஸோமம் தர்ப்பயாமி | அங்காரகம் தர்ப்பயாமி | புதம் தர்ப்பயாமி | ப்ருஹஸ்பதிம் தர்ப்பயாமி | சுக்ரம் தர்ப்பயாமி | சனைஸ்சரம் தர்ப்பயாமி | ராஹும் தர்ப்பயாமி | கேதும் தர்ப்பயாமி ||
கேசவம் தர்ப்பயாமி | நாராயணம் தர்ப்பயாமி | மாதவம் தர்ப்பயாமி | கோவிந்தம் தர்ப்பயாமி | விஷ்ணும் தர்ப்பயாமி | மதுஸூதநம் தர்ப்பயாமி | த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி | வாமநம் தர்ப்பயாமி | ஸ்ரீதரம் தர்ப்பயாமி | ஹ்ருஷீகேசம் தர்ப்பயாமி | பத்மநாபம் தர்ப்பயாமி | தாமோதரம் தர்ப்பயாமி || (ஆசமநம் ||)
தேவ தர்ப்பணம் – அர்த்தம்:
(ஆதித்யம்) ஸூர்யனை, (ஸோமம்) சந்த்ரனை, (அங்காரகம்) செவ்வாயை (புதம்) புதனை, (ப்ருஹஸ்பதிம்) குருவை, (சுக்ரம்) சுக்ரனை, (சனைஸ்சரம்) மெதுவாகச் செல்லும் சனியை, (ராஹும்) ராஹுவை, (கேதும்) கேதுவை (காலரூபிகளான நவக்ரஹ தேவதைகள் எல்லோரையும்) (தர்ப்பயாமி) த்ருப்தி செய்விக்கின்றேன்.
(கேசவம்) கேசவனை, (நாராயணம்) நாராயணனை, (மாதவம்) மாதவனை, (கோவிந்தம்) கோவிந்தனை, (விஷ்ணும்) விஷ்ணுவை, (மதுஸூதநம்) மதுஸூதநனை, (த்ரிவிக்ரமம்) த்ரிவிக்ரமனனை, (வாமநம்) வாமநனை, (ஸ்ரீதரம்) ஸ்ரீதரனை, (ஹ்ருஷீகேசம்) ஹ்ருஷீகேசனை, (பத்மநாபம்) பத்மநாபனை, (தாமோதரம்) தாமோதரனை (பன்னிரு நாமங்களால் வரிசையாக மார்கழி முதல் கார்த்திகை வரையுள்ள பன்னிரண்டு மாதங்களுக்கும் அதிதேவதையாகவும் காலரூபியாகவும் விளங்கும் நாராயணனை) (தர்ப்பயாமி) – த்ருப்தி செய்விக்கின்றேன்.
ஸம்ஸ்க்ருத இலக்கணப்படி, “ம்” என்று முடிகின்ற பெயர்ச்சொற்களனைத்தும் இரண்டாம் வேற்றுமையில் அமைந்துள்ளன. முதலாம் வேற்றுமை என்பது பெயர்ச்சொல். உதாரணத்திற்கு, “ராம:” என்றால் இராமன் என்ற பெயர்ச்சொல். அதுவே, இரண்டாம் வேற்றுமையில் “ராமம்” என்று வரும். அதற்குப் பொருள், “இராமனை” என்பதாகும். அதன்படி மேற்கண்ட ஸ்லோகத்தைப் பார்த்தால், பொருள் இவ்வாறு கிடைக்கும்:
ஆசமநம்
அச்யுதாய நம: (அச்சுதனுக்கு நமஸ்காரம்)
அநந்தாய நம: (அநந்தனுக்கு நமஸ்காரம்)
கோவிந்தாய நம: (கோவிந்தனுக்கு நமஸ்காரம்)
உள்ளங்கையில் உளுந்து மூழ்குமளவு நீரை விட்டுக் கொண்டு மேற்கண்ட மூன்று மந்த்ரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி முடித்தபின் உட்கொள்ள வேண்டும்.
தேவ தர்ப்பணம் செய்முறை:
உட்கார்ந்து கொண்டு, காலையில் கிழக்கு நோக்கியும், நடுப்பகலிலும் மாலையிலும் வடக்கு நோக்கியும் இரு கைவிரல் நுனிகளின் வழியாக நீரை விட்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். “தர்ப்பயாமி” என்று முடிகின்ற ஒவ்வொரு முறையும் தனித்தனியாக எடுத்து நீர் விட வேண்டும். தாரையாக விடக்கூடாது. குழாயில் விழுவது போன்ற நீர்த்தாரையிலும் செய்யக் கூடாது. மேலும், எல்லா தேவதைகளும் பகவானுடைய அவயவங்கள் போன்றவர்கள் என்ற பாவனையுடன் தேவதைகளை வியஷ்டி(தனி)யாகவும், ஸமஷ்டி(சேர்த்து)யாகவும் ஆராதித்து த்ருப்தி செய்விக்க வேண்டும்.
இத்துடன் ஸந்த்யாவந்தன பூர்வபாகம் நிறைவடைகிறது. அடுத்த பதிவில் உத்தர பாகம் என்னும் அடுத்த கட்டத்திற்குச் செல்லவிருக்கிறோம். அதில் ஜபத்தில் ஈடுபடுவதற்கான ஸங்கல்ப மந்த்ரம், அதன் அர்த்தம் மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம்.
No comments:
Post a Comment