Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-23

என்னுடைய அறிவு மனசை வென்றிருந்த வேளை. அதன் காரணமாக காதல் என்னும் உணர்வு தற்காலிகமாக விடைபெற்றிருந்தது. அவ்வாறு விடைபெற்ற காரணத்தால் மனசு எதையோ இழந்துவிட்ட உணர்வில் இருந்தது. அதனால் நாட்கள் பெரிதாகச் சுவையேதுமின்றி ஏனோதானோவென்று நகர்ந்து கொண்டிருந்தன. இவ்வாறு சில மாதங்களோ அல்லது ஒன்றரை வருடமோ சென்றன. செய்யும் செயல்களிலும் மனம் ஒன்றி ஏதோ கடமைக்கு செய்து கொண்டிருந்தேன்.

இதை என்னுடைய வீட்டிலுள்ளவர்களும் கவனித்துக் கொண்டுதானே இருந்திருப்பார்கள்? அப்பாவும் அம்மாவும் அவர்களுக்குள் ஏதோ ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது வெளியே எங்கோ சேர்ந்து போய் வந்துகொண்டிருந்தார்கள். எனக்கு அவர்களுடைய நடவடிக்கைகளில் பெரிதாக ஆர்வம் தோன்றாததால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் என்னைக் கூப்பிட்டுப் பேசினார்கள்.

 நானும் உன்னை ரொம்ப நாளா கவனிச்சிண்டு இருக்கேன், ஏன் எதுலயுமே ஆர்வமில்லாம, சுரத்தே இல்லாம இருக்க?” – இது அம்மா.

 அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. ஆஃபீஸ்ல கொஞ்சம் வேலை அதிகமாயிடுச்சு, அதான்” – இது என்னுடைய பொய்!

 எங்களுக்கு அப்படி தெரியலையே, யாரையாவது லவ்வு கிவ்வு பண்றயா என்ன?” – இது அம்மா!

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! எப்படி என்னோட மனச எழுத்து மாறாம படிக்கறா!

 சேச்சே! அந்த மாதிரியெல்லாம் எதுவுமில்லம்மா!” – அவசர அவசரமாக மறுத்தேன்! மறுபடியும் ஒரு பொய்!

 இல்லேன்னா சரி! அது போகட்டும், உனக்கு கல்யாணம் பண்ணிப் பாக்கலாம்னு இருக்கோம்!” – அம்மா

 இப்ப என்னம்மா அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே!”

 இத பாரு! எதை எப்ப பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். இப்ப உன்னோட ஜாதகத்துல குரு பலன் வந்துடுத்து! இப்பவே புடிச்சு பாத்தாதான் ஏதாவது நல்ல இடமா அமையும். வேண்டாம் கீண்டாம்னு ஆரம்பத்துலயே எதுவும் சொல்லாத!”

இதற்கு மேலும் மறுத்துப் பயனில்லை என்பதை உணர்ந்தேன். காலம் என்னுடைய வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு என்னை இட்டுச் செல்லவிருப்பதையும் உணர்ந்தேன். ஒருவேளை, சீதாதேவி அறிவுரைப்படி, எனக்கானவளை நான் சந்திக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறதா?

ஏற்கெனவே என்னுடைய மனசுக்குள்ளிருக்கும் மூன்று கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை; இந்த லட்சணத்தில் புதிதாக என்னென்ன கேள்விகளெல்லாம் முளைக்கப் போகிறதோ தெரியவில்லை. இந்த மாதிரியான நிலையானது, பரீக்ஷையில் வினாத்தாளை வாங்கிப் பார்த்த பிறகு தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடையெழுதி விட்டு, கடைசியில் தெரியாத கேள்விகளுக்கு ஆற அமர யோசிப்பது போன்ற ஒரு நிகழ்வை எனக்கு நினைவூட்டியது!

எது எப்படியோ, நான் வாழ்க்கையின் அடுத்த கட்டத் தேர்வை எதிர்கொள்ள வேண்டுமானால், அதற்கேற்ப மனதளவில் தயாராக வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறேன். அதனால மனசுக்குள்ளிருக்கும் அந்த மூன்று கேள்விகளை இப்போதைக்கு ஓரங்கட்டலாம்னு நினைக்கிறேன், ஆனா மனசும் புத்தியும் என்ன பண்ணப் போகுதுன்னு பார்க்கலாம்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-22

மறுநாள் காலையில் வழக்கமாகக் கண் விழித்து, செய்ய வேண்டியவற்றை செய்து கொண்டிருக்கையில் மனம் முதல் நாள் டிவியில் பார்த்த சுந்தரகாண்டத்தை அசை போட்டுக் கொண்டிருக்க, ஒருவிதமான எந்திரத்தனத்துடன் ரெடியாகி அலுவலகம் கிளம்பினேன். அன்று வழக்கத்தைவிட சிறிது சீக்கிரமாகவே கிளம்பி விட்டேன்.

எனது வண்டி சாலையில் வழக்கத்தைவிட சற்று மெதுவாகப் பயணித்துக் கொண்டிருக்கும்போது மனசுக்குள் இன்னமும் சீதை என்னை மிரட்டிக் கொண்டிருந்தாள். சீதையின் குரல் அவள் பட்ட பாடுகளை மிதிலையில் மாடத்திலிருந்து முதல்முறையாக இராமனைப் பார்த்தது தொடங்கி ஆஞ்சநேயரிடம் இன்னொரு மாதரை நினையாதே என்று எச்சரிப்பது வரை திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

அதனால் அவள் அன்று எதிரில் வந்துகொண்டிருந்ததை மனம் கவனிக்கவேயில்லை. எப்போது அருகிலே எதிர்ப்பட்டு, என்னைக் கடந்து சென்றாள் என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அந்த சந்திப்பு முனை கடந்தபின்புதான் உணர்வு வந்தது. ஏதோ ஒரு உள்ளுணர்வில் சட்டென்று திரும்பிப் பார்க்க, அதே உள்ளுணர்வில் அவளும்! ஆனால் இம்முறை அவ்வாறு பார்க்கும்போது வழக்கமாகத் தோன்றும் அந்த வித்தியாசமான, ஆனால் மனதுக்குப் பிடிக்கின்ற அந்த உணர்வு தோன்றவில்லை.

எப்போது முதல் அவ்வாறு தோன்றவில்லையோ, அதற்குப் பிறகு மனசுக்குள் எந்த ஒரு குறுகுறுப்பும் இல்லை. இந்த உணர்வும் புதிதாக இருந்தது. அதற்குப் பிறகு காலை வேளைகளில் மனசுக்குள் இதுநாள் வரை தோன்றி வந்த அந்த பரபரப்பு அறவே நின்று போனது. மனசுக்குள் பரபரப்பு அடங்கிய பிறகு, தற்செயல் நிகழ்வு போல அவளையும் காலை வேளைகளில் இப்போதெல்லாம் காண முடிவதில்லை.

இது எப்படி இவ்வாறு நிகழ்ந்தது? என்னுடைய மனசுக்குள் மாற்றம் வந்தபிறகு அவளை ஏன் காண முடியவில்லை? இதுநாள் வரை என் கண்ணுக்குப் புலப்பட்டது உண்மையிலேயே ஒரு பெண்ணா? அல்லது சீதை மூலமாக எனக்குக் காதல் பற்றிய உண்மையான புரிதல் வரவேண்டுமென்பதற்காக என் முன் தினமும் தோன்றிய ஒரு மாயத் தோற்றமா, சீதை கண்ணுக்கு மாயமான் தோன்றிய மாதிரி? எனக்குப் புரியவில்லை!

அதற்குப் பின் அன்றாடம் கேட்கும் பாடல்களில் புலப்பட்ட காதலென்பது மனசுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், காதலென்ற பெயரில் மனசுக்குள் முதன்முதலில் விழுந்த விதை ஒரு விதை மட்டுமே! அதுவே காதல் அல்ல! அது வெறும் இனக்கவர்ச்சி என்பது அறிவு வழியே மனசுக்குப் புரிந்தது. மனசு புரிந்து கொண்டபின்பு எதிர்ப்பட்ட, கடந்த, சந்தித்த, அளவளாவிய பெண்கள் எவருமே என்னுடைய மனதை ஈர்க்கவில்லை. அவர்களில் சிலருடைய கண்களில் காதலென்னும் நட்சத்திரம் மின்னுவதை நான் உணர்ந்தாலும் அவற்றை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. காரணம் சீதையின் எச்சரிக்கை!

அந்த எச்சரிக்கையை மனம் கேட்டபின்பு, உண்மையிலேயே அழகான அல்லது குடும்பப் பாங்கான அல்லது மனதால் அழகான பெண்களைக் கண்டால் மனசுக்குள் ஒரு அலாரம், "உனக்கான ஒருத்தி எங்கோ காத்திருக்கிறாள், அந்த ஒருத்தி இவளல்ல!" என்று ஒவ்வொரு முறையும் அடிக்கும். அதனால் அவர்களைக் காண நேரும்போது அவர்களுக்காகக் காத்திருக்கும் அந்த வேறு பல முகம் தெரியாத ஆண்கள் என்னுடைய நினைவுக்கு வந்தனர்.

இப்படித் தோன்றுவதும் எனக்கு ஒரு வித்தியாசமான உணர்வு! ஊரில் பிற ஆண்கள் பெண்களை விரட்டி விரட்டி  இந்தக் காதலெனும் உணர்வில் விரும்பி லயித்திருக்க, எனக்கு மட்டும் ஏன் அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை?

ஒருவேளை, இவையெல்லாம் சிற்றின்பம்; பேரின்பம் வேண்டுமெனில் நீ உனக்குள்ளிருக்கும் அந்த மூன்று கேள்விகளுக்கு விடை தேட முயற்சி செய்! என்று அறிவு மனசுக்கு அவ்வப்போது கட்டளையிடுவதாலா?

ம்ம்ம்? என்ன கேட்டீங்க? அந்த மூன்று கேள்விகள் என்னன்னா?

1) நான் யார்?
2) எப்படி இங்கே வந்தேன்?
3) இதற்கு முன் எங்கு இருந்தேன்?

ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-21

டிவியை ஓடவிட்டபோது அதில் வந்த நிகழ்ச்சியில் மனம் பதியவில்லை. அது முடிய இன்னும் அரைமணி நேரம் ஆகும் போலத் தெரிந்தது. உடனே அதை அதன் ஒலியை குறைத்துவிட்டு, ரேடியோவை பாட விட்டேன். முந்தைய நாள் இரவின் தொடர்ச்சி போல ஒலித்தன பாடல்கள்.

அதிலே இரண்டு திரும்பத் திரும்ப மனதில் ரீங்காரமிட்டன.

"கண் மலர்களின் அழைப்பிதழ் 
பொன் இதழ்களின் சிறப்பிதழ்
இனிவரும் இரவுகள்
இளமையின் கனவுகள்தான்
காண்போமே சேர்ந்தே நாமே"

"மூங்கினிலே பாட்டிசைக்கும்
காற்றலையை தூதுவிட்டேன்
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ரசிப்பதில்லை
அவள் முகவடிவை மனம் பார்த்தபின்னே
அந்த பௌர்னமியை இவன் ஹ்ஹ ரசிப்பதில்லை

மூங்கினிலே பாட்டிசைக்கும்ம்ம்ம்ம்ம்
காற்றலையைய்ய்ய்ய்ய்ய் தூதுவிட்டேன்

சரணம் 1

இரு விழி கவிதை நான் தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை ஆஆஆஆ
இரு விழி கவிதை தினசரி படித்தேன்
பொருள் அதை அறிய வழி ஏதும் இல்லை
புதுப்புது வார்த்தை தினம் தினம் தேடி
பார்வையில் அமுதாய் அவள் வடிப்பாள் ஆஆஹாஆ
நீர் அலைப்போலவே நீல விழிக்கோலங்கள்
நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள் ஹோய் ஹோய் ஹோய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்"

இந்த இரு பாடல்களும் அவளுடைய விழிகளை மீண்டும் நினைவூட்டி, மனதைப் படுத்தின.

அவற்றில் மனம் லயித்திருக்கையில் விழிகள் தன்னைப் போல டிவியில் பதிந்தன. ஓடிக்கொண்டிருந்த நிகழ்ச்சி முடிந்து, அடுத்த நிகழ்ச்சி கம்பன் விழா என்று வந்ததும் நான் உடனே ரேடியோவை அணைத்து விட்டு, டிவியினை கவனிக்க ஆரம்பித்தேன். அன்றைக்கு சுதா சேஷய்யன் சுந்தரகாண்ட நிகழ்வை விவரித்துக் கொண்டிருந்தார்.

சுயபலமறியாத ஆஞ்சநேயன் ஜாம்பவானால் அறிந்து கொண்டவுடன் சுறுசுறுப்பாகி, மகேந்திரமலை மேலேறி தன்னுடைய வாலைப் பற்றி ஒருமுறை சுளீரென்று மலையின் மீது அடித்து, சுந்தரகாண்டம் படைக்கக் கிளம்பியது முதல் சீதையை அசோகவனத்தில் கண்டது; அதன் பின் ராவணனை நேரில் சந்திப்பதற்காக அசோகவனத்தை அழித்தது, இந்திரஜித்தின் ப்ரஹ்மாஸ்திரம் மூலம் கட்டுண்டு, அதன்பின் இராவணனின் படைகளால் அவன் முன் நிறுத்தப்பட்டது, ஒரு தூதுவனாக ஸ்ரீராமனின் செய்தியை இராவணனிடம் உரைத்தது, அதைக் கேட்ட இராவணன் சினந்து, விபீஷணனின் அறிவுறுத்தலின்படி வாலில் தீ வைத்தது, வாலில் பற்றிய தீயைக் கொண்டு ஆஞ்சநேயன் இலங்கையைக் கொளுத்தியது; அதற்குப் பின் மீண்டும் சீதையை சந்தித்து, ஸ்ரீராமனுக்குச் சொல்ல வேண்டிய செய்தி யாது என்று கேட்டபோது சீதை காகாசுரனால் தனக்கு நேர்ந்த ஆபத்து, அதிலிருந்து ஸ்ரீராமன் தன்னைக் காத்த நிகழ்வைக் குறிப்பிட்டபின் இனி நான் கூறப்போகும் செய்தியையும் அவரிடம் சொல் என்று கீழ்க்காணும் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டாள்.

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
"இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும்தொடேன்" என்ற, செவ் வரம்
தந்த வார்த்தைதிருச் செவி சாற்றுவாய்.

இதற்குப் பொருள், மிதிலையை அடைந்து; என்னைத் திருமணம் செய்து கொண்டவுடனுறை காலத்தில்; இந்த அவதாரத்தில் இரண்டாவது பெண்னை மனத்தால் கூட தீ்ண்டமாட்டேன். இந்த இவ்வுறுதியைப் பெற்றுக் கொள் என்கின்ற செம்மையான வரத்தை வழங்கிய செய்தியை இராமபிரான் செவியில் மொழிக.

இதைக் கேட்டவுடன் எனக்கு ஒரே ஆச்சரியம்! ஏனென்றால், ஸ்ரீராமன் என்று சொன்னாலே, "ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி" என்னும் இம்மூன்றுதான் மிகவும் பிரசித்தி பெற்ற சொற்கள். அவ்வாறிருக்க, அப்படிப் பட்டவனிடமே ஏன் சீதை இவ்வாறு சொல்கிறாள்?

அப்போதுதான் எனக்கு லேசாகப் பொறி தட்டியது. ஆஹா! அவள் ஸ்ரீராமனைப் பார்த்து சொல்லவில்லை.  பெண்களின் பிரதிநிதியாக இந்த உலகத்து ஆண்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாகப் பேசுகிறாள்! அவள் சொல்வது சரிதான்! கற்பு நெறி தன்னை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று பாரதி இன்று சொன்னதை சீதை அன்றே வேறு விதமாக சொல்லியிருக்கிறாள்.

எனக்கான ஒருத்தி எங்கோ பிறந்து வளர்ந்து காத்துக் கொண்டிருக்கையில் நான் மட்டும் என்னுடைய இஷ்டத்திற்கு இப்படி அலைவது சரியா என்று என்னுடைய மனமே என்னுடைய மனதைப் பார்த்து கேள்வி கேட்டது. இது முறையல்ல என்ற எண்ணம் வலுப்பட்டது. அவ்வாறு என்னுடைய எண்ணம் வலுப்பெற, என்னுடைய குடும்பச்சூழல், என்னுடைய  வருமானம், அப்பா அம்மாவின் எனக்கான உழைப்பு, அவர்களுடைய மானம் மரியாதை என்று வரிசையாக இத்தனை விஷயங்களும் மனசுக்குள் இருந்த காதலை புயல்காற்று மரங்களை வேரோடு சாய்த்து போல சாய்த்து விட்டது!

மனசுக்குள்ளிருந்த காதல் இப்படி சில நிமிடங்களில் பொசுக்கென வீழ்த்தப்பட்டதால் மனசு சிறிது நேரம் அதாவது மாலை வரை ஒரு மாதிரி சித்தபிரமை பிடித்த மாதிரி இருந்தது. மாலை வேளையில் அம்மா வீட்டில் ஏற்றிவைத்த விளக்கின் எண்ணெய் மற்றும் ஊதுபத்தி மணம் மனதை ஒருநிலைப்படுத்தியது.

மறுநாள் காலை வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுமா? எனக்கு இப்போது தெரியவில்லை!

ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-20

அது ஒரு சனிக்கிழமை. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. திங்கள் காலையில் அவளுடன் பேசி விடுவதென்ற உறுதியான தீர்மானத்துடன் படுக்கையில் விழுந்தேன். கூடவே எனது மனசும் அவள்பால் விழுந்தது. மனக்கண்ணில் அவளுடைய அந்த பேசும் விழிகள் என்னுடைய மனதின் ஒவ்வொரு செல்லையும் விரிவாக ஏதேனும் ஒரு செல்லிலாவது அவள் இல்லாமலிருக்கிறாளா என்று ஒரு உயிரியல் ஆராய்ச்சியே செய்து கொண்டிருந்தது.

பக்கத்தில் ரேடியோவில் இலங்கை வானொலி இரவு நேரப் பாடல்களைப் பொழிந்து கொண்டிருந்தது. அதில் ஒலித்த பாடல்களுமே ஏதோ ஒரு தற்செயல் நிகழ்வு போல, எனது மனவோட்டத்தைப் படித்தது போல பாடல்களை தந்து கொண்டிருந்தது.

 எண்ணிரண்டு பதினாறு வயது, அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது
நான் அனுப்புவது கடிதம் அல்ல, உள்ளம்! அதில் உள்ளதெல்லாம் எழுத்துமல்ல!”
எங்கே அவள், என்றே மனம்; தேடுதே ஆவலால் ஓடிவா!”
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும்!”
கண்ணெதிரே தோன்றினாள், கனிமுகத்தைக் காட்டினாள்!”
காலங்களில் அவள் வசந்தம்; கலைகளிலே அவள் ஓவியம்!”
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!”
படைத்தானே ப்ரம்ம தேவன், பதினாறு வயதுக் கோலம்!”
விழியிலே மலர்ந்தது மொழியிலே கலந்தது; பெண்ணென்னும் பொன்னழகே!”
மழைதருமோ என் மேகம், மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்!”

இப்படி வரிசைகட்டி வந்த பாடல்கள் மனதிற்குள் புதுப்புது பாடல் வரிகளின் ஒவ்வொரு சொல்லிலும், அந்தச் சொற்களின் ஒவ்வொரு எழுத்திலும், உடனிணைந்தொலித்த இசையின் ஒவ்வொரு மீட்டலிலும் அவளது விழிகள் நீக்கமற நிறைந்திருந்தன. இந்தளவுக்கு நான் பாதிக்கப் படுவது இதுவே முதல்முறை. இதுநாள் வரை விழிமொழிகள் மட்டுமே மனதுக்கு இன்பமளித்து வந்தன.

அவளுடன் பேசிவிடுவது என்ற தீர்மானம் வைராக்யமாக வலுப்பெற்ற பிறகு ஒலித்த இப்பாடல்கள் எனக்குள் பற்பல கற்பனைகளை, கனவுகளை விதைத்து விட்டன. விதைத்தவை அனைத்தும் நொடியிலேயே செழித்து வளர்ந்து, அறுவடைக்குத் தயார் என்று கட்டியம் கூறின.

நினைவுகளும் கற்பனைகளும் என்னுடைய இமைகளை இழுத்து மூடின. மூடிய இமைகளுக்குள்ளும் அவளுடைய விழிகள் சிறிதும் மூடாமல் என்னுடைய இதயத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. எனக்கு மட்டும் உறக்கம் வருகிறதே! உன்னுடைய விழிகள் உறங்காதா? அவற்றுக்கும் ஓய்வு வேண்டாமா? ஏன் என்னை இப்படி இமைக்காது நோக்கி என்னுடைய உறக்கத்தைக் கெடுக்கிறீர்கள்? என்று மனசு அந்த விழிகளைக் கேட்க, அதற்கும் அவ்விழிகள் காதலுடன் புன்னகைத்தன. ஆனால் உறக்கம் என்னைத் தள்ளிக் கொண்டு போய் எங்கோ தொலைவில் ஒரு கனவு தேசத்தில் தன்னந்தனியனாக விட்டு விட்டுப் போய்விட்டது.

கனவிலும் அவள் வந்தாள். நாங்கள் நிறைய பேசினோம். அவளது குரல் எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாததால் கனவிலும் கூட விழிகளாலேயே பேசிக் கொண்டிருந்தோம்! கனவுக்குள் இரவு வந்தது, என் விழிகளுக்குள் விடியல் வந்தது. ஆம்! மறுநாள் காலை எனக்கு முன்பாக சூரியன் எழுந்து வந்து என்னை எழுப்பினான்!

தூக்கமும், கனவும், மனதுக்குள் அவள் நினைவும் கலையாத நிலையில் அன்றைய எனது நாள் துவங்கியது. காலையில் வழக்கமாக செய்கின்ற வேலைகள் முடிந்து டிபனும் காபியும் முடிந்த பிறகு, சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கலாம் என்று அதை ஓடவிட்டேன்.

அப்போது எனக்குத் தெரியவில்லை, அதில் நான் காணப் போகும் நிகழ்ச்சியால் என்னுள் இருந்த காதல் என்னை விட்டு ஓடும் என்று! அப்படி என்ன அந்த நிகழ்ச்சி? என்னை முற்றிலுமாகப் புரட்டிப் போட்ட நிகழ்ச்சி?

ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-19

மனசு தீர்மானித்தபடி அன்று பேசுவது என்று முடிவு செய்து, வழக்கத்தைவிட சற்று கூடுதலாக அலங்கரித்துக் கொண்டு நான் எனது வழக்கமான சாலையில் பயணித்தேன். குறிப்பிட்ட இடம் வந்தது.

ஆனால் ஏனோ, அன்று அவள் வரவில்லை. எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. அது போலவே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எனது மனம் மிகவும் பரபரப்பானது! என்னென்னவோ கற்பனை செய்தது. ஏன் வரவில்லையென்ற கேள்வி திரும்பத் திரும்ப மண்டையைக் குடைந்தது. மனசு ஏமாந்த நிலையிலிருப்பதைக் காண்ட அறிவு சற்றே கைகொட்டிச் சிரித்தது. “நான்தான் அப்பவே சொன்னேனே, கேட்டியா? இதெல்லாம் உனக்குத் தேவையா?” என்று அறிவு கேட்டது. அந்த சமயத்தில் மேலும் ஒரு விஷயத்தை அறிவு, மனதிடம் சொன்னது:

 நீ உன்னுடைய வருமானம் என்னவென்று நினைத்துப் பார்! உன்னோட அப்பா அம்மா வாயக்கட்டி, வயத்தைக் கட்டி, இருக்க வீடு கட்டி, அதுக்கு கடனும் கட்டி, உன்னைப் படிக்க வைக்க அவங்களுக்குப் புடிச்சதைக் கூட செஞ்சுக்காம உன்னைப் பத்தி மட்டுமே யோசிச்சுகிட்டு ஓயாம ஓடாத் தேயறாங்களே! அதை நினைச்சுப் பாத்தியா?” என்று கேள்வி மேல் கேள்வியா கேட்டு இடித்தது. மனசும் வழக்கம்போல சரிசரின்னு தலையாட்டியது. ஆனால், மறுநாள் காலையிலோ, வழக்கம் போல வேதாளம் முருங்கை மரம் ஏறியது!

 ஏய், அறிவு! நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, அவளுந்தானே என்னைப் பாக்கறா? அவளுக்கும் என்னைப் புடிச்சிருக்குன்னுதானே அர்த்தம்? அவகிட்ட பேசினா என்ன தப்பு? அவ பாக்க அழகா மட்டுமா இருக்கா? அவ கண்ணைப் பாரு! அதுல எவ்வளவு அறிவு இருக்கு? அவ எங்கூட இருந்தா எனக்கு எவ்வளவு நல்லா இருக்கும்? அதனால இன்னிக்கு அவளைப் பாத்தா நான் பேசத்தான் போறேன்!” இப்படி மனசு அறிவு கிட்ட படபடன்னு பொரிஞ்சு தள்ளிட்டு, என்னைத் தன்வசப் படுத்திக் கொண்டு வழக்கம்போல சாலையில் பயணிக்க வைத்தது. கண்கள் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அவளைத் தேடியது.

அப்பாடா! இன்னிக்கு அதோ, தூரத்துல அவ வரா! இவ்வளவு நாள் பார்க்காம இன்னிக்குப் பார்க்கும்போது ரொம்பவும் புதுசா இருக்கா, இன்னும் அழகாவும் இருக்கா! இப்படியெல்லாம் அவள் தொலைவில் வரும்போது எண்ணிய மனம், அவள் என்னைப் பார்த்துக் கொண்டே கடக்கும் அந்த நொடிகளில் என்னுடைய கை என்னையறியாமல் என்னுடைய சட்டைப் பையைத் தொட்டுக் கொண்டது. என்னுடைய வருமானம் சட்டென்று நினைவுக்கு வந்ததே அதற்குக் காரணம்! கூடவே என்னுடைய குடும்பச் சூழல் என்ன என்று அறிவு சொன்னதெல்லாம் நினைவுக்கு வந்தது.

நான் அவ்வாறு சட்டைப் பையைத் தொட்டுக் கொண்டே அவளைக் கடந்ததை அவளும் பார்த்தாள். கண்களில் சில கேள்விகள்; பிறகு சற்றே குழப்பம் என அவளும் கடந்து சென்று விட்டாள். இருவரும் ஒருவரையொருவர் கடந்தபின் நான் மெல்ல திரும்பி அவளைப் பார்க்கும் அதே வேளையில் அவளும் என்னைத் திரும்பிப் பார்த்தாள். பிறகு சிறிய புன்னகையோடு மேற்கொண்டு நடந்தாள்.

அதற்குப் பின்னும் சில நாட்கள் விழிமொழிகளுடன் மட்டுமே கடந்தது. நான் அருகில் வந்து பேசுவேன் என்ற அவளுடைய எதிர்பார்ப்பு நான் நெருங்க நெருங்க அவளது நடையின் வேகம் குறைவதிலிருந்து தெரிந்தது. இருப்பினும் என்னால் அவளிடம் ஏனோ பேசத் துணியவில்லை. துணிவில்லை என்பதைவிட, பேசுவதற்கு யத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் எங்கோ ஒளிந்திருக்கும் இந்தப் பாழாய்ப்போன அறிவு சட்டென்று எங்கள் இருவருக்கிடையில் வந்து நின்றுகொண்டு என்னைப் பார்த்து முறைக்கும்!

இப்படி ஒவ்வொரு நாளும் பேசும் முயற்சி தோல்வியில் முடிவதைக் கண்டு கடுப்பான மனசு, “நாளை என்ன நடந்தாலும் சரி, பேசிவிடுவது!” என்று கடுமையாக ப்ரதிக்ஞை எடுத்துக் கொண்டது.

இதுநாள் வரை என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த அறிவுக்கு முழுமையாக வெல்லும் தருணம் அன்றிரவு வாய்த்தது. என்ன அந்தத் தருணம்? வெல்லுமளவுக்கு அப்படி என்ன நடந்தது?





ஆத்மாவின் பயணம் தொடரும்!

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-18

கடைசியா உங்களைப் பார்த்தபோது எனக்கு ஒரு சோதனை வந்ததுன்னு சொன்னேன் இல்லையா? அது என்ன சோதனைன்னு சொல்றதுக்கு முன்னால, அது ஏன் எனக்கு சோதனையா இருந்ததுங்கறதுக்கான காரணத்தை நான் சொல்லியாகணும்.

எனக்கு உபநயனம் முடிஞ்சு நித்ய சந்த்யாவந்தனம் செய்யும்போது அதில் ப்ராசன மந்த்ரம் அப்படின்னு ஒண்ணு வரும். அதில் காலையில்: (ஸூர்யச்ச) அனைத்தையும் இயக்குவிக்கும் ஸூர்யனும் (மன்யுச்ச) அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும் (மன்யு-பதயச்ச) கோபத்தையாளும் தெய்வ சக்திகளும் (மன்யு-க்ருதேப்ய:) கோபத்தாற் செய்யப்பட்ட (பாபேப்ய:) பாவங்களினின்று (மா) என்னை (ரக்ஷந்தாம்) காப்பாற்றட்டும். (ராத்ர்யா) இரவில் (மனஸா) மனத்தாலும் (வாசா) வாக்காலும் (ஹஸ்தாப்யாம்) கைகளாலும் (பத்ப்யாம்) கால்களாலும் (உதரேண) வயிற்றாலும் (சிச்நா) ஆண்குறியாலும் (யத்) எந்த (பாபம்) பாவத்தை (அகார்ஷம்) செய்தேனோ, (கிஞ்ச) இன்னும் (மயி) என்னிடத்தில் (யத்) எந்த (துரிதம்) பாவம் உண்டோ, (தத்) அதையும்; (ராத்ரி:) இராத்ரியின் அதிதேவதை (அவலும்பது) நீக்கியருள வேண்டும். (இதம் மாம்) இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை (அஹம்) நான் (அம்ருதயோநௌ) மோக்ஷத்திற்குக் காரணமாகிய (ஸூர்யே ஜ்யோதிஷி) ஸூர்ய வடிவான பரஞ்ஜோதியில் (ஜுஹோமி) ஹோமம் செய்கின்றேன். (ஸ்வாஹா) இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும்.

மத்யாஹ்னே (நடுப்பகலில்): (ஆப:) ஜலதேவதை (ப்ருதிவீம்) தனக்குறைவிடமாகிய பூமியை (புனந்து) புனிதமாக்கட்டும்; (பூதா) அங்ஙனம் புனிதமாக்கப்பட்ட (ப்ருதிவீ) பூமி, (மாம்) என்னைப் (புனாது) புனிதமாக்கட்டும். (ப்ரஹ்மணஸ்பதி:) அது வேதத்திற்குறைவிடமாகிய ஆசாரியனையும் (புனந்து) புனிதமாக்கட்டும்; (பூதா) என்றும் புனிதமாயுள்ள (ப்ரஹ்ம) வேதம் (மாம்) என்னைப் (புனாது) புனிதமாக்கட்டும். (உச்சிஷ்டம்) பிறர் உண்ட மிச்சமும் (அபோஜ்யம்) புசிக்கத் தகாததுமான (யத்) எது (மயா) என்னால் (புக்தம்) புசிக்கப்பட்டதோ, (வா) அல்லது (மம) என்னுடைய (யத்) எந்த (துச்சரிதம்) துர்நடத்தை உண்டோ, (கிஞ்ச) மேலும்; (அஸதாம்) கெட்டவர்களிடமிருந்து (ப்ரதிக்ரஹம்) ஏற்றுக் கொண்டது எது உண்டோ, (ஸர்வம்) அவை எல்லாவற்றினின்றும் (மாம்) என்னை (புனந்து) ஜலதேவதை புனிதமாக்கட்டும்என்று ப்ரார்த்தித்து (ஸ்வாஹா) புனிதமான என்னைப் பரமாத்ம ஜோதியில் ஹோமம் செய்கின்றேன்.
ஸாயங்காலே (மாலை வேளையில்): (அக்நிச்ச) அக்னியும் (மன்யுச்ச) அனைவரையும் அடிமை கொள்ளும் கோபமும், (மன்யு-க்ருதேப்ய: பாபேப்ய:) கோபத்தாற் செய்யப்பட்ட பாவங்களினின்று (மா) என்னை (ரக்ஷந்தாம்) காப்பாற்றட்டும். (அஹ்நா) பகலில் (மனஸா) மனத்தாலும் (வாசா) வாக்காலும் (ஹஸ்தாப்யாம்) கைகளாலும் (பத்ப்யாம்) கால்களாலும் (உதரேண) வயிற்றாலும் (சிச்நா) ஆண்குறியாலும் (யத்) எந்த (பாபம்) பாவத்தை (அகார்ஷம்) செய்தேனோ, (கிஞ்ச) இன்னும் (மயி) என்னிடத்தில் (யத்) எந்த (துரிதம்) பாவம் உண்டோ, (தத்) அதையும் (அஹ:) பகலின் அதிதேவதை (அவலும்பது) நீக்கியருள வேண்டும். (இதம் மாம்) இங்ஙனம் பாவம் நீங்கிய என்னை (அஹம்) நான் (அம்ருதயோநௌ) மோக்ஷத்திற்குக் காரணமாகிய (ஸத்யே ஜ்யோதிஷி) முக்காலத்திலும் ஸத்யமாய் விளங்கும் பரஞ்சோதியில் (ஜுஹோமி) ஹோமம் செய்கின்றேன். (ஸ்வாஹா) இந்த ஹோமம் நன்கு அனுஷ்டிக்கப் பட்டதாக வேண்டும்.

இப்படி மூன்று வேளையும் செய்ததால் அதன் பொருள் மனதில் பதிந்திருந்தது. அடுத்ததாக, “உபநயனம்என்றால் குருவிற்கு அருகில் அழைத்துச் செல்லுதல் என்று பொருள். இதுல இன்னொரு அர்த்தமும் இருக்கு. ஸம்ஸ்க்ருதத்தில் உபநயனம் என்றால், கண் கண்ணாடி என்று பொருள். கண்பார்வை குறைபாடு என்றால் அதை நிவர்த்திக்க நாம் கண்ணாடி அணிகிறோம் இல்லையா? அது போல, நமது அறிவுக்கண் குறைபாட்டை நிவர்த்தி செய்வது இந்த வேதங்கள், மந்த்ரங்கள், ஸாஸ்த்ரங்கள். அவற்றைப் படித்தலே உபநயனம் அப்படின்னு நான் நினைக்கிறேன். ஏன்னா, இவைதானே நம்முடைய அறிவுக்கண்ணை ப்ரகாசமா வெச்சிருக்கு?

இதையெல்லாம் இப்பதான் நான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ஆரம்பிக்கும்போதே இவற்றின் அருமை பெருமை பற்றி ஓரளவு புரியுது. அதனால, நான் எந்தளவுக்கு ஒழுக்கமா இருக்கணும் அப்படின்னும் புரியுது. வெளில மத்த மத்த ஆட்கள் ஏதாவது கெட்ட வார்த்தை பேசினா, கேட்கும்போது காதும் மனசும் கூசுது! ஒரு சில முறைகேடான நடத்தை, செயல்கள் இதைப் பார்த்தாலும் இவற்றிலிருந்து நீ ஒதுங்கி இரு! அப்படின்னு மனசு சொல்லுது. என்ன ஒண்ணு, இதெல்லாம் பார்த்தா கட்டுக்கடங்காம கோபந்தான் வருது! இருந்தாலும் கோபம் என்ற குணமும் தப்புன்னு அறிவு சொல்லுது! மனசு கேட்க மாட்டேன்னு பல சமயத்துல அடம் புடிக்குது!

இப்படியிருக்கற எனக்குள்ள வயசு காரணமா புதுசா ஒரு உணர்வு தலைகாட்ட ஆரம்பிச்சுது! இதுதான் நான் சந்திச்ச, மனசை அலைபாய வெச்ச சோதனை! தினமும் நான் வேலைக்குப் போகும்போது வழியில் எதிர்ப்படும் பெண் ஒருத்தியின்பால் ஒருநாள் சட்டென்று ஒரு ஈர்ப்பு வந்தது. இந்த…., “கண்டதும் காதல்அப்படின்னு சொல்றாங்களே! அதுதான் போல! அவளுடைய புற அழகு அவ்வளவு அபாரமாக இருந்தது. வாலிபத்தின் வசந்தம் அவளிடத்தில் மிகவும் செழிப்பாக இருந்தது. இருப்பினும், என்னை மிகவும் கவர்ந்தது அவளுடைய பேசும் விழிகள்! அதில்தான் எவ்வளவு மின்சாரம்! அவளும் நானும் ஒருவரையொருவர் கடந்து செல்லும்போது விழிகள் நான்கும் உரசிச் செல்லும். அவளும் என்னைக் குறிப்பாகப் பார்ப்பதை உணர்ந்து கொண்டபின் அந்தப் பார்வையின் தீண்டலுக்காகவே இருவரும் குறிப்பிட்ட நேரத்தில் தவறாது வருவது வாடிக்கையானது. தினமும் விழிமொழிகள் மட்டுமே! வாய்மொழியேதுமில்லை!

இப்படிப்பட்ட அலைபாய்தல் தவறு என்று அறிவு அவளைக் காணாத மற்ற சமயங்களில் இடித்துரைக்கும். அந்த நேரங்களில் மனசு சரியென்று கேட்டுக் கொள்ளும். ஆனால், மறுநாள் காலை மனசு அறிவை வெல்லும்! அவளுடைய தரிசனத்துக்காக மனசு பறந்து கட்டும்! சில நொடி விழிமொழிகளுக்குப் பின் அறிவு தலைதூக்கும். இந்தப் போராட்டம் பல நாட்கள் நீடித்தது. இத்தனைக்கும், என்னுடைய பெயர் அவளுக்கும், அவளுடைய பெயர் எனக்கும் தெரியாது! ஆனால் விழிகளின் உரையாடல் மட்டும் அந்த சில நொடிகள் தினமும் தொடர்ந்தது!

எவ்வளவு நாள் இப்படியே செல்லும்? வாலிபத்தின் ஆட்சியில் பிடிபட்ட மனசு, “அவளை நெருங்கிப் பேசு!” என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்காட்பட்டு சரி, மறுநாள் அவளிடம் பேசிவிடுவதென்று மனம் தீர்மானித்து விட்டது. அறிவோ, செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு விழித்தது!

மனம் வென்றதா? இல்லை அறிவு வென்றதா?


ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-17

 (ஆத்மாராமின் தாத்தாவும் அப்பாவும் தீர்மானித்தபடி நல்லதொரு நாளின் நல்லதொரு முஹூர்த்தத்தில் அவனுக்கு உபநயன ப்ரும்மோபதேச நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிந்தது. அதற்குப்பின் அவன் தனது தாத்தாவின் வழிகாட்டுதலின்படி நித்ய சந்த்யாவந்தனத்தை செய்து வந்தான். இனி, இந்த நித்யகர்மா மூலம் என்னவெல்லாம் அறிந்து கொண்டான் என்பதை அறிந்து கொள்ள நமக்கெல்லாம் ஆவலாக இருக்குமல்லவா? வாங்க, அவனை சந்தித்துவிட்டு வரலாம்.

அவனை சந்தித்த வேளை, அப்போதுதான் அவன் தனது பாடங்களைப் படித்து, எழுதி முடித்திருந்தான். அது ஒரு விடுமுறை நாள் என்பதால் அவனுக்கும் நம்முடன் உரையாட நிறைய நேரம் இருந்தது. இனி, அவன் சொல்வதைக் கேட்போம்.)

 வாங்க! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? என்ன, இப்ப நான் என்ன படிக்கறேன்னு கேக்கறீங்களா? நான் பள்ளிக்கூட படிப்பெல்லாம் முடிஞ்சு, இப்ப ஒரு காலேஜ்ல படிச்சிக்கிட்டிருக்கேன். ஸ்கூல்ல படிச்ச நாள்ல எனக்கு இந்த அறிவியல் பாடந்தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. காரணம், எனக்கென்னவோ அதுல அவ்வளவா ஆர்வமில்லை. அதனால, அறிவியல் என்னோட அறிவுக்கு எட்டலை. அதுவுமில்லாம, அப்பா எப்பவும் தன்னோட ஆஃபீஸ் வேலைல முழுசா மூழ்கி இருக்கறதால வீட்டு பொறுப்பெல்லாம் அம்மா தலைல முழுசா விழுந்துடுத்து.

அம்மா மாசம் ஒரு தடவை தனக்கும் அப்பாவுக்கும் சம்பளம் வந்தவுடனே மாசக் கணக்கு எழுதுவா. அப்போ நானும் அம்மா பக்கத்துல உட்கார்ந்துகிட்டு, அம்மா சொல்லச் சொல்ல ஒவ்வொரு செலவா ஒரு டைரில எழுதுவேன். கடைசில என்ன மிஞ்சறதுன்னு பார்த்தா, வரவுக்கு மேல செலவு இருக்கும். ஏதோ ஒரு விஷயத்துல மாசாமாசம் துண்டு விழும். அதை அப்பாவும் அம்மாவும் எப்படி சமாளிக்கறாங்கன்னு தெரியலை. ஆனா, எல்லா செலவும் தீர்மானிச்சபடி செஞ்சுடறாங்க. எப்படிம்மா சமாளிக்கறேன்னு கேட்டா, “உனக்கு இப்ப எதுக்கு அதெல்லாம்? நீ பேசாம படிக்கற வழியைப் பாருஅப்படின்னு சொல்லிடுவா. நானும், எனக்கு முழுசா புரியாததால சரின்னுட்டு போயிடுவேன்.

இதுக்கு நடுவுல, அம்மா சொன்னமாதிரி நான் படிச்சு தெரிஞ்சுண்ட சிலதை உங்ககிட்ட சொல்றேன். ஒரு நாள் தாத்தாகிட்ட சாமி கும்பிடறது பத்தி கேட்டப்போ, தாத்தா ஒரு விளக்கம் சொன்னார். அதே மாதிரி ஒண்ணை ஏதோ ஒரு புத்தகத்துல படிச்சேன். அது, தெய்வம் மனுஷ்யரூபேண அப்படின்னு ஆரம்பிக்கும். நீங்களும் படிச்சு பாருங்க! கோவிலுக்குப் போய் கும்பிடறதுக்கு காரணம், ஒவ்வொரு கோவிலும் ஒரு ஆகம விதிப்படி கட்டி, வழிபாட்டு முறையும் இப்படி இப்படித்தான் இருக்கணுங்கற விதிப்படி அமைஞ்சிருக்கு, அந்தக் கோவிலில் உள்ள மூலவர் தெய்வத்தின் மூர்த்தத்தில் இந்தப் ப்ரபஞ்சத்தின் சக்தி யாகத்தின் வழியா ஆவாஹனம் ஆகியிருக்கு, அந்தந்த தெய்வங்களை அந்தக் கோவில்ல நேரா போய் தரிசனம் பண்றதால அந்த தெய்வங்கள் கிட்டேர்ந்து நமக்கு நல்ல அதிர்வலைகள் வந்து சேருதுன்னு தெரிஞ்சுகிட்டேன்.

இந்த சந்த்யாவந்தனம் பண்றதால என்ன பயன் அப்படிங்கறதை ஒரு புத்தகத்துல படிச்சேன். ஸந்த்யாவந்தன மந்த்ரங்கள் அர்த்தத்துடன் அப்படின்னு அந்த புத்தகம் ஆரம்பிக்கும். அந்த மந்த்ரங்களை முறையா சொல்றதால நம்மோட உடம்பும் மனசும் எப்பவும் சுத்தமா, ஆரோக்யமா இருக்கும் அப்படின்னு தெரிஞ்சுது. அதுல சொன்ன மாதிரி இந்த நாட்டுல இருக்கற ஒவ்வொருத்தரும் இருந்தா, நம்முடைய நாடு எந்தளவுக்கு சுபிட்சமா இருக்கும்னும் புரிஞ்சுது. ஆனா, யதார்த்தம் அப்படியில்லைன்னும் தெரியுது. என்ன பண்றது, தனிமனித ஒழுக்கங்கறது அவங்கவங்க தனிப்பட்ட விஷயமா இருக்கு!

இது விஷயமா நான் இன்னொண்ணும் சொல்லணும். நான் பள்ளிக்கூடத்துல படிக்கறப்போ, டீச்சர் எனக்கு ஒரு திருக்குறள் சொல்லிக் குடுத்தாங்க. அது என்ன குறள்னா, “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதைப் படிச்சப்புறம், எதைப் படிச்சாலும் திருத்தமா, சந்தேகமில்லாம படிக்கணும்னும், அதுபடி நடக்கணும்னும் புரிஞ்சுது.

இருந்தாலும், எனக்கு நான் கருவிலிருந்தபோது எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு என்ன விடைன்னு இப்பவும் தெரியலை. இன்னும் அதிகமா படிக்கணும்னு மட்டும் தெரியுது; அப்படிப் படிச்சாதான் விடை கிடைக்கும்னும் தெரியுது. அந்தக் கேள்விகள் என்னன்னு உங்களுக்கு மறந்துடுத்தா? சொல்றேன். “நான் யார்? நான் எப்படி இங்கே வந்தேன்? இதற்கு முன் எங்கே இருந்தேன்?

 (இதற்குப் பின் சில வருடங்கள் ஓடின. அதன்பின் ஒருநாள் மீண்டும் ஒருமுறை ஆத்மாராமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவனை கடைசியாக சந்தித்தபோது, பேச்சின் இறுதியில் சில கேள்விகளை வைத்திருந்தான். அதை அவனுக்கு நினைவுபடுத்தி, மேற்கொண்டு என்ன நடந்ததுன்னு கேட்டபோது, அவன் சொன்னவை கீழே!)

ஆத்மாராம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், “இந்த விடை தேடும் வேலைக்கு நடுவுல என்னோட காலேஜ் படிப்பு முடிஞ்சு இப்ப ஒரு இடத்துல வேலைக்குப் போயிட்டிருக்கேன். என்ன வேலைன்னு கேக்கறீங்களா? வாழ்க்கைக் கணக்கைப் போட்டுட்டிருக்கற நான் என்ன வேலைக்கு போவேன்? கணக்கெழுதற வேலைதான்!”

ஏதோ, படிச்சு தெரிஞ்சுகிட்ட வழில நான்பாட்டுக்கு போயிட்டிருந்தேன். இந்த நேரத்துலதான் எனக்கு ஒரு சோதனை வந்தது. அது என்னோட மனசை ரொம்பவே அலைபாய வைத்த சோதனை! அப்படி என்ன சோதனை? சொல்றேன்!”

 (இப்படிச் சொல்லிவிட்டு, அவன் அந்த சோதனை பற்றிய பழைய நினைவில் மூழ்கினான். தனக்கு நடந்ததை அவன் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. அவன் சொல்வதைக் கேட்பதற்காக நாமும் பொறுமையாகக் காத்திருப்போம்!)


ஆத்மாவின் பயணம் தொடரும்!