Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-34

என்னுடைய முதல் கேள்வி – “நான் யார்?”
அதற்கான விடை – “நீ ஒரு ஜீவாத்மா!”
என்னுடைய அடுத்த கேள்வி -  “நான் எப்படி இங்கே வந்தேன்?”
அதற்கான விடை என்னுடைய பூமாவின் பதிலிலிருந்தது! – (அவரும் ஒருநாள் தன் கிட்ட இருந்த உன்னை என்னோட வயித்துக்குள்ள வெச்சுட்டார்!) – உண்மைதானே! பரமாத்மாவில் ஒரு திவலையாக இருந்த ஜீவாத்மாவாகிய என்னை என்னுடைய அம்மாவின் கருவறைக்குள் அனுப்பி வைத்தது அவர்தானே!?
என்னுடைய மூன்றாவது கேள்வி – “இதற்கு முன் எங்கே இருந்தேன்?”
அதற்கான விடைநான் இருந்தது பரமாத்மாவிற்குள்!

இம்மூன்று கேள்விகளைத் தொடர்ந்து பின்னாளில் சில கேள்விகள் வந்தன அல்லவா? அவற்றுள் ஒன்று, “எதற்காக இங்கே வந்தேன்?”

இதற்கு விடை என்னவாக இருக்கும்? நான் இதற்கு முன் பல பிறவிகள் எடுத்து, அப்பிறவிகளுள் என்னால் செய்யப்பட்ட வினைகளுக்கேற்ப நல்ல, தீய பலன்களைநான்என்று அறியப்பட்ட இந்த ஜீவாத்மா அனுபவித்தாக வேண்டும்! அதற்காக பல பிறவிகளை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டும்! அப்பிறவிகளிலும் என்னால் செய்யப்பட்ட வினைகளுக்கேற்ப நல்ல, தீய பலன்களைநான்என்று அறியப்பட்ட இந்த ஜீவாத்மா அனுபவித்தாக வேண்டும்! இது ஒரு சக்கரம்! இச்சக்கரம் ஓடிக்கொண்டே இருக்கும்! இதன் ஓட்டம் எப்போது நிற்கும்? எந்தப் பிறவிக்குப் பிறகு நிற்கும்? இந்த இரு கேள்விகளுக்கு மட்டும் விடை உடனடியாகக் கிடைக்காது என்பது மட்டும் புரிந்தது என்று கடைசியாக உங்களை சந்தித்தபோது கூறியிருந்தேன் அல்லவா?

அதன்பிறகு நான் தனிமையிலிருந்த தருணங்களில் குடும்பத்திற்குள், வெளியில் நிகழ்ந்த, நிகழும் நிகழ்வுகளை சற்றே மனதுக்குள் அசைபோட்டபோதுஎதற்காக இங்கே வந்தேன்?” என்ற கேள்வியைச் சுற்றிச் சுற்றி எனது மனம் வட்டமிட்டது. நான் மட்டுமல்ல, இப்புவியில் பிறந்தவர்கள் எல்லாருமே எதற்காக இங்கே அனுப்பப் பட்டிருக்கின்றனர்? இந்த பூமியைப் படைத்த இறைவன் அதில் பலவிதமான உயிர்களைப் படைத்து ஒவ்வொன்றிற்கும் ஒரு கடமையை அல்லது சில கடமைகளை செய்வதற்காகப் பணித்திருக்கிறான். நமது கடமை என்ன என்பதை உணராமலேயே பெரும்பான்மை உயிர்கள் வாழ்ந்து மடிந்து விடுகின்றன என்பதுதான் உண்மை! இப்படித்தான் மனித சமுதாயம் இருக்க வேண்டும் என்பதற்கான விதிகளை நமது முன்னோர்கள் கட்டமைத்த காலகட்டத்தில் வேண்டுமானால் மனிதர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து செயலாற்றியிருக்கக் கூடும். ஆனால் அதற்கடுத்தடுத்து வந்த தலைமுறையினரில் பலர் அதன் உண்மையான நோக்கத்தையோ பொருளையோ உணராது, அல்லது உணர முற்படாதுபெரியவங்க சொல்லிட்டாங்க, அதை ஏனென்று கேள்வி கேட்காமல் கடைபிடிக்க வேண்டும்என்று ஒருவிதமான இயந்திரத்தனத்தில் செயல்பட்டதன் விளைவு, எவ்வளவோ பொருள் பொதிந்த செயல்களை, சடங்குகளை நாம் மூடநம்பிக்கை என்ற பெயரில் கைவிட்டுவிட்டோம். ஒவ்வொரு பண்டிகைகளையும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் கொண்டாடி வருகிறோமே, அது ஏன் என்று நாம் என்றாவது சிந்தித்ததுண்டா? எந்த பருவத்தில் என்னென்ன காய்கறிகள், தானியங்கள் கிடைக்குமோ, அவற்றை வைத்து, நாம் செய்யும் பணியில் நமக்கு மனச்சோர்வு வாராமலிருக்க ஒரு மனமகிழ் நிகழ்வை ஏற்படுத்தி, ஒவ்வொரு பண்டிகையிலும் ஒவ்வொரு தெய்வத்தை முன்னிறுத்தி அந்த தெய்வங்களை வணங்கி, படையலிட்டு, நாம் நமது குடும்பத்துடன், அக்கம்பக்கத்து மனிதர்களுடன் இணைந்து கொண்டாடி, உண்டு மகிழ்ந்து அதற்குப் பிறகு நமது கடமைகளை, வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றை சேகரிப்பதற்காக உழைப்பதில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அவையெல்லாம் காலப் போக்கில் நேரமின்மை என்று சொல்லி, பண்டிகைக்காக நேரம் ஒதுக்காமல் வேலையே பெரிதென்று ஓடிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஓடுவதற்குப் பின்னாளில் நமது நாட்டில் ஏற்பட்ட கலாசார மாற்றமும் ஒரு காரணமாகி விட்டது. இதையும் நாம் உணரநேரமில்லாமல்(!)” ஓடிக் கொண்டிருக்கிறோம். எதற்காக ஒரு சடங்கினைச் செய்கிறோம் என்பதன் பொருளை நாம் உணராததால் மற்றும் உணர முற்படாததால் சடங்குகள் மூடநம்பிக்கைகளாகி விட்டன!

இதோ, இப்போது எனக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டது. இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் நானும் ஏதோ ஓரளவிற்கு ஸ்லோகங்களைப் படித்துள்ளேன். அவற்றைப் படித்தவற்றுள் நான் உணர்ந்தது என்னவென்றால், நாம் வழிபடும் தெய்வங்களெல்லாம் அப்படியொன்றும் எளிதில் அணுகமுடியாதவை அல்ல! நாம் அவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. எல்லா தெய்வங்களுமே கருணை வடிவானவை. அவையனைத்துமே நமக்கு உதவி செய்வதற்காக ஒவ்வொரு நொடியிலும் காத்துக் கொண்டிருக்கின்றன. அத்தெய்வங்களை நாம் வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை. அனைத்தும் நமக்குள்ளேயே இருக்கின்றன. இதைத்தானே ப்ரஹ்லாதனும் சொன்னான், நாராயணன் தூணிலுமிருப்பான், துரும்பிலுமிருப்பான் என்று? என்றால் அவன் நமக்குள்ளும் இருக்கிறான் அல்லவா? நான் படித்த ஸ்லோகங்கள் பெரும்பாலும் ஜீவாத்மாவாகிய நமக்கும் அந்த பரமாத்மாவுக்குமிடையிலான உரையாடல்களாகவே இருக்கின்றன. “பரமாத்மாவே! நீ இந்த இந்த வகைகளில் உயர்ந்தவன்! உன்னால் இயலாதது என்று எதுவுமில்லை. எனக்கு இந்த இந்த வகைகளில் இப்படி இப்படி துன்பங்கள் வருகின்றன. அவற்றை நீதான் விலக்கி என்னை உன்பால் செலுத்த வேண்டும். என்னுடைய இறுதி இலக்கு உன்னுடைய பாதமலர்களே! அவற்றை நீ எனக்கு அருள வேண்டும். அதை நீ எனக்கு மனமகிழ்ச்சியுடன் தருவதற்காக என்னாலியன்றவற்றை உனக்கு சமர்ப்பிக்கின்றேன் என்பதையே பெரும்பாலான ஸ்லோகங்கள் சொல்கின்றன.

இப்போது எனது மனமும் அந்த இலக்கை நோக்கியே நகர்கிறது. இது ஒருபுறமிருக்க, இன்று நான் உங்களுடன் பேச ஆரம்பித்தபோது குறிப்பிட்டஎதற்காக இங்கே வந்தேன்என்ற அந்த ஒரு விஷயத்திற்கு வருகிறேன். ஒவ்வொரு தாய்தந்தையரும் பிறப்பது அந்த ஆத்மாக்கள் அவர்களுடைய முற்பிறவிப் பயன்களை அனுபவிக்க, கிடைத்த பிறவியில் அவர்களுடைய ஆத்மாவை மேம்படுத்திக் கொள்ள, அவர்களுக்குப் பிறகு அவர்களைப் போன்றே முற்பிறவிக் கடன் தீர்க்கவும், இப்பிறவியில் தமது ஆன்ம மேம்பாட்டிற்காக ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்வதற்காகப் பிறக்க வேண்டும் என்று காத்திருக்கும் ஆத்மாக்களுக்குப் பிறவியளிப்பதற்காகவுமே.

இக்கடமைகளை எவ்வாறு சரிவர செய்வது என்பதற்காகவே ஸநாதன தர்மமானது நமது முன்னோர்களால் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் ஏற்படுத்தியது அவர்கள் கடமை. அவர்கள் ஏற்படுத்திய வழியில் அவற்றின் பொருளுணர்ந்து செல்ல வேண்டியது நம் கடமை! அவ்வாறு நாம் சென்ற வழியில் நம்முடைய அடுத்த தலைமுறையை செலுத்த வேண்டியதும் நம் கடமை!

இப்போது நான் வாழ்ந்து கொண்டிருப்பது முதுமையின் பிடியில். இது ஒருவகையில் எனக்கு இரண்டாவது குழந்தைப் பருவம். இதில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் பற்றி மீண்டும் நாம் சந்திக்கும்போது சொல்கிறேன்.

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment