ஒரு ஆத்மாவின்
பயணம்
பாகம்-39
இப்போது எனக்கு
நினைவுக்கு வந்து விட்டது!
கம்பீரமான அந்த நபர் வேறு யாருமில்லை, சாக்ஷாத்
எமதர்ம ராஜனேதான்! என்னுடைய பல முற்பிறவிகளின் முடிவில் இங்கே
வந்து இவரைப் பார்த்திருக்கிறேன். அவரைப் பார்த்ததும் என்னையறியாமல்
அவரைப் பற்றிய ஸ்லோகத்தைச் சொன்னேன்:
யம வந்தன மந்த்ரம்:
யமாய நம: | யமாய தர்மராஜாய ம்ருத்யவேசாந்தகாய ச வைவஸ்வதாய காலாய ஸர்வபூதக்ஷயாய ச ஔதும்பராய
தத்னாய நீலாய பரமேஷ்டினே | வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை
நம: | சித்ரகுப்தாய வை நம ஓம் நம இதி ||
அர்த்தம்:
யம வந்தனம் – (யமாய நம:) யமனுக்கு நமஸ்காரம். (யமாய) யமனுக்கு (தர்மராஜாய)
தர்ம ராஜனுக்கு (ம்ருத்யவே ச) ம்ருத்யுவுக்கும், (அந்தகாய ச) முடிப்பவனுக்கும் (வைவஸ்வதாய) விவஸ்வானுடைய
புத்ரனுக்கு, (காலாய) காலஸ்வரூபிக்கு,
(ஸர்வ பூதக்ஷயாய ச) எல்லாப் பிசாசுகளையும் ஒழிப்பவனுக்கும்,
(ஔதும்பராய) மிகவும் பலசாலியாயுள்ளவனுக்கு,
(தத்னாய) தத்னன் என்ற பெயருடையவனுக்கு,
(நீலாய) கரிய மேனி உடையவனுக்கு, (பரமேஷ்டினே) எல்லோராலும் பூஜிக்கப்பட்டவனுக்கு
(வ்ருகோதராய) பெருவயிறு படைத்தவனுக்கு,
(சித்ராய) விசித்ரமானவனுக்கு, (சித்ரகுப்தாய வை நம:) விசித்ரமாய் தன்னுடைய ரகசியத்தைக்
காப்பவனுக்கு நமஸ்காரம். (சித்ரகுப்தாய வை நம ஓம் நம இதி)
“ஓம் நம:” என்று, மீண்டும்
சித்ரகுப்தனுக்கு நமஸ்காரம்.
இதைச் சொன்னதுமே
யமதர்மராஜன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி, ப்ரகாசம்!
“மானிடனே! உன்னுடைய
துதியைக் கேட்டு யாம் அகமகிழ்ந்தோம்! சித்ரகுப்தா! இவனுடைய ஏடுகளைப் பார்த்து விட்டாயா? அதிலுள்ள இறுதி
முடிவென்ன?”
சித்ரகுப்தன்
என்னுடைய பாவபுண்ய கணக்குகளடங்கிய ஏடுகளைப் புரட்டி வாசித்துவிட்டு, “ப்ரபோ! இவன் இப்போது முடித்துவிட்டு வந்திருக்கும் இப்பிறவியில்
இவன் செய்த புண்யங்களின் பலனாக, இதுவரை இவன் தன்னுடைய முற்பிறவிகளில்
செய்த பாவங்களனைத்தும் கரைந்து விட்டன. இவனிடம் தற்போது புண்ய
பலன்கள் மட்டுமே உள்ளன. அதன்படி இவன் இந்த லோகத்தின் கணக்கில்
100 வருடங்கள் ஸ்வர்கலோகத்தில் வசிக்க வேண்டும். அந்தப் புண்ய பலன் தீர்ந்தபிறகு மீண்டும் பூமியில் பிறக்க வேண்டும்.
இதுதான் முடிவு!” என்று கூறினார்.
யமதர்மராஜன்
என்னைப் பார்த்து கேட்டார்,
“என்ன மானிடா! ஸ்வர்க்க லோகத்திற்குப் புறப்பட
ஆயத்தமாக இருக்கிறாயா?”
“ப்ரபோ! நான்
ஸ்வர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை. உடனே மறுபிறப்பெடுக்க
விரும்புகிறேன். நான் எடுக்கும் இப்பிறவியே என்னுடைய இறுதிப்
பிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.”
“அப்படியானால் உன்னுடைய புண்யபலனை
என்ன செய்வது?”
“அதற்கு ஈடாக என்னைப் போல பல்லுயிர்களைப்
படைக்கும் பரமனைக் காண விரும்புகிறேன்! அதற்கு அனுமதி உண்டா?”
“உன்னுடைய புத்திசாலித்தனத்தை யாம்
மெச்சினோம்! அவ்வாறே ஆகட்டும்!”
இப்படிச் சொன்ன
யமதர்மராஜன்,
அவருடைய பணியாட்களில் இருவரையழைத்து, இந்த ஆத்மாவை
பரமாத்மாவின் முன்னிறுத்தி இவ்விடம் திரும்புங்கள் என்று ஆணையிட்டார். அதன்படி, அவர்கள் என்னை பரமாத்மாவின் முன் நிறுத்திவிட்டு,
பரமாத்மாவை வணங்கியபின் சட்டென மறைந்தனர்.
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment