Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-35

என்ன, எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்களையெல்லாம் பார்த்து ரொம்பவே நாளாச்சு! எனக்கு இப்போதெல்லாம் முன்னைப் போல ஞாபகசக்தி இல்லை. ரொம்பவே குறைஞ்ச மாதிரி இருக்கு. முக்கியமானதெல்லாம் நினைவு வெச்சுக்க முடியாததால அதையெல்லாம் எழுதி வெச்சுக்க வேண்டியிருக்கு! கடைசியா உங்களைப் பார்த்தப்போ என்ன சொன்னேன்?..... ம்ம்ம்! இப்ப நான் இருக்கறது இரண்டாவது குழந்தைப் பருவம். இதுல எனக்கு என்ன அனுபவம் கிடைச்சதுங்கிறதைப் பத்தி சொல்றேன்னு சொல்லியிருந்தேன், இல்லையா?

இப்போதெல்லாம் என்னால என் பையன், மருமகளோட மனநிலையோட ஒத்துப் போக முடியலை. உடம்புல தள்ளாமை வந்துடுத்து! முன்னைப் போல விறுவிறுன்னு வேலைகளை முடிக்க முடியறதில்லை. இதுநாள் வரை வேலை செஞ்சு பழகிட்ட மனசுக்கு, ஒரு வேலையை நினைச்சப்ப முடிக்க முடியலைன்னா ஒருமாதிரி பரபரன்னு இருக்கு. யாரையாவது வெச்சு நினைச்ச வேலையை முடிக்க வேண்டியிருக்கு. அதுக்காக மத்தவங்களை தொந்தரவு பண்ண வேண்டியிருக்கு. இதெல்லாம் தேவையில்லைதான், ஏதோ, கார்த்தால எழுந்தோமா, குளிச்சோமா, பகவத்நாமாவை சொல்லிண்டிருந்தோமா, வேளைக்கு சாப்பிட்டோமான்னு இல்லாம மனசு எதையாவதுஇதைச் செய், அதைச் செய்ன்னு என்னை இம்சை பண்றது. இதுலேர்ந்து வெளிய வர முடியாம தவிப்பா இருக்கு. என்னோட இந்த மனசு என்னோட மகனுக்கோ, மருமகளுக்கோ இப்ப புரியலை. அவங்க வயசு அப்படி, அதுவுமில்லாம அவங்களுக்குன்னு உண்டான கடமைகள் இருக்கு. அதுகள்ல அவங்க கவனமா இருக்க வேண்டியிருக்கு. இது எனக்கும் புரியறது. இருந்தாலும், என்னோட மனசை அமைதிப்படுத்த நான் ரொம்பவே மெனக்கெடறேன்.

என்னோட இந்த அவஸ்தைகள்ல எனக்கு ஒரே ஆறுதல் என்னோட பேரப்பசங்கதான். என்னால அவங்களோட ரொம்ப சுலபமா ஒத்துப் போக முடியுது. அவங்களும் என்னோட விளையாடறது (அதாவது என்னை வைத்து விளையாடறது), எங்கிட்ட கதைகள் கேக்கறதுன்னு ரொம்ப ஒட்டுதலா இருக்காங்க. என்னோட அவ போனதுக்கப்புறம் எனக்கு இவங்கதான் மிகப்பெரிய ஆறுதல். என்னோட அம்மா நான் சின்னப் பையனா இருக்கறப்ப இந்த மாதிரி முதியவர்களைப் பற்றி சொன்ன ஒரு விஷயம் இப்ப எனக்கு ஞாபகத்துக்கு வருது! அன்னிக்கு நான் அம்மாகிட்ட கேட்டேன், “எப்படிம்மா அது, தாத்தா பாட்டி ரெண்டு பேரும் உங்க ரெண்டு பேர்கிட்ட சண்டை போடறா, ஆனா எங்ககிட்ட மட்டும் ஆசையா, பாசமா இருக்காங்க”?ன்னு. அதுக்கு அம்மா சொன்னா, உன்னை மாதிரி சின்னக் குழந்தைகள் பொம்மை வெச்சு விளையாடறீங்க. அதுவே உங்களுக்கு பெரிய சந்தோஷம், த்ருப்தி. ஆனா இந்த வயசானவங்களும் குழந்தை மாதிரிதான். என்ன ஒண்ணு, உங்களுக்கு இப்ப புரியாத வயசு; அவங்களுக்குப் புரிஞ்ச வயசு. புரிஞ்சாலும் மனசு ஏத்துக்காது. காரணம் இப்ப அவங்களும் குழந்தைகள் மாதிரிதான் பிடிவாதம் பண்ணுவாங்க. அவங்க மனசுக்கு நீங்களெல்லாம் ஒரு உயிருள்ள பொம்மைகள்! அதனாலதான் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு கூடிக்கறீங்க!” என்று!!!

அம்மா அன்னிக்கு சொன்னது அப்ப எனக்குப் புரியலை, ஆனா இப்ப புரியுது!

எனக்கு முன்னை மாதிரியெல்லாம் வளைச்சுக் கட்டிண்டு சாப்பிட முடியறதில்லை. கைப்பிடியளவே போறும்னு இருக்கு! அதனால எப்பல்லாம் பசிக்கற மாதிரி இருக்கோ, அப்பல்லாம் கொஞ்ச கொஞ்சமா சாப்பிட்டுக்கறேன். உடம்புல மத்தவாளுக்கு இருக்கற மாதிரி உபாதைகளெல்லாம் ஒண்ணுமில்லைன்னாலும், சாப்பிடறதை உடம்பு கொஞ்சம் குறைச்சலாவேதான் ஏத்துக்கிறது. அதனால உடம்புல தளர்ச்சி அதிகமாயிண்டிருக்கு. நடமாட்டம் குறைந்து கொண்டு வருகிறது. பக்கத்துல இருக்கற கோவிலுக்குப் போறது கூட குறைஞ்சுடுத்து. அதனால, உடம்பே கோயில், மனசே கர்ப்பக்ரஹம், அதுல இருக்கற கடவுளை நினைச்சா போறும்னு இருக்கு! உடம்பு கொஞ்சம் கொஞ்சமா பொறந்த குழந்தை நிலைக்குப் போயிண்டிருக்குன்னு தோண்றது. பொறந்த குழந்தை போட்ட இடத்துல கிடக்கும்; வளர வளர நீஞ்சும், தவழும், எழுந்து நிற்க முயற்சிக்கும், நடக்கப் பழகும்; பிறகு ஓடும். இதெல்லாம் இப்ப தலைகீழா எனக்குப் போயிண்டிருக்குங்கிறது எனக்கு நல்லா தெரியுது! வேலைக்கு போன காலத்துல ஓட்டமா ஓடினேன், வயசு ஏற ஏற அந்த ஓட்டம் நடையா மாறிடுத்து! வேலைக்குப் போறது நின்னவுடன் அந்த நடையும் கொஞ்ச கொஞ்சமா ஓய்ஞ்சு இப்ப எழுந்து நிற்க முயற்சிக்கும் நிலை தாண்டி; தவழும் நிலையும் தாண்டி இப்ப பொறந்த குழந்தை மாதிரி இருக்கேன்! பழையபடி ஆகணும்னா தாய்ப்பாலுக்கு நிகரா இப்ப உடம்புக்கு சத்து வேணும்! அது கிடைக்க இப்ப வாய்ப்பில்லை! அந்த வாய்ப்பு வேணும்னா மறுபடியும் ஒருதடவை பொறந்தாகணும்!

அப்படி நான் மறுபடி பிறக்கப் போறேனா, இல்லை பிறவாமை நிலை கிடைக்கப் போறதாங்கிறது அந்த பரமாத்மா கைலதான் இருக்கு! எது எப்படியோ, என்னுடைய கடைசி நொடிகள் என்னை ஒவ்வொரு நொடியிலும் நெருங்கிக் கொண்டிருப்பது மட்டும் இப்போது எனக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது!

அந்த நொடிகள் எப்படி இருக்கும்? அந்த அனுபவம் மனசுக்கு எந்த மாதிரியான உணர்வைத் தரும்? இதுவரை யார் அந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்? விளையாட்டு, படிப்பு, வாழ்க்கை அனுபவங்கள் பிறருடைய அறிவுரை, மனப்பகிர்தல் வழியாக நம் எல்லோருக்கும் கிடைக்கும், ஆனால் இந்த மரணம் நம்மைத் தழுவும் நேரம் நமக்குக் கிடைக்கும் அந்த அனுபவத்தை எவர் இதுவரை நம்முடன் பகிர்ந்திருக்கிறார்கள்?

இந்த விடை தெரியாத கேள்வி இப்போது என்னுடைய மனதில்! (கருவில் உருவான சமயத்தில் எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு என்னுடைய அனுபவங்கள் விடையளித்து விட்டன; என்னுடைய முடிவின் நொடிகளில் இப்போது மேலே சொன்ன ஒரு கேள்வி மட்டுமே இப்போதைக்கு என்னுடைய மனதில் உள்ளது!)


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment