Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-37

இதுவரை என்னோடு பயணித்தவர்களே! இன்று உங்களுக்கு ஒரு நல்ல செய்தி! நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நொடிகள் இன்னும் சில மணிநேரங்களில் எனக்கு வாய்க்கப் போகிறது!

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் எல்லாரும் வீட்டிலிருந்தனர். பகல் வேளையில் என்னுடைய மகள், மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் வந்திருந்தனர். வெகு நாள் கழித்து அனைவரும் ஒன்று கூடியதால் வீடு கலகலப்பாக இருந்தது. என்னுடைய உள்ளுணர்வு என்னிடம் சொன்னது, “உன்னுடைய மகளையும் அவ குடும்பத்தையும் உன் கண்ணால பாக்கறது இதுவே கடைசின்னு! அதனால அவங்க வந்ததிலிருந்து கிளம்பும்வரை என்னைவிட்டு எங்கும் நகராமல் என்னுடைய பேச்சு மூலமாக பார்த்துக் கொண்டேன். என்னுடைய மகளைப் பார்க்கும் அந்த கடைசி நொடிகள் முழுவதிலும் என் மனதுக்குள் அவளை நான் முதன்முறையாகக் கையில் ஏந்திய அந்தத் தருணமே பலமுறை மனதுக்குள் சுழன்றது. அது தவிர, அவள் வளர்ந்த விதம், அவளுடைய அறிவுத்திறன், அதனால் அவளுக்குக் கிடைத்த வாழ்க்கை அனைத்தும் மனதுக்குள் அந்த அவளைக் கையிலேந்திய தருணங்களுக்கிணையாக ஓடிக் கொண்டிருந்தன. அதே மாதிரி என்னுடைய பேரன் பேத்தியையும் பார்த்து மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்தேன். அவர்களுடைய சுட்டித்தனம், அறிவுத்திறன் இவற்றையெல்லாம் பார்த்து மனசுக்குள் பெருமை அன்று ஏனோ வழக்கத்தைவிட அதிகமாகப் பொங்கியது. ஏனோ என்ன, அவர்களைப் பார்ப்பதும் இன்றுதானே கடைசி?

அவர்களனைவரும் மாலை கிளம்பிச் சென்றனர். “வர வாரம் வந்து உங்களைப் பாக்கறேம்பா!” என்று மகள் கிளம்பிய தருணத்தில் என்னையறியாமல் அவளது கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். அவளுடைய தீண்டல் இதுதானே கடைசி? “ஏம்ப்பா?” என்று அவள் ஆதுரத்துடன் கேட்டது என் மனதை மேலும் கலங்க வைத்தது. மிகவும் கஷ்டப்பட்டு பொங்கிய கண்ணீரை அடக்கிக் கொண்டேன்.

 “ஒண்ணுமில்லம்மா! நீங்க எல்லாரும் க்ஷேமமா இருக்கணும்என்றேன்.

 “என்னப்பா திடீர்னு! உடம்புக்கு ஏதாவது பண்றதா?”

அவளுடைய அறிவுத்திறனை நினைத்து வியந்தேன். எவ்வளவு சரியா புரிஞ்சுக்கறா! இருந்தாலும் நான் சமாளிக்க வேண்டிய நிலை.

 “அப்படில்லாம் ஒண்ணுமில்லடா! நான் நல்லாதான் இருக்கேன். உன் இடத்துல இப்ப உன்னோட மன்னி இருந்து பாத்துக்கறா! எனக்கென்ன குறைச்சல்! நீங்க எல்லாரும் நல்லபடியா இருக்கேள்இதைப் பாக்கறதுலதான எனக்கு சந்தோஷமே!” என்றேன்.

 “நிஜமாவே ஒண்ணுமில்லையே? உங்க வாய் ஒண்ணு சொல்றது, ஆனா கண்ணு வேற ஏதோ சொல்றதே?”

உங்க பொண்ணு உங்கள மாதிரியே இருக்கா என்று பூமாவும் மத்தவங்களும் அடிக்கடி சொன்னது ஏனோ இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. அதனால் அவளைப் பார்க்காதவாறு வேறு எங்கோ என்னுடைய பார்வையைத் திருப்பிக் கொண்டேன். ஒரு விஷயம் சொல்றேன், நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்க நண்பர்களே! நீங்க சொல்றது பொய்தான்னு உங்க மனசுக்குப் பட்டவுடனே தன்னைப் போல உங்க கண்கள் ஒண்ணு, வேற பக்கம் பார்க்கும், இல்லைன்னா கீழே குனிஞ்சு பார்க்கும்!

 “அப்படில்லாம் ஒண்ணுமில்லம்மா! உடம்புல ஏதோ சத்து குறைஞ்ச மாதிரி இருக்கு, அதனால உனக்கு அப்படி தோண்றதுஎன்று சமாளித்தேன். “சரிப்பா, நான் போயிட்டு வரேன். அங்க வீட்ல எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு, நான்தான் போய் எல்லாத்தையும் பாக்கணும்என்று சொல்லியவாறே மகள் நகர்ந்தாள். அவள் போவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளைப் பார்ப்பது இதுவே கடைசி!

அவர்கள் அனைவரும் போனதும் அன்றைய இரவு என்னுடைய மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என்னைச் சுற்றி அமர்ந்திருந்தனர். அவர்களுடன் அன்றைய மாலை நேரத்திலிருந்தே பேசிக் கொண்டிருந்தேன். மகளுடன் இன்று இருந்தபோது எனக்கிருந்த மலரும் நினைவுகள் போலவே என்னுடைய மகனுடன் இப்போது இருக்கும்போதும் வருகிறது. அவர்கள் அனைவருடனும் என்னுடைய மனம் நிறையுமளவுக்கு, உடல் களைப்படையும் வரை பேசிக் கொண்டிருந்தேன்.

மகன், “சரிப்பா! பேசிண்டே இருந்ததுல நேரம் போனதே தெரியல! நீங்களும் ரெஸ்ட் எடுங்க! கார்த்தால பார்க்கலாம்!” என்று சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான். நான் அவன் கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டேன். இவனுடைய தீண்டலும் இதுதானே கடைசி? என்னுடைய பேரனும் பேத்தியும் கிட்டே வந்து, ஆசையாக என்னுடைய இரண்டு கன்னங்களிலும் முத்தம் கொடுத்துவிட்டுதாத்தா! குட் நைட்!” என்று சொல்ல, அவர்கள் இருவரையும் ஆரத் தழுவிக் கொண்டேன். இம்முறை என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களிலிருந்து நீர் கரகரவென வழிந்தது.

 “ஏன் தாத்தா? என்ன ஆச்சு?” என்று வினவினர்.

 “ஒண்ணுமில்லடா கண்ணுகளா! நீங்க இப்படி தாத்தாவ கொஞ்சறது எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு!” என்றேன்.

மீண்டும் இருவரும் என்னை அவர்களுடைய முகத்தோடு முகம் வைத்துக் கொண்டு, “! தாத்தா வாசனை!” என்று பலமாக மூச்சை உள்ளிழுத்தவாறே சென்றனர். அவர்கள் செல்வதையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனக்கும் சற்றே உறக்கம் வருவது போல இருந்தது. இமைகள் கனத்தன. நான் உணர்வுடன் இருக்கும்போதே மெல்ல மெல்ல உறக்கத்திலாழ்ந்தேன். கனவில் நான் ஜனித்த நொடி முதல் என்னுடைய பூமா என்னோடிருந்த வரையான காலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசைகட்டி வந்தன. அந்தக் கனவின் முடிவில் பூமா, “என்ன, நானும் ரொம்ப நேரமா பார்த்துண்டிருக்கேன். அங்க தனியா இருந்துண்டு என்ன பண்றேள்? சித்த இங்க வாங்கோ!” என்று அழைக்கும் குரல் கேட்டேன்.

சட்டென்று கண்விழித்த போது, எனக்குள் ஏதோ சில மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தேன். என்ன இது! புது மாதிரியா இருக்கே!

நண்பர்களே! கொஞ்சம் இருங்க, எனக்குள்ள ஏதோ நடக்கறது! அதெல்லாம் என்னன்னு கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சுட்டு, வந்து உங்களோட பேசறேன்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment