ஒரு ஆத்மாவின்
பயணம்
பாகம்-40
அந்த பரமாத்மாவின்
முன் நிற்கும்போது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை! அவருடைய தரிசனத்தில்
மனம் லயித்துக் கிடந்தது. அந்தத் தருணத்தில் மனசுக்குள் வேறெந்த
நினைவுமில்லை. அவரைப் பற்றிய நினைவில் மனம் ஆனந்தத்தில் இருந்தது.
இதற்கு முன் இப்படிப்பட்ட ஆனந்தத்தை மனம் அனுபவித்ததில்லை. மிகவும் புதிய அனுபவமாக இருந்தது. ஆனந்தம் என்ற ஒன்றை
முதன்முதலாக அனுபவிப்பது போன்றிருந்தது. பூமியில் இருந்தபோது
இன்பதுன்பம்; ஆசாபாசங்கள்; விருப்புவெறுப்பு
இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் இரண்டுமற்ற நிலை என்று ஒரு மையப்புள்ளி உண்டு.
அது பேரின்பத்தை அளிக்கக் கூடியது. அந்த மையப்புள்ளியை
இங்கே பரமாத்மாவின் முன் நிற்கும்போதுதான் உணர்ந்தேன்! இதை அங்கு
வாழும்போதே உணர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனம் எண்ணியது.
அந்த மையப்புள்ளியை மனம் உணர்ந்தவுடன், அங்கே வாழ்ந்த
காலத்தில் என்னைச் சுற்றி நிகழ்ந்தவை யாவும் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அங்கே வாழ்ந்த காலத்தில் தேவையில்லாமல் பலருடன் மாற்றுக் கருத்துகளுடன் பொருதியது
எவ்வளவு வீண் என்றும் உணர முடிகிறது. என்னைப் போன்றே பிற மனிதர்களும்
எனக்கு முன்பும், நான் வாழ்ந்த காலத்திலும், எனக்குப் பிறகும் நடந்தனர், நடந்துகொண்டிருக்கின்றனர்
என்பதை மனம் உணர்ந்தபோது அவர்கள் மீது கழிவிரக்கம் தோன்றுகிறது.
இப்படி எவ்வளவு
நேரம் போனது என்று தெரியவில்லை. சட்டென்று உணர்வுக்கு வந்தேன்.
பரமாத்மா புன்சிரிப்புடன் வினவினார், “என்ன,
ஜீவாத்மா! சிலையாகி விட்டாயா? யமதர்மராஜன் முன் நிற்கும்போது அவனைப் பற்றி புகழ்ந்து கூறினாயே, என்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தோன்றவில்லையா?”
“மன்னியுங்கள் ப்ரபோ!
எனக்கு உங்களை தரிசித்தவுடன் பேச்செழவில்லை. மனமும்
தங்களுக்குள் லயித்துவிட்டது. அவ்வாறு லயிக்கச் செய்ததும் தாங்களே
என்று புரிந்து கொண்டேன். தங்களைப் பார்த்து சொல்ல வேண்டுமென்றால்
ஒன்றே ஒன்றுதான் அடியேனுக்குத் தோன்றுகிறது. “ஓம் ஸ்ரீபரமாத்மநே
நம:”
பரமாத்மா புன்சிரிப்புடன், “இதுவே போதுமானது! அது சரி, உன்னிடமிருந்த
புண்யபலன்களுக்கு ஸ்வர்க்க லோக போகத்தை ஏன் வேண்டாமென்றாய்? அது
உனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதாயிற்றே?”
“ஹே பரமாத்மா!
பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் ஒன்றைப் படித்தது இங்கே எனக்கு நினைவுக்கு
வந்தது. அது, “பெரிதினும் பெரிது கேள்!”
என்பது. தங்களது தரிசனம் மற்றும் பாதாரவிந்த நிழலில்
இருப்பதை விடவா ஸ்வர்க்கலோக போகம் பெரிது?”
“மிக்க மகிழ்ச்சி!
ஆக, நீ என்னைக் காண்பதற்காக அவற்றை தியாகம் செய்து
விட்டாயா?” இதனால் நீ மீண்டும் பிறக்க வேண்டுமே, அதுவும் உடனடியாக!”
“என்ன ப்ரபோ, இப்படி கூறுகிறீர்கள்? தங்களை தரிசித்த பிறகுமா மீண்டும்
பிறவி?”
“ஆம்! உன்னைப் பொறுத்தமட்டில் விதியின் ஏடுகளில் அவ்வாறே எழுதப்பட்டுள்ளது.
நீ மீண்டும் பிறக்கத்தான் வேண்டும்! யமதர்மராஜனே
அதைத்தானே கூறினான், ஸ்வர்க்கலோக வாழ்வுக்குப் பிறகு நீ மீண்டும்
பிறக்க வேண்டுமென்று?”
“ஸ்வாமி, தங்களை தரிசித்த பின்னும் என்னுடைய பிறவிப்பிணி தீராதா? சரி, பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எனக்குள் சில கேள்விகள்
இருந்தன. அவற்றில் மூன்றுக்கு விடை அங்கே வாழ்ந்த காலத்திலேயே
தங்கள் அருளால் அடியேனுக்குக் கிடைத்தது. இருப்பினும்,
இன்னும் சில கேள்விகள் அடியேனுக்குள் உள்ளன. அவற்றுக்கு
விடை தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்.”
“கேள்! சொல்கிறேன்!”
“ஜீவாத்மா என்ற பெயருடைய
நாங்களெல்லாம் யார்?”
“நீங்களெல்லாம் என்னுள்
அடங்கியிருக்கும் மிக மீச்சிறு அணுத்துகள்கள்!”
“என்றால், எதற்காக நாங்கள் பிறவியெடுக்க வேண்டும்?
“என்னுள்ளிருக்கும் ப்ரஹ்மம்
இவ்வுலகங்களைப் படைத்தார். கூடவே அவ்வுலகங்கள் முறையாக இயங்க
வேதங்களைப் படைத்தார். அவ்வாறு படைத்த வேதங்களின் வழியே அவை இயங்க
வேண்டுமென்பதற்காக அவருக்கு இயங்கு சக்திகள் தேவைப்பட்டன. அவற்றை
உயிர்களாகப் படைக்க வேண்டியிருந்தது. அவருக்குத் தேவைப்பட்ட அந்த
உயிர்களை நாடி அவர் எம்மிடம் வந்தபோது, மாபெரும் இயங்குசக்தியாக
பரமாத்மாவாக உள்ள என்னிலிருந்து பல கோடிக்கணக்கான மிக மீச்சிறு அணுத்துகள்களை ஜீவாத்மாவாக
பூவுலகிற்கு அனுப்பி வைத்தேன். நீ வாழ்ந்த பூமி ஒன்று மட்டுமே
உள்ளது என்று எண்ணாதே! எண்ணற்ற ப்ரபஞ்சங்களில் அந்த ஒன்றைப் போல
பல வாழிடங்கள் உள்ளன. அங்கும் என்னுடைய சக்தி பரவியுள்ளது.
இவை தவிர இயங்கா ப்ரபஞ்சங்களும் உண்டு. என்னைப்
பொறுத்தவரை என்னுடைய இயக்கமே உங்கள் இயக்கம். என்னுடைய அசைவற்ற
நிலையே பல அசைவற்ற ஆனால் என்னால் அசைக்கப் படுகின்ற ப்ரபஞ்சங்கள். அனைத்து ப்ரபஞ்சங்களுமே என்னைச் சுற்றி இயங்குகின்றன. நான் மிகப் பெரிய ஈர்ப்பு சக்தி. எப்போது வேண்டுமோ,
அப்போது உங்களை என்னிலிருந்து விடுவித்து, உங்களுக்கான
கடமைகள் முடிந்ததும் மீண்டும் என்னுள் ஈர்த்துக் கொள்வேன். மீண்டும்
எப்போது தேவையோ, அப்போது என்னிலிருந்து உங்களை விடுவிப்பேன்,
மீண்டும் ஈர்த்துக் கொள்வேன். எனக்கு இது ஒரு நிரந்தரமான
கடமை!”
“அப்படியானால் எங்களுக்கான
கடமைகள் என்ன?”
“நான் முன்னமே உரைத்தது
போல நீங்கள் நான் எந்த உலகத்திற்கு உங்களை அனுப்புகிறேனோ, அந்த
உலகம் இயங்குவதற்காக ஏற்படுத்தப் பட்ட நியதிப்படி அவற்றை இயங்கச் செய்வதே உங்கள் கடமை!”
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment