Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-28

நடந்த திருமணம் எங்களுடையது என்பதால் இன்று காலை என்ன பலகாரம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை! எங்களுக்கு அந்த காலை வேளையில் கிடைத்ததெல்லாம் வெறும் பாலும் பழமும் மட்டுமே! ஹோமத்தின் இடையில் இருவரையும் ஆளுக்கொரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடக் கொடுத்தார் வாத்யார்! கூடவே வெற்றிலையும்! ஏற்கெனவே வயித்துல ஒண்ணுமில்லை, இதில் ஒற்றைப் பழமும் வெற்றிலையும் பசியை இன்னும் கிளப்பிவிட்டு விட்டன! எனது முகக்குறிப்பையறிந்த வாத்யார், “ஒரு அரைமணி நேரம் பொறுத்துக்கோடா அம்பி! ஹோமம் முடிஞ்சதும் சாப்பாடுதான்!” என்றார்! அதன்பின் க்ருஹப்ரவேசம் முடிந்தபின்பொண்ணு மாப்பிள்ளையை சாப்பிடச் சொல்லுங்கோஎன்று மதியம் கல்யாண சாப்பாட்டுக்கு அனுமதி கிடைத்தது ஒருவழியாக!

நேரம் மீறிவிட்டதால் ஏதோ சாப்பிட்டதாக பேர் பண்ணிவிட்டு, நாங்கள் இருவரும் அவரவருக்கு தரப்பட்ட அறைகளில் முடங்கினோம்.

தனியாக இருக்கும் நேரம் மனசுக்குள் அந்த முதல் தீண்டல் நினைவுக்கு வந்தது. என்னை மாதிரியே அவளும் நினைச்சுக்கிட்டிருப்பாளோ என்ற கேள்வியும் மனசுக்குள் வந்தது. என்னையறியாமல் என்னுடைய வலது உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டேன், பலமுறை! என்ன இது! மனசு அலைபாயற மாதிரி இருக்கே! என்ற கேள்வியும் வந்தது. லேசாகக் கண்ணயர்ந்து ஒரு அரைமணியோ ஒரு மணியோ போயிருக்கும். உடனே வந்து எழுப்பி விட்டார்கள். மூஞ்சி கை காலலம்பிண்டு ரெடியாகுடா என்றனர். நலங்கு நடக்கணுமாம்! அதன்படி எழுந்து தயாராக, அந்த மாலை வேளையில் சூடாக மைசூர் போண்டா, கோதுமை அல்வா, கொஞ்சம் மிக்ஸர், காபி எல்லாம் ஜரூராகப் போய்க் கொண்டிருந்தது.

நலங்கில் பாடும்போது மதியம் மனசுக்குள் எழுந்த கேள்வியை யாரோ கானடாவில்அலைபாயுதே கண்ணா!” என்று விஸ்தாரமாகப் பாடினர். அடுத்து தேங்காய் உருட்டுகையில் ஷண்முகப்ரியாவில்விளையாட இது நேரமா?” என்று அர்த்தபுஷ்டியுடன் வேறொருவர் பாடினார். பிறகு பெண்ணைப் பாடச் சொன்னார்கள். எனக்கு, பெண் பார்க்கப் போனபோது அவளை பாடச் சொன்ன நிகழ்வு மனசுக்குள் சட்டென்று ஓடியது. அவளும் கூடியிருந்தவர்கள் சொன்னதற்கிணங்க அம்பாள் மீதான ஒரு பாடலைப் பாடினாள். சும்மா சொல்லக் கூடாது, நன்றாகத்தான் இருந்தது. இப்போது மாப்பிள்ளை முறை! மாப்பிள்ளையைப் பாடச் சொல்லுங்கோ, மாப்ள! பாடுங்கோ என்று பெண் வீட்டுத் தரப்பிலிருந்து ஏகப்பட்ட குரல்கள்! அதில் ஒருவித அறைகூவல் இருந்தது. என்னடா இது! என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தெருவில் நாளை நடக்கவிருக்கும் கல்யாணத்திற்கான ஜானவாசம் போய்க் கொண்டிருந்தது. அதில் நாதஸ்வரம் வாசித்தவர் தன்யாசியில்சங்கீத ஞானமு பக்திவிநாஎன்ற பாடலை விஸ்தாரமாக இசைத்தபடி சென்றார்.

எனக்கு இவளைப் பற்றிய நினைப்பு, இவளுடன் பின்னாளில் நடத்தப் போகும் வாழ்க்கை இவையெல்லாம், என்னுடைய அம்மா அப்பா வாழ்க்கையை நான் நேரடியாகப் பார்த்திருந்ததால் அந்நினைவுகளையொட்டி காட்சிகள் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தன. உடனே மனசுக்குள் அந்நிகழ்வுகள் வரிகளாக உருப்பெற்றன. அவற்றை அதே தன்யாசியில் வெளிப்படுத்தினேன்.

பல்லவி

அவளில்லை என்றால் நானில்லைஅவள்
நினைவில்லை என்றால் என் ஜீவனில்லை                       (அவள்)

அநுபல்லவி

என்னைப்புரிந்தவள் என்னை மணந்தவள்
என்னைப்புரிந்தவள் என்னை மணந்தவள்
முன்னைப் பிறவியின் தொடர்பாய் இணைந்தவள்         (அவள்)

சரணம்

சொந்தபந்தங்களையும் வந்தணையும் நண்பர்களையும்
இன்முகம் காட்டியே உபசரித்திடுவாள்
சொந்தபந்தங்களையும் வந்தணையும் நண்பர்களையும்
இன்முகம் காட்டியே உபசரித்திடுவாள்
எந்த நேரமும் என் சிந்தையிலிருப்பவள்
எந்த நேரமும் என் சிந்தையிலிருப்பவள்
மங்காப் புகழ்தன்னை எந்தனுக்குச் சேர்ப்பவள்   (அவள்)

பாடி முடித்ததும் சபையில் சில நொடிகள் அமைதி! நான் இப்படி சொந்தமாக இட்டுகட்டி பாடுவேன் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அனைவரின் முகங்களிலும் குறிப்பாகப் பெண் வீட்டாரிடம் தெரிந்தது. சட்டென அவர்களில் ஒருவர், “பரவாயில்லையே! மாப்பிளைக்கு கவிதையெல்லாம் ப்ரமாதமா வருதே!” என்றார். நான் அவளது முகத்தைப் பார்த்தேன். அதில் அளவில்லாத பெருமை தெரிந்தது. அது எனக்கும் மகிழ்வைத் தந்தது. வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும் என்று எனது மனசுக்கும் பட்டது!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment