Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-27

பெண் பார்த்துவிட்டு கிளம்புகையில் அடுத்து வருகின்ற ஒரு நல்ல நாளில் பையன் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் செய்வது என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர். என்னிக்கு வைத்துக் கொள்வது என்பதை ஊருக்குப் போய் கடிதம் எழுதுவதாகத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுக் கொண்டபடி, ஒரு நல்ல நாளில் பெண்வீட்டார் வந்து, திருமணத்தை நிச்சயம் செய்து, அடுத்து வருகின்ற முகூர்த்தத்தில் கல்யாணம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி, குறிப்பிட்ட தேதியும் வந்தது. வீடு முழுவதும் உறவினர் வருகை, பரஸ்பர உரையாடல், கிண்டல் கேலி என்று அமர்க்களப் பட்டது. ஒவ்வொருவரும் தத்தமது திருமண நிகழ்வில் நடந்ததை சுவைபட பரிமாறிக் கொண்டிருந்தனர்.

எனது மனமோ, வேறு விதமான சிந்தனையிலிருந்தது. எனது ரசனைக்கேற்ப அவள் இருப்பாளா? எனக்கு கதை, கவிதை, இலக்கியம், இசை என்று எல்லாவற்றிலும் நாய் வாயை வைத்தது போல ரசனை உண்டு. வருகிறவள் எனக்கு அந்தமாதிரியெல்லாம் ஒன்றுமில்லைன்னு சொல்லிட்டா என்ன பண்றது? போதாக் குறைக்கு அவ்வப்போது மனசுக்குள்ள அந்த மூணு கேள்விகள் வேற என்னை துரத்திண்டே இருக்கு! ஒருவேளை வருபவள் நல்ல புத்திசாலியா இருந்து, அவகிட்டேருந்து கூட விடை கிடைக்குமோ என்று கூட ஒரு நினைப்பு! பார்க்கலாம்! இங்கதான வரப்போறா? இங்க வந்தவாட்டி எல்லாம் புரிஞ்சிடப் போறது! என்று மனசுக்குள் நான் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். நான் அமைதியாக இறுக்கமான முகத்துடன் இருப்பதைப் பார்த்த ஒன்றிரண்டு குசும்பு புடிச்ச பெரிசுகள்ஏண்டா இப்பவே இப்படி பேஸ்து அடிச்ச மாதிரி இருக்கே! ஏதாச்சும் சந்தேகம்னா கேளு!” என்று கண்ணடித்தனர். அவர்கள் எதைச் சொல்கிறார்கள் என்று புரிந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெறுமனே புன்னகைத்து சமாளித்துவிட்டுகொஞ்சம் வெளிவேலை இருக்கு, போயிட்டு வரேன்என்று அங்கிருந்து நகரப் பார்க்க, “நிச்சயமான மாப்பிள்ளை வெளில போறதாவது! இங்கேயே கிட!” என்று தடை போட்டு விட்டனர். வேறு வழியில்லாமல் அறைக்குள் முடங்கினேன்.

திருமண நாளும் வந்தது. முதல்நாள் விரதம், மறுநாள் காசியாத்திரை, மாலை மாற்றல், ஊஞ்சல், பச்சைபுடி சுற்றுதல் எல்லாம் அந்தந்த நிகழ்வுக்குரிய மகிழ்ச்சியுடன் நடந்து முடிந்தது. ஊஞ்சலிலிருந்து அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டு மணவறை வரை நடந்தேன். வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு இளம்பெண்ணின் தீண்டல்! அது மனசுக்குள் புதுவிதமான உணர்வைக் கொடுத்தது. அதன் பின் கன்யாதானம் முடிந்து, நான் கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்டு அவள் வந்து தனது தந்தையின் மடி மீது அமர, வாத்யார் கம்பீரமாக மாங்கல்ய தாரண மந்திரத்தை ஓத, தாலி கட்டப் பட்டது! அந்தத் தருணத்தில் நான் எனது வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்ட்த்திற்குள் ப்ரவேசித்ததை உணர்ந்தேன். மனசுக்குள் கூடுதலாக ஒரு பொறுப்புணர்வு வந்தது. இனி இவள் என்னுடையவள், இவளை நான் என்னுடைய இறுதிநொடி வரை பாதுகாத்து, மகிழ்ச்சியை மட்டுமே தரவேண்டும் என்று மனசு தானாகவேஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டது. அதன்பின் நடந்த ஹோமம் அதில் சொல்லப்பட்ட மந்திரங்களின் பொருள் அனைத்தும் நான் அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போதே இயல்பாக அறிவுக்கு எட்டியது. இம்மந்திரங்களை இதற்கு முன் கேட்டதில்லையென்றாலும், நன்றாகப் புரிந்தது. மண வாழ்க்கையென்பது எந்த அளவுக்குப் பொருள் பொதிந்தது, அதை எவ்வாறு அர்த்தமுள்ளவாறு வாழ வேண்டுமென்பதை அவை எனக்கு உணர்த்தின.

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment