Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-31

வாழ்க்கையில் முதன்முறையாக மனம் சொன்னதை அறிவு கேட்டது! இது எப்படி சாத்தியமாயிற்று? எல்லாம் இந்தப் பாசம், அன்பு, பந்தம் இவை செய்கின்ற வேலை என்று அறிவு புரிந்து கொண்டது. மனம் தன்னுடைய தேவைகள் இன்னவென்று பட்டியலிட்டது. அறிவோ, அந்தத் தேவைகளை கடமைகள் என்று புரிந்து கொண்டது. தேவைகள் நிறைவேற வேண்டுமென்றால், அவற்றை அடைய நான் என்னைத் தகுதியாக்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவு மனதுக்கு அறிவுறுத்தியது. தகுதியாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டுமென்று மனம் சிந்தித்தது.

சிந்தனையின் முடிவில் நான் என்னுடைய குடும்பத்தை நாங்கள் திட்டமிட்டபடி நடத்த வேண்டுமென்றால், இப்போது உள்ளதை விட இன்னும் கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்பதும் புரிந்தது. கூடுதலாக வேண்டுமெனில் நான் என்னுடைய தகுதி மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் புரிந்தது. அதற்கான செயலில் நான் இறங்கினேன்.

இதற்கிடையில் மகனுக்குப் பிறகு ஒரு மகளும் எங்களுக்குக் கிடைத்தாள். குடும்பத் தேவைக்கான என்னுடைய உழைப்பில் எனக்கு அவ்வப்போது சோர்வு ஏற்பட்டால் என்னுடைய பொழுதுபோக்கு என் குழந்தைகளின் மழலைப் பேச்சு, அவர்களுடைய விளையாட்டு மற்றும் இன்ன பிறவாக இருந்தன. நான் குழந்தையாக இருந்தபோது என்னவெல்லாம் செய்தேனோ, அவற்றை என் குழந்தைகள் செய்வதைப் பார்க்கும்போது, இறைவனின் படைத்தலில் உள்ள விந்தையை நினைத்து அடிக்கடி வியந்தேன்! இப்படித்தானே என்னை எனது பெற்றோர்கள் ரசித்திருப்பார்கள் என்ற உணர்வும் ஒவ்வொரு தருணத்திலும் வரும்.

எங்களுடைய உழைப்பில் மனம் லயித்திருந்தபோது காலம் விரைவாக ஓடிக் கொண்டிருந்ததை என்னுடைய மனம் கவனிக்கவில்லை போலும்! என்னுடைய பெற்றோர்கள் அவர்களுடைய இரண்டாம் குழந்தைப் பருவமெனும் முதுமையை அடைந்திருந்தனர். சமயத்தில் என் குழந்தைகளிடம் நான் கண்ட அடம், பிடிவாதம் இவை என் பெற்றோர்களிடமும் இருப்பதை உணர்ந்தேன். இருதரப்பினருடைய மனநிலையும் ஒரே மாதிரி இருந்ததும் எனக்கு வியப்பாக இருந்தது.

அப்போதுதான் ஒரு விஷயம் எனக்குப் புலப்பட்டது. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நிறைய மரங்களுண்டு. அவற்றின் வளர்ச்சியைக் கண்டு ரசிப்பதும் எனக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது. அதில் நான் கவனித்த விஷயம், அவையனைத்துமே ஒரு விதைக்குள் ஒளிந்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவை வளர்கின்றன. உரிய பருவத்தில் அவை துளிர்த்து, இலைகள் பெரிதாகி, மொட்டு விடும் பருவத்தில் மொட்டு விட்டு, பூக்கின்ற பருவத்தில் பூத்து, காய்க்கின்ற பருவத்தில் காய்த்து மேலும், கனிய வேண்டிய காலத்தில் கனிகின்றன. அக்கனிகள் புதிய பல விதைகளை தருகின்றன. அதற்குப் பின் தமது இலைகளை உதிர்த்து விட்டு மொட்டை மரமாக நிற்கின்றன. அதற்குப் பின்வருகின்ற மழையில் மீண்டும் தமது அடுத்த சுழற்சியில் துளிர், இலை, மொட்டு, பூ, காய் கனி என்று தொடர்கின்றன. இவை பருவங்கள்தோறும் தொடர்கின்றது. இச்செயல் பல நூறு ஆண்டுகளுக்கு மிகவும் சாதாரணமாக நிகழ்கின்றது.

இதுபோலதானே மனித வாழ்க்கையும்? கருவறையில் உருவாகி, அங்கேயே சில மாதங்களில் வளர்ந்து, பின் வெளிவந்து (அதாவது, ஒரு விதை பூமிக்குள்ளிருந்து தலை நீட்டுவது போல), தவழும் குழந்தை, கல்வி பயிலும் குழந்தை, பணிக்குச் செல்லும் மனிதனாகி (அதாவது, செடியாகி, சிறுமரமாகி, கிளைபரப்பி), உரிய வயதில் வாலிபப் பருவமெய்தி (அதாவது மொட்டுவிட்டு, பூத்து), திருமணம் செய்து குழந்தைகள் பெற்று (அதாவது காய் விட்டு, கனியாகி, விதைகளீவதைப் போல), இரண்டாம் குழந்தைப் பருவமாகிய முதுமை எய்தி (அதாவது மரம் இலைகளுதிர்ப்பதைப் போல), இறுதியில் மரணமெய்தி (அதாவது, பசுமையான மரம் இலைகளிழந்து மொட்டை மரமாகி நிற்பதைப் போல) விடுகிறான். மரங்களைப் போல மீண்டும் அடுத்த பருவத்தில் துளிர்விட்டு அடுத்த சுழற்சி வாழ்க்கையை அடைவதில்லை. அப்படி ஒரு வாய்ப்பிருந்தால் அவனுக்கு மரணமென்பதே இருக்காது! அல்லவா? ஏன் அவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பில்லை? மரங்கள் தமது நிலத்துடனான தொடர்பை விடாமல், நிலத்திற்குள் வேர் பரப்பி நிற்கின்றன. அது போல நமக்கு ஒரு அறுபடாத தொப்புள் கொடி தொடர்பிருந்தால் ஒருவேளை நாமும் மரணத்தை வெல்லக் கூடுமோ?

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment