ஒரு ஆத்மாவின்
பயணம்
பாகம்-25
வந்தவர்களனைவரும்
எனக்குப் பெண் பார்க்கும் நாளைக் குறித்துவிட்டு கிளம்பினார்கள். பெரும்பான்மை இங்கிருந்து செல்வதாகவும், ஒரு சிலர் அவர்தம்
வேலை நிமித்தமாக நேரடியாகப் பெண் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் பேசிக் கொண்டு கலைந்து
சென்றனர்.
பெண் பார்க்கும்
அந்த நாளும் வந்தது.
அந்த நாளன்று மாலை 4-4.30 அளவில் அனைவரும் பெண்
வீட்டில். வழக்கமான வரவேற்பு, உபசரிப்புக்குப்
பிறகு இருதரப்பு பெரியவர்கள் என்ன ஆரம்பிச்சுடலாமா என்று கேட்டபோது, எங்க பக்கத்திலிருந்து ஒருவர், ஒரு பத்து நிமிஷம் பொறுங்கோ,
ராமன் மாமாவும் சுந்தர் அண்ணாவும் வந்துடட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே
இருவரும் பரபரப்பாக வந்திறங்கினர். “அதோ! அவாளும் வந்தாச்சு, ஆரம்பிச்சுடலாமே!” என்றனர் கோரஸாக.
எனக்கு ஏனோ
பொழுது போகவில்லை.
அப்படியே அறையைச் சுற்றி பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த வீட்டுப் பெண்களின் கைவேலைப்பாடுகள், அந்த வீட்டாரின்
புகைப்படங்கள் என்று அந்த அறை அலங்கரிக்கப் பட்டிருந்தது. அந்த
வீட்டு நபர்களின் அனைவருடைய பார்வையும் என்மீதே இருப்பதை உணர முடிந்தது. குறிப்பாக அங்கே குழுமியிருந்த இளவட்டப் பெண்கள். அவ்வப்போது
அவர்கள் இரண்டிரண்டு பேராக அவர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களுடைய பேச்சின் சாராம்சம் என்னைப் பற்றித்தான் என்பதையும் உணர முடிந்தது.
அந்த இளம்பெண்களின் என்னைப் பற்றிய அவர்களுக்குள்ளான பேச்சு எனக்குள்
ஒருவிதமான விவரிக்க முடியாத அவஸ்தையாக இருந்தது. மனசுக்குள் நெளிந்து
கொண்டிருந்தேன். அதுதான் சரியான சமயமென்று என்னுடைய மனக்கண்ணுக்குள்
சட்டென்று சீதாதேவி வந்தாள்! ஒருவிதமான அவஸ்தை உணர்வோடு அவள்
முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். என்னுடைய முக வரிகளைப் படித்தவள்,
சிறிய சிரிப்புடன் “ஏண்டா, ரொம்பவும் அவஸ்தையா இருக்கோ?” என்று கேட்டாள்!
நானும் “ஆமாம்! ஏன் இப்படியெல்லாம்?”
என்று கேட்டேன், இதற்கு மேல் எனக்குக் கேட்கத்
தோன்றவில்லை.
“ம்ம்ம்! இந்த
அவஸ்தை உனக்கு மிஞ்சிப் போனா ஒரு மணி நேரம்தான். இதுக்கே இப்படி
நெளியறியே! என்னையும் என்னைப் போன்ற பெண்களையும் நீயும் உன்னைப்
போன்ற ஆண்களும் நினைச்சுப் பார்க்கிறீர்களா?” அணுகுண்டு கேள்வி
சீதாதேவியிடமிருந்து! நான் புரியாமல் விழிக்க, அவள் தொடர்ந்தாள்.
“கல்யாணமான என்னையே ஒருத்தன் அபகரிச்சுக்
கொண்டு போய் அசோகவனத்துல தீய எண்ணத்தோட வெச்சான். அதுக்கப்புறம்
அவனுக்குப் பாடம் புகட்ட என்னோட ஸ்ரீராமன் தன்னோட அம்புகளால போர்க்களத்துல
‘சீதா மேல இவனுக்கு இருக்கற ஆசை இவன் மனசு தவிர உடம்புல எங்கெல்லாம்
இருக்கோன்னு தேடிப் பிடிச்சு” அழிச்சு அதுக்கப்புறம் அவனோட உயிரையும்
அழிச்சார்.”
இதைக் கேட்டதும்
நான் ஒரு கேள்வியைக் கேட்க வாயெடுத்தேன், அவள்தான் இறைவியாயிற்றே!
நான் என்ன கேட்கப் போகிறேன் என்பதை அவளே கேள்வியாகக் கேட்டாள்.
“என்ன? நான்
மாருதி மூலமா அவருக்கு ஒரு சேதி சொன்னேன். ஒருவேளை அரக்கன் சொன்ன
கெடுவுக்குள்ள என்னை வந்து மீட்க முடியாம நான் செத்துட்டா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்
கூடாதுன்னு! அதைத்தானே கேட்கப் போறே?”
நான் மௌனமாகத்
தலையசைத்தேன்.
அவள் பதிலுரைத்தாள்:
“உங்க எல்லாருக்கும் தெரியும்,
நானும் அவரும் ஸ்ரீவிஷ்ணு மஹாலக்ஷ்மி அவதாரம்னு. நாங்க பாட்டுக்கு அங்கேயே வைகுந்தத்துல சௌகர்யமா இருந்திருக்கலாம்.
ஆனா எங்களுக்கும் கடமைகள் இருக்கே! எங்களோட பரிபாலனத்துல
இருக்கற நீங்க எப்போதெல்லாம் ஸநாதந தர்மத்திலிருந்து வழி மாறிப் போறேளோ, அப்பல்லாம் அவரும் தேவைப்பட்டா நானும் பூலோகத்துக்கு ஏதாவது ஒரு வடிவத்துல
வந்து உங்களையெல்லாம் திருத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கே! அவருக்கு ஸ்ரீராம அவதாரத்துக்கு முன்பெல்லாம் அதிகமா மெனக்கெட வேண்டிய அவசியம்
இல்லாதிருந்தது. ஆனா எப்போ நீங்க ஸநாதந தர்மத்திலிருந்து நழுவி,
பருவத்தே பயிர் செய் அப்படிங்கற விஷயத்திலிருந்து விலகி கல்யாணத்துக்கு
முன்னாடியே பருவக் கோளாறு காரணமா காதல்ங்கற பேர்ல பெண்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சீங்களோ,
அப்பவே நாங்க முடிவு பண்ணினோம். மனித வடிவத்துலேயே
வந்து மனிதர்கள் போலவே வாழ்ந்து, அவர்கள் அனுபவிக்கும் எல்லாத்
துன்பங்களையும் நாங்களும் அனுபவித்து, அதன் மூலமா உங்களுக்கெல்லாம்
பாடம் சொல்லணும்னு நினைச்சோம், வந்தோம், வாழ்ந்தோம்.”
“இப்போ நீ கேட்ட கேள்விக்கு வரேன்.
நான் மாருதி மூலமா அந்த சேதியை சொன்னப்போ நான் ஸ்ரீராமனின் மனைவியா பேசலை.
ஜனகனின் மகள் ஜானகியா பேசினேன். ஏன் தெரியுமா?
ஸ்ரீராமனின் மனைவியா பேசியிருந்தா எனக்கு என் கணவனைப் பற்றி நன்றாகத்
தெரியும். என்னைத் தவிர வேற எந்தப் பெண்ணுக்கும் அவர் மனசுல இடம்
கிடையாதுன்னு! அப்படியிருக்கும்போது அவருக்கு நான் இப்படிச் சொல்லியிருப்பேன்:
“நீங்க ஆரம்பத்துலயே சொன்னீங்க, அது மாய மான்!
அது உனக்கு வேண்டாம்னு. ஆனா நான்தான் உங்க பேச்சைக்
கேட்காம பிடிவாதமா இருந்தேன். தவ வாழ்க்கை வாழணும்னு காட்டுக்கு
வந்தவளுக்கு ஆசை இருந்திருக்கக் கூடாது! தப்பு பண்ணிட்டேன்.
நீங்களும் என்னோட ஆசையை நிறைவேத்தறேன்னு கிளம்பிப் போயிட்டீங்க.
அந்த மாயாவி மாரீசன் சாகும்போது கூட தன்னுடைய கயமைத்தனத்தை விடாம உங்க
குரல்ல ஓலம் எழுப்பினதும் லக்ஷ்மணனைப் போய்ப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தினேன்.
அவன் போக மறுத்தப்போ அவன் மேல அநியாயமா தீயசொற்கள் சொல்லி அவனையும் அங்கிருந்து
விரட்டினேன். இது என்னோட ரெண்டாவது தப்பு. இந்த ரெண்டுக்கும் தண்டனையா இப்போ இங்கே துன்பம் அனுபவிச்சிட்டேன்.
என்னோட தவறுகளை மன்னிச்சு, என்னை மீட்டுண்டு போக
சீக்கிரம் வாங்கோன்னு சொல்லியிருப்பேன். ஆனா நாங்க என்ன உங்களை
மாதிரி பத்தோட பதினொண்ணா பொறந்து வாழ்ந்துட்டுப் போகவா இங்க வந்தோம்? ஆண்களாகிய நீங்களெல்லாம் உணரணும். நீங்களும் ஒருகாலத்துல
ஒரு பெண்ணுக்கு தகப்பனா வருவீங்க, அப்போ உங்க பெண்ணைப் பிற ஆண்கள்
தீய எண்ணத்தோட பார்த்தா ஒரு தகப்பனா ஒரு ஆணோட மனசு எப்படித் துடிக்கும்னு உங்களுக்கெல்லாம்
புரியணும். அதனாலதான் அந்த நேரத்துல நான் ஜனகன் மகள் ஜானகியா
பேசினேன்.
எங்களோட வாழ்க்கையைப்
பார்த்தபிறகும் இப்பவும் ஆண்களாகிய நீங்களெல்லாம் ஏன் பிஞ்சிலேயே வெம்பிப் போகிறீர்கள்? பூலோகத்துல ஸநாதந தர்மம் நிலைச்சிருக்கணும்னா நீங்களெல்லாம் நல்ல குடும்பமா
இருக்கணும். அப்படி இருக்கணும்னா எந்தச் செயலை எந்தப் பருவத்தில்
செய்யணுமோ அப்பதான் செய்யணும். விளையாட்டுப் பருவத்துல விளையாடணும்;
படிக்க வேண்டிய வயசுல படிக்கணும்; வேலைக்குப் போக
வேண்டிய வேலைக்கு போய் வாழ்வாதாரத்துக்கு சம்பாதிக்கணும். வீட்டுல
இருக்கற பெரியவங்க கல்யாணம் செஞ்சு வெக்கறது வெறுமனே ஒரு பெண்ணை ஒரு ஆணோட சேர்க்கற
காரியம் மட்டுமில்லை. இரண்டு நல்ல குடும்பங்கள் அந்தக் கல்யாணம்
மூலமா ஒண்ணு சேரணும். தன்னோடது போலவே ஒரு நல்ல குடும்பத்தைக்
கண்டுபிடிக்கணும்னா அதுக்குன்னு ஒரு வேளை வரும். அதுவரை ஆண்கள்
மனக்கட்டுப்பாடோட இருக்கணும்.
இந்த நேரம்
மீண்டும் நான் ஏதோ கேட்க வாயெடுத்தேன், மறுபடியும் நான் என்ன
கேட்கப் போகிறேன் என்பதை அவளே கேள்வியாகக் கேட்டாள்.
“என்ன? பொண்ணுங்க
நீங்க எப்படின்னுதானே?” மீண்டும் நான் மௌனமாகத் தலையசைத்தேன்!
வேறு வழி?
சீதாதேவி தொடர்ந்தாள்: “பெண்களாகிய எங்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. எங்களைப்
பொறுத்தமட்டில் நாங்களும் பிறந்த வீட்டில் எந்தவிதமான கவலையுமின்றி சந்தோஷமா இருந்தமாதிரி
எங்களுக்கும் ஒரு நல்ல குடும்பம் புகுந்தவீடா கிடைப்பதற்காக நாங்களும் காத்துக் கொண்டுதான்
இருக்கோம்”.
சீதோபதேசம்
என்னுடைய மனசுக்குள் எனக்கு நடந்து கொண்டிருந்த வேளை, சட்டென்று என் முன்னால் வைக்கப்பட்ட பஜ்ஜி சொஜ்ஜி மணம் சீதாதேவியின் உரையை
தற்காலிகமாக நிறுத்தியது.
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment