ஒரு ஆத்மாவின்
பயணம்
பாகம்-32
ஆத்மாராமுடன்
பயணிப்பவர்களுள் ஒருவர் அவனுடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார். அதன் விவரம்:
“என்ன, விஷ்வா!
ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து! என்னாச்சு உனக்கு?
எப்படி இருக்கே?”
“ம்ம்ம்! நான்
நல்லாத்தான் இருக்கேன். என்ன விஷயம், என்னைப்
பார்க்க வந்திருக்கீங்க?”
“என்னோட ஃப்ரெண்ட்ஸெல்லாம் விசாரிச்சாங்க,
உன்னை ரொம்ப நாளா காணுமேன்னு! அதான் நானே உன்னைப்
பார்க்க வந்தேன். கடைசியா உன்னைப் பார்த்தப்போ மனுஷாளோட ரெண்டாவது
குழந்தைப் பருவம் பத்தி சொன்னே, அதுக்கப்புறம் என்னவெல்லாம் நடந்ததுன்னு
அவங்களுக்குத் தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்காங்க. ஏதானும் புதுசா
விஷயம் இருக்கா?”
“ம்ம்ம்? புதுசாவா?”
என்றவாறே கண்களை மூடி சிந்தனையில் ஆத்மாராம் மூழ்கிவிட அவனைச் சந்தித்தவரோடு
நாமும் சிறிது பின்னோக்கிச் சென்று இது வரை நாம் கேட்டவற்றை சற்றே அசை போட்டுப் பார்ப்போம்.
ஆத்மாராம் என்னும்
ஒரு ஜீவன் தான் கருவில் உருவான நாளில் தான் எங்கே இருக்கிறோம் என்ற கேள்வியுடன் தனது
பயணத்தைத் தொடங்கியது.
அன்றிலிருந்து அதன் மனதில் மூன்று கேள்விகள் உள்ளன. அவை, நான் யார்? எப்படி இங்கே வந்தேன்?
இதற்கு முன் எங்கே இருந்தேன்? இந்த மூன்று கேள்விகளுடன்
தான் பெற்று வந்த அனுபவங்களிலிருந்து எழுந்த மேலும் சில கேள்விகளுடன் அது நம்முடன்
பயணித்து வந்தது. கூடவே அது தன்னுடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து
வந்தது. தன்னுடைய குழந்தைப் பருவ அனுபவம், பள்ளி அனுபவம், வாலிபம் துளிர்விட்ட அனுபவம்,
அந்த வாலிபத்தில் தான் பெற்ற முதிர்ச்சி மற்றும் அது குறித்த தன்னுடைய
பார்வை, திருமணம், திருமணத்திற்குப் பிந்தைய
வாழ்க்கை, அவ்வாழ்க்கையில் தான் பெற்ற இரு குழந்தைகள் மற்றும்
அக்குழந்தைகள் மூலம் தான் அடைந்த உணர்வுகள், கூடவே தன்னுடைய குழந்தைகளின்
அந்தப் பருவத்தையொட்டியே இருக்கும் தனது வயது முதிர்ந்த பெற்றோர்கள் பற்றிய செய்திகள்,
இவ்விரண்டு நிலைகளிலுள்ள மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளையொட்டி
தனது மனதுக்குள் மனித வாழ்க்கை மற்றும் மரங்களின் வாழ்க்கை பற்றிய ஒப்பீடு வரை ஆத்மாராம்
சொல்லக் கேட்டு விட்டோம். இனி அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதைக்
கேட்க வேண்டும்.
இந்த சமயத்தில்
அவன் தன்னுடைய குழந்தைகள் தனது மனைவியுடன் நிகழ்த்திய உரையாடல், அது குறித்து அவனும் அவன் மனைவி பூமாவும் செய்த விவாதம் இவற்றைப் பற்றி சொல்ல
ஆரம்பித்தான்.
“என்னோட பையன் சுதர்சனும் பொண்ணு வித்யாவும்
பூமாகிட்ட பேசிக்கிட்டிருந்தாங்க. அவர்கள் உரையாடலில் எங்கள்
தெருவில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு அப்போதுதான் பிறந்த குழந்தை பற்றி பேசிக் கொண்டிருந்தபோது
பொண்ணு கேட்டா, “அம்மா, அந்த அக்காவுக்கு
புதுசா ஒரு பாப்பா வந்திருக்கே!”
“ஆமாம், அதுக்கென்ன
இப்போ?”
“இத்தனை நாளா அந்தப் பாப்பா எங்க இருந்தது?”
“அந்த அக்காவோட வயித்துக்குள்ள இருந்தது”
உடனே வித்யா
தன்னுடைய அம்மாவின் வயிற்றைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “இங்கதான் நான் இருந்தேன்னு சொல்லுவியே, அது மாதிரியா?”
“ஆமாண்டா கண்ணு! அது மாதிரிதான்!”
“ஓ! அப்படின்னா
அந்தப் பாப்பா, நான், அண்ணா எல்லாரும் இதுக்கு
முன்னாடி எங்க இருந்தோம்?”
இதற்கு விடையிருந்தும்
வெளியில் சொல்லமுடியாத நிலை பூமாவுக்கு! சொல்லலாம், ஆனால் அந்த விடையைப் புரிந்துகொள்ளுமளவுக்கு அந்தக் குழந்தைகளுக்கு இப்போது
வயதுமில்லை, அறிவு பக்குவமுமில்லை! என்ன
செய்வது?
“நானும் அப்பாவும் சாமிகிட்ட வேண்டிகிட்டோம்.
அவரும் ஒருநாள் தன் கிட்ட இருந்த உன்னை என்னோட வயித்துக்குள்ள வெச்சுட்டார்!
அப்புறமா நீ எங்களுக்குப் பொறந்தே! அதுமாதிரிதான்
அந்த அக்காவும் வேண்டிகிட்டா, சாமியும் அவளுக்குப் புடிச்சமாதிரி
ஒரு பாப்பாவை அக்காவுக்குக் கொடுத்திருக்கார்!”
“அப்படின்னா, அதுக்கு முன்னாடி நாங்கல்லாம் சாமிகிட்டதான் இருந்தோமா?”
“ஆமாண்டா கண்ணு!”
“அப்படின்னா நாங்க என்ன செய்யப் போறோம்?
எதுக்காக உங்ககிட்ட எங்களை சாமி குடுத்திருக்கார்?” – இது மகன்!
“நீங்க இப்படி எங்ககிட்ட பேசறதுக்கு,
நீங்க விளையாடறதுக்கு, நல்லா படிக்கறதுக்கு,
படிச்சு பெரிய ஆளா ஆகறதுக்கு இதுக்கெல்லாம்தான்!”
“இதெல்லாம் நாங்க எதுக்காக செய்யணும்?
பெரிய ஆளா ஆகி என்ன பண்ணப் போறோம்?” – அடுத்த கேள்வி
மகனிடமிருந்து!
“அதெல்லாம் இப்ப உன்னோட அப்பா வேலைக்குப்
போற அளவுக்கு நீங்கல்லாம் வளர்ந்தவாட்டி புரியும்! இப்ப ரெண்டு
பேரும் போய் விளையாடுங்க!”
ஒருவாறாக பிள்ளைகள்
இருவரையும் சமாளித்து அனுப்பிய பூமா, ஒரு குறுஞ்சிரிப்புடன்
என்னருகில் வந்தாள். அவர்களுக்கிடையே நடந்த உரையாடலை ரசித்தவாறு
அமர்ந்திருந்த நான் அவளைப் பார்த்துக் கேட்டேன், “பரவாயில்லையே!
உன் பசங்களை ஒருவழியா சமாளிச்சுட்டே போலிருக்கே?”
“ஆமாம், பதில்
சொல்லி சமாளிக்கறதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுத்து! அச்சு
அசலா அப்பனை அப்படியே உரிச்சு வெச்சிருக்குங்க!”
“நீதானே கேட்டே, என்னை மாதிரியே வேணும்னு?”
“அதுக்காக? இப்படியா!
சே! நீங்க ரொம்ப மோசம்! இம்மி
குறையாம அப்படியே குடுத்துட்டேள்!”
இதற்கு எனக்கு
பதிலேதும் சொல்லத் தோன்றவில்லை. மாறாக ஒரு புன்னகை மட்டுமே அவளைப்
பார்த்து!
“இந்த சிரிப்புக்கெல்லாம் ஒண்ணும்
குறைச்சலில்லை! இப்படி சிரிச்சே என்னை மயக்கிட்டீங்க!
உங்கள மாதிரியே ரெண்டை எங்கைல குடுத்துட்டீங்க, இப்ப நாந்தான் கெடந்து அல்லாடறேன்!”
“இதப் பாரு, கொஞ்சம் யோசிச்சுப்பாரு! நம்ம பசங்க கேட்டது ஒண்ணும்
புதுசில்ல! நீயும் நானும் நம்ம அப்பா அம்மாவ ஒருகாலத்துல கேட்ட்டிருப்போம்.
அவங்களும் இப்ப நீ சமாளிச்ச மாதிரிதான் ஏதாவது சொல்லி சமாளிச்சிருப்பாங்க!
இப்ப நமக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருக்கறதால எதெது எப்படிங்கறதெல்லாம்
நன்னா புரியறது. நம்ம புள்ளைங்களுக்கும் ஸைன்ஸ் புரியற காலம்
வரும். அதுவரைக்கும் நாம் அவங்க போக்குலதான் போயாகணும்.”
“சரிசரி, உங்களோட
பேசிண்டிருந்தா எனக்கு வேலையாகாது, நான் போய் என் வேலையைப் பாக்கறேன்.
இதோ, ஆத்துக்கு வேண்டிய மளிகை லிஸ்ட் போட்டிருக்கேன்.
போய் வாங்கிண்டு வந்துடுங்கோ! வந்தாதான் உங்களுக்கு
சாயந்திரம் காபி!”
“அப்ப வாங்கிண்டு வரலைன்னா காபி தர
மாட்டியா?”
“சொன்னா புரிஞ்சுக்கோங்கோ!
தீர்ந்து போச்சுன்னு என் வாயால சொல்ல வெக்காதீங்க! அப்படியே அப்பா அம்மாவுக்கு மாசாந்திர மருந்து மாத்திரையும் வாங்கிண்டு வர
மறந்துடாதீங்க!”
சரியென்று கிளம்பியவனிடம்
மீண்டும் அவளிடமிருந்து ஒரு நினைவூட்டல், “இன்னிக்கு தேதி அஞ்சாயிடுத்து,
அப்படியே பேங்க்குக்கு போய் மாசாந்திர ஆர்டியும் கட்டிட்டு வந்துடுங்கோ!
அதுக்காக ஒருநடை போக வேண்டாம்!”
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment