Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-30

கடைசியா உங்க எல்லாரையும் பார்த்தபோது முதன்முறையாக மனக்கூடல் என்பது பற்றி சொன்னேன். அது எங்களைப் பொறுத்தவரை நல்லவிதமாகவே நடந்து முடிந்தது. அன்றைய முதல் நாளிரவில் பரஸ்பரம் எங்களைப் பற்றியும் அவரவர் குடும்பம் பற்றியும் அளவளாவி, உடல் அசதியில் உறக்கம் தழுவியது.

இப்போது நான் இந்தமுதன்முறையாகஎன்பது பற்றி சொல்ல வேண்டும். எனக்கு அந்த இருட்டறை என்னும் தாயின் கருவறையில் முதன்முதலாக நான் அங்கிருப்பதை உணர்ந்தது, வெளியேறியது, அம்மாவின் முதல் கைதீண்டல், முதன்முறையாக நான் என்னைச் சுற்றியுள்ளவற்றை, உள்ளவர்களைப் புரிந்து கொண்டது; முதன்முறையாக பேச ஆரம்பித்தது; முதல் விளையாட்டு; முதன்முறையாகக் கேட்ட கதை; முதன்முறையாகப் பள்ளிக்குச் சென்றது; முதன்முறை கல்லூரிப் பருவம்; வாலிபம் துளிர்விட்டபோது முதன்முறையாக மனதில் தோன்றியகாதல்என்று நினைத்த அந்த இனக்கவர்ச்சி; முதன்முறையாக வேலைக்குச் சென்ற தினம்; திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக ஒரு இளம்பெண்ணின் தீண்டல் இப்படி முதன்முறையாக வாழ்வில் நிகழ்ந்தவை அனைத்துமே பசுமையானவை; இனிமையானவை!

ஆனால், இந்த முதன்முறைகளில் பல விஷயங்கள் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே நிகழக் கூடியவை. அவை வாழ்வில் மீண்டுமொரு முறை நிகழாது. அப்படிப்பட்ட தருணங்கள் வாய்க்கும்போது அவற்றை நாம் முழு ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் அனுபவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அவற்றைத் தவறவிடக் கூடாது.

இந்த ஒரே முறை அதாவது, ஒன்று என்ற எண்ணுக்கென்று தனிச்சிறப்பு உள்ளது. ஒன்று என்று சொல்லி விட்டால், அது ஒன்று மட்டுமே. அதற்கு மாற்றோ, உவமையோ கிடையாது. பரமாத்மா ஒன்றுதான். பெற்றோர் ஒன்றுதான். இந்தப் பிறவியில் பிறப்பு ஒரு முறைதான். மீண்டும் அதே தாயின் வயிற்றிலிருந்து இதே பிறவியில் மீண்டுமொரு முறை பிறக்க முடியாது! நமக்கு இப்பிறவியில் கிடைத்திருக்கும் வாழ்க்கை ஒன்றுதான்.  நாம் வாழும் பூமி ஒன்றுதான். அதற்கு நிலவு ஒன்றுதான். இவ்விரண்டிற்கும் ஒளி தரும் சூரியன் ஒன்றுதான். இவ்வளவு மகத்துவம் வாய்ந்த ஒன்று என்ற தேதியில் பிறப்பவர்கள் பாக்யம் செய்தவர்கள்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வாழ்க்கையில் ஒரேமுறை என்பதில் திருமணமும் ஒன்று என்றே நான் கருதுகிறேன். அதற்குப் பின் ஷஷ்டியப்த பூர்த்தி, பீஷ்மரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் இவையெல்லாம் வாழ்வில் ஒரே ஒருமுறை மட்டுமே நிகழும். கனகாபிஷேகம் வரை இருந்து பார்க்கக் கூடியவர்கள் மிகவும் பாக்யசாலிகள். எனக்கு எப்படி அமையப் போகிறது என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எங்கள் வாழ்க்கையில் பல நாட்கள் இனிமையாய் கழிந்ததன் விளைவாக, நாங்களும் எங்களுடைய முதல் ஆண் மகவை எங்கள் கரங்களில் ஏந்தினோம். முதன்முறையாக எனது குழந்தையை எனது கரத்தில் ஏந்தியபோது மனசுக்குள் விவரிக்கத் தெரியாத உணர்வு! அந்த நேரம் எனக்கு எனது தந்தையின் நினைவு வந்தது. அவரும் இதே மாதிரியான ஒரு உணர்வைத்தானே அனுபவித்திருப்பார்! எனக்கென்னவோ, முன்பின் பார்த்திராத, கண்ணுக்கும் உணர்வுக்கும் தெரியாத சொர்க்கம் என் கைகளில் தவழ்வது போல இருந்தது. முதலில் என் வாழ்வில் மனைவி வந்தாள்; அவள் மூலம் எங்களுடைய உயிர்க்கலவை எங்கள் கரங்களில் வந்தது.

அவ்வாறு வந்தவுடன், முதன்முறையாக எனது மனம் அறிவுக்குக் கட்டளையிட்டது, “ஆத்மா! உனக்கு முன்னால் நிறைய நல்ல கடமைகள் உள்ளன! அவற்றை சரியாக நிறைவேற்ற நீ உன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்!” என்று!

ஆத்மாவின் பயணம் தொடரும்!

No comments:

Post a Comment