ஒரு ஆத்மாவின்
பயணம்
பாகம்-26
சிற்றுண்டி
உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது. வைத்ததற்காக கொஞ்சமாக எடுத்துக்
கொண்டுவிட்டு, மீதியை நைஸாக வலதுபக்கம் உட்கார்ந்திருந்த ராமன்
மாமாவிடம் தள்ளிவிட்டுவிட்டேன். பெண் வீட்டில் பரபரப்பாக,
“மாப்பிள்ளைக்கு இன்னும் கொஞ்சம் வைங்க” என்று
ஆளாளுக்கு சொல்ல, சிலர் முண்டியடித்து வர, அதை அப்படியே வலப்பக்கம் தள்ளிவிட்டேன்! அப்படியே அவரோட
காதுல கிசுகிசுப்பா, “மாமா! இப்ப த்ருப்தியா?”
என்று கேட்டேன், மாமா பதில் சொல்லாம கண்களால் அத்தையைத்
தேடினார்! புரிந்துகொண்டேன்! நல்லவேளை!
அந்த நேரம் அத்தை பெண்வீட்டு மாமிகளுடன் மும்முரமாக ஏதோ அரட்டையடித்துக்
கொண்டிருந்ததால் மாமாவை கவனிக்கவில்லை!
இவை முடிந்ததும்
பொதுவாக ஒருவர்
“ம்ம்! பொண்ணை வரச்சொல்லுங்கோ” என்று கூற, ஒரு சாராரிடம் ஒருவித பரபரப்பு அனைவருடைய
முகத்திலும் தெரிந்தது. நான் மிகவும் கஷ்டப்பட்டு முகத்தை இயல்பாக
வைத்துக் கொண்டிருந்தேன். அவளும் வந்து வீட்டுப் பெரியவர்களுக்கு
நமஸ்கரித்து நிமிர, பெண் வீட்டில் யாரோ ஒரு பெண்மணி “மாப்பிள்ளைக்கும் பண்ணும்மா!” என்று கூற, நான் சட்டென்று வேண்டாம்! என்று மறுத்துவிட்டேன்.
இதுவரைக்கும் எனக்கு பெண் பெயர் தெரியவில்லை!
வழக்கமா எல்லா
பெண் பார்க்கும் நிகழ்ச்சியிலும் கேட்கப்படும் கேள்வி! “பொண்ணு பாடுவாளோ?” இதைக் கேட்டதும் அவள் முகத்தில் மிக
மெலிதான கலவரம்! அதை கவனித்துவிட்ட நான், “பாடறது, ஆடறது இதெல்லாம் வேணாம்! பொண்ணுக்கு என்னைப் பிடிச்சிருந்தா நான் என்ன, ஊரூரா
கூட்டிண்டு போய் கச்சேரியா பண்ணப் போறேன்? இல்லை நீங்கதான் வந்து
பொழுதன்னிக்கும் கேட்டுண்டிருக்கப் போறேளா?” என்று சட்டென்று
கேட்கவும், அனைவருடைய முகத்திலும் மலைப்பு! அவள் முகத்தில் மட்டும் மிக மெலிதான நிம்மதியுடன் கூடிய நன்றியுணர்வு!
கேள்வி கேட்டவர், “அதில்லடா, வந்து…” என்று ஆரம்பிக்க, நான்
உடனே கையமர்த்தி, “பொண்ணு ஊமையாவே இருந்தாலும் எனக்குக் கவலையில்லை,
பாடு, ஆடுங்கறதெல்லாம் வேண்டாம்!” என்றேன். சூழலை லேசாக்கும் பொருட்டு, என்னுடைய பக்கத்திலிருந்து என்னோட ஒண்ணுவிட்ட அண்ணா (சிறுவயது முதலே அவருடன் ஒண்ணா விளையாடிய பழக்கம், இந்த
நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு கடைசி நேரத்தில் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார்,
அதுவும் ராமன் மாமா, சுந்தர் அண்ணாவுக்குப் பிறகு)
“நான் கடைசி நேரத்துல கேள்விப்பட்டு வந்ததால பொண்ணு பேரு தெரியலை,
பொண்ணு பேரையாவது சொல்லச் சொல்லுங்கோ” என்றார்.
இது எனக்குப் பிடிச்சிருந்தது! அவள் தன்னுடைய பேரைச்
சொல்ல வாயெடுக்குமுன் அவர்கள் தரப்பு பெண்மணி ஒருத்தி, “பேரு
விஷ்வாம்பரா! பூமான்னு கூப்பிடுவோம்!” என்று
சொல்ல, எனக்கு சட்டென்று ராமன் மாமா கோவிலில் வைத்து பெண் பார்த்த
நிகழ்ச்சியை விவரித்தது நினைவு வந்தது. சிரிப்பும் வந்தது.
உடனே அவருடைய காதில் “மாமா! என்னவோ சொன்னேள், வீட்டுக்குப் போய் பாக்கறதுதான் ஸ்லாக்யம்னு!”
அண்ணா பேர் கேட்டதுக்கு பொண்ணு பதில் சொல்லாம, யாரோ ஒரு மாமி பதில் சொல்றா? இப்ப நாம பாக்க வந்தது அந்தப்
பொண்ணையா இல்லை அந்த மாமியையா?” என்று கேட்டேன். மாமா, “அதானே!” என்றவர்,
அவர்களிடம் “என்ன மாமி இது? பொண்ணு குரலைக் கேக்கறதுக்காக கேட்டோம், நீங்க பதில்
சொல்றேளே! பாருங்க, எம் மாப்ள குழம்பிட்டான்!”
என்று பூடகமாக ஜோக் அடிக்க, சட்டென்று அங்கே ஒரு
இயல்பு நிலவியது. அவளும் அதே பெயரைத் தன்னுடைய குரலில் கூறினாள்.
எனக்கும் பிடித்திருந்தது, குரலை மட்டுமல்ல,
அவளையும்! எல்லோரும் ஒருவருக்கொருவர் “அடடே! ஆத்மா-பூமா, விஸ்வஜித்-விஸ்வாம்பரா! பொருத்தமா
இருக்கே!” என்றனர். என்னுடைய மனசுக்குள்ளும்
அந்த ஒப்பீடு ஓடியது. விஸ்வம்பரா! விஸ்வம்
என்றால் உலகம்; அம்பரம் என்றால் உடை. கல்யாணத்துக்குப்
பிறகு நான்தான் அவள் உலகம் என்றிருப்பவள் எனக்கு உடை! பரவாயில்லையே!
பெயர் பொருத்தம் நல்லாதானிருக்கு. இனி மனப்பொருத்தம்
இருந்தால் வாழ்க்கையும் நல்லா இருக்கும்! என்று எண்ணங்கள் ஓடிக்
கொண்டிருந்தது.
என் பக்கம்
ஆளாளுக்கு
“ஆத்மா, விஸ்வா” என்றெல்லாம்
கூப்பிட்டு, பொண்ணை நன்னா பாத்துண்டியா? புடிச்சிருக்கா? என்று கேட்க, நான்
“முதல்ல பொண்ணுக்கு புடிச்சிருக்கான்னு தெரியட்டும்” என்றேன். அவளுக்கு என்னைப் பிடித்திருப்பது அவள் கண்களில்
தெரிந்தாலும், அவள் மூலமா எனக்குத் தெரியணுமே! அவளும் தலையசைக்க, நானும் என்பக்கத்து மனுஷாளுக்கு கண்ணைக் காட்டினேன்.
அப்புறம் என்ன? மேற்கொண்டு பேச வேண்டியதைப் பேசிடலாமே? என்று அத்தை,
மாமா எல்லாரும் கேட்க, மீண்டுமொருமுறை பெண்தரப்பு
முகங்களில் ஒரு கவலை தோய்ந்த பரபரப்பு! வழக்கமான எல்லா பெண்வீட்டாரின்
கவலை! அவர்களின் மனதைப் படித்துவிட்ட நான் இடதுபக்கம் திரும்பி
அம்மாவிடம் “வரதட்சணை, அது இதுன்னு எதுவும்
கேக்காதே! நம்மை நம்பி வரவளைக் காப்பாத்த சக்தியிருந்தா கல்யாணம்
பண்ணிக்கணும். பொண்ணு வீட்டுல வரதை நம்பி வாழ்க்கைய ஓட்டக் கூடாது,
புரிஞ்சிக்கோ!” என்றேன். அம்மாவும் அப்பாவிடம் கிசுகிசுப்பாகப் பேசிவிட்டு, வெளிப்படையாக
அறிவிப்பு செய்தாள், “வரதட்சணை அது இதுன்னெல்லாம் நாங்க கேக்கப்
போறதில்லை. உங்க சக்திக்கு என்ன முடியுமோ, நீங்க என்ன தீர்மானம் பண்ணிருக்கேளோ, அதைப் பண்ணினா போறும்!
ஒண்ணே ஒண்ணு மட்டும் எங்க கோரிக்கை, வரவா வயிறார
சாப்டுட்டு, வாயார, மனசார வாழ்த்தணும்!
அது மட்டும் போறும்!”
இதைக் கேட்டதும்
பெண்வீட்டாரின் முகங்களில் நிம்மதி கலந்த திகைப்பு! இருதரப்பும்
கசகசவென்று பேசிக் கொண்டிருந்தனர். எனது மனம் அவற்றில் செல்லவில்லை.
மெல்ல வீட்டின் மேற்கூரையைப் பார்க்க, அங்கிருந்து
சீதாதேவி மீண்டும் எட்டிப் பார்த்தாள்! மீண்டும் அவளுடன் என்னுடைய
மனக்கண்ணில் சம்பாஷணை ஓடியது.
“என்ன, உனக்கு
பொண்ணைப் புடிச்சிருக்கா?”
“ம்ம்ம்!” என்ற
தலையசைப்பு என்னிடமிருந்து. “தாயே! நீ சொல்றபடி
கேட்டுண்டிருக்கேன், நீதான் என்னை வழிநடத்தணும்” என்றேன்.
“தோ பாருடா! ஏதோ நான்தான் அவதார நோக்கமா அவரோட ஒட்டுப்பில்லாட்டமா ஒட்டிண்டு கானகம் போனேன்.
ஆனா என்னோட தங்கை ஊர்மிளாதான் பாவம்! லக்ஷ்மணனை
விட்டு 14 வருஷம் தனியா கஷ்டப்பட்டா! என்
தங்கை நிலைமை உன்னவளுக்கு வரக் கூடாது! எந்த நிலையிலும் அவளை
தனியாவும் விடப்படாது, யார் முன்னிலையிலும் அவளை விட்டுக் கொடுக்கக்
கூடாது! ஏன் தெரியுமோ? அவ உன்னை நம்பி வரா!”
“அம்மா! நீ சொல்றது
எனக்கு நன்னா புரியறது! அப்படியே பண்றேன்!”
“சரி சரி, இப்ப
கிளம்பறேன், உன்னோட கல்யாணத்துக்கு அவரோட வரேன்!” மனக்கண்ணிலிருந்து சீதாதேவி விடைபெற்ற அதே நேரம் இங்கே பேச்சு வார்த்தை முடிவடைந்திருந்தது.
கல்யாணத் தேதியை நல்ல முகூர்த்தம் பார்த்து நிச்சயதார்த்தம் அன்று முடிவு
பண்ணிக்கலாம் என்று இருதரப்பும் முடிவு செய்திருந்தனர்.
எல்லோரும் கிளம்பினோம். போகிற போக்கில் அவளுடைய தலை எங்காவது தென்படுகிறதா என்று யாரும் அறியாதவாறு
கண்களால் துழாவினேன். எதிர்பார்த்த மாதிரியே ஒரு அறையின் கதவுக்குப்
பின்னாலிருந்து அவள் முகம்! “போயிட்டு வரேன்” என்ற பாவனையாக ஒரு சிறிய தலையசைப்பு என்னிடமிருந்து. அதே மாதிரி அவளிடமிருந்தும்!
ஆத்மாவின் பயணம் தொடரும்!
No comments:
Post a Comment