Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-7

நான் எனக்கு முன்னால் போட்டிருந்ததை எல்லாம் நகர்ந்து போய் எடுக்கறேன். அதுல ஏதாச்சும் எனக்குப் பிடிச்சிருந்தா, அதை வாய்ல வெச்சுக்கறேன். எனக்குப் புடிச்சதுல ஏதாவது உடனே கிடைக்கலைன்னா, அது எங்க இருக்குன்னு என்னால பார்த்து எடுக்க முடியுது! நான் அப்படி எடுக்கறதைப் பார்த்துட்டு மத்தவங்க, “அப்பா! எங்க ஒளிச்சு வெச்சாலும் எப்படியாவது போய் எடுத்துடறான்!” அப்படின்னு பேசிக்கிட்டாங்க. இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு!

அதுவுமில்லாம, இந்த அப்பா வெளிச்சம் வந்த கொஞ்ச நேரத்துல எங்கிட்ட இல்லாம எங்கேயோ போயிடறா! அது மாதிரியே அம்மாவும் சில சமயம் போயிடறா. அப்பல்லாம் என்னைச் சுத்தி மத்தவங்க இருந்தாலும் நான் தனியா இருக்கற மாதிரி இருக்கும். அதனால எனக்கு அந்த அச்ச உணர்வு வரும். உடனே நான்ன்னு சப்தம் போட ஆரம்பிச்சிடுவேன். இப்படி சத்தம் போடறதை அழறதுன்னு மத்தவங்க பேசறதிலிருந்து புரிஞ்சுகிட்டேன்.

இப்படி அவங்க ரெண்டு பேரும் போயிடறதால நான் அவங்களை கூப்பிட நினைப்பேன். அதற்கு முயற்சியும் செய்வேன். ஆனா, என்னாலதான் மத்தவங்க மாதிரி பேச முடியலையே! இருந்தாலும் நான் என்னுடைய முயற்சியை தொடர்ந்து செஞ்சுகிட்டே இருந்தேன். அப்படி முயற்சி செய்யறதுக்கு முன்னால, அவங்க வாயையே பார்த்துக்கிட்டிருப்பேன். அவங்க எப்படி பேசறாங்க அப்படின்னு பார்த்துக்கிட்டே இருப்பதால, என்னாலும் அவங்க மாதிரி பேச முயற்சி செய்ய முடிஞ்சது.

அப்பதான் ஒரு தடவை வெளிச்சம் வந்தபோது அப்பாவும் அம்மாவும் எங்கிட்டஅப்பா பாரு, அம்மா பாருஎன்று வழக்கமாக  சொல்வதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு இந்த அப்பா, அம்மா இந்த ரெண்டும் நல்லா நினைவு இருந்ததால, அவங்க சொல்ற மாதிரி சொல்ல முயற்சி செய்யும்போது, திடீர்னு எனக்கும்ம், ம்ம்ம், ம்ம்ம்மாஆ என்று சொல்ல முடிந்தது! அது மாதிரியேப்ப், ப்ப்ப், ப்ப்ப்பாஆஆஎன்றும் சொல்ல முடிந்தது! அதை அப்படியே புடிச்சுக்கிட்டேன். அதை நிறைய தடவை அப்படி சொல்ல முடிஞ்சது! உடனே ரெண்டு பேருக்கும் ஒரே மகிழ்ச்சி! அம்மா, “அம்மா! குழந்தை அம்மா சொல்றான்! அப்பா சொல்றான்!” என்று எல்லாரையும் கூப்பிட்டு காட்ட, அவர்களும் ஆசையாக வந்து பார்க்க, அவர்கள் இருக்கும்போது என்னிடம் மறுபடியும்அம்மா சொல்லு, அப்பா சொல்லுஅப்படின்னு கேட்க, நானும் எனக்குத் தெரிந்த மாதிரி சொல்ல, சுற்றியிருந்தவர்கள் எல்லாரும் அடடே, அடடே! அப்படின்னாங்க! அவங்கள்ள ஒரு உருவம் பார்க்க அம்மா மாதிரி இருந்தது. அட! இவங்களை நான் பார்த்திருக்கேன். அவங்களை அம்மா அடிக்கடிகுமுதா, குமுதாஅப்படிம்பாங்க. அவங்களும் கிட்டே வந்துஅத்தை சொல்லு, அத்தை சொல்லுஅப்படின்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நானும் அவங்க வாயையே பார்த்துக்கிட்டே இருந்தேன். அவங்க எப்படி சொல்றாங்கன்னு பார்த்துக்கிட்டே இருந்தேனா, அது மாதிரியே நானும் சொல்ல முயற்சி செஞ்சேன். அட! எனக்கு அதுவும் சொல்ல முடியுது! “த்த், த்த்த், த்த்த்த, த்த்த்த்தஅப்படின்னு சொல்ல, அவங்களுக்கும் மகிழ்ச்சி!

அவங்க பேசிக்கிட்டதிலிருந்து நானும் பேச ஆரம்பிச்சிட்டேன்னு புரிஞ்சுகிட்டேன். இது எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. என்னோட வழக்கமான விளையாட்டோட இதுவும் சேர்ந்துகிச்சு! அதனால, அவங்களைப் பார்த்தா, ம்ம்மா, ப்ப்ப்பா, த்த்த்த ன்னு சொல்வேன். அதைத் தவிர, இப்பல்லாம் என்னால் என்னோட கால்களால நிற்க முடியுது, நகர முடியுது. அப்படி நகரும்போது, பக்கத்தில் இருக்கறதை கையால புடிச்சுக்கிட்டே நகர்வேன்.

இப்படி சில நாள் போனது. ஒரு நாள் என்னைச் சுத்தி இருந்தவங்கல்லாம் மகிழ்ச்சியா இருந்தாங்க. அவங்க ஏன் அப்படி இருக்காங்க? அவங்க பேசறதை கவனிச்சப்பதான் தெரிஞ்சது, எனக்கு ஆண்டு நிறைவு வருதாம்! எனக்கு பெயர் வைக்கணும்னு பேசிக்கிட்டிருந்தாங்க. அட! மத்த எல்லாருக்கும் எல்லாத்துக்கும் பெயர் இருக்கற மாதிரி எனக்கும் பெயர்! இத்தனை நாளா என்னைக் காட்டி பேசும்போது குழந்தை, குழந்தைன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. நானும் எனக்குப் பெயர் குழந்தைன்னுதான் நினைச்சுக்கிட்டிருந்தேன். ஆனா, எனக்குள்ள புதுசா ஒரு கேள்வி இருந்தது. இந்த அம்மாவை அம்மான்னு மத்தவங்க சொல்லாம வேற ஏதோ சொல்றாங்க, அம்மாவும் அந்தப் பெயரைச் சொன்னவுடன் சட்டுன்னு திரும்பிப் பார்க்கறாங்க, இல்லைன்னா எழுந்து போறாங்க. அதே மாதிரிதான் அப்பாவும். அப்படின்னா, அவங்க பெயர் அம்மா, அப்பா இல்லையா? அதே மாதிரி எனக்கும் இந்த குழந்தைங்கற பெயர் இல்லையா? அப்படின்னா எனக்கு என்ன பெயர் வைப்பாங்க? என்ன பெயர் சொன்னா நானும் அம்மா அப்பா மாதிரி திரும்பிப் பார்க்கணும்? எனக்கு ஒண்ணுமே புரியலை!

அவங்க அப்படி பேசிக்கிட்டிருந்தபோது, என்னைப் பார்க்க இன்னொரு அத்தையும் அங்கே வந்தாங்க. மத்தவங்க பேசறது என்னன்னு அவங்களும் கேட்டபின்னாடி, அவங்க ஒரு பெயர் சொன்னாங்க. அம்மா, அப்பா, மத்த எல்லாரும்ஆஹா! நல்லாயிருக்கு! இந்தப் பெயரையே வைக்கலாம்னு சொன்னாங்க!

அந்த அத்தை சொன்ன பெயர் என்ன? அது சரி, எனக்கு பெயர் வெச்ச அந்த அத்தையோட பெயர் என்ன?




ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-6

என்னோட புது செயலுக்கு என்ன பெயர்னு கேட்டதுக்கு என்னைப் பார்க்க வந்த ரெண்டு மூணு பேர்நீஞ்சறதுன்னு சொன்னீங்க! இந்த நீஞ்சறதுங்கிறது எனக்கு இப்ப ரொம்பப் பிடிச்சிருக்கு! இருட்டுல இருந்தபோது சுத்தி வந்த மாதிரி ஒரு உணர்வு இப்ப இந்த நீஞ்சறதுலயும் இருக்கு! நான் இப்படி நீஞ்சறதைப் பார்த்துவிட்டு, என்னைச் சுற்றி இருப்பவர்களில் யாராவது ஒருவர் என் கூடவே இருக்காங்க. ஏன்னா, நான் நீஞ்சும்போது எனக்கு முன்னால எது இருக்கோ, அதை என்னோட கையால பிடிச்சு இழுத்து, வாயில் வைத்துக் கொள்வது என்பது என்னுடைய செயலாக இருந்தது.

என் கையில் கிடைப்பது சில பார்க்க ஒரு மாதிரி இருந்தாலும் ஏதோ வேற வேற மாதிரி இருந்தன. கொஞ்ச நாள் கழிச்சு அந்த வேறுபாடு என்பது வண்ணம் என்று புரிந்தது. அதுக்கெல்லாம் ஒவ்வொரு பெயர் சொல்றாங்க. அதே மாதிரி, வாயில் வைத்துக் கொள்ளும் பொருளும் வேற வேறயா இருக்கு. அதுக்கெல்லாம் இன்னும் பெயர் தெரியலை. மத்தவங்க அதையெல்லாம் பொம்மை அப்படின்னு சொல்றாங்க.

இப்போது நீஞ்சறது தவிர புதுசா ஒண்ணு என்னால முடியும் மாதிரி தெரியுது. அதை முயற்சி செஞ்சப்போ, அம்மா அதைப் பார்த்துவிட்டுகுழந்தை உட்காருதுஎன்று பேசியது எனக்குக் கேட்டது. இந்த புது செயலும் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இதையும் நான் அடிக்கடி செய்கிறேன். நான் முழிச்சிக்கிட்டிருந்தபோது என்னவெல்லாம் செய்யறேன்? படுத்துக்கிட்டிருப்பேன், அப்புறம் மெல்ல திரும்புவேன், அப்படி திரும்புவதற்காக கை, காலை தரைல அழுத்துவேன், திரும்பினபிறகு நீஞ்சறது, அப்போ எதெல்லாம் கையில் கிடைக்குமோ, அதை வாயில் வெச்சுப் பாக்கறது, அப்புறம் கையை அழுத்தி மெல்ல உட்காருவது, யாராவது என்னைப் பார்த்தா, அவங்களை நான் அடிக்கடி பார்த்திருந்தா சிரிக்கறது இதெல்லாம் என்னால முடியுது. மத்தவங்க பேசறது புரியுது. ஆனால் அவங்க மாதிரி என்னால் இப்ப பேச முடியலை.

ஒரு தடவை நான் உட்கார்ந்திருந்தபோது பக்கத்துல ஒண்ணு உயரமா இருந்தது. அதுக்கும் என்னோட கால் மாதிரி ஆனா பெரிசா இருந்தது. அதை கொஞ்சம் கொஞ்சமா கீழேயிருந்து புடிச்சிக்கிட்டே மேலே வரை போனேன். அப்ப என்னோட கால் மட்டும் தரைல இருந்தது. அதைப் பார்த்துவிட்டு, “அட! குழந்தை புடிச்சிக்கிட்டு நிக்கறான்!” அப்படின்னு பேசினார்கள். அப்போதுதான் என்னோட புது செயலுக்கு நிற்கறது அப்படின்னு புரிஞ்சுது. ஆனால் நிறைய நேரம் நிற்கறது முடியலை. கால் தடதடன்னு ஆடியது. அதுக்கப்புறம் அப்படியே தொப்புன்னு உட்கார்ந்துட்டேன்! அதுக்கப்புறம் கால்ல ஒரு மாதிரி அயர்ச்சியா இருந்தது. இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே மாதிரி செஞ்சு பார்த்தேன்.

நடுவுல அப்பப்ப எனக்கு எதையாவது அம்மா வாயில குடுத்தாங்க. புதுசு புதுசா கொடுத்தது எனக்கும் பிடித்திருந்தது. அது எல்லாம் என் வயிற்றுக்குப் போனதும் அயர்ச்சி போயிடும். நானும் எனக்குப் பழக்கமானதை எல்லாம் செய்வேன்.

மெதுவா இருட்டு வரும். கூடவே ஸ்லோகம், வாசனை இதெல்லாமும் வரும். அதுக்கப்புறம் நான் அம்மாகிட்ட பால் குடிப்பேன். வெளிச்சமா இருந்தப்ப எல்லாம் நான் செய்தவை காரணமா, எனக்கு தூக்கம் வந்துடும். அப்படியே, பால் குடிச்சு முடிக்கறதுக்குள்ள தூங்கிடுவேன். இப்படியே கொஞ்ச நாள் போச்சு!

அதற்குப்பின் ஒரு வெளிச்சத்தின்போது, என்னால் என்னையறியாமல் ஒரு புது செயலை செய்ய முடிந்தது. அது எனக்கே ரொம்ப புதுசா இருந்தது. நான் அந்த செயலை பல தடவை முயற்சி செய்திருக்கேன். அப்போதெல்லாம் முடியலை, ஆனா திடீர்னு முடிஞ்சது! அது என்ன? அதுபற்றி அப்புறமா சொல்றேன்.

ஏன்னா, எனக்கு இப்ப நான் வழக்கமா செய்யறதை எல்லாம் செஞ்சு பார்க்கணும் போல இருக்கு. அதோ! எனக்கு முன்னால நிறைய பொம்மை போட்டிருக்கு! அதை எல்லாம் நான் என் கையால எடுக்கணும்!

ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-5

ம்ம்ம்! இப்போது இருட்டு முடிஞ்சு வெளிச்சம்! வழக்கமான அந்த நேரத்து ஒலிகள், வாசனை! என்னுடைய வழக்கமான பால் குடித்தபிறகு, நான் என்னைச் சுற்றியுள்ளதைப் பார்க்கிறேன். அதற்குப்பின் மெல்ல திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

அட! எப்போது, எப்படி நடந்ததென்று தெரியலை. நான் எனது உடலைத் திருப்ப முடிகிறது. மெல்ல ஒரு பக்கமாகத் திரும்பி, அதே நிலையில் கொஞ்ச நேரம் இருந்தேன். இப்படி சில நேரம் போன பிறகு முழுமையாக திரும்பி விட்டேன்! அப்படித் திரும்பியதும் என்னைச் சுற்றியிருந்தவர்கள் அவர்கள் கையைத் தட்டினார்கள். அவர்கள் பெரிதாக சப்தமிட்டார்கள். அது எனக்கும் பிடித்திருந்தது. எனது இந்தச் செயலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. பார்த்துக்கிட்டு இருக்கீங்களே, உங்களுக்கே தெரியுமே! என்ன அர்த்தம்? கொஞ்சம் சொல்லுங்க!

 (அந்நேரம் இந்த ஆத்மாவுடன் பயணிப்பவர்களுள் சிலர் குமுதா, மஞ்சுளா போன்றவர்கள்குழந்தை குப்புற கவிழ்ந்துடுத்து!” என்றார்கள் கோரஸாக! இதை அந்த ஆத்மாவும் கேட்டுவிட்டு, “! அப்படியா?” என்றது யோசனையாக!)

இப்படி குப்புற கவிழ்ந்த என்னால் ரொம்ப நேரம் அப்படியே இருக்க முடியவில்லை. மெல்ல தலையைத் தூக்கிப் பார்த்தேன். தலையை அதிகமாக தூக்கியதாலோ என்னவோ, பழையபடி திரும்பி விட்டேன்! இது ஒரு விளையாட்டு மாதிரி எனக்குத் தோன்றியது. அந்த விளையாட்டு எனக்குப் பிடித்திருந்தது. நான் குப்புற கவிழ்ந்தபோது எனக்கு முன்னால் என்னென்னவோ போட்டிருந்தார்கள். அவைகளை நான் என் கைகளை நீட்டி எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தேன். அவைகளைப் பிடித்துவிட்டபோது, என்னையறியாமல் விதவிதமாக ஒலியெழுப்பினேன்!

அதுவுமன்றி, நான் அடிக்கடி பார்க்கின்றவர்கள் முகத்தைப் பார்த்து அவர்கள் மாதிரியே என் முகத்தையும் வைக்கப் பார்த்தேன். அதைப் பார்த்த அவர்கள், “ஏய்! குழந்தை முகம் பார்த்து சிரிக்கிறது!” என்றார்கள். அவர்கள் சொல்வதை வைத்து, இந்த உணர்வு சிரிப்பு என்று ஒரு உணர்வு உள்ளதைப் புரிந்து கொண்டேன். அதனால், அதை அடிக்கடி செய்து பார்ப்பது எனது பொழுதுபோக்கில் ஒன்றாகி விட்டது. ஆனால், சில சமயம் அவர்கள் முகம் வேறுவிதமாக இருக்கின்றது. அப்போது அவர்கள் சப்தமாக ஒருவருக்கொருவர் பேசுகிறார்கள். கையை நீட்டி நீட்டி வேறு பேசுகிறார்கள். அது எனக்கு ஏனோ ஒருவிதமான அச்ச உணர்வைத் தருகிறது. அச்ச உணர்வு வரும்போதெல்லாம் என்னையறியாமல் வழக்கமாக எழுப்பும் ஒலியை நான் அப்போதும் எழுப்புகிறேன். அப்போது புதிதாக வந்த ஒருவர், “ஏன் இப்படி கோபமாகப் பேசறீங்க? குழந்தை இங்க இருக்குல்ல? அதுக்குத் தொந்தரவாக இருக்காது?” என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு இப்படி அச்ச உணர்வைத் தரும் அவர்கள் பேச்சுகோபம்என்ற உணர்வு என்று புரிந்தது. இந்த கோபம் என்ற உணர்வு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.

அதனால், அந்த சமயங்களில் திரும்புவது, குப்புற விழுவது, மறுபடியும் திரும்புவது, கைகால்களை நான் இருக்கும் இடத்தில் அழுத்துவது, உதைப்பது என்று செய்து கொண்டிருந்தேன். அப்படி அழுத்தி உதைக்கும்போது நான் இருந்த இடத்திலிருந்து என்னால் நகர முடிவதை நான் முதன்முறையாக உணர்ந்தேன்! அட! இது நான் இருட்டில் இருந்தபோது சுற்றி வந்தேனே! அதுமாதிரி, ஆனா கொஞ்சமா இருக்கே! என்று எனக்குத் தோன்றியது! அவ்வளவுதான்! சட்டென்று மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி! நான் ரொம்ப நாள் செய்யாம இருந்ததை இப்ப, இங்கே செய்ய முடியுமென்று மனசுக்குத் தோன்றியதால், அதை நான் அதிகமாக செய்யத் தொடங்கி விட்டேன்!

ஆமா, என்னோட இந்த புது செயலுக்கு என்ன பெயர்? என் கூடவே வரும் நீங்க யாராவது சொல்லுங்க!


ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-4

என்னோடு அடிக்கடி பேசுவது இரண்டு உருவங்கள். அதில் அந்த மென்மையான குரல் உடைய உருவம் அடிக்கடி தன்னைக் காட்டி, “அம்மா பாரு, அம்மா பாருஎன்று சொல்லிக் கொண்டே இருந்தது. அதனால் அந்த உருவம் எனக்கு அம்மா என்று புரிந்து கொண்டேன். ஆனால் என்னால் அதே மாதிரி சொல்ல முடியவில்லை. அது போலவே, அந்த கனத்த குரல் உருவத்தைக் காட்டி, “அப்பா பாரு! அப்பா பாரு!” என்று அடிக்கடி சொன்னதால், அந்த உருவம் அப்பா என்று புரிந்து கொண்டேன். இந்த இருவரைப் பார்க்கும் போதும்ம்ம்என்றோ, “ப்ப்ப்என்றோ மட்டுமே என்னால் சொல்ல முடிந்தது. இவை இரண்டும் எனக்குப் புதியதாக இருந்தன. இவை தவிர வேறு சில எனக்குப் புதியதாக இருந்தன. இருட்டிலிருந்தபோது சுற்றி வர முடிந்தது போல இங்கே முடியவில்லை என்று ஏற்கெனவே சொன்னேன் இல்லையா? இப்போதெல்லாம் என்னுடைய தலை கட்டுப்பாடில்லாமல் ஆடுவது நின்றுவிட்டது! என்னால் இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று திரும்பிப் பார்க்க முடிகிறது! சுற்றி சுற்றி வந்தது எனக்கு நினைவு இருந்ததால், இப்போதும் அதுமாதிரி சுற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறேன். அதன் முதற்கட்டமாக, தலையை திருப்புவது மாதிரி மெல்ல மெல்ல எனது உடம்பைத் திருப்ப முயற்சி செய்து வருகிறேன்.

என்ன, அப்படிப் பாக்கறீங்க! ! இதுக்கு முன்னாடி நான் பேசிய விதத்திற்கும் இப்ப உங்களோட பேசறதுக்கும் வேற மாதிரி இருக்கேன்னா? அதான் முதல்லயே சொன்னேனே! இப்போதெல்லாம் நிறைய கவனிக்கிறேன். நான் கேட்கும் ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு பெயர் இருக்கு! அதுபடி, என்னைச் சுற்றியிருக்கறவங்க கிட்டேயிருந்து வந்த ஒலி என்பது பேசுவது என்று புரிந்து கொண்டேன். அம்மா, அப்பா புரிஞ்சுகிட்டேன். ஆனால் அவர்கள் மாதிரி பேசவோ, அசையவோ, சுற்றி வரவோ இப்ப முடியலை. ஆனா, முயற்சி பண்றேன்.

அம்மா கிட்டேர்ந்து கிடைக்கறது பால்னு புரிஞ்சுகிட்டேன். அது என்னோட வாய் வழியா வயிற்றுக்குப் போவதைகுடிக்கறதுஅப்படின்னு புரிஞ்சுகிட்டேன். சில சமயம், குடிக்கும் போதே தூங்கிடுவேன். அப்ப என்னைச் சுத்தி இருட்டா இருக்கும். சில சமயம் குடிச்சப்புறமும் முழிச்சிட்டிருப்பேன். அப்போதெல்லாம் கை, கால் தலையை அசைச்சு பார்த்துக்கிட்டே இருப்பேன் (மத்தவங்க மாதிரி நானும் அசையணும், சுத்தி வரணுமே!). அதை மத்தவங்க பார்த்துவிட்டு, குழந்தை விளையாடுதுன்னு பேசறாங்க.

இருட்டா இருக்கும்போது யாரும் என் கண்ணுக்குத் தெரியலை. அதனால நான் தூங்கிடறேன். திடீர்னு கண் கூசும். அப்படி கூசுவது வெளிச்சம்னு புரிஞ்சுகிட்டேன். இருட்டு, வெளிச்சம் மாத்தி மாத்தி வருவதும் புரிந்தது. வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக வரும்போது எனக்கு மனசுக்குப் பிடித்த இரண்டு ஒலிகள்மற்றவர்கள் பேசுவதை வைத்து அதற்குப் பெயர் ஸ்லோகம் என்றும் புரிந்து கொண்டேன். அந்த ஸ்லோகம் வரும்போது மூக்கில் வரும் உணர்வுவாசனைஎன்று மற்றவர்கள் பேசுவதை வைத்து புரிந்து கொண்டேன்.

இருட்டிலிருந்தபோது சுலபமா செய்ய முடிஞ்சதையெல்லாம் இங்கே வெளியே அப்படி செய்ய முடியவில்லை; காரணம் இடம் இரண்டும் வேற வேறன்னும் புரிஞ்சுகிட்டேன். இருட்டிலிருந்தபோது எப்போதும் பாதுகாப்பாக இருந்த உணர்வு இப்போது வெளியே வந்தபின் இல்லை. அம்மா அல்லது அப்பா என்னை எடுத்துக் கொள்ளும்போது மட்டும் பாதுகாப்பா இருக்கற மாதிரி இருக்கு! அது ஏன் அப்படி இருக்குன்னு தெரியலை.

அங்கே இருந்தபோது எனக்குள் இருந்த அந்தக் கேள்விகள் இப்போதும் நினைவுக்கு வந்தன. நான் யார்? எப்படி இங்கே வந்தேன்? இதற்குமுன் இருட்டில் இருந்தேனே, அதற்குமுன் எங்கே இருந்தேன்? இப்போது ஏன் இங்கே வந்தேன்?

வழக்கம்போல விடை தெரியவில்லை! அதனாலோ என்னவோ, இப்ப எனக்கு அயர்ச்சியா இருக்கு! பால் குடிக்கணும்! அதுக்கப்புறம் தூங்கணும்! ஏன்னா, இப்ப இங்கே இருட்டா இருக்கு!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-3

நான் தூங்கப் போகுமுன் எனக்குப் புதிதாகப் பல அனுபவங்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளதாகச் சொன்னேன் இல்லையா? இப்போது அவற்றைச் சொல்கிறேன் (எனக்கும் பொழுது போகணும் இல்லையா!).

நான் இருட்டில் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் சில வேறுபாடுகள் இருப்பதை நான் சட்டென்று உணர்ந்தேன். அங்கே இருந்தபோது என்னால் மிதக்க முடிந்தது. இப்படியும் அப்படியுமாக சுலபமாகச் சுற்றி வர முடிந்தது. ஆனால் இங்கோ, இப்போது என்னால் அசையக் கூட முடியவில்லை. இனி என்னால் மிதக்க முடியாது என்று உணர்ந்து கொண்டேன். அதுதான் பரவாயில்லை, ஏன் என்னால் சுற்றி வர முடியவில்லை? ஏன் என்னால் அசையக் கூட முடியவில்லை? என்றெல்லாம் எனக்குள் பல கேள்விகள். என்னால் கைகால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. என்னுடைய தலையோ, என்னுடைய கட்டுப்பாட்டிலேயே இல்லாத மாதிரி இருக்கிறது. அதுபாட்டுக்கு தனியாக அசைகிறது. என்னை எடுத்துக் கொள்கிறவர்கள் ஒரு கையில் என் தலையையும், இன்னொரு கையில் என் உடம்பையும் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி அவர்கள் எடுக்கும்போது ஒரு மாதிரி படபடப்பாக இருக்கு! அதனால், நான் அவர்களுடைய கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறேன். சில சமயம் அவர்களுடைய கையை என்னுடைய வாயில் வைத்துக் கொள்கிறேன். இந்த மாதிரி சமயங்களில் எனக்குள் அந்தக் கேள்விகள் மறுபடியும் வந்தன. நான் யார்? எப்போது அந்த இருட்டான இடத்திற்கு வந்தேன்? அதற்கு முன் நான் எங்கே இருந்தேன்? இதற்கெல்லாம் விடை தெரியவில்லை. அது எனக்கு ஒருவிதமான புரியாத உணர்வைத் தந்தது. அதனால், என்னுடைய வயிற்றில் ஏதோ சுழன்றது. அதன்பின் எனக்குள்ளிருந்து வேறு ஏதோ இரண்டு துவாரங்கள் வழியாக சுறுசுறுவென்று வெளியேறியது. அப்போதுதான் எனக்கு மேலும் இரண்டு துவாரங்கள் இருப்பதை அறிந்து கொண்டேன்.

ஆங்! சொல்ல மறந்து விட்டேன். டப்டப் சத்தம் வரும்போது எனது முகத்தின் இரண்டு துவாரங்கள் வழியாக ஒரு உணர்வு உள்ளேயும் வெளியேயும் போவதாகச் சொன்னேன் இல்லையா? அந்த இடம்தான் மூக்கு! அப்படிப் போகும்போது கூடவே ஒரு உணர்வு. இது மாதிரி பல உணர்வுகள் அதனோடு வந்தன. நான் இருட்டிலிருக்கும்போது விழித்தவுடன் மனசுக்கு புடிச்ச ஒலி கேட்கும்னு சொன்னேன் இல்லையா? அதில் இரண்டை இப்போது வெளியே வந்தபின்னாலும் அடிக்கடி கேட்கிறேன். அதில் ஒண்ணு கௌசல்யா அப்படின்னு வரும். இன்னொண்ணு சுக்லாம் அப்படின்னு வரும். இந்த ரெண்டும் வரும்போது, மூக்கில் ஒரு உணர்வு வரும். அதுவும் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது.

ஆனால், ஒரு சில உணர்வுகள் எனக்குப் பிடிக்கவேயில்லை. இப்போதும் அந்த உணர்வுகளில் ஒன்று, எனக்குள்ளிருந்து ஏதோ வெளியேறியதுன்னு சொன்னேன்ல, அப்ப வந்தது. அப்போது நான் என்னையறியாமல் தொடர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்தேன். கூடவே எனது கால்கள் இரண்டும் மேலே எழும்பி, தலைப்பக்கம் வந்து விட்டன. என்னுடைய ஒலி கேட்டு, அந்த மென்மைக்குரல் உருவம் உடனே வந்து என்னைப் பார்த்துவிட்டு, சட்டென்று என்னை எடுத்துக் கொண்டு, அந்த புதிய இரண்டு துவாரங்களை நன்றாகத் துடைத்து விட்டது. கூடவே என்னுடைய உடம்பு முழுவதும் துடைத்து விட்டபின்பு, வேறு துணி போட்டு விட்டது. இது அடிக்கடி நிகழ்ந்தது.

என்னை நானே நன்றாக கவனித்துப் பார்த்ததில் ஒன்று புரிந்தது. எனக்கு அயர்ச்சி வரும்போது அந்த உருவத்திடமிருந்து அந்தச் சுவையான திரவம் என் வாய் வழியாக வயிற்றுக்குப் போகிறது. கொஞ்ச நேரம் கழித்து, என்னுடைய வேறு இரண்டு துவாரம் வழியாக வயிற்றிலிருந்து வெளியே போய்விடுகிறது. இந்த இரண்டும் நான் வெளியே வந்தபிறகுதான் அடிக்கடி நிகழ்கிறது. அதுவும், நான் விழித்துக் கொண்டிருக்கும்போது. இந்த வெளியேற்றம் சில சமயம் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போதும் நிகழ்கிறது. ஆனால் இவையிரண்டையும் நான் அந்த இருட்டான இடத்தில் இருந்தபோது உணர்ந்ததில்லை.

என்னால் இன்னொன்றும் உணர முடிந்தது. அது……, ம்ஹும்! அப்புறமா சொல்றேன்!

ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-2

நான் இருட்டிலிருந்து வெளியே வந்தவுடன், திடீரென எனக்குக் கண்கள் கூசின. இப்போதும் என்னால் கண்களை திறக்க முடியவில்லை. மிகுந்த முயற்சிக்குப் பின் தன்னிச்சையாகக் கண்கள் திறந்தன. மெல்ல அப்படியே சுற்றிப் பார்த்தேன். இருட்டில் மூளைக்கு உணர்வாக இருந்தவையனைத்தும் ஒவ்வொன்றாக, காட்சியாக விரிந்தன. முதன்முதலாக நான் எனது கைகள், கால்கள் என ஒவ்வொன்றாகப் பார்த்தேன். கூடவே, என் கண்களுக்கும் மூளைக்கும் புதிய காட்சிகள், அனுபவங்கள். இருட்டிலிருந்தபோது கேட்கும் ஒலிகள், என்னுடைய தலையின் இருபக்கங்களிலுமுள்ள இரு துவாரங்கள் வழியே கேட்டது. அந்த இடங்களை நான் இரு கைகளாலும் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். அது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. இருட்டிலிருந்தபோது எனக்குள்டப் டப் டப்என்று ஒரு ஒலி எனக்குக் கேட்கும். இப்போதும் கேட்கிறது. கூடவே, அந்த ஒலிக்கேற்ப என் தலையின் முன்பக்கம் இருந்த இரண்டு துவாரங்கள் வழியாகபுஸ் புஸ்என்று ஒரு உணர்வு எனக்குள் வருவதும், வெளியே போவதுமாக இருந்தது. அதையும் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். அதற்குக் கீழே ஒரு பெரிய துவாரம் இருந்தது. அதன் வழியே எப்போதாவதுஹாவ்!” என்று ஒரு உணர்வு கொஞ்சம் பெரிதாக, நீளமாக வெளியே செல்லும். அந்தப் பெரிய துவாரத்துக்குள் என்னுடைய கைகளைப் அதிக நேரம் வைத்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்தமாக இருந்தது.  அப்படியே நிமிர்ந்து மேலே பார்த்தபோது மிகவும் பெரியதாக ஒரு உருவம் தெரிந்தது. அதற்கும் என்னைப் போலவே கைகால் என அனைத்தும் இருந்தன. ஆனால் என்னைவிட மிகவும் பெரிதாக இருந்தன. அப்போது அந்த உருவத்திடமிருந்து வந்த குரல், “அம்மா! குழந்தை முழிச்சுண்டுடுத்து! என்னைப் பாக்கறது!” அட! இது எனக்கு மிகவும் பழக்கப்பட்ட அந்த மென்மைக் குரலாயிற்றே! என்னவோ தெரியவில்லை, அந்த உருவத்தைப் பார்த்தவுடனேயே எனக்கு சட்டென்று பிடித்து விட்டது! ஏனோ தெரியவில்லை, இருட்டிலிருந்தபோது அவ்வப்போது எனக்கு வரும் அந்த அயர்ச்சி இப்போதும் வந்தது. சரி, கொஞ்ச நேரத்தில் எனக்குள் வழக்கமாக வரும் அந்தசுறுசுறுஉணர்வு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் வரவில்லை. அந்த இடத்தை எனது கை தன்னிச்சையாகத் தொட்டுப் பார்த்தபோது, அது அடைத்திருந்தது. என்ன இது! இதுவழியாகத்தானே அந்தசுறுசுறுவரும்? இப்போது ஏன் வரவில்லை? எனக்கு அயர்ச்சி அதிகமானது, கூடவே அச்சமும்! அந்த நேரத்தில் என்னையறியாமல் என்னிடமிருந்து ஒரு ஒலி வெளிப்பட்டது, நான் என்னுடைய விரல்களை நுழைத்து வைத்துக் கொண்டிருந்த அந்தப் பெரிய துவாரம் வழியாக! அட! என்னுடைய ஒலியை நான் முதன்முதலாகக் கேட்கிறேன்! என்னாலும் மற்றவர்களைப் போல ஒலியெழுப்ப முடிகிறதே! அது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும் அந்த நேரத்தில் என்னால் அதை ரசிக்க முடியவில்லை. காரணம் என்னுள் இருந்த, அதிகமாகிக் கொண்டிருந்த அந்த அயர்ச்சிதான். அந்த அயர்ச்சி காரணமாக நான் தொடர்ந்து நீளமாக ஒலியெழுப்பிக் கொண்டே இருந்தேன்.

என்னுடைய ஒலியைக் கேட்டதும், அந்த மென்மைக்குரல் உருவம் சட்டென்று என்னைத் தன்னுடைய கைகளில் எடுத்துக் கொண்டது. அப்படி எடுத்துக் கொண்டதும் எனக்குள் ஒரு பாதுகாப்பான உணர்வு வரத் தொடங்கியது. மேற்கொண்டு அந்த உருவம் தன்மேல் என்னுடைய தலையை வைத்துக் கொண்டது. என்னுடைய தலை பதிந்த அந்த இடம் என்னைச் சுற்றி வைத்திருந்த துணியைவிட மிகவும் மென்மையாக இருந்தது. அப்போதுதான் நான் முழுமையான பாதுகாப்பை உணர்ந்தேன். அந்த மென்மையான இடத்தில் என் கைகள் இருந்த பெரிய துவாரம் பதிந்தவுடன் அதன் வழியே சுறுசுறுவென ஏதோ ஒன்று எனக்குள் இறங்கத் தொடங்கியது. அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது மெல்ல மெல்ல என்னுடைய துவாரம் அடைபட்டிருந்த இடத்தை அடைந்தவுடன் என்னுள்ளிருந்த அயர்ச்சி மெல்ல மெல்ல அகன்றது! அச்சமயம் அந்த மென்மைக்குரல் ஒலித்தது, “குழந்தை நல்லா குடிக்கறான்!” என்று. அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. இனிமேல் எனக்கு அயர்ச்சியாக இருந்தால், எனக்குத் தேவையான அந்தசுறுசுறுதிரவம் இந்த உருவத்திடமிருந்துதான் கிடைக்கும் என்று. என்னுடைய வயிறு நிறைந்தது போல உணர்ந்தவுடன் எனக்கு மீண்டும் தூக்கம் வரத் தொடங்கியது. அந்த மென்மையான இடத்திலிருந்து என் தலையை எடுக்காமலேயே, அப்படியே தூங்கி விட்டேன். நாளாக ஆக, என்னைச் சுற்றியிருந்தவர்கள் ஒலியை வைத்து, என் தலையிலுள்ள அந்த பெரிய துவாரம் வாய் என்றும், அவர்களுடைய ஒலிகள் கேட்கும் துவாரங்கள் காது என்றும் புரிந்து கொண்டேன். இப்போதெல்லாம் என்னைச் சுற்றியுள்ளவர்களின் ஒலி என்பதை, பேச்சு, பேசுவது என்றும், அவர்கள் பேசுவதை வைத்து ஒவ்வொன்றாக, புதிது புதிதாகக் தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன். இப்படி தெரிந்து கொள்வது என்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தூங்கும் நேரம் போக மற்ற நேரம் இப்படி தெரிந்து கொள்வது என்பது என்னுடைய அன்றாடச் செயலாக உள்ளது. நான் புதிதாக என்னவெல்லாம் தெரிந்து கொண்டேன் என்பதைப் பிறகு சொல்கிறேன்.

ஒரு ஆத்மாவின் பயணம்


ஒரு ஆத்மாவின் பயணம்

சட்டென்று ஒரு விழிப்பு தட்டியது. விழித்துக் கொண்டது மூளைதானேயொழிய, கண்களில்லை. அவற்றால் விழிக்கவும் இயலாது. இவ்வாறு அடிக்கடி விழிப்பு வருகிறது. அவ்வாறு வரும்போதெல்லாம் எனக்குள் எழும் கேள்வி, “நான் யார், எங்கே இருக்கிறேன், எப்படி இங்கே வந்தேன்?” இவைதான். விழிப்பு வந்ததும், கசகசவென சப்தம்! அந்த நேரத்தில் நான் மெல்ல மெல்ல மிதப்பதை உணர்ந்தேன். சுற்றிலும் கும்மிருட்டு! இருந்தாலும், மனதில் எந்த ஒரு அச்ச உணர்வும் வந்ததில்லை. நான் விழித்திருக்கும் சமயத்தில் கேட்கும் ஒலிகளுள் சில கேட்பதற்கு மனசுக்குள் நன்றாக இருக்கும். திரும்பத் திரும்ப அவ்வொலிகளைக் கேட்க மனசு விரும்பும். அவையும், ஏதோ சில குறிப்பிட்ட இடைவெளியில் கேட்கும். ஆனால், அவற்றைக் கேட்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்போதும் அவற்றில் ஒன்று கேட்டு முடிந்தது. உடனே எனக்குள் மிகவும் அயர்ச்சி தோன்றியது. என்னையறியாமல் நான் என்னுடைய இரு கால்களை உதைத்துக் கொண்டேன். நான் அவ்வாறு உதைத்துக் கொள்ளும் சமயத்தில் வழக்கமாக ஒரு ஒலி கேட்கும், “அம்மா!” என்று! அதற்குப்பின், எனக்குள் சுறுசுறுவென்று ஏதோ வந்து சேரும். அந்த சுறுசுறு உணர்வு வந்தவுடன் சட்டென்று அயர்ச்சி காணாமல் போய்விடும்!

அதற்குப்பின், நான் இருக்குமிடத்தில் அப்படியும் இப்படியுமாக மிதந்தவாறு சுற்றுவேன். அந்த சமயத்தில் பல்வேறு ஒலிகள் அவ்வப்போது கேட்கும். அவற்றுள் ஒன்று மென்மையாகவும், மற்றொன்று சற்று கம்பீரமாகவும் என இரு குரல்கள் அடிக்கடி கேட்கும். இந்த இரு குரல்களும் எனக்கு மிகவும் பழகிவிட்டது. “குழந்தை ரொம்ப சுத்தறதுஎன்று மென்மையான குரல் ஒலித்ததும், நான் இருக்கும் இடத்தின் மீது மெலிதாக ஒரு எடை கூடும். அந்த சமயத்தில் நான் அந்த எடையை விலக்க இருகால்களால் உதைப்பேன். அப்போது அந்த மென்மையான குரல், “அம்மா! ரொம்ப உதைக்கறது! உங்க குரலைக் காட்டாதீங்க!” என்று சொல்லும்.

இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. என்னால் என்னுடைய இருப்பிடத்தில் முன்பு போல சுற்றி மிதக்க முடியவில்லை. நான் சுற்றியலைந்த இடம் திடீரென சுருங்கிவிட்டது போல உணர்ந்தேன். அதற்கு மேலும் என்னால் இங்கே இருக்க முடியாது என்று தோன்றியது. “எப்படியாவது இங்கிருந்து வெளியே போய்விடு, இல்லையென்றால், உனக்கு மூச்சு முட்டும்என்று எனது மூளை எனக்குக் கட்டளையிட்டது. எனக்கும் அதுதான் சரியென்று பட்டது. ஏற்கெனவே எனக்கு நான் யாரென்பதற்கும், இங்கே எப்படி வந்தேன் என்பதற்கும் விடை தெரியவில்லை. சரி, இங்கிருந்து வெளியே போனால்தான் தெரியும் போல இருந்தது. அதனால், அங்கிருந்து வெளியேற முயற்சிகளை மேற்கொண்டேன். எப்போதும் மென்மையாக ஒலிக்கும் குரல் அப்போது மட்டும் ஏன் பயங்கரமாக ஒலித்தது? அந்தக் கதறல் ஒலியை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த ஒலி நிற்க வேண்டுமென்றால், நான் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்! என்னால் முன்புபோல இங்கே மிதக்க முடியவில்லை. அது ஒருவித அச்ச உணர்வை முதன்முதலாக எனக்குத் தந்தது. பாதுகாப்பு உணர்வு குறைந்து கொண்டே வந்தது. அந்த உணர்வு குறையக் குறைய, நான் கால்களால் உதைத்துக் கொள்வதும், என் தலையால் என் இருப்பிடத்தின் ஒரு பகுதியை முட்டுவதும் தன்னிச்சையாக நடந்தது. அச்சமயத்தில் அந்தக் கதறல் ஒலியும் என் செயல்களுக்கேற்ப உச்சமடைந்து வந்தது. என்ன நடந்தது, எந்த நேரம் நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. சட்டென்று நான் என் இருப்பிடம் விட்டு வெளியேறினேன். அவ்வாறு வெளியேறிய நொடியில் அந்தக் கதறல் ஒலியும் சட்டென்று நின்றது.

வெளியே வந்தவுடன் சில புதிய அனுபவங்கள்! அவை என்ன? அவற்றைப் பற்றி பிறகு சொல்கிறேன். எனக்கு இப்போது மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது. அதனால் தூக்கமும் வருகிறது. சரி, நான் தூங்கறேன்!

ஆத்மாவின் பயணம் தொடரும்!