Saturday, May 11, 2019


ஒரு ஆத்மாவின் பயணம்

பாகம்-28

நடந்த திருமணம் எங்களுடையது என்பதால் இன்று காலை என்ன பலகாரம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை! எங்களுக்கு அந்த காலை வேளையில் கிடைத்ததெல்லாம் வெறும் பாலும் பழமும் மட்டுமே! ஹோமத்தின் இடையில் இருவரையும் ஆளுக்கொரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடக் கொடுத்தார் வாத்யார்! கூடவே வெற்றிலையும்! ஏற்கெனவே வயித்துல ஒண்ணுமில்லை, இதில் ஒற்றைப் பழமும் வெற்றிலையும் பசியை இன்னும் கிளப்பிவிட்டு விட்டன! எனது முகக்குறிப்பையறிந்த வாத்யார், “ஒரு அரைமணி நேரம் பொறுத்துக்கோடா அம்பி! ஹோமம் முடிஞ்சதும் சாப்பாடுதான்!” என்றார்! அதன்பின் க்ருஹப்ரவேசம் முடிந்தபின்பொண்ணு மாப்பிள்ளையை சாப்பிடச் சொல்லுங்கோஎன்று மதியம் கல்யாண சாப்பாட்டுக்கு அனுமதி கிடைத்தது ஒருவழியாக!

நேரம் மீறிவிட்டதால் ஏதோ சாப்பிட்டதாக பேர் பண்ணிவிட்டு, நாங்கள் இருவரும் அவரவருக்கு தரப்பட்ட அறைகளில் முடங்கினோம்.

தனியாக இருக்கும் நேரம் மனசுக்குள் அந்த முதல் தீண்டல் நினைவுக்கு வந்தது. என்னை மாதிரியே அவளும் நினைச்சுக்கிட்டிருப்பாளோ என்ற கேள்வியும் மனசுக்குள் வந்தது. என்னையறியாமல் என்னுடைய வலது உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டேன், பலமுறை! என்ன இது! மனசு அலைபாயற மாதிரி இருக்கே! என்ற கேள்வியும் வந்தது. லேசாகக் கண்ணயர்ந்து ஒரு அரைமணியோ ஒரு மணியோ போயிருக்கும். உடனே வந்து எழுப்பி விட்டார்கள். மூஞ்சி கை காலலம்பிண்டு ரெடியாகுடா என்றனர். நலங்கு நடக்கணுமாம்! அதன்படி எழுந்து தயாராக, அந்த மாலை வேளையில் சூடாக மைசூர் போண்டா, கோதுமை அல்வா, கொஞ்சம் மிக்ஸர், காபி எல்லாம் ஜரூராகப் போய்க் கொண்டிருந்தது.

நலங்கில் பாடும்போது மதியம் மனசுக்குள் எழுந்த கேள்வியை யாரோ கானடாவில்அலைபாயுதே கண்ணா!” என்று விஸ்தாரமாகப் பாடினர். அடுத்து தேங்காய் உருட்டுகையில் ஷண்முகப்ரியாவில்விளையாட இது நேரமா?” என்று அர்த்தபுஷ்டியுடன் வேறொருவர் பாடினார். பிறகு பெண்ணைப் பாடச் சொன்னார்கள். எனக்கு, பெண் பார்க்கப் போனபோது அவளை பாடச் சொன்ன நிகழ்வு மனசுக்குள் சட்டென்று ஓடியது. அவளும் கூடியிருந்தவர்கள் சொன்னதற்கிணங்க அம்பாள் மீதான ஒரு பாடலைப் பாடினாள். சும்மா சொல்லக் கூடாது, நன்றாகத்தான் இருந்தது. இப்போது மாப்பிள்ளை முறை! மாப்பிள்ளையைப் பாடச் சொல்லுங்கோ, மாப்ள! பாடுங்கோ என்று பெண் வீட்டுத் தரப்பிலிருந்து ஏகப்பட்ட குரல்கள்! அதில் ஒருவித அறைகூவல் இருந்தது. என்னடா இது! என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தெருவில் நாளை நடக்கவிருக்கும் கல்யாணத்திற்கான ஜானவாசம் போய்க் கொண்டிருந்தது. அதில் நாதஸ்வரம் வாசித்தவர் தன்யாசியில்சங்கீத ஞானமு பக்திவிநாஎன்ற பாடலை விஸ்தாரமாக இசைத்தபடி சென்றார்.

எனக்கு இவளைப் பற்றிய நினைப்பு, இவளுடன் பின்னாளில் நடத்தப் போகும் வாழ்க்கை இவையெல்லாம், என்னுடைய அம்மா அப்பா வாழ்க்கையை நான் நேரடியாகப் பார்த்திருந்ததால் அந்நினைவுகளையொட்டி காட்சிகள் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தன. உடனே மனசுக்குள் அந்நிகழ்வுகள் வரிகளாக உருப்பெற்றன. அவற்றை அதே தன்யாசியில் வெளிப்படுத்தினேன்.

பல்லவி

அவளில்லை என்றால் நானில்லைஅவள்
நினைவில்லை என்றால் என் ஜீவனில்லை                       (அவள்)

அநுபல்லவி

என்னைப்புரிந்தவள் என்னை மணந்தவள்
என்னைப்புரிந்தவள் என்னை மணந்தவள்
முன்னைப் பிறவியின் தொடர்பாய் இணைந்தவள்         (அவள்)

சரணம்

சொந்தபந்தங்களையும் வந்தணையும் நண்பர்களையும்
இன்முகம் காட்டியே உபசரித்திடுவாள்
சொந்தபந்தங்களையும் வந்தணையும் நண்பர்களையும்
இன்முகம் காட்டியே உபசரித்திடுவாள்
எந்த நேரமும் என் சிந்தையிலிருப்பவள்
எந்த நேரமும் என் சிந்தையிலிருப்பவள்
மங்காப் புகழ்தன்னை எந்தனுக்குச் சேர்ப்பவள்   (அவள்)

பாடி முடித்ததும் சபையில் சில நொடிகள் அமைதி! நான் இப்படி சொந்தமாக இட்டுகட்டி பாடுவேன் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அனைவரின் முகங்களிலும் குறிப்பாகப் பெண் வீட்டாரிடம் தெரிந்தது. சட்டென அவர்களில் ஒருவர், “பரவாயில்லையே! மாப்பிளைக்கு கவிதையெல்லாம் ப்ரமாதமா வருதே!” என்றார். நான் அவளது முகத்தைப் பார்த்தேன். அதில் அளவில்லாத பெருமை தெரிந்தது. அது எனக்கும் மகிழ்வைத் தந்தது. வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும் என்று எனது மனசுக்கும் பட்டது!


ஆத்மாவின் பயணம் தொடரும்!

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-27

பெண் பார்த்துவிட்டு கிளம்புகையில் அடுத்து வருகின்ற ஒரு நல்ல நாளில் பையன் வீட்டில் வைத்து நிச்சயதார்த்தம் செய்வது என்று இரு வீட்டாரும் முடிவு செய்தனர். என்னிக்கு வைத்துக் கொள்வது என்பதை ஊருக்குப் போய் கடிதம் எழுதுவதாகத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றுக் கொண்டபடி, ஒரு நல்ல நாளில் பெண்வீட்டார் வந்து, திருமணத்தை நிச்சயம் செய்து, அடுத்து வருகின்ற முகூர்த்தத்தில் கல்யாணம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி, குறிப்பிட்ட தேதியும் வந்தது. வீடு முழுவதும் உறவினர் வருகை, பரஸ்பர உரையாடல், கிண்டல் கேலி என்று அமர்க்களப் பட்டது. ஒவ்வொருவரும் தத்தமது திருமண நிகழ்வில் நடந்ததை சுவைபட பரிமாறிக் கொண்டிருந்தனர்.

எனது மனமோ, வேறு விதமான சிந்தனையிலிருந்தது. எனது ரசனைக்கேற்ப அவள் இருப்பாளா? எனக்கு கதை, கவிதை, இலக்கியம், இசை என்று எல்லாவற்றிலும் நாய் வாயை வைத்தது போல ரசனை உண்டு. வருகிறவள் எனக்கு அந்தமாதிரியெல்லாம் ஒன்றுமில்லைன்னு சொல்லிட்டா என்ன பண்றது? போதாக் குறைக்கு அவ்வப்போது மனசுக்குள்ள அந்த மூணு கேள்விகள் வேற என்னை துரத்திண்டே இருக்கு! ஒருவேளை வருபவள் நல்ல புத்திசாலியா இருந்து, அவகிட்டேருந்து கூட விடை கிடைக்குமோ என்று கூட ஒரு நினைப்பு! பார்க்கலாம்! இங்கதான வரப்போறா? இங்க வந்தவாட்டி எல்லாம் புரிஞ்சிடப் போறது! என்று மனசுக்குள் நான் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். நான் அமைதியாக இறுக்கமான முகத்துடன் இருப்பதைப் பார்த்த ஒன்றிரண்டு குசும்பு புடிச்ச பெரிசுகள்ஏண்டா இப்பவே இப்படி பேஸ்து அடிச்ச மாதிரி இருக்கே! ஏதாச்சும் சந்தேகம்னா கேளு!” என்று கண்ணடித்தனர். அவர்கள் எதைச் சொல்கிறார்கள் என்று புரிந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெறுமனே புன்னகைத்து சமாளித்துவிட்டுகொஞ்சம் வெளிவேலை இருக்கு, போயிட்டு வரேன்என்று அங்கிருந்து நகரப் பார்க்க, “நிச்சயமான மாப்பிள்ளை வெளில போறதாவது! இங்கேயே கிட!” என்று தடை போட்டு விட்டனர். வேறு வழியில்லாமல் அறைக்குள் முடங்கினேன்.

திருமண நாளும் வந்தது. முதல்நாள் விரதம், மறுநாள் காசியாத்திரை, மாலை மாற்றல், ஊஞ்சல், பச்சைபுடி சுற்றுதல் எல்லாம் அந்தந்த நிகழ்வுக்குரிய மகிழ்ச்சியுடன் நடந்து முடிந்தது. ஊஞ்சலிலிருந்து அவளது கரத்தைப் பிடித்துக் கொண்டு மணவறை வரை நடந்தேன். வாழ்க்கையில் முதன்முதலாக ஒரு இளம்பெண்ணின் தீண்டல்! அது மனசுக்குள் புதுவிதமான உணர்வைக் கொடுத்தது. அதன் பின் கன்யாதானம் முடிந்து, நான் கொடுத்த புடவையைக் கட்டிக் கொண்டு அவள் வந்து தனது தந்தையின் மடி மீது அமர, வாத்யார் கம்பீரமாக மாங்கல்ய தாரண மந்திரத்தை ஓத, தாலி கட்டப் பட்டது! அந்தத் தருணத்தில் நான் எனது வாழ்க்கையின் முக்கியமான அடுத்த கட்ட்த்திற்குள் ப்ரவேசித்ததை உணர்ந்தேன். மனசுக்குள் கூடுதலாக ஒரு பொறுப்புணர்வு வந்தது. இனி இவள் என்னுடையவள், இவளை நான் என்னுடைய இறுதிநொடி வரை பாதுகாத்து, மகிழ்ச்சியை மட்டுமே தரவேண்டும் என்று மனசு தானாகவேஒரு உறுதிமொழியை எடுத்துக் கொண்டது. அதன்பின் நடந்த ஹோமம் அதில் சொல்லப்பட்ட மந்திரங்களின் பொருள் அனைத்தும் நான் அந்த மந்திரங்களை உச்சரிக்கும்போதே இயல்பாக அறிவுக்கு எட்டியது. இம்மந்திரங்களை இதற்கு முன் கேட்டதில்லையென்றாலும், நன்றாகப் புரிந்தது. மண வாழ்க்கையென்பது எந்த அளவுக்குப் பொருள் பொதிந்தது, அதை எவ்வாறு அர்த்தமுள்ளவாறு வாழ வேண்டுமென்பதை அவை எனக்கு உணர்த்தின.

ஆத்மாவின் பயணம் தொடரும்!

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-26

சிற்றுண்டி உபசரிப்பு நடந்து கொண்டிருந்தது. வைத்ததற்காக கொஞ்சமாக எடுத்துக் கொண்டுவிட்டு, மீதியை நைஸாக வலதுபக்கம் உட்கார்ந்திருந்த ராமன் மாமாவிடம் தள்ளிவிட்டுவிட்டேன். பெண் வீட்டில் பரபரப்பாக, “மாப்பிள்ளைக்கு இன்னும் கொஞ்சம் வைங்கஎன்று ஆளாளுக்கு சொல்ல, சிலர் முண்டியடித்து வர, அதை அப்படியே வலப்பக்கம் தள்ளிவிட்டேன்! அப்படியே அவரோட காதுல கிசுகிசுப்பா, “மாமா! இப்ப த்ருப்தியா?” என்று கேட்டேன், மாமா பதில் சொல்லாம கண்களால் அத்தையைத் தேடினார்! புரிந்துகொண்டேன்! நல்லவேளை! அந்த நேரம் அத்தை பெண்வீட்டு மாமிகளுடன் மும்முரமாக ஏதோ அரட்டையடித்துக் கொண்டிருந்ததால் மாமாவை கவனிக்கவில்லை!

இவை முடிந்ததும் பொதுவாக ஒருவர்ம்ம்! பொண்ணை வரச்சொல்லுங்கோஎன்று கூற, ஒரு சாராரிடம் ஒருவித பரபரப்பு அனைவருடைய முகத்திலும் தெரிந்தது. நான் மிகவும் கஷ்டப்பட்டு முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டிருந்தேன். அவளும் வந்து வீட்டுப் பெரியவர்களுக்கு நமஸ்கரித்து நிமிர, பெண் வீட்டில் யாரோ ஒரு பெண்மணிமாப்பிள்ளைக்கும் பண்ணும்மா!” என்று கூற, நான் சட்டென்று வேண்டாம்! என்று மறுத்துவிட்டேன். இதுவரைக்கும் எனக்கு பெண் பெயர் தெரியவில்லை!

வழக்கமா எல்லா பெண் பார்க்கும் நிகழ்ச்சியிலும் கேட்கப்படும் கேள்வி! “பொண்ணு பாடுவாளோ?” இதைக் கேட்டதும் அவள் முகத்தில் மிக மெலிதான கலவரம்! அதை கவனித்துவிட்ட நான், “பாடறது, ஆடறது இதெல்லாம் வேணாம்! பொண்ணுக்கு என்னைப் பிடிச்சிருந்தா நான் என்ன, ஊரூரா கூட்டிண்டு போய் கச்சேரியா பண்ணப் போறேன்? இல்லை நீங்கதான் வந்து பொழுதன்னிக்கும் கேட்டுண்டிருக்கப் போறேளா?” என்று சட்டென்று கேட்கவும், அனைவருடைய முகத்திலும் மலைப்பு! அவள் முகத்தில் மட்டும் மிக மெலிதான நிம்மதியுடன் கூடிய நன்றியுணர்வு! கேள்வி கேட்டவர், “அதில்லடா, வந்து…” என்று ஆரம்பிக்க, நான் உடனே கையமர்த்தி, “பொண்ணு ஊமையாவே இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, பாடு, ஆடுங்கறதெல்லாம் வேண்டாம்!” என்றேன். சூழலை லேசாக்கும் பொருட்டு, என்னுடைய பக்கத்திலிருந்து என்னோட ஒண்ணுவிட்ட அண்ணா (சிறுவயது முதலே அவருடன் ஒண்ணா விளையாடிய பழக்கம், இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு கடைசி நேரத்தில் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார், அதுவும் ராமன் மாமா, சுந்தர் அண்ணாவுக்குப் பிறகு) “நான் கடைசி நேரத்துல கேள்விப்பட்டு வந்ததால பொண்ணு பேரு தெரியலை, பொண்ணு பேரையாவது சொல்லச் சொல்லுங்கோஎன்றார். இது எனக்குப் பிடிச்சிருந்தது! அவள் தன்னுடைய பேரைச் சொல்ல வாயெடுக்குமுன் அவர்கள் தரப்பு பெண்மணி ஒருத்தி, “பேரு விஷ்வாம்பரா! பூமான்னு கூப்பிடுவோம்!” என்று சொல்ல, எனக்கு சட்டென்று ராமன் மாமா கோவிலில் வைத்து பெண் பார்த்த நிகழ்ச்சியை விவரித்தது நினைவு வந்தது. சிரிப்பும் வந்தது. உடனே அவருடைய காதில்மாமா! என்னவோ சொன்னேள், வீட்டுக்குப் போய் பாக்கறதுதான் ஸ்லாக்யம்னு!” அண்ணா பேர் கேட்டதுக்கு பொண்ணு பதில் சொல்லாம, யாரோ ஒரு மாமி பதில் சொல்றா? இப்ப நாம பாக்க வந்தது அந்தப் பொண்ணையா இல்லை அந்த மாமியையா?” என்று கேட்டேன். மாமா, “அதானே!” என்றவர், அவர்களிடம்என்ன மாமி இது? பொண்ணு குரலைக் கேக்கறதுக்காக கேட்டோம், நீங்க பதில் சொல்றேளே! பாருங்க, எம் மாப்ள குழம்பிட்டான்!” என்று பூடகமாக ஜோக் அடிக்க, சட்டென்று அங்கே ஒரு இயல்பு நிலவியது. அவளும் அதே பெயரைத் தன்னுடைய குரலில் கூறினாள். எனக்கும் பிடித்திருந்தது, குரலை மட்டுமல்ல, அவளையும்! எல்லோரும் ஒருவருக்கொருவர்அடடே! ஆத்மா-பூமா, விஸ்வஜித்-விஸ்வாம்பரா! பொருத்தமா இருக்கே!” என்றனர். என்னுடைய மனசுக்குள்ளும் அந்த ஒப்பீடு ஓடியது. விஸ்வம்பரா! விஸ்வம் என்றால் உலகம்; அம்பரம் என்றால் உடை. கல்யாணத்துக்குப் பிறகு நான்தான் அவள் உலகம் என்றிருப்பவள் எனக்கு உடை! பரவாயில்லையே! பெயர் பொருத்தம் நல்லாதானிருக்கு. இனி மனப்பொருத்தம் இருந்தால் வாழ்க்கையும் நல்லா இருக்கும்! என்று எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.

என் பக்கம் ஆளாளுக்குஆத்மா, விஸ்வாஎன்றெல்லாம் கூப்பிட்டு, பொண்ணை நன்னா பாத்துண்டியா? புடிச்சிருக்கா? என்று கேட்க, நான்முதல்ல பொண்ணுக்கு புடிச்சிருக்கான்னு தெரியட்டும்என்றேன். அவளுக்கு என்னைப் பிடித்திருப்பது அவள் கண்களில் தெரிந்தாலும், அவள் மூலமா எனக்குத் தெரியணுமே! அவளும் தலையசைக்கநானும் என்பக்கத்து மனுஷாளுக்கு கண்ணைக் காட்டினேன்.

அப்புறம் என்ன? மேற்கொண்டு பேச வேண்டியதைப் பேசிடலாமே? என்று அத்தை, மாமா எல்லாரும் கேட்க, மீண்டுமொருமுறை பெண்தரப்பு முகங்களில் ஒரு கவலை தோய்ந்த பரபரப்பு! வழக்கமான எல்லா பெண்வீட்டாரின் கவலை! அவர்களின் மனதைப் படித்துவிட்ட நான் இடதுபக்கம் திரும்பி அம்மாவிடம்வரதட்சணை, அது இதுன்னு எதுவும் கேக்காதே! நம்மை நம்பி வரவளைக் காப்பாத்த சக்தியிருந்தா கல்யாணம் பண்ணிக்கணும். பொண்ணு வீட்டுல வரதை நம்பி வாழ்க்கைய ஓட்டக் கூடாது, புரிஞ்சிக்கோ!” என்றேன். அம்மாவும் அப்பாவிடம் கிசுகிசுப்பாகப் பேசிவிட்டு, வெளிப்படையாக அறிவிப்பு செய்தாள், “வரதட்சணை அது இதுன்னெல்லாம் நாங்க கேக்கப் போறதில்லை. உங்க சக்திக்கு என்ன முடியுமோ, நீங்க என்ன தீர்மானம் பண்ணிருக்கேளோ, அதைப் பண்ணினா போறும்! ஒண்ணே ஒண்ணு மட்டும் எங்க கோரிக்கை, வரவா வயிறார சாப்டுட்டு, வாயார, மனசார வாழ்த்தணும்! அது மட்டும் போறும்!”

இதைக் கேட்டதும் பெண்வீட்டாரின் முகங்களில் நிம்மதி கலந்த திகைப்பு! இருதரப்பும் கசகசவென்று பேசிக் கொண்டிருந்தனர். எனது மனம் அவற்றில் செல்லவில்லை. மெல்ல வீட்டின் மேற்கூரையைப் பார்க்க, அங்கிருந்து சீதாதேவி மீண்டும் எட்டிப் பார்த்தாள்! மீண்டும் அவளுடன் என்னுடைய மனக்கண்ணில் சம்பாஷணை ஓடியது.

 “என்ன, உனக்கு பொண்ணைப் புடிச்சிருக்கா?”

 “ம்ம்ம்!” என்ற தலையசைப்பு என்னிடமிருந்து. “தாயே! நீ சொல்றபடி கேட்டுண்டிருக்கேன், நீதான் என்னை வழிநடத்தணும்என்றேன்.

 “தோ பாருடா! ஏதோ நான்தான் அவதார நோக்கமா அவரோட ஒட்டுப்பில்லாட்டமா ஒட்டிண்டு கானகம் போனேன். ஆனா என்னோட தங்கை ஊர்மிளாதான் பாவம்! லக்ஷ்மணனை விட்டு 14 வருஷம் தனியா கஷ்டப்பட்டா! என் தங்கை நிலைமை உன்னவளுக்கு வரக் கூடாது! எந்த நிலையிலும் அவளை தனியாவும் விடப்படாது, யார் முன்னிலையிலும் அவளை விட்டுக் கொடுக்கக் கூடாது! ஏன் தெரியுமோ? அவ உன்னை நம்பி வரா!”

 “அம்மா! நீ சொல்றது எனக்கு நன்னா புரியறது! அப்படியே பண்றேன்!”

 “சரி சரி, இப்ப கிளம்பறேன், உன்னோட கல்யாணத்துக்கு அவரோட வரேன்!” மனக்கண்ணிலிருந்து சீதாதேவி விடைபெற்ற அதே நேரம் இங்கே பேச்சு வார்த்தை முடிவடைந்திருந்தது. கல்யாணத் தேதியை நல்ல முகூர்த்தம் பார்த்து நிச்சயதார்த்தம் அன்று முடிவு பண்ணிக்கலாம் என்று இருதரப்பும் முடிவு செய்திருந்தனர்.

எல்லோரும் கிளம்பினோம். போகிற போக்கில் அவளுடைய தலை எங்காவது தென்படுகிறதா என்று யாரும் அறியாதவாறு கண்களால் துழாவினேன். எதிர்பார்த்த மாதிரியே ஒரு அறையின் கதவுக்குப் பின்னாலிருந்து அவள் முகம்! “போயிட்டு வரேன்என்ற பாவனையாக ஒரு சிறிய தலையசைப்பு என்னிடமிருந்து. அதே மாதிரி அவளிடமிருந்தும்!

வீட்டுக்கு வந்தபிறகு அன்றைய இரவில் பெயர் தெரியாதவரையார் யார் யார் அவள் யாரோ, ஊர் பேர்தான் தெரியாதோஎன்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது. வழக்கம்போல தூங்குவதற்கு முன் ரேடியோவைத் திருப்ப, இலங்கை வானொலியில் இரவின் மடியில் நிகழ்ச்சியில்நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ, இன்று முதல் நீ வேறோ, நான் வேறோஎன்ற பாடல் ஒலிபரப்பாகியது!

ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-25

வந்தவர்களனைவரும் எனக்குப் பெண் பார்க்கும் நாளைக் குறித்துவிட்டு கிளம்பினார்கள். பெரும்பான்மை இங்கிருந்து செல்வதாகவும், ஒரு சிலர் அவர்தம் வேலை நிமித்தமாக நேரடியாகப் பெண் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் பேசிக் கொண்டு கலைந்து சென்றனர்.

பெண் பார்க்கும் அந்த நாளும் வந்தது. அந்த நாளன்று மாலை 4-4.30 அளவில் அனைவரும் பெண் வீட்டில். வழக்கமான வரவேற்பு, உபசரிப்புக்குப் பிறகு இருதரப்பு பெரியவர்கள் என்ன ஆரம்பிச்சுடலாமா என்று கேட்டபோது, எங்க பக்கத்திலிருந்து ஒருவர், ஒரு பத்து நிமிஷம் பொறுங்கோ, ராமன் மாமாவும் சுந்தர் அண்ணாவும் வந்துடட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே இருவரும் பரபரப்பாக வந்திறங்கினர். “அதோ! அவாளும் வந்தாச்சு, ஆரம்பிச்சுடலாமே!” என்றனர் கோரஸாக.

எனக்கு ஏனோ பொழுது போகவில்லை. அப்படியே அறையைச் சுற்றி பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த வீட்டுப் பெண்களின் கைவேலைப்பாடுகள், அந்த வீட்டாரின் புகைப்படங்கள் என்று அந்த அறை அலங்கரிக்கப் பட்டிருந்தது. அந்த வீட்டு நபர்களின் அனைவருடைய பார்வையும் என்மீதே இருப்பதை உணர முடிந்தது. குறிப்பாக அங்கே குழுமியிருந்த இளவட்டப் பெண்கள். அவ்வப்போது அவர்கள் இரண்டிரண்டு பேராக அவர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பேச்சின் சாராம்சம் என்னைப் பற்றித்தான் என்பதையும் உணர முடிந்தது. அந்த இளம்பெண்களின் என்னைப் பற்றிய அவர்களுக்குள்ளான பேச்சு எனக்குள் ஒருவிதமான விவரிக்க முடியாத அவஸ்தையாக இருந்தது. மனசுக்குள் நெளிந்து கொண்டிருந்தேன். அதுதான் சரியான சமயமென்று என்னுடைய மனக்கண்ணுக்குள் சட்டென்று சீதாதேவி வந்தாள்! ஒருவிதமான அவஸ்தை உணர்வோடு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். என்னுடைய முக வரிகளைப் படித்தவள், சிறிய சிரிப்புடன்ஏண்டா, ரொம்பவும் அவஸ்தையா இருக்கோ?” என்று கேட்டாள்! நானும்ஆமாம்! ஏன் இப்படியெல்லாம்?” என்று கேட்டேன், இதற்கு மேல் எனக்குக் கேட்கத் தோன்றவில்லை.

 “ம்ம்ம்! இந்த அவஸ்தை உனக்கு மிஞ்சிப் போனா ஒரு மணி நேரம்தான். இதுக்கே இப்படி நெளியறியே! என்னையும் என்னைப் போன்ற பெண்களையும் நீயும் உன்னைப் போன்ற ஆண்களும் நினைச்சுப் பார்க்கிறீர்களா?” அணுகுண்டு கேள்வி சீதாதேவியிடமிருந்து! நான் புரியாமல் விழிக்க, அவள் தொடர்ந்தாள்.

 “கல்யாணமான என்னையே ஒருத்தன் அபகரிச்சுக் கொண்டு போய் அசோகவனத்துல தீய எண்ணத்தோட வெச்சான். அதுக்கப்புறம் அவனுக்குப் பாடம் புகட்ட என்னோட ஸ்ரீராமன் தன்னோட அம்புகளால போர்க்களத்துலசீதா மேல இவனுக்கு இருக்கற ஆசை இவன் மனசு தவிர உடம்புல எங்கெல்லாம் இருக்கோன்னு தேடிப் பிடிச்சுஅழிச்சு அதுக்கப்புறம் அவனோட உயிரையும் அழிச்சார்.”

இதைக் கேட்டதும் நான் ஒரு கேள்வியைக் கேட்க வாயெடுத்தேன், அவள்தான் இறைவியாயிற்றே! நான் என்ன கேட்கப் போகிறேன் என்பதை அவளே கேள்வியாகக் கேட்டாள்.

 “என்ன? நான் மாருதி மூலமா அவருக்கு ஒரு சேதி சொன்னேன். ஒருவேளை அரக்கன் சொன்ன கெடுவுக்குள்ள என்னை வந்து மீட்க முடியாம நான் செத்துட்டா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு! அதைத்தானே கேட்கப் போறே?”

நான் மௌனமாகத் தலையசைத்தேன். அவள் பதிலுரைத்தாள்:

 “உங்க எல்லாருக்கும் தெரியும், நானும் அவரும் ஸ்ரீவிஷ்ணு மஹாலக்ஷ்மி அவதாரம்னு. நாங்க பாட்டுக்கு அங்கேயே வைகுந்தத்துல சௌகர்யமா இருந்திருக்கலாம். ஆனா எங்களுக்கும் கடமைகள் இருக்கே! எங்களோட பரிபாலனத்துல இருக்கற நீங்க எப்போதெல்லாம் ஸநாதந தர்மத்திலிருந்து வழி மாறிப் போறேளோ, அப்பல்லாம் அவரும் தேவைப்பட்டா நானும் பூலோகத்துக்கு ஏதாவது ஒரு வடிவத்துல வந்து உங்களையெல்லாம் திருத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கே! அவருக்கு ஸ்ரீராம அவதாரத்துக்கு முன்பெல்லாம் அதிகமா மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லாதிருந்தது. ஆனா எப்போ நீங்க ஸநாதந தர்மத்திலிருந்து நழுவி, பருவத்தே பயிர் செய் அப்படிங்கற விஷயத்திலிருந்து விலகி கல்யாணத்துக்கு முன்னாடியே பருவக் கோளாறு காரணமா காதல்ங்கற பேர்ல பெண்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சீங்களோ, அப்பவே நாங்க முடிவு பண்ணினோம். மனித வடிவத்துலேயே வந்து மனிதர்கள் போலவே வாழ்ந்து, அவர்கள் அனுபவிக்கும் எல்லாத் துன்பங்களையும் நாங்களும் அனுபவித்து, அதன் மூலமா உங்களுக்கெல்லாம் பாடம் சொல்லணும்னு நினைச்சோம், வந்தோம், வாழ்ந்தோம்.”

 “இப்போ நீ கேட்ட கேள்விக்கு வரேன். நான் மாருதி மூலமா அந்த சேதியை சொன்னப்போ நான் ஸ்ரீராமனின் மனைவியா பேசலை. ஜனகனின் மகள் ஜானகியா பேசினேன். ஏன் தெரியுமா? ஸ்ரீராமனின் மனைவியா பேசியிருந்தா எனக்கு என் கணவனைப் பற்றி நன்றாகத் தெரியும். என்னைத் தவிர வேற எந்தப் பெண்ணுக்கும் அவர் மனசுல இடம் கிடையாதுன்னு! அப்படியிருக்கும்போது அவருக்கு நான் இப்படிச் சொல்லியிருப்பேன்: “நீங்க ஆரம்பத்துலயே சொன்னீங்க, அது மாய மான்! அது உனக்கு வேண்டாம்னு. ஆனா நான்தான் உங்க பேச்சைக் கேட்காம பிடிவாதமா இருந்தேன். தவ வாழ்க்கை வாழணும்னு காட்டுக்கு வந்தவளுக்கு ஆசை இருந்திருக்கக் கூடாது! தப்பு பண்ணிட்டேன். நீங்களும் என்னோட ஆசையை நிறைவேத்தறேன்னு கிளம்பிப் போயிட்டீங்க. அந்த மாயாவி மாரீசன் சாகும்போது கூட தன்னுடைய கயமைத்தனத்தை விடாம உங்க குரல்ல ஓலம் எழுப்பினதும் லக்ஷ்மணனைப் போய்ப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தினேன். அவன் போக மறுத்தப்போ அவன் மேல அநியாயமா தீயசொற்கள் சொல்லி அவனையும் அங்கிருந்து விரட்டினேன். இது என்னோட ரெண்டாவது தப்பு. இந்த ரெண்டுக்கும் தண்டனையா இப்போ இங்கே துன்பம் அனுபவிச்சிட்டேன். என்னோட தவறுகளை மன்னிச்சு, என்னை மீட்டுண்டு போக சீக்கிரம் வாங்கோன்னு சொல்லியிருப்பேன். ஆனா நாங்க என்ன உங்களை மாதிரி பத்தோட பதினொண்ணா பொறந்து வாழ்ந்துட்டுப் போகவா இங்க வந்தோம்? ஆண்களாகிய நீங்களெல்லாம் உணரணும். நீங்களும் ஒருகாலத்துல ஒரு பெண்ணுக்கு தகப்பனா வருவீங்க, அப்போ உங்க பெண்ணைப் பிற ஆண்கள் தீய எண்ணத்தோட பார்த்தா ஒரு தகப்பனா ஒரு ஆணோட மனசு எப்படித் துடிக்கும்னு உங்களுக்கெல்லாம் புரியணும். அதனாலதான் அந்த நேரத்துல நான் ஜனகன் மகள் ஜானகியா பேசினேன்.

எங்களோட வாழ்க்கையைப் பார்த்தபிறகும் இப்பவும் ஆண்களாகிய நீங்களெல்லாம் ஏன் பிஞ்சிலேயே வெம்பிப் போகிறீர்கள்? பூலோகத்துல ஸநாதந தர்மம் நிலைச்சிருக்கணும்னா நீங்களெல்லாம் நல்ல குடும்பமா இருக்கணும். அப்படி இருக்கணும்னா எந்தச் செயலை எந்தப் பருவத்தில் செய்யணுமோ அப்பதான் செய்யணும். விளையாட்டுப் பருவத்துல விளையாடணும்; படிக்க வேண்டிய வயசுல படிக்கணும்; வேலைக்குப் போக வேண்டிய வேலைக்கு போய் வாழ்வாதாரத்துக்கு சம்பாதிக்கணும். வீட்டுல இருக்கற பெரியவங்க கல்யாணம் செஞ்சு வெக்கறது வெறுமனே ஒரு பெண்ணை ஒரு ஆணோட சேர்க்கற காரியம் மட்டுமில்லை. இரண்டு நல்ல குடும்பங்கள் அந்தக் கல்யாணம் மூலமா ஒண்ணு சேரணும். தன்னோடது போலவே ஒரு நல்ல குடும்பத்தைக் கண்டுபிடிக்கணும்னா அதுக்குன்னு ஒரு வேளை வரும். அதுவரை ஆண்கள் மனக்கட்டுப்பாடோட இருக்கணும்.

இந்த நேரம் மீண்டும் நான் ஏதோ கேட்க வாயெடுத்தேன், மறுபடியும் நான் என்ன கேட்கப் போகிறேன் என்பதை அவளே கேள்வியாகக் கேட்டாள்.

 “என்ன? பொண்ணுங்க நீங்க எப்படின்னுதானே?” மீண்டும் நான் மௌனமாகத் தலையசைத்தேன்! வேறு வழி?

சீதாதேவி தொடர்ந்தாள்: “பெண்களாகிய எங்களுக்கும் ஆசாபாசங்கள் உண்டு. எங்களைப் பொறுத்தமட்டில் நாங்களும் பிறந்த வீட்டில் எந்தவிதமான கவலையுமின்றி சந்தோஷமா இருந்தமாதிரி எங்களுக்கும் ஒரு நல்ல குடும்பம் புகுந்தவீடா கிடைப்பதற்காக நாங்களும் காத்துக் கொண்டுதான் இருக்கோம்”.

சீதோபதேசம் என்னுடைய மனசுக்குள் எனக்கு நடந்து கொண்டிருந்த வேளை, சட்டென்று என் முன்னால் வைக்கப்பட்ட பஜ்ஜி சொஜ்ஜி மணம் சீதாதேவியின் உரையை தற்காலிகமாக நிறுத்தியது.

இப்போதைக்கு கொஞ்ச நேரம் வந்த வேலையைப் பாக்கறேன். மேற்கொண்டு சீதாதேவி என்ன உபதேசம் செஞ்சாங்கிறதை அப்புறமா சொல்றேன்!

ஆத்மாவின் பயணம் தொடரும்!

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-24

என்னுடைய வீடு அவ்வப்போது பரபரப்பில் ஆழ்வதும், அடங்குவதுமாக இருந்தது. காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. ஏதாவது ஜாதகம் பொருந்தியிருக்கும், பரபரப்பு வரும்; விசாரித்துப் பார்க்கும்போது பெண் வீட்டுக் குடும்பம் ஏதாவது ஒருவகையில் பொருந்தாமலிருக்கும். குடும்பம் அருமையாக இருக்கும்; பரபரப்பு வரும்; கிட்டே போனால் ஒரே கோத்திரமாக இருக்கும்!

இப்படியே பல ஜாதகங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. அம்மாவுக்குத் தெரிஞ்சவங்க, அப்பாவுக்கு வேண்டியவங்க, ரெண்டு மாமா வழிகளில் என நிறைய வந்து போய்க் கொண்டிருந்தன.

 “என்ன இது! இவனுக்கு இடம் அமையறதுக்குள்ள குருபலனே தீர்ந்துடும் போல இருக்கே!” அம்மாவின் கவலை இது!

இவ்வாறு ஏறக்குறைய சில மாதங்கள் உருண்டோடின. இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த பரிவர்த்தனையில் பையனுக்கும் பொண்ணுக்கும் ஜாதகத்தில் எந்த இடத்தில் எந்த க்ரஹங்கள் இருக்கணும் என்பது ஏறக்குறைய வீட்டிலுள்ள எல்லோருக்குமே அத்துபடியாகிவிட்டது!

ஏதோ ஒரு சோம்பேறித்தனமான ஞாயிற்றுக் கிழமையன்று வீட்டுக்கு ஒரு பெண்மணி வந்தார். அம்மா அவரைப் பார்த்தவுடன், “நீலா! வாவா! ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து! எப்படி இருக்கே? இப்பதான் என் நினைப்பு உனக்கு வந்துதா?” என்று சரமாரி கேள்விகளால் வரவேற்க, அவரும்அப்படித்தான் வெச்சுக்கோயேன்! நீ உன் பையனுக்கு ஜாதகம் பாக்கறதா கேள்விப் பட்டேன். எங்கிட்ட ஒரு ஜாதகம் வந்திருக்கு! அது என் பையனுக்கு சரிப்பட்டு வரலை! ஒரே கோத்திரமா போயிடுத்து! அதான், உனக்காவது பயன்படட்டுமேன்னு எடுத்துண்டு வந்தேன்!”

 “அப்படியா! எங்கே, குடு பாக்கலாம்!” அம்மாவிடம் பரபரப்பு!

 “ஏண்டி, வந்தவளுக்கு ஒரு வா தூத்தம் குடுப்போம், காபி குடுப்போம்னு இல்லாம இப்படியா பறந்து கட்டுவ?”

 “அடடா! உன்னை ரொம்ப நாள் கழிச்சு பாத்தது, நீ சொன்ன விஷயத்தைக் கேட்டது, இதுல இந்த விஷயத்தை மறந்துட்டேனே!”

 “ரொம்பவும் விசாரப் படாதே, போய் காபி போட்டு எடுத்துண்டு வா, நிதானமா தரேன்”!

தோழிகள் இருவரும் சிரித்துக் கொண்டே சமையற்கட்டுக்குள் நுழைந்தனர். அதற்குப் பிறகு பழங்கதைகள் பேசித் தீர்த்தனர். கிளம்புவதற்கு முன்னால் அவர் தன்னுடைய பையிலிருந்து ஜாதகத்தை எடுத்து அம்மாவிடம் தர, அம்மாவும் வாங்கி அதை பூஜையறையில் வைத்துவிட்டு அந்தப் பெண்மணியை வழியனுப்பி விட்டு வந்து உட்காரவும், வெளியே போயிருந்த அப்பா, தாத்தா பாட்டி எல்லாரும் உள்ளே வர சரியாக இருந்தது.

அப்பா வந்து சென்றவரைப் பற்றி விசாரிக்க, அம்மா நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டு, “ஒரு எட்டு நம்ம வாத்யாரைப் பார்த்துட்டு வந்துடலாமா?” என்று கேட்டாள். மணியைப் பார்த்த அப்பா, இப்ப ராகுகாலமா இருக்கு, நாளைக்குப் போய் பார்த்துட்டு வரலாம்! என்று ஸஸ்பென்ஸ் வைத்து விட்டார்.

அதன்படி மறுநாள் ஜாதக அலசல் முடிந்தது. பெண் வீட்டுக் குடும்பமும் ஜாதகமும் த்ருப்தியாக இருப்பதாக உணர்ந்தவுடன் அப்பா என்னோட ரெண்டு மாமா வீட்டுக்குச் சொல்லியனுப்பி, பெண் பார்க்க நாள் குறிப்பதற்காக பேச ஆரம்பித்தார்.

எனக்கென்னவோ, பெண் வீட்டுக்குப் போய் பார்ப்பதென்பது சற்று சங்கோஜமாக இருந்தது. அதைப் பற்றி ராமன் மாமாகிட்ட சொன்னேன். அவர், “விவரம் புரியாம பேசாதடா! கோவில்ல நிறைய பொண்ணுங்க வர போக இருப்பாங்க! நீ எவளையாவது பார்த்துட்டு, சரி எனக்குப் புடிச்சிருக்குன்னு சொல்லுவ! காசியாத்திரை போயிட்டு திரும்பி வரும்போது வேற எவளாவது வந்து நிப்பா! மாலைய கழுத்துல மாட்டிண்டு ஊர் பாக்க சபைல வந்து நின்னவாட்டி முடியாதுன்னு சொல்ல முடியுமா?” என்றார்!

வீட்டில் குபீரென்று ஒரு சிரிப்பு! நான், “என்ன மாமா, இப்படி சொல்றேள்! சொந்த அனுபவமோ?” என்று கேட்டேன்.

அதற்கு அவர், “ஆமாண்டா! எனக்கு அப்படித்தான் ஆச்சு! கோவில்ல வெச்சுஇதோ! பொண்ணப் பாத்துக்கஅப்படின்னாங்க! நான் திரும்பிப் பாக்கற நேரம் பயபக்தியா ஒருத்தி முழிச்சு முழிச்சு ஸ்வாமியையே பார்த்துண்டு இருந்தா! அவதான் பொண்ணுன்னு நெனச்சு நானும் சரின்னுட்டேன்! காசி யாத்திரை முடிஞ்சு மண்டபத்து வாசல்ல காத்துண்டிருந்தப்போ இதோ, இவ கழுத்து நிறைய மாலையோட வந்து நின்னா! நேக்கு பக்குனு ஆயிடுத்து! நிச்சயத்தன்னிக்கு கூட இவ ஓரமா ஒளிஞ்சு நின்னுண்டு என்னையே பார்த்துண்டு இருந்தா, அதுக்குக் காரணம் அப்ப புரியல! அப்பறந்தான் தப்பு எம்பக்கம்னு புரிஞ்சுது! இந்த அழகுல பஜ்ஜி சொஜ்ஜி வேற மிஸ்ஸிங்!” என்று சொல்லவும், வெடிச்சிரிப்பு அலையலையாக அறைக்குள்! ஆனா குமுதா அத்தை மட்டும் உர்ர்ருன்னு மாமாவைப் பார்த்துக் கொண்டே இருக்க, “பாவி மனுஷா! இத்தனை நாளும் போனா போறதுன்னுதான் குடும்பம் நடத்துறியா?” என்ற மனவரிகளைப் பார்த்துவிட்ட மாமாவும் திருதிருவென்று விழிக்க ஆரம்பித்து விட்டார்!

அதைப் பார்த்துவிட்ட அம்மாவும், சமாதானமாக, “அண்ணா! இப்ப என்ன, உங்களுக்கு பஜ்ஜி சொஜ்ஜி வேணும், அவ்வளவுதானே, இதோ அரைமணி நேரத்துல ரெடி பண்ணிட்டா போச்சு!” என்று சொல்ல, மாமாஅது…. அதுவந்துநான் சும்மா, தமாஷுக்கு சொன்னேன்என்று அத்தையைப் பார்த்தவாறே சமாளிக்க, அம்மா அத்தையைப் பார்த்துமன்னி! நீங்க உள்ள வந்து இந்த கத்திரிக்கா, வாழக்காய சீவிக் குடுங்கோ, நான் கேசரி கிளறிடறேன்என்று தற்காலிகமாக மாமாவைக் காப்பாற்ற முயற்சி செய்தாள்! அத்தையும் விருட்டென்று எழுந்து சமையற்கட்டுக்குப் போகிற போக்கில் மாமாவைக் கடந்து செல்லும்போதுஆத்துக்கு வாங்கோ, இருக்கு கச்சேரிஎன்னும் செய்தியை விழியால் பேசிவிட்டுப் போக, மற்றவர்கள் பொது விஷயங்களைப் பேசுவதில் இறங்கினர்.

இத்தனை அமளியில் ஒரு விஷயம் மட்டும் எனக்குத் தெரியவே இல்லை! அது, பொண்ணோட பெயர் என்ன என்று யாருமே சொல்லவில்லை, பேச்சுவாக்கில் கூட அது வெளிவரவில்லை! அப்பா மாமாக்களிடம் கேட்க எனக்குக் கூச்சமாக இருந்தது.

என்ன இருந்தாலும் அம்மாவுக்குப் பிறகு கொஞ்சம் சௌஜன்யமா பேசலாம்னா அது அத்தைகள் கிட்டதான் முடியும். ரெண்டு அத்தைகள்ள யாராவது ஒருத்தர் பொண்ணு பேரு என்னானு சொல்லுங்களேன்!

சமையலறையிலிருந்து வந்த நெய் வாசனையைவைத்து அம்மா கேசரி கிளறுவது புரிந்தது, எனக்கு? பொண்ணு பேரு என்னங்கிற கேள்வி மனசைக் கிளறுது!

ஆத்மாவின் பயணம் தொடரும்!