Sunday, April 28, 2019

ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-16

அன்னிக்கு நான் பள்ளிக்கூடத்துல டீச்சர்கிட்ட சொன்னது எப்படியோ என்னோட அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சுடுச்சு. டீச்சர் அவங்ககிட்ட என்ன சொன்னாங்கன்னு தெரியலை. அம்மா எங்கிட்ட, “டீச்சர்கிட்ட அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா!” அப்படின்னாங்க. எனக்குப் புரியலை! நான் ஏதாவது தப்பா சொன்னாலோ, எழுதினாலோ அம்மா, அப்பா, டீச்சர் எல்லாருமேஇல்லை, இதை இப்படி சொல்லாதே, எழுதாதேன்னு சொல்லிட்டு, எப்படி பண்ணனும்னு சொல்றாங்களே! நான் மட்டும் அதே மாதிரி ஏதாவது தப்புன்னா சொல்லக் கூடாதா? நீங்களே சொல்லுங்க!

இதை சொல்றச்சே எனக்கு வேற ரெண்டு ஞாபகத்துக்கு வருது! அந்த ரெண்டு என்ன தெரியுமா?

ஒருதடவை ஊர்ல திடீர்னு வானம் இருட்டா ஆச்சு. பெரிசா மழை பெஞ்சுது. அதைவிட பெரிசா காத்து அடிச்சுது. இது எனக்கு ரொம்ப புதுசா இருந்துது. மத்தவங்க பேசறத கேட்டப்போ, அது என்னவோ, முயல் காத்து அப்படின்னு தெரிஞ்சுது. இது பத்தி அப்பாகிட்ட கேட்டேன், “அப்பா, இந்த முயல் காத்துன்னா என்னப்பா? வெளில பாத்தா காத்து மட்டும்தான் இருக்கு. முயல் ஒண்ணு கூட ஓடலையே?” அப்படின்னு. அதுக்கு அப்பா சிரிச்சுகிட்டே, “அது முயல் காத்து இல்லடா, புயல் காத்துஅப்படின்னார். அது எப்படி வரும்னும் சொன்னார். உங்களுக்குந்தான் அது எப்படி வரும்னு தெரியுமே? அதுதானே?

அப்புறமா, நாங்க ஊருக்கு போகும்போது அப்பாவும் தாத்தாவும் பேசிக்குவா. எதாவது புது ஊருன்னா, அந்த ஊரு இங்கருந்து எவ்வளவு தூரம்னு பேசிக்கும்போது ஒரு தடவை அப்பா, இங்கேருந்து 200 மயில் இருக்குன்னு சொன்னார். நானும் அதை கேட்டேன். நாங்க அந்த ஊருக்கு போகும்போது, வழில அப்படியே வெளில எட்டி பார்த்துகிட்டே போனேன். ஆனா, ஒரு மயில் கூட கண்ல படலை. நான் இப்படி பார்த்துகிட்டு வர்றதை அம்மா, அப்பா எல்லாருமே பார்த்துட்டு, அப்படி என்னடா வெளில பார்த்துகிட்டு வர்றேன்னு கேட்டாங்க. நானும் கேட்டேன், “அம்மா! தாத்தாகிட்ட அப்பா சொன்னாளே, இந்த ஊருக்கு 200 மயில் இருக்குன்னு! ஆனா இதுவரைக்கும் ஒரு மயில் கூட காணுமே!” அப்படின்னு. அதுக்கு அப்பா சொன்னா, “ஏண்டா, நீ முயல் காத்துன்னு சொன்ன மாதிரி இதையும் மயில்னு நெனச்சுகிட்டிருக்கியா? அது மயில் இல்லடா, மைல்! அது இங்க்லீஷ் வார்த்தை!”

 இங்க்லீஷ்னா என்ன?” இது நான்.

 அது தமிழ் மாதிரிடா! தமிழ்ல அனா, ஆவன்னா மாதிரி அதுலயும் இருக்கு. அடுத்த வருஷம் நீ அதையும் பள்ளிக்கூடத்துல படிப்பே!”

இதுவும் எனக்கு புதுசு!

இதுக்கப்புறம், ஒரு தடவை என்னோட சித்தப்பா ஊருக்கு போயிருந்தப்ப, அங்க இருக்கற கோவிலுக்குப் போனோம். அங்கேயும் ஸ்லோகம் எல்லாம் சொன்னோம். எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. வீட்லயும் சாமி இருக்கு, இங்க கோவில்லயும் சாமி இருக்கு. எனக்கு என்ன சந்தேகம்னா, வீட்டுலயே சாமி இருக்கும்போது ஏன் நாம் இவ்வளவு தூரம் வந்து இங்கேயும் அதே சாமிய பாக்கணும்? தாத்தாதானே வீட்ல பூஜை பண்றார்? அதனால அவர்கிட்டே கேட்டேன். அதுக்கு அவர் சொன்னார்,

 நம்ம வீட்டுக்கு யாராவது வந்தா அவங்களை வாங்கோ வாங்கோன்னு வீட்டுக்குள்ள கூப்பிட்டு, ஸ்ரமபரிகாரத்துக்கு தண்ணி குடிக்க குடுத்து, அவங்களுக்கு உபசாரமெல்லாம் பண்ணி, அவங்களுக்கு புடிச்சதை சாப்பிடக் குடுத்து, அதுக்கப்புறமா நமக்கு ஏதாவது அவங்களால ஆகணும்னா அவங்ககிட்ட இந்த காரியத்தை இப்படி செஞ்சு குடுங்கோன்னு கேக்கறோமில்லையா, அது மாதிரிதான் நாம் நம்ம வீட்டுல சாமிக்கு பூஜை பண்ணி, நமக்கு வேண்டியதை சாமிகிட்ட கேக்கறோம்.”

 அப்படின்னா, நாம் எதுக்கு கோவிலுக்கு போறோம்?”

 நாமெல்லாம் அவங்க வீட்டுக்கு போற மாதிரிடா! நானோ உங்க அப்பாவோ எங்களுக்கு ஏதாவது வேலையாகணும்னா யாரால ஆகணுமோ அவங்க இருக்கற இடத்துக்குப் போய் பார்த்துட்டு வர்றோமில்லையா? அது மாதிரி!”

இது எனக்கு ஏதோ புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு! ம்ம்ம்!!!???

 (இதைச் சொல்லிவிட்டு, ஆத்மாராம் அங்கிருந்து மெல்ல யோசித்தபடியே நகர்ந்தான். நாம் அவனை இப்போதைக்கு இப்படியே விட்டுவிடுவோம். அவன் யோசித்துக் கொண்டிருக்கட்டும். இதுக்கு நடுவுல அவனுடைய தாத்தாவும் அப்பாவும் பேசிக் கொள்வதை கேட்போமா?)

தாத்தா, “ஏண்டா, உம்புள்ளை விஷ்வா பேசறதை கேட்டியோ?”

அப்பா, “ம்ம்ம்! கேட்டேன். வரவர ரொம்பவே பெரியமனுஷத் தனமா பேசறான். என்ன பண்ணலாம்? இப்படியெல்லாம் பேசாதேன்னு கண்டிச்சு வெக்கலாமா?”

 அந்த மாதிரி தப்பையெல்லாம் பண்ணிடாதே! அவன் இப்படியெல்லாம் பேசறான்னா, அவனுக்குள்ள ஒரு தேடல் ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம்.”

 சரி, இப்ப என்ன பண்ணலாங்கறேள்?”

 பேசாம உபநயனம் பண்ணி வெச்சுடலாம். அதுக்கப்புறமா அவனுக்கு படிக்க, அப்யாஸம் பண்ணன்னு நிறைய கிடைக்கும். அதுலேர்ந்து அவன் நிறைய நல்ல விஷயங்களை தானே கத்துக்குவான்.”

 அப்படின்னா, நீங்களே ஒரு நல்ல நாளா பாருங்களேன், செஞ்சிடலாம்!”

 ம்ம்ம்! வர்ற தைக்கு அவனுக்கு எட்டு முடிஞ்சு ஒன்பது ஆரம்பிச்சுடும். அதுக்கப்புறமா வர்ற ஒரு முகூர்த்தத்துல பண்ணிடலாம்!”

இவ்வாறாக அவ்விருவருக்குள் சம்பாஷணை ஓடியது.

ஆக, விஷ்வஜித் என்கிற ஆத்மாராமிற்கு கூடிய விரைவில் உபநயனம் நடக்கவுள்ளது! நடக்கட்டும்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-15

எனக்கு ஜுரம் வந்து ஊசி போட்டுதுல்லியா? அதனால எனக்கு உடம்பு சரியாயிடுச்சு! என்னோட வழக்கமான வேலை ஆரம்பிச்சாச்சு! அம்மா அப்பாகிட்ட உக்காந்து படிக்கிறது, விளையாடறது, பாட்டிகிட்ட கதை கேக்கறது, காது தொட்டுப் பாக்கறது எல்லாம்!

இந்த காது தொட்டுப் பாக்கறது எவ்வளவு நாள் போச்சுன்னு தெரியலை. இதுக்கு நடுவுல எனக்கு மூணுதடவை பொறந்தநாள் வந்து போயிடுச்சு. திடீர்னு ஒருநாள் நான் காதை தொட்டுப் பார்க்க, என்னால் தொட முடிஞ்சுது! என்னோட கை காதுக்கு கீழ வரை வந்துது! அப்பாகிட்ட காட்டினேன், இது பாருப்பா, என்னால தொட முடியுதுன்னு தொட்டு காட்டினேன். அப்பாவும் பார்த்துட்டு, “சரிதான், இன்னும் ஒரு மாசத்துல பள்ளிக்கூடம் திறப்பாங்க, அப்ப நீ போலாம்!” அப்படின்னா! எனக்கு ஒரே குஷி! நானும் மத்த மத்த அண்ணா, அக்கா மாதிரி பள்ளிக்கூடம் போகப் போறேன்!

அதே மாதிரி ஒருநாள் அப்பாவும் அம்மாவும் என்னை வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டாங்க. மறுநாள்லேர்ந்து நானும் புதுசா ட்ராயர் சட்டை போட்டுகிட்டு, புது சிலேட்டு, புஸ்தகம் ரெண்டையும் புது பைல போட்டுகிட்டு, பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சேன். அங்க எனக்கு படிக்கறது அப்படி ஒண்ணும் புதுசா தெரியலை. அங்கேயும் ஒரு அக்கா (அவங்களை டீச்சர்னு சொல்லணுமாம்) எனக்கு அதே அனா, ஆவன்னாதான் சொல்லிக் கொடுத்து, எழுதவும் சொன்னாங்க. நான் இதெல்லாம் வீட்லயே படிச்சதால, எல்லாருக்கும் முன்னால டீச்சர் சொன்னதையெல்லாம் கிடுகிடுன்னு சிலேட்டுல எழுதி டீச்சர்கிட்ட காட்டி ரைட்டு வாங்கிடுவேன்!

அங்கே எனக்கு என்ன புதுசுன்னா, அங்கே என்னை மாதிரியே நிறைய பேர் இருந்தாங்க. எனக்கு அவங்க எல்லாரையும் புடிச்சிருந்தது. அவங்களுக்கும் என்னை புடிச்சிருந்தது. நாங்க எல்லாரும் சேர்ந்து ஒண்ணா விளையாடுவோம். இதுநாள் வரைக்கும் நான் வீட்ல தனியாதான் விளையாடிட்டிருந்தேன். இப்ப எங்கூட நிறைய பேர் விளையாடறாங்க. அவங்க கூட விளையாடறதுக்காகவே நான் தினமும் பள்ளிக்கூடம் போறேன். அங்க தினமும் காலைல போனதும் எல்லாரும் வரிசையா நிக்கணும். அங்க எனக்கு புதுசா ரெண்டு பாட்டு தெரிஞ்சுது. ஒண்ணுநீராரும்னு ஆரம்பிக்கும். இன்னொண்ணுஜனகணமனன்னு ஆரம்பிக்கும். இது ரெண்டுமே எனக்கு ரொம்பப் புடிச்சிருந்தது. இந்த ரெண்டையும் நான் வீட்டு வாசல்ல இருக்கற திண்ணை மேல நின்னுகிட்டு பாடுவேன்.

அதுக்கப்புறமா, எங்களுக்கு புதுசா ஒரு டீச்சர் சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சாங்க. இப்பல்லாம், அ சொன்னா, அணில் அப்படின்னும், ஆ சொன்னா ஆடு, இ சொன்னா இலை இப்படியெல்லாம் சொல்லச் சொன்னாங்க, எழுதவும் சொன்னாங்க. இதெல்லாம் நான் அங்கேயும் படிச்சுட்டு, வீட்டுலயும் படிச்சுட்டு எழுதணும். பள்ளிக்கூடத்துல டீச்சர், வீட்டுல அம்மா இல்லைன்னா அப்பா சொல்லித் தராங்க.

ஒருநாள் இப்படித்தான், வீட்டுல அம்மா சொல்லித் தரும்போது, நான் சொன்னேன், அடுத்த நாள் இதை டீச்சர் சொல்லுவாங்கம்மா அப்படின்னு. அதுக்கு அம்மா, “பரவாயில்லடா, நீ கொஞ்சம் முன்னாடியே தெரிஞ்சுகிட்டு போ. அப்பதான் டீச்சர் சொல்லும்போது உனக்கு இன்னும் நல்லா புரியும்அப்படின்னாங்க. நானும் சரின்னு படிச்சிட்டு, எழுதிப் பாத்துட்டு போவேன்.

மறுநாள் காலைல பள்ளிக்கூடத்துல டீச்சர் புஸ்தகத்தைப் பார்த்து சொல்லிக் கொடுத்துட்டு, அதை அப்படியே அங்க கறுப்பா இருக்கற சுவத்துல எழுதினாங்க. அவங்க எழுதிப் போட்டதுல ஒண்ணு மட்டும் நான் படிச்ச மாதிரி இல்லாம வேற மாதிரி இருந்தது. என்னன்னு அதை உத்துப் பாத்துட்டு, என்னோட புஸ்தகத்தையும் பாத்தா, டீச்சர் ஒரு வார்த்தையை மாத்தி எழுதிட்டாங்க!

அவங்கசெவ்வானம்அப்படின்னு எழுதறதுக்கு பதிலா, “சொவ்வானம்அப்படின்னு எழுதிட்டாங்க! நான் உடனே எழுந்து டீச்சர்கிட்ட சொன்னேன், “டீச்சர், நீங்க செவ்வானம் அப்படின்னு எழுதறதுக்கு பதிலா சொவ்வானம் அப்படின்னு எழுதிட்டீங்க! “க்கு பக்கத்துல இருக்கற காலை ஒடிங்க!”


ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-14

என்னோட அத்தை ரெண்டு பேரும் வந்து பாத்துட்டு போன மறுநாள் கார்த்தால வழக்கமான ஸ்லோக ஒலி, ஊதுவத்தி வாசனை, எல்லாரும் பரபரன்னு வேலை. ஆனால் என்னால வழக்கம்போல எந்திரிக்க முடியலை. உடம்பெல்லாம் வலிக்குது. கண்ணு எரியுது. கூடவே வெயில்ல நிக்கற மாதிரி உடம்பெல்லாம் சூடா இருக்கு. என்னன்னு தெரியலை.

அம்மா வந்து தொட்டு பாத்துட்டு, “என்னது! குழந்தைக்கு ஜுரம் மாதிரி இருக்கே!” அப்படின்னு சொல்லிட்டு என்ன, இப்படி அனலா அடிக்கறதே! எப்படி திடீர்னு! தெரியலையே!” என்றபடி பாட்டி, அப்பா, தாத்தாகிட்ட விஷயத்தை சொல்லப் போனா. அப்பதான் எனக்கு உவ்வா காச்சல் வந்திருக்குன்னு தெரிஞ்சுது. என்னால கண்ணு திறக்க முடியலை. ஹ்ம், ஹ்ம்னு முனகிட்டே இருந்தேன். அப்பப்ப நாக்கு, தொண்டையெல்லாம் காஞ்சு போயிடுது.

இந்த மாதிரி ரெண்டு மூணு தடவை நான் இன்னும் சின்ன பாப்பாவா இருக்கும்போது வந்திருக்காம். அம்மா பேசிட்டிருந்தா. ஆனா எனக்கு அதெல்லாம் ஞாபகமில்லை. என்னவோ, இப்பதான் முதல் தடவையா வந்த மாதிரி இருக்கு. இது எனக்கு புதுசா இருக்கு.

எனக்கு இப்படி வந்திருக்குன்னு தெரிஞ்சுகிட்டு, பக்கத்து வீட்டிலிருந்தெல்லாம் வந்து பாத்தாங்க. ஒண்ணு ரெண்டு பேர், இது த்ருஷ்டியா இருக்கும், சுத்திப் போடுங்கன்னு சொல்லிட்டிருந்தாங்க. அது என்னன்னு தெரியலை. பாட்டியும், இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமயா இருக்கு. இன்னிக்கு சாயந்திரம் சுத்திப் போடலாம்னு சொன்னா. என்ன பண்ணுவான்னு தெரியலை.

இந்த உவ்வா காச்சம் வந்ததால, என்னால இன்னிக்கு விளையாட முடியாது! என்ன செய்யறதுன்னு தெரியலை. அம்மாவும் பாட்டியும் நான் வழக்கமா சாப்டறதை தராம, வேற என்னவோ குடுத்தாங்க. ஆனா என்னால முழுசா சாப்பிட முடியலை. அதனால ரொம்ப அயர்ச்சியா இருக்கு. எனக்கு எதனால இப்படி வந்துச்சுன்னு தெரியலை. இப்படி இனி திரும்ப திரும்ப வருமா? தெரியலை. நாள் பூரா படுத்துகிட்டே இருந்தேன். அயர்ச்சி அதிகமா இருக்கறதால தூங்கிட்டே இருந்தேன். சாயந்திரமா பாட்டி கைல உப்பு மிளகா ரெண்டையும் எடுத்துகிட்டு வந்து, என்னை அம்மா மடிலஇப்படி கிழக்கு பார்த்து உட்காருன்னு அம்மாவைப் பார்த்து சொல்லிட்டு, இப்படி மூணு தடவை, அப்படி மூணு தடவை சுத்தினா. அப்படி சுத்தும்போது என்னவோ முணுமுணுன்னு சொல்லிட்டே சுத்தினா. என்ன சொன்னான்னு தெரியலை. சுத்தி முடிச்சுட்டு, அம்மாவைப் பார்த்து, “கொஞ்சம் நகர்ந்து உட்காருன்னு சொல்லிட்டு, சமையலறைக்கு போய் எரிஞ்சிகிட்டிருக்கற அடுப்புல உப்பு மிளகா ரெண்டையும் போட்டா. அது ரெண்டும் படபடன்னு வெடிச்சுது. பாட்டி அதைப் பார்த்துட்டு, “பக்கத்து வீட்டு அம்புஜம் சொன்னது சரிதான், குழந்தைக்கு ரொம்ப த்ருஷ்டின்னா!

அதுக்கப்புறம் அம்மா என்னைத் தூக்கி வெச்சுகிட்டு, பாட்டிகிட்டஅம்மா! நான் டாக்டரைப் பார்த்துட்டு வரேன்னு சொன்னா. டாக்டர்னா? இந்த ஊசியெல்லாம் போடுவாங்களே! அங்கேயா! எனக்கு லேசா பயமா இருந்துச்சு. அங்கே போனா, என்னை மாதிரியே நிறைய பேர் வந்திருந்தாங்க. அப்படியே சுத்தி எல்லாரையும் பார்த்தேன். அவங்கள்ள ஒரு பெரியக்கா உட்கார்ந்திருந்தாங்க. அவங்களை எனக்கு நல்லா தெரியும். ரொம்ப நாள் முன்னால அவங்களுக்கு டும்மடக்கா கல்யாணம் நடந்துச்சு. அதுக்கப்புறம் இப்பதான் பாக்கறேன். ஆனா, இப்ப அவங்களுக்கு தொப்பா ரொம்ப பெரிசா இருக்கு! இதுக்கு முன்னாடி இப்படி இல்லை. அம்மாகிட்ட அவங்களைக் காட்டி, “அம்மா, அந்தக்கா தொப்பா ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு? நெறைய மம்மு சாப்டுட்டாங்களா?” என்று கேட்டேன். அம்மா சிரிச்சுகிட்டே, அக்கா தொப்பாக்குள்ள ஒரு குட்டி பாப்பா இருக்கு அப்படின்னாங்க. எனக்கு உடனே என்னோட அம்மா தொப்பாதான் ஞாபகத்துக்கு வந்தது. உடனே அம்மாகிட்ட தொப்பாவ தொட்டுக் காட்டி, நான் இதுக்குள்ள இருந்தேன்னு சொல்வியே, அது மாதிரியான்னு கேட்டேன். அம்மாவும் ஆமாண்டான்னு சொன்னா.

எனக்கு ஆச்சரியமா இருக்கு! என்னை மாதிரியே அந்த பாப்பாவுமா? அதுவும் இதுக்கு முன்னாடி எங்க இருந்தது? எப்படி அக்கா தொப்பாகுள்ள இருக்கு? எப்பவோ நான் இருட்டுல இருந்தேனே! அது மாதிரிதான் இதுவுமா? இதுவும் வந்து என்ன பண்ணும்? இப்படி எனக்குள்ள நிறைய கேள்வி. கூடவே, எனக்கு என்னைப் பற்றிய கேள்வியும் ஞாபகத்துக்கு வந்துடுத்து. எனக்கு என்னைப் பற்றிய உணர்வு வந்த முதல் நாளிலிருந்து எனக்குள்ளிருந்த அதே கேள்விகள் இப்போது மறுபடியும்!

இந்தக் கேள்விகள் மனசுக்குள்ளே மறுபடியும் வந்தவுடன் எனக்கு என்னுடைய விளையாட்டு, தினம் தினம் வழக்கமா செய்யறவை இவ்வளவு ஏன், அனா, ஆவன்னா கூட கொஞ்ச நேரத்துக்கு மறந்து போயிடுச்சு. கூடவே டாக்டர் போட்ட ஊசி வலியும்!


ஆத்மாவின் பயணம் தொடரும்!
ஒரு ஆத்மாவின் பயணம்


பாகம்-13

அந்தன்னிக்கு ஏதோ ஒரு சனிக்கிழமை சாயந்திரம் 4 மணி. திடீர்னு ஏதோ ஒரு சத்தம். சட்டுனு முழிச்சுட்டேன். மெல்ல கண்ணை கசக்கிக்கிட்டு முழிச்சுப் பார்த்தேன். பாட்டி பால் காய்ச்சிட்டு இருந்தா. அப்போ யாரோ வாசல்ல வர்ற மாதிரி சத்தம் கேட்டுது. யார்னு பார்த்தா, ! மஞ்சு அத்தையும் குமுதா அத்தையும் ஏதோ பேசிட்டே வந்தாங்க. பாட்டி அவங்களை பார்த்து, “இப்பத்தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா?” அப்படின்னா. அதுக்கு மஞ்சு அத்தை, “இல்லை மாமி! நாங்க குடும்பத்தோட நெறைய கோவில் குளம்னு சுத்திட்டு இப்பதான் வந்தோம். அதுக்கப்புறம் நேரா இங்கதான் வரோம்அப்படின்னு சொல்லிகிட்டே பாட்டிகிட்ட ஏதோ குடுத்தா. பாட்டி பால் காய்ச்சறதைப் பார்த்துட்டு குமுதா அத்தைநாங்க சரியான நேரத்துக்குதான் வந்திருக்கோம்அப்படின்னு சொல்ல, பாட்டிரெண்டே நிமிஷம்! ரெண்டு பேரும் இப்படி உக்காருங்க, காப்பியோட வரேன்அப்படின்னு சொல்லிட்டு உள்ளே போக, நான்பாட்டீஈஈன்னு சொல்லிக்கிட்டே எழுந்து பாட்டி பின்னால ஓடப் போனேன். மஞ்சு அத்தை என்னைஇருடா! ஓடாத!” அப்படின்னு நிறுத்தினா. நான் திமிறிக்கிட்டு ஓடப் பார்த்தேன். “அட, நில்லுடா! நீ இப்ப என்னமோ நிறைய கதையெல்லாம் சொல்றியாமே! எனக்கு ஒரு கதை சொல்லேன்!” இது குமுதா அத்தை.

எனக்கு உடனே கொஞ்சம் குஷியாகிடுத்து. ரெண்டு கையையும் இடுப்பில வெச்சுகிட்டு, “என்ன கதை வேணும்?” அப்படின்னு கேட்டேன். அதுக்கு மஞ்சு அத்தை, “மருமக ஒருத்தி விரதம் இருந்தாளே! அந்த கதைய சொல்லு!” அப்படின்னா. நானும் சொல்றேன் இப்ப!

ஒரு வீட்டுல மாமியார் மருமக இருந்தாங்க. அந்த மாமியார் அப்பப்ப ஏதாவது ஒரு சாமிக்கு வேண்டிட்டு விரதம் இருப்பா. அதைப் பார்த்துட்டு, மருமகளுக்கும் விரதம் இருக்கணும்னு ஆசை வந்துதாம். மாமியார்ட்ட போயிஅம்மா, நானும் உங்கள மாதிரி விரதம் இருக்கணும்னு ஆசையா இருக்கு, எப்படி இருக்கணும்னு சொல்லித் தாங்களேன்அப்படின்னு கேட்டா.

அதுக்கு மாமியார், “வேண்டாண்டி, நீ சின்ன பொண்ணு, உன்னால முடியாது!” அப்படின்னா. அதுக்கு மருமக, “இல்லல்ல, நானும் இருப்பேன், சொல்லிக் குடுங்கஅப்படின்னு தொந்தரவு செஞ்சாளாம். மாமியாரும், “சரி, சொல்றேன். அதே மாதிரி இரு. நாளைக்கு வைகுண்ட ஏகாதசி. அதனால காலங்கார்த்தால எழுந்து குளிச்சுட்டு, பெருமாளை நினைச்சு, இன்னிக்கு நான் விரதம் இருக்கேன், நீதான் எனக்கு அனுக்ரஹம் பண்ணனும்னு வேண்டிட்டு, பெருமாள் ஸ்லோகம் எல்லாம் இது இது சொல்லு. அன்னிக்கு முழுக்க எதுவும் சாப்டக் கூடாது, தூங்கக் கூடாது. நாள் பூரா பெருமாளயே நினைச்சுண்டு இருக்கணும். சரியா?” அப்படின்னா.

மருமகளும், சரிம்மா! அப்படியே இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு மாமியார் சொன்ன மாதிரி பகல் பூரா இருந்தா. ஆனா அவளுக்கு பசி தாங்கலை. இருந்தாலும் மாமியார்கிட்ட சொல்லிட்டோமேன்னு கஷ்டப்பட்டு பசியை தாங்கிண்டு இருந்தா. சாயந்திரமாச்சு, ராத்திரியாச்சு. பசி ரொம்ப அதிகமாயிடுச்சு. ராத்திரி பத்து மணிக்கு மேல மருமகளால பசி பொறுக்க முடியலை. அப்படியே மெல்ல எட்டிப் பார்த்தா! மாமியார் கண்ணை மூடி படுத்திருந்தா. சரி, மாமியார் தூங்கிட்டான்னு தீர்மானம் பண்ணிண்டு, மெல்லமா தோட்டத்துப் பக்கமா போயி, அங்க இருந்த சுரையிலை ரெண்டை பறிச்சுகிட்டு வந்து, சத்தம் போடாம சமையல்கட்டுல போயி, பானைல இருந்த பழைய சாதத்தை இலை நெறைய போட்டுகிட்டு, மேல தொங்கிண்டிருந்த உரிலேர்ந்து பானைய எடுத்து, அதுல இருந்த தயிரை ஊத்தி, தொட்டுக்க சுண்டைக்கா வத்தலை போட்டு, கிடுகிடுன்னு சாப்டுட்டு, இலைய தோட்டத்துல வீசிட்டு, உள்ள வந்து சாப்ட எடத்தை துடைச்சுட்டு, ஒண்ணுமே பண்ணாத மாதிரி தன்னோட எடத்துல வந்து படுத்துண்டு, “ம்மாஆ, ப்பாஆ! முடியலையே! காலு கெண்டை இழுக்கறதே! அம்மா, இந்த பசிய மறந்து கொஞ்சம் தூங்கணும், ஏதாவது கதை சொல்லுங்களேன்! அதை கேட்டுகிட்டே தூங்கறேன்அப்படின்னு கேட்டா!

அதுக்கு மாமியார் கண்ணைத் தெறக்காமலேயே கதை சொன்னாளாம், “சுரையெலையாம், சுண்டைக்காயாம்! பானைப் பழையதாம், உரித்தயிராம்! அள்ளிப் போட்டு தின்னவளுக்கு கெண்டை இழுக்கறதாமா? தூங்குடி, தூங்கு!”

பாட்டி இந்தக் கதையை ஏன் சொன்னா தெரியுமா? சாமியையும் மத்தவங்களையும் ஏமாத்தறதா நினைச்சுகிட்டு பொய் சொல்லி ஏமாத்தக் கூடாது! அப்படி செஞ்சா, அது தப்பு! அந்த மாதிரி பண்றது, தன்னைத் தானே ஏமாத்திக்கிறதா அர்த்தம் அப்படின்னு சொன்னா!

என்ன அத்தை? கதை நல்லாருக்கா?

(இதற்கு அந்த அத்தைகள் பதில் சொல்ல வாயெடுக்குமுன் பாட்டி காப்பியோடு வந்துவிட, இருவருடைய கவனமும் அங்கே சென்றுவிட்டது. அவர்கள் காபி குடிச்சு முடிக்கட்டும். அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கலாம்! இதற்கிடையில் ஆத்மாராமும் பாலைக் குடித்தவாறே காதைத் தொடும் முயற்சியில் இருக்கிறான். அவன் மேற்கொண்டு என்ன சொல்லப் போகிறான் என்று அப்புறமா கேட்போம்.)


ஆத்மாவின் பயணம் தொடரும்!