Monday, December 2, 2024

ராமனின் கால்தடமே

எழுதிய நாள்: 16-08-2021

கனவிலே எழுதி மடித்த கவிதை


பாடல் : ராமனின் கால்தடமே

ராகம் : ஸாமா / ஸஹானா 

தாளம் : ஆதி

இயற்றியவர் : கனவுப் புலவன் 


பல்லவி 


ராமனின் கால்தடமே சீதையின் வழித்தடமே 

இருவரின் வழித்தடமே மானிடர்க்குப் பாடமே 


அநுபல்லவி 


கானவழி நதியின் வழி சோலைவழி நடந்தனரே 

ராமனவன் நடந்த வழி மனிதர்க்கு சிறந்த வழி 

(ராமனின் கால்தடமே)


சரணம் 


பொய்மழுவை மெய்யெனவே 

சீதை வழி பிறழ்ந்தனளே 

சீதை சொன்ன வழி நடந்த 

ராமனுக்குத் துன்பவழி 

ஏதுவழி யெனமயங்கும் 

மானிடர்க்கு சிறந்த வழி 

ராமனவன் சொந்த வழி 

மனிதர்க்கு சிறந்த வழி 

(ராமனின் கால்தடமே)

கண்ணன் கைக்குழல் ஆவேனோ

எழுதிய நாள்: 20-04-2023

கனவிலே எழுதி மடித்த கவிதை


பாடல்: கண்ணன் கைக்குழல்

ராகம்: பீம்ப்ளாஸ்


பல்லவி

கண்ணன்கை குழலாவேனோ

அவன் இதழ்வழி வரும் காற்றை

விரும்பி நான் ஸ்வாஸிக்க (கண்ணன்)


அனுபல்லவி

அவன் கைவிரல் ஆவேனோ

அவன் கைவிரல் ஆவேனோ

அழகு பதங்களிலே என்னையவன் அமைக்க (கண்ணன்)


சரணம் -1

மின்னுமவன் இடையில்

உடையென ஆவேனோ

மின்னுமவன் இடையில்

உடையென ஆவேனோ

என்றுமவன் திருமேனி

இறுக அணைத்திருக்க (கண்ணன்)


சரணம் -2

அவன் கனியிதழாவேனோ

அவன் கனியிதழாவேனோ

இந்த அகிலத்து மங்கையரை

அம்மாவென நான் அழைக்க (கண்ணன்)


சரணம் -3

சங்கென ஆவேனோ அவன் புகழ் முழங்க

சக்கரமாவேனோ அவன் ஏவல் பணிபுரிய

மந்திரமாவேனோ அவன் புகழைப் பாட

வெண்ணெய் ஆவேனோ

உருகியவனில் கரைய (கண்ணன்)

ராம மந்த்ரமே

எழுதிய நாள்: 02-03-2023

கனவிலே எழுதி மடித்த கவிதை 


பாடல்: ராம மந்த்ரமே

ராகம்: ஸஹானா

தாளம்: ஆதி

பாடல் வரிகள்: கனவுப் புலவன்


பல்லவி


ராம மந்த்ரமே மனதுக்கு இதமே

நாளும் சொல் மனமே!

ஸ்ரீராம மந்த்ரமே மனதுக்கு இதமே

அதை நாளும் சொல் மனமே!


அனுபல்லவி


வேதம் நான்கினும் சிறந்த மந்த்ரமே

நாதனவன் ஸ்ரீராம மந்த்ரமே! (ராம மந்த்ரமே)


சரணம்


ஏதுகுறை நமக்கு தாஶரதி இருக்க

ஸ்ரீராம மந்த்ரம் நாவில் இனித்திருக்க

ஓடும் நம் வினைகள் ஓர் முறை உரைக்க

கோடி பதிமூன்றவன் தரிசனம் கிடைக்க


ராம மந்த்ரமே மனதுக்கு இதமே

நாளும் சொல் மனமே!

ராம்....... ராம்....... ராம்!

ஆனந்தக் கடலானை

 10-06-2023 அன்று கனவிலே எழுதி மடித்த கவிதை:


ஆனந்தக் கடலானை அருள்பொங்கும் விழியானை

பாரந்தச் சடையானை மீண்டும் நம்மைப் படையானை. (ஆனந்தக்)


1)

பனிமழை பொழியும் கைலாஸத்தில்

பார்வதி கணபதி சரவணனோடு

அருள்மழை பொழியும் அம்பலவாணன்

தருணம் அறிந்து காக்கும் அந்த (ஆனந்தக் கடலானை)


2)

நந்தியின் மத்தளம் வாணியின் வீணை

ரிஷிகளின் வேதம் எங்கும் சூழ

மங்கல நாயகன் சுந்தரமூர்த்தி

எங்கும் நிறைந்த இறையாம் அந்த (ஆனந்தக் கடலானை)


3)

ஆலயம் மனதில் அமைத்தவர்க்கும்

காலால் கண்ணை இருத்தியவர்க்கும்

சாலப் பரிந்து அருளிய எந்தை

நாதன் நாமம் நம: ஶிவாயவே (ஆனந்தக் கடலானை)


4)

மூன்று விழிகள் உடையானை அந்த

மூன்று புரங்கள் எரித்தானை நம்

மூன்று மலங்கள் அழிப்போனை நாம்

மூன்று வேளையும் வணங்கிடுவோமே

(ஆனந்தக் கடலானை)


5)

ஹர ஹர ஶங்கர ஜெய ஜெய ஶங்கர

ஹர ஹர ஶங்கர ஜெய ஜெய ஶங்கர

ஹர ஹர ஶங்கர ஜெய ஜெய ஶங்கர

ஹர ஹர ஶங்கர ஜெய ஜெயஶங்கர

(ஆனந்தக் கடலானை)


ஓம் நம: ஶிவாய ஓம் ஓம் நம: ஶிவாய ஓம்

ஓம் நம: ஶிவாய ஓம் ஓம் நம: ஶிவாய ஓம்

ஓம் நம: ஶிவாய ஓம் ஓம் நம: ஶிவாய ஓம்

ஓம் நம: ஶிவாய ஓம் ஓம் நம: ஶிவாய ஓம்!


(இதன் ஆரம்பம் முதல் கடைசி வரை பின்னணியில் உடுக்கை தீம் ததீம் தகிட தகதிமி தகதிமி என்று தொடர்ந்து ஒலிக்கும்!)

ஹைக்கூ கவிதைகள்

 #கனவிலே_எழுதி_மடித்த_கவிதை

எழுதிய நாள்: 07-10-2021

சில தினங்களுக்கு முன்பு உரைத்தவாறு, கீழ்க்காணும் ஹைக்கூ வகைக் கவிதைகள் போட்டியில் வெல்லாத காரணத்தால் இங்கே வெளியாகிறது! 


வள்ளியும் சேனையும் அவனுக்கு

அவை கிழங்கும் தெய்வமும் எங்களுக்கு! 

குகனே முருகனே ஹரோஹரா! 


நாடாள ஆசை என்றேன்

போடா பிய்ந்த செருப்பே என்றனர் 

நான் ராமனின் செருப்பல்லவே! 


பலமுறை முந்திச் சென்றாலும் 

மீண்டும் மீண்டும் வெல்லும் வேட்கை 

அந்நிலைக் கடிகார முட்களுக்கு! 


சுற்றிச் சுற்றி வந்தாலும் 

வெளியே செல்லும் வழியறியாது மீண்டும் 

சுற்றும் கடிகார முட்கள் 


உன்னைச் சுமந்தே ஊர்திரிந்தாலும் 

என்னை வைப்பது வீட்டின் வெளியே! 

என்றே புலம்பும் காலணிகள்! 


என்னைப் பன்முறை தேய்த்து 

வளர்த்தும் எந்தன் கறைகள் நீங்கவில்லை! 

என்றே புலம்புது முழுநிலவு! 


உந்தன் வருகையெனும் செய்தியை 

முந்தித் தருகிறது காற்றிலே மிதந்து 

வரும் உந்தன் வாசம்! 


உன்னை நினைந்தேன் கவியெழுத 

எண்ணிப் பார்த்தும் இயலவில்லை உன்னைப் படைத்தவன் ஆணவச் சிரிப்பு 

என்னிலும் பெருங்கவி யாரிங்கென்று! 


உரக்கக் கூவி ஊரெழுப்பிய கோழி 

உறக்கம் கொள்ளப் போகிறது அந்த 

உறக்கம் கலைந்தவர்கள் வயிற்றில்! 


பூமுகர்ந்து பூவிலிருந்து முகந்து 

நாவில் நறவதனை நாளும் நொடியும் 

நமக்காய்த் தேக்கித்தரும் பூநக்கி! (தேனீ) 


கவிதைகள் எழுதியது : கனவுப் புலவன். 

இயற்பெயர் : P Jayaraman

கோடை எரிக்கின்றதே!

 #கனவிலே_எழுதி_மடித்த_கவிதை 


பாடல்: கோடை எரிக்கின்றதே!

ராகம்: ஶுத்த ஸீமந்திநி

தாளம்: ஆதி


பல்லவி


கோடை எரிக்கின்றதே என்னை

கோடை எரிக்கின்றதே என்னை

கோடை எரிக்கின்றதே என்

ஊழ்வினையின் பாவங்களென்னும்

கோடை எரிக்கின்றதே!


அனுபல்லவி


இளைப்பாறுதல் தேடி அலைகிறேன் நானும்

ராம! நீ தருநிழலாய் வந்திட வேணும்!

(கோடை எரிக்கின்றதே)


சரணம் 1


பாலை நண்பகலில் பயணமென் வாழ்க்கை 

ஆதரவேதுமின்றி உழலுதென் யாக்கை

பாலை நண்பகலில் பயணமென் வாழ்க்கை

ஆதரவின்றி உழலுதென் யாக்கை

சோலையென நீ வருவாயோ ராமா!

ஆதரவெனக்கு தருவாயோ ராமா

(கோடை எரிக்கின்றதே)


சரணம் 2


பாதுகையின்றி அன்று வனங்களில்

எத்தனை கோடைகள் கடந்தனை ராமா!

பாதுகையின்றி அன்று வனங்களில்

எத்தனை கோடைகள் கடந்தனை ராமா

பாதுகையாயுனக்கு நான் வரவில்லை

பாதுகையாயுனக்கு நான் வரவில்லை

எத்துணை பாவி நான் ராமா!

எத்துணை பாவி நான் ராமா அதனால்

(கோடை எரிக்கின்றதே)

ஸீதா கல்யாண வைபோகமே

 #கனவிலே_எழுதி_மடித்த_கவிதை 


பாடல்: ஸீதா கல்யாண வைபோகமே

ராகம்: குறிஞ்சி


பல்லவி


ஸீதா கல்யாண வைபோகமே

ராம கல்யாண வைபோகமே


அநுபல்லவி


மனதுக்கு மகிழ்ச்சி தரும் வைபோகமே

காண்பவர் அனைவருக்கும் பெரும் யோகமே! (ஸீதா கல்யாண)


சரணம் 1


மாதர் மாடந்தனில் ஜானகி இருக்க

மாடவீதியில் ஸ்ரீராமன் நடக்க

நான்கு விழிகளும் விரும்பியே கலக்க

இதயமிரண்டும் இடம் மாறி புகுந்திருக்க

(ஸீதா கல்யாண வைபோகமே)


சரணம் 2


சுயம்வர அரங்கம் சிறந்திருக்க

பல தேசத்து மன்னர்கள் நிறைந்திருக்க

இரண்டு மனங்கள் மட்டும் கலந்திருக்க

ஸ்ரீராமன் சுயம்வரம் வென்றெடுக்க

(ஸீதா கல்யாண வைபோகமே)


சரணம் 3


மிதிலை மகிழ்ச்சியில் மிதந்திருக்க

தசரதன் உறவொடு குவிந்திருக்க

விண்ணவர் யாவரும் அருளியிருக்க

ஸீதா ராமன் கைத்தலம் பிடித்திருக்க

(ஸீதா கல்யாண வைபோகமே)