Monday, May 28, 2018

ஸந்த்யாவந்தனம் மந்த்ரங்கள் - அர்த்தத்துடன்

ஸந்த்யாவந்தன மந்த்ரங்கள்
(அர்த்தத்துடன்)

ப்ரஹ்மா, அவர் செய்த த்யானத்தின் முதிர்ந்த பயனாகத் தோன்றிய பரதேவதைக்குப் பெயர்ஸந்த்யா”! அவளை ஹ்ருதய ஆகாசத்திலும், பேராகாசத்திலும் அன்றாடம் உதித்து அஸ்தமிக்கும் ஸூர்யனிடத்திலும் வந்தனம் செய்தலே ஸந்த்யாவந்தனம். இதை ஸம்ஸ்க்ருதத்தில் இவ்வாறு சொல்லியிருக்கின்றனர்:

ब्रह्मणो द्यायतो यस्मात् सम्यक् जाता वराङ्गना ।
अतः सन्ध्येति लोकेऽस्मिन् अस्याः क्यातिर्भविष्यति ॥

ப்ரஹ்மணோ த்யாயதோ யஸ்மாத் ஸம்யக் ஜாதா வராங்கனா |
அத: ஸந்த்யேதி லோகேஸ்மின் அஸ்யா: க்யாதிர் பவிஷ்யதி ||

மும்மூர்த்திகளின் முழுச் சக்தியும் திரண்ட வடிவாய் நின்று அனைத்து உலகங்களையும் தோற்றுவித்து, ஆட்டுவிப்பதாக இருந்தாலும், மாயைக்கப்பால் நிஷ்கலமாக இருக்கின்ற எந்த பரதத்துவமுண்டோ, அதற்குஸந்த்யாஎன்று பெயர்.

நாம் அனைவரும் தினந்தோறும் ஸந்த்யாதேவியை உபாஸிக்க வேண்டும். உதிக்கும்போதும், அஸ்தமிக்கும்போதும் ஸூர்யனைஇவனே ப்ரஹ்மம்என்று த்யானம் செய்யும் வித்வானாகிய ப்ராஹ்மணன் எல்லா நன்மைகளையும் அடைகிறான்.

ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் எப்போதும் அசுத்தமானவன். எக்கருமத்திற்கும் தகுதியற்றவன். (ஸந்த்யாஹீநோசுசிர் நித்யம் அனர்ஹ: ஸர்வகர்மஸு). பிறப்பு மற்றும் இறப்புகளால் உண்டாகும் தீட்டு காலங்களிலும் ப்ராஹ்மணன் ப்ராணாயாமமின்றி மனத்தால் மந்த்ரங்களை உச்சரித்து, ஸந்த்யாவந்தனத்தை விட்டு விடாமல் செய்ய வேண்டும்.

ஸந்த்யாகாலத்தில் தூங்குவதோ, சாப்பிடுவதோ, படிப்பதோ கூடாது.


பாகம்-1

இனி, ஸந்த்யாவந்தனத்தின் பூர்வ பாக: இதில் நாம் முதலில் காண இருப்பது, “ஆசமநீயம்

ஆசமநம் ||1||
அச்யுதாய நம: (அச்சுதனுக்கு நமஸ்காரம்)
அநந்தாய நம: (அநந்தனுக்கு நமஸ்காரம்)
கோவிந்தாய நம: (கோவிந்தனுக்கு நமஸ்காரம்)

இனி, விஷ்ணுவின் பன்னிரு திருநாமங்களால் நம் உடலின் இந்த்ரியங்களனைத்துக்கும் ரக்ஷை இடுதல்:

கேசவ, நாராயணகட்டைவிரல், வாய் இவ்விரண்டும் அக்நியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, கட்டை விரலால் வலது இடது கன்னங்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

மாதவ, கோவிந்தபவித்ர விரல் (மோதிர விரல்), கண்கள் இவ்விரண்டும் ஸூர்யனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, பவித்ர விரலால் நமது இரு கண்களை முறையே ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

விஷ்ணோ, மதுஸூதநஆள்காட்டி விரல், நாசி இவ்விரண்டும் வாயுவின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, ஆள்காட்டி விரலால் நாசியின் இருபுறங்களிலும் (பெண்கள் மூக்குத்தி போட்டுக் கொள்ளுமிடங்கள்) ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

த்ரிவிக்ரம, வாமநசுண்டுவிரல், காதுகள் இவ்விரண்டும் இந்த்ரனுடைய ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, சுண்டுவிரலால் வலது இடது காதுகளை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீதரஹ்ருஷீகேசநடுவிரல், தோள்கள் இவ்விரண்டும் ப்ரஜாபதியின் ஸ்தானம். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, நடுவிரலால் வலது இடது தோள்களை ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

பத்மநாப, தாமோதரஉள்ளங்கை, ஹ்ருதயம் மற்றும் உச்சந்தலை இவை இறைவன் உறையுமிடங்கள். எனவே, இவ்விரு திருநாமங்களைச் சொல்லி, உள்ளங்கையால் ஹ்ருதயத்தையும் உச்சந்தலையையும் ஸ்பர்சித்து, ரக்ஷை இடுகின்றேன் என அறிவுறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ஆசமநீய மந்த்ரங்களின் அர்த்தத்தை முழுமையாக இவ்வாறு உரைக்கிறேன்:
அச்சுதனுக்கு நமஸ்காரம்; அநந்தனுக்கு நமஸ்காரம்; கோவிந்தனுக்கு நமஸ்காரம்.
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ, மதுஸூதனா, த்ரிவிக்ரமா, வாமநா, ஸ்ரீதரா, ஹ்ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா! உன்னைப் பன்னிரு திருநாமங்களால் போற்றி, என் இந்த்ரியங்களுக்கு ரக்ஷை இடுகின்றேன்!

இந்த ஆசமநீயத்தைச் செய்வதன் மூலம் நமக்கு ஒரு உண்மை புலப்படும். பன்னிரு திருநாமங்களைச் சொல்லி, நமது இந்த்ரியங்களுக்கு ரக்ஷை எதற்காக இடுகிறோம், எந்தெந்த இந்த்ரியத்தில் எந்த அதிதேவதை குடிகொண்டிருக்கிறது என்பதை நாம் மேலே பார்த்தோமல்லவா?

இதன் மூலம், இறைவனின் ஒவ்வொரு வடிவமும், அதிதேவதைகளும் நமது உடலிலேயே உள்ளனர் என்பது நமக்குப் புலப்படுகிறது. சித்தர்கள், யோகிகள், மஹான்கள் இவர்களெல்லாம், “நான் கடவுள்என்ற பொருள்படும்படி, “அஹம் ப்ரஹ்மாஸ்மிஎன்று ஏன் கூறுகின்றனர் என்பதற்கான காரணம் ஆசமநீயம் செய்தபின் நமக்குப் புரியும்! இந்த, “கடவுள்என்ற சொல்லையே நாம் இரண்டாகப் பிரித்துப் பொருள் காண வேண்டும். அதாவது, “கட”, “உள்என்று பிரிக்க வேண்டும். இங்கே, “உள்என்பதற்கு நம்முடையமனம்என்று பொருள்படும். நம்முடைய மனதை நாம் கடக்க வேண்டும். நம்முடைய சட்டைப் பையில் ரூ.2000 உள்ளது. அது சட்டைப் பையில் உள்ளபோது நம்முடைய கண்களுக்குத் தெரியாது. ஆனால், நம்முடைய மனதிற்கு? நம்மிடம் ரூ.2000 உள்ளது என்ற உணர்வு இருக்குமல்லவா? அவ்வாறு இருப்பதை நாம் எவ்வாறு உறுதி செய்வோம்? சட்டைப் பையிலிருந்து அதைக் கடத்தி, அதை மேசை மேல் வைத்துப் பார்க்கிறோமல்லவா? அதைப் போலவே, நம்முள்ளிருக்கும் கடவுளை நமக்குத் தெரியாது! அக்கடவுளைக் காண வேண்டுமெனில், நம்முடைய மனக்கண்களால் நம்முடைய மனதை ஒரு மேசை மேல் கிடத்தி, அறிவுக்கண்களால் அந்த மனதைப் பார்த்தால், அம்மனத்துள் அடங்கியிருக்கும் நல்ல மற்றும் தீய எண்ணங்களை நம்மால் உணர்ந்து, பட்டியலிட முடியும். நம்முள் இருக்கும் கடவுளைக் காண, அறிவுக்கண்களால் நாம் கண்டறிந்த நல்ல எண்ணங்கள் மற்றும் குணங்களை மேலும் மேம்படுத்த, நம் அறிவின் துணைகொண்டு உறுதியேற்க வேண்டும். அதைப் போலவே, நம் மனத்துள்ளிருக்கும் தீய எண்ணங்கள் மற்றும் குணங்களை நம் அறிவின் துணைகொண்டு விலக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது ஆன்மா மேம்படும். நம்முள் உறைந்திருக்கும் இறைவடிவங்கள் மற்றும் அதிதேவதைகள் செயல்பட ஆரம்பிப்பார்கள்! பிறகென்ன? அதன்பின் நம்மை எவராலும் தீயவழிகளில் செலுத்த முடியாது! நம்மை பாதிப்பவர்களை நாமும் எளிதில் வெல்லலாம்!

என்ன, நாம் நம்முள்ளிருக்கும் இறைசக்திகளை உணர்ந்து, நாமும்அஹம் ப்ரஹ்மாஸ்மிஎன்று நம்மைச் சொல்லிக் கொள்ள நம்மைத் தகுதியாக்கிக் கொள்ள, செயலில் இறங்கலாமா?

No comments:

Post a Comment