Monday, May 28, 2018

ஸந்த்யாவந்தன மந்த்ரங்கள் (அர்த்தத்துடன்) - பாகம்-2

ஸந்த்யாவந்தன மந்த்ரங்கள் (அர்த்தத்துடன்)

பாகம்-2

ஸந்த்யாவந்தனத்தில் நாம் அடுத்த கட்டத்திற்குப் போகுமுன் ஆசமநம் பற்றி சில செய்திகள்:

அச்யுதாய நம:, அநந்தாய நம:, கோவிந்தாய நம: எனும் இம்மந்த்ரங்கள் உடலிலும், உள்ளத்திலும் உறையும் சகல வ்யாதிகளையும் போக்க வல்லது. இதற்குநாமத்ரயீ-வித்யாஎன்று பெயர்.

இந்த ஆசமநத்தை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி மட்டுமே செய்ய வேண்டும். மேற்கு மற்றும் தெற்கு நோக்கி செய்யக் கூடாது. கைகள் முழந்தாள்களுக்கிடையில் அடங்கியிருக்கும்படி, குந்திட்டு உட்கார்ந்து செய்ய வேண்டும். சுண்டுவிரல் மற்றும் கட்டைவிரல்களை விட்டுவிட்டு, மற்ற விரல்களைச் சற்று உள்ளங்கைப் புறமாக வளைத்தால் ஏற்படும் உள்ளங்கைக் குழிவில் சிறிது சிறிதாகத் தீர்த்தத்தை ஏந்தி உட்கொள்ள வேண்டும். மூன்று முறை அங்ஙனம் ஆசமநம் செய்தபின் இருமுறை கையலம்ப வேண்டும். பவித்ரம் அணிந்திருந்தால் அதைக் கழற்றி காதில் வைத்துக் கொண்டு ஆசமநம் செய்துவிட்டு, பின் அதை மீண்டும் அணிந்துகொள்ள வேண்டும். அதன்பின், கேசவ, நாராயண என்னும் பன்னிரு திருநாமங்களைச் சொல்லி, கண், காது முதலிய உறுப்புகளைத் தொட்டு, அனைத்தையும் பரமாத்மாவின் திருப்பணிக்கு உரியனவாக்குக. ஐந்து இந்த்ரியங்களும் உள்முகப்பட்டால், ஆனந்தம் தானாகவே உதிக்கும்!

இனி, கணபதி த்யானம்:

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே ||

 (விஷ்ணும்) எங்கும் நிறைந்தவரும்; அன்பர்க்குகந்த வடிவம் எடுப்பவரும்;
(சுக்லாம்பரதரம்) வெண்ணிற ஆடை உடுத்தவரும்;
(சசிவர்ணம்) சந்திரனைப் போன்ற ஒளியுடையவரும்;
(சதுர்புஜம்) நான்கு கைகளுடையவரும்;
(ப்ரஸன்ன வதநம்) ஆனந்தம் பொங்கி வழியும் முகமண்டலத்தையுடையவரும்;
ஆகிய (கணபதியை)
(ஸர்வ விக்ந உபசாந்தயே) எல்லா இடையூறுகளிலிருந்தும் விலக்குவதற்காக
(த்யாயேத்) த்யானம் செய்ய வேண்டும்.

இம்மந்திரத்திற்கு இன்னொரு வ்யாக்யாநமும் கூறலாம். ஸம்ஸ்க்ருத இலக்கணப்படி, “ம்என்று முடிகின்ற பெயர்ச்சொற்களனைத்தும் இரண்டாம் வேற்றுமையில் அமைந்துள்ளன. முதலாம் வேற்றுமை என்பது பெயர்ச்சொல். உதாரணத்திற்கு, “ராம:” என்றால் இராமன் என்ற பெயர்ச்சொல். அதுவே, இரண்டாம் வேற்றுமையில்ராமம்என்று வரும். அதற்குப் பொருள், “இராமனைஎன்பதாகும். அதன்படி மேற்கண்ட ஸ்லோகத்தைப் பார்த்தால், பொருள் இவ்வாறு கிடைக்கும்:

 (சுக்லாம்பரதரம்) வெண்ணிற ஆடை உடுத்தவரை;
(விஷ்ணும்) விஷ்ணுவை
(சசிவர்ணம்) சந்திரனைப் போன்ற ஒளியுடையவரை;
(சதுர்புஜம்) நான்கு கைகளுடையவரை;
(ப்ரஸன்ன வதநம்) ஆனந்தம் பொங்கி வழியும் முகமண்டலத்தையுடையவரை;
(த்யாயேத்) த்யானிப்பதன் மூலம்
(ஸர்வ விக்ந உபசாந்தயே) எனக்கு வரும் எல்லா இடையூறுகளும் விலகட்டும்!

கணபதி த்யானம் எதற்காக என்றால், அவர் முழுமுதற்கடவுள். எச்செயலையும் தொடங்குவதற்குமுன் அவரை த்யானித்து வேண்டிக் கொள்வதன்மூலம் நாம் மேற்கொள்ளும் எச்செயலும் எவ்விதத் தடையுமின்றி நாம் நம்முடைய மனதில் எண்ணியவாறு செயல்கள் நிறைவேறும் என்பதற்காக.

இரண்டாவது பொருள் என்னவென்றால், இந்த ஸந்த்யாவந்தனத்தில் மந்த்ரங்கள் பெரும்பாலும் விஷ்ணு, ஸூர்யபகவான், நவக்ரஹங்கள், அஷ்டதிக் தேவதைகளை உபாஸித்தலைக் குறித்து உள்ளன. அதிலும் பெரும்பான்மையாக விஷ்ணு மற்றும் ஸூர்யனைப் பற்றியே மந்த்ரங்கள், செயல்கள் உள்ளன. எனவே, நாம் செய்யும் இந்த ஸந்த்யாவந்தனம் முறையாக, அதைச் செய்யும் நோக்கம் நிறைவேறுவதற்காக விஷ்ணுவை த்யானிக்கிறோம் என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்த த்யானத்தைச் செய்யும்போது, மூன்றுமுறை நம்முடைய இருகரங்களை முஷ்டியாக்கிக் கொண்டு, நம்முடைய வலது மற்றும் இடது நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். “சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்வரை ஒருமுறையும்; “சதுர்புஜம் ப்ரஸந்நவதநம் த்யாயேத்வரை இரண்டாம் முறையும்; “ஸர்வவிக்நோப சாந்தயேவரை மூன்றாம் முறையும் குட்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு குட்டிக் கொள்வதால் நம்முடைய நினைவாற்றலின் நரம்புகள் தூண்டப்பட்டு, நம்முடைய ஞாபகசக்தி அதிகரிக்கும். நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள், நாம் நம்மையறியாமலே செய்யும் ஒரு செயல் நம்முடைய நினைவுக்கு வரும். நம்மிடம் ஒருவர் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி விசாரிக்க, நமக்கு அது குறித்து உடனே நினைவுக்கு வரவில்லையெனில் நாம் என்ன செய்வோம்? நம்முடைய நெற்றிப்பொட்டில் தட்டியவாறே சிந்திப்போமல்லவா? அப்படித் தட்டுவதால் நம்முடைய நினைவாற்றல் நரம்புகள் செயல்பட்டு, நம்முடைய ஆழ்மனதிலுள்ள, நண்பர் விசாரிக்கும் விஷயம் குறித்த செய்தி உடனே நம் நினைவுக்கு வரும்! இவ்வாறு நாம் தட்டாமலே நினைவாற்றலுடன் செய்ய, சொல்ல வேண்டுமென்பதற்காகவே நாம் ஸந்த்யாவந்தனத்தில் கணபதி த்யானத்தின்போது குட்டிக் கொள்கிறோம்.

அடுத்த பகுதியில் ப்ராணாயாமத்தைப் பற்றி நாம் பார்க்கவிருக்கிறோம். இந்தப் ப்ராணாயாமத்தை முறையாகச் செய்வதன்மூலம் நமது உடலிலுள்ள வ்யாதிகள் நீங்கி நாம் நீண்ட ஆயுளுடன் வாழ முடியும். மருந்தில்லா தீர்க்காயுளுக்கு நம் முன்னோர்கள் செய்து வைத்திருக்கும் இந்த அருமையான ஏற்பாட்டை என்னவென்று சொல்ல!

No comments:

Post a Comment